நீ ஒரு தனிமனிதன்.
உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.
நீ ஆள மக்கள் வேண்டும்.
குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.
அவர்கள் மதம்,இனம்,சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.
இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.
அதைக் கையிலெடு.
அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.
உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.
அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடிமடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.
அவனின் வாரிசாக மாறு.
உன் மீது விமர்சனங்கள் வரும்.
கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.
நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.
பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.
கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.
பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.
பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்.
நீ ஒரு தனிமனிதன்.
உனக்குப் போராட விருப்பம் வந்துவிட்டது.
நீ போராடி வாழவைக்க மக்கள் தேவை.
உன்னைச் சுற்றியிருக்கும் மக்களைப் பார்.
அவர்கள் இனம்,மதம், சாதி, ஊர், நாடு என அத்தனையையும் அலசு.
அதில் அவர்கள் எதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனரோ அதைக் கையிலெடு.
அதை எதிர்க்கப் போராடு.
அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்து.
நீ யாருக்காகப் போராடுகிறாயோ அவர்களே உன்னை எதிர்ப்பார்கள்.
உனக்கு சிறிதளவு ஆதரவு கிடைக்கும்.
உனக்குமுன்பு ஒருவன் இதேபோல் போராடியிருப்பான் அவனாக வாழு.
உன் மீது விமர்சனங்கள் வரும்.
கருத்தியல் விமர்சனங்களை உன் அறிவால் உடை.
நடைமுறை விமர்சனங்களை செயலால் உடை.
பாதிவாழ்நாளில் நெருக்கடிகள் முற்றும் தளராமல் முன்னகர்.
கிடைத்த ஆதரவைப் பெறு.
தியாகியாக வாழு.
பணம், பதவி, இல்லறம் அனைத்தும் இழந்து தலைவனாக உருப்பெறு.
வீரச்சாவு அடை.
உன் பேரைச்சொல்லிப் பிழைக்க ஒரு தலைமுறையும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் உன் புகழும் எஞ்சிநிற்கும்.
(13 ஜூன் 2013)
No comments:
Post a Comment