Sunday, 30 April 2017

புலிப் பார்ப்பனர்

புலிப் பார்ப்பனர்

பிரிகேடியர் விதுசா,
மேஜர் பண்டிதர்,
பாடலாசிரியர் கு.வீரா

ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இருந்த ஈழத்து (தமிழ்ப்) பார்ப்பனர்கள்.

Saturday, 29 April 2017

தமிழ் எழுத்து கூட்டெழுத்தே ! -2

தமிழ் எழுத்து கூட்டெழுத்து முறையில் ஏற்கனவே உள்ளது.

தமிழ் எழுத்து கூட்டெழுத்தே ! -1

தமிழ் எழுத்துகள் கூட்டெழுத்து முறையில் அமைந்துள்ளன.

சிறு சிறு மாற்றங்கள் செய்தால் விரைவாக எழுதலாம்.

வீரமாமுனிவர் - எழுத்து சீர்திருத்த முன்னோடி

எழுத்து சீர்திருத்த முன்னோடி வீரமாமுனிவர் அவர்கள்தான்.

எ என்பதின் மேலே புள்ளிவைத்து ஏ என்பது எழுதப்பட்டு வந்தது.
அதைத் திருத்தி எ என்பதின் கீழே சரிவான கோடு சேர்த்து ஏ என்ற வடிவத்தை உருவாக்கினார்.

அதே போல கரடி என்பது காடி என்பதுபோல எழுதப்பட்டுவந்தது.

அதிலும் சிறிய சாய்வான கீழ்க்கோடு சேர்த்து துணையெழுத்திலிருந்து ர என்ற எழுத்தையும் உருவாக்கினஅதிலும் சிறிய சாய்வான கீழ்க்கோடு சேர்த்து துணையெழுத்திலிருந்து ர என்ற எழுத்தையும் உருவாக்கினார்.

மேலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

நன்றி:  Logan K Nathan

ஈ.வே.ரா செய்த சீர்திருத்தம்(?) என்ன தெரியுமா?

ஔவைப்பாட்டி என்பதை அவ்வைப்பாட்டி அதாவது அவ்+வைப்பாட்டி என்றாக்கியது.

தற்போது நாம் எழுதும் முறை (லை, னா போன்றவை) பழமையான முறையே.
இம்முறை நாஞ்சில் கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டது.

ஈ.வே.ரா செய்த எழுத்து சீர்கேடு

பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?

பதிவர்: Kathir Nilavan
நாள்: 03.10.2014

தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல.
சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன.

கற்பாறையிலும், அதன்பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதனதன் தேவைக்கேற்பவும், விரைவாக எழுதுவதற்கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன.
இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் காலவளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.

19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

1915ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும்.
அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞான பாநு' ஏட்டில்,
'தமிழ் எழுத்துகள்' என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

1930இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'குமரன்' இதழில் அதன் ஆசிரியர் திரு.முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

1931இல் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்பவரும் தன்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக்கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார்.

பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும்.

பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல.

இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித்தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார்.
அது வருமாறு:
" க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின.
ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன.
அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன.
இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை.
சுழிகளால் அமைந்தவை. 'ண' மூன்று சுழி.
'ல' ஒரு சுழி.
'ள' ஒரு சுழி.
'ன' இரண்டு சுழி.
இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது,
(ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும்,
ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும்,
ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும்,
இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா?
இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர்.
'வ' என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்....

'கா' முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன.
அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை.
பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின."

பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார்.
அவற்றை அய், அவ், என்றே எழுதினார்.
உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும்.
அதாவது 'ஐ' என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்?
மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு,
வந்தான்= வன்தான்,
மாங்காய்= மான்காய்,
பஞ்சம்= பன்சம்
என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.

அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றிவிட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.

1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு
"தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்"
என்று கேள்வி எழுப்பினார்.

பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகியும், அவர் 'விடுதலை' எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.

தமிழ் ஆட்சிமொழியாகவும், கல்லூரிகளில் பயிற்றுமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.

பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக்கொண்டே ஆங்கிலமொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.

தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச்சீர்திருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும்.

(நன்றி: முதன்மொழி ஏப்.சூன் 2010,

நுமான் எழுதிய
மொழியும், இலக்கியமும்:
பெரியாரின் சிந்தனைகள்.
தென்மொழி- மே 1986)

மருதுபாண்டியர் பயன்படுத்திய ராக்கெட் தொழில்நுட்பம்

வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலி சும்மா உதவவில்லை.

வேலுநாச்சியாரிடம் ராக்கெட் தொழில்நுட்பத்தை வாங்கிக்கொண்டுதான் படை உதவி செய்தான்.

வளரி தொழில்நுட்பத்தையும் வாங்கியதாகத் தெரிகிறது.

மீ  மனோகரனின் மருது பாண்டியர்கள் நூலில் இது பற்றி உள்ளதூ

திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு நாச்சியார் தலைமையில்   தூத்துக்குடியை சேர்ந்த ஜாதி தலைவர் இலான் காபெரியல் உதவியுடன் ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன

வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில் சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு சுல்தானால் பயன் படுத்த பட்டது

(மருதுபாண்டியருடனான திருப்பத்தூர் போரில் ஆங்கிலேயர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,

அதில் கர்னல் இன்னிங்ஸ் உயிர்தப்பியதாகவும் குறிப்பு உள்ளது.
military consulations 285 (18-6-1801) pp. 4559-61
military consulations 286 (4-8-1801) pp. 5348-49

நூல்: மாவீரர் மருதுபாண்டியர்
ஆசிரியர்: எஸ்.எம்.கமால்)

Friday, 28 April 2017

வெறும் இராமசாமி ஈ.வே.ரா - பெருஞ்சித்திரனார் கட்டுரை

வெறும் இராமசாமி ஈ.வே.ரா
- பெருஞ்சித்திரனார் கட்டுரை

ஈ.வே.ரா 1965 மொழிப்போரில் இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்த தமிழ் எதிர்ப்பு கருத்துகளைக் கண்டு சினமடைந்த பெருஞ்சித்திரனார் பதிலடியாக எழுதிய கட்டுரரையின் முக்கிய வரிகள் கீழே,

"கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று 'விடுதலை'யில்  ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம்.

அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றியுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.

அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி,
அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துள்ளதாகத் தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும்,
அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.

இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ ,
அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.

ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம்.

அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.
தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான்.

பக்தவத்சலம் ஆரிய அடிமை.
பெரியார் திராவிட அடிமை.

இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ,
அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்.

இவர் பற்றி “திரு.வி.க.” அவர்கள் கூறியதாக ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
ஒருகால் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் (நாயக்கர்) , திரு.வி.க., ஈ.வே.ரா. மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம்.

அக்கால் திரு.வி.க. இவரிடம்
“ஏன், ஐயா ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று கூறுகின்றீர்களே!
அதை விட்டுத் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்று கூறினால் நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளுவோமே”
என்று கூறினாராம்.
அப்பொழுது பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களும் திரு.வி.க. கருத்தே சரி என்று கூறினாராம்.
சிறிதுநேரம் கழித்துத் திரு.வி.க. எழுந்து போய் மீண்டும் வந்தாராம்.
அவர் வருவதற்குள் ஈ.வே.ரா., பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களிடம்,
“ஏன் ஐயா, நீங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கூப்பாடு போடச் சொல்கிறீர்களே,
அப்படியே தமிழ்நாடு கிடைத்தால் அதில் உங்களுக்கும் எனக்கும் எப்படி ஐயா இடமிருக்கும்?
முதலில் நம்மையன்றோ தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் ஓடச் சொல்லுவார்கள்.
இது தெரியாமல் நீங்களும் பேசுகின்றீர்களே”
என்று கூறினாராம்.

பா.வே.மாணிக்கம் அவர்கள் உண்மையான தமிழ்த் தொண்டாரனதால் அதைப்பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லையாம்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரியாரின் உட்கோள் எவ்வாறு இருந்தது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இதனை இங்கு ஏன் வெளிப்படுத்தினோம் எனில்,
பெரியார்க்குத் தமிழ் பற்றிய எண்ணமும் எந்த அளவில் இருந்தது, இருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவே ஆகும்.

ஆனால் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை இப்பொழுது இவரும் வற்புறுத்துவதில்லை.
தமிழ் நாடு பிரியவேண்டும் என்பதுதான் இப்பொழுது இவர் கொள்கையாக இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினராவது திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
ஆனால் இவரோ தம் திராவிட நாட்டுக் கொள்கையை மக்கள் உணராதவாறு சிறிது சிறிதாகப் பேச்சிலும் எழுத்திலும் கைநழுவவிட்டதுடன் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கொள்கையைச் சிறிதுசிறிதாக கைக்கொண்டும் விட்டார்.
இவர்தம் நாளிதழான “விடுதலை”யில் முன்பெல்லாம் தலைமுகத்துப் பொறித்து வந்த “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற வேண்டுரை இப்பொழுது எடுபட்டுப் போய்விட்டது.

இவரைப் பின்பற்றும் அன்பர்களும் காலத்திற்குக் காலம் மாறுபட்டவர்கள்.
ஆகையால், அதுபற்றி ஒருவரும் கவலைப்பட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

இவர் அரசியல் வீழ்ச்சி இப்படியாக முடிந்துவிட்டாலும் குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றி கண்டுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இத்துறையில் இவர் கண்ட வெற்றியே தமிழ்த் துறையிலும் இவரைப் இப்படிப் பேசச் செய்திருக்கிறது. //

// பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார்.
இவரோ “பண உதவி ஏதும் செய்யமுடியாது;
வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்;
நான் விற்றுத் தருகின்றேன்.”
என்று கூறினாராம்.
பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம்.

பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.

பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசித் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம்.
அவர்களை நாமும் பாராட்டுவதில்லை .
அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான்.

ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?

உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ?

ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?

உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால்,
இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்கவேண்டும்? //

//தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை.//

// தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் ,
சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும்,
புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் ,
மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் ,
அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் ,
திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும்,
திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.

// இவர் அரசியல்காரர்;
அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ ,
வரலாற்றுப் பேராசிரியராகவோ,
மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது.
அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.//

// மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.

இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார்.//

// ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்;
பகுத்தறிவு வழிகாட்டி;
அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். "

_ பாவலேறு பெருஞ்சித்தரனார்
தென்மொழி ஏடு,
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்,
தலைப்பு “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி”.

நன்றி: tamilthesiyan.wordpress

சிலர் பெருஞ்சித்திரனார் எழுதிய தொண்டு செய்து பழுத்த பழம்' என்ற பாடலை வைத்துக்கொண்டு ஏதோ அவருக்கு ஈ.வே.ராதான் வழிகாட்டி என்பது போல எழுதுகிறார்கள்.

ஈ.வே.ராவின் சாயம் வெளுத்த பிறகு பாவலேறு, பாரதிதாசன், பாவாணர் ஆகியோர் பிற்காலத்தில் அவருக்கு எதிராக எழுதியதை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள்.

அது இனி நடக்காது.