Showing posts with label தென்மொழி. Show all posts
Showing posts with label தென்மொழி. Show all posts

Monday, 22 July 2019

தனி நாடு கோரிக்கை சட்டப்படி குற்றம் ஆகாது

தனி நாடு கோரிக்கை அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று

"அனைத்து நாடுகள் சட்டப்படியும் ,
உலக ஒன்றிய நாடுகள் (U.N.O) அமைப்புறுதிப்படியும்,
கூட்டுச்சேரா நாடுகளின் (1964) ஆம் ஆண்டு அறிவிப்புப் படியும்,
தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள்.

'சட்ட அடிப்படையான தன்னுரிமைக்காக, தன்மானமுள்ள தமிழர்கள் நடத்தும் தமிழக விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு குற்றமாகக் கணிப்பது அடிப்படை மக்கள் உரிமையைப் பறிக்கும் சட்டப்புறம்பான செயலாகும்’ என ஈழத்தமிழ்நாடு அமைத்திட அரும்பாடுபட்டு வரும் தமிழர்களுக்கு உதவிகள் செய்து பெரும்புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வழக்குரைஞர் இருவர், இந்தியத் துணைக்கண்ட அரசு கொணர்ந்த பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி பிரிட்டனில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழகம்’ (T.M.K) கேட்டிருந்த சட்ட விளக்கம் பற்றி ஆய்ந்து கருத்தறிவித்துள்ளதாக அங்கு நடந்து (Voice of Tamils Anti-official Newsletter Published by T.M.K) என்னும் செய்தியேடு தன் ஆகத்து 1977 இதழில் ஆசிரியவுரை எழுதியிருக்கின்றது.

அக்கட்டுரையில் அதன் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
தங்கள் சொந்த ஊதியம் (நன்மை) கருதி அதிகாரத்தில் உள்ள வடஇந்தியக் கட்சியினர் கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டம் அம்பேத்கார் குழுவினர் வகுத்தளித்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாவதாகும்.

ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டுப் பிரிவினை கோரும் தமிழர்களைக் கருத்தில் கொண்டு கொணர்ந்த தடைச்சட்டமாகையால், அதற்குத் தமிழ்மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அப்பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு சட்டவலு இருக்க முடியும்.

'இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும்,
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறுவதை அனைத்து நாடுகள் சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேநேரத்தில்,
அதே அனைத்து நாடுகளின் சட்டத்தின் கீழ் தன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் சட்ட நிறைவானவை என்பதையும் எவரும் மறுத்தற்கியலாமற் போகும்.

எனவே தமிழன் - நிலப்பிரிவினைக்குக் குரல் கொடுக்கும் எவரும் அனைத்துநாட்டு சட்டப்படி குற்றவாளியல்லர்.

அம்பேத்கார் குழுவினர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டப்படி 'இந்திய ஒன்றியத்தில் (Union) சேர்ந்துள்ள நாடுகள் பிரிந்து போகும் உரிமை வரையறுக்கப்பட்டிருப்பதால்
இந்திய அடிப்படை அரசியல் சட்டப்படியும் தன்னாட்டு உரிமை கோருதல் குற்றமாகாது.

கூட்டுச்சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு என்று தீர்மானம் அங்கு நிறைவேற்றப் பெற்றது.

அத்தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுக்கென ஒரு நாடும் அரசும் இல்லாத பாலத்தீனியர்களின் தன்னமைப்பு உரிமைக் கோரிக்கையை இந்தியா உட்படப்பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது,
தங்களுக்கென ஒரு நாடு இருந்தும் அரசுரிமையற்றிருக்கும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை எந்த வகையில் தவறானதாகும்?

இருநாடுகளின் சட்டமன்றங்கள் அல்லது மக்களால் தெரிவு செய்யப்பெற்றபடி நிகராளிகள் விரும்பிச் சட்டமியற்றி,
ஒரே நாடாக இணைவதற்கு அதிகாரம் அளிப்பதன் வழியும்,
ஒருநாடு மற்றநாட்டை வலிந்து (seized by violence or occupied by force) தனது அரசுரிமையை மற்றநாட்டிற்கு உரிமைப்படுத்திக் கொடுப்பதன் வழியும்,
இருநாட்டு மக்களின் விருப்பத்தின் வழியாகவும் தான்,
இருநாடுகள் ஒரு நாடாக ஆக முடியும்.

ஆனால் சேர, சோழ, பாண்டிய நாடு எனப் பண்டையக் காலத்தில் அழைக்கப் பெற்றுவந்த தமிழ்நாட்டு மக்களின் ஏற்பு ஒப்புதலை (acceptance) பெறாமலேயே இந்தியத் துணைக்கண்டத்தினுள் வந்தேறியவர்களாகிய ஆரிய ஆட்சியாளர்களால் பிரிவினைத் தடைச்சட்டம் அவர்களின் அடிமைகள் நிரம்பிய நாடாளுமன்றத்தில் தன் இன நலம் காத்திட இயற்றப்பட்டதாகும்.

அதனைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள் வலிந்து சட்டப் புறம்பாகத் (illegal) திணித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்ட ஆட்சியுரிமையை ஆரியர்களிடம் ஒப்படைத்தமையால் தமிழர்கள் தமது நாட்டுரிமையை இழந்தார்களே தவிர ,
தமிழ்மக்களின் ஒப்புதல் படி அவர்கள் இந்திய ஒன்றியத்தில் (Indian Union) சட்டப்படி இணைக்கப்படவில்லை என்பது நமக்கு உதவ முன்வந்துள்ள சட்ட வல்லுநர்களின் (Q.C) கருத்தாகும்.

இக்கருத்துகளின் அடிப்படையில் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்குக் கீழ்வரும் வேண்டுகோளைக் கொடுத்துள்ளது.

'நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர். நாங்கள் அனைத்திந்திய கட்சியினர்’ எனக் கூறிவரும் திரைப்படக் கவர்ச்சியும் அறியாமையும் மிக்க மக்களும்;
தமிழர்கள் எனக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டு இந்தியத் தேசியம் பேசி அரசியல் ஊதியம் பெறும் வீடண அநுமன்களும்;
"நாங்கள் அன்று பிரிவினை கேட்டோம், இப்பொழுது உண்மையாகக் கேட்கவே இல்லை;
உறுதியிட்டுக் கூறுகிறோம். நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்’ என்று சொல்லுக்குச் சொல், கூட்டத்திற்குக் கூட்டம் இந்திய தேசியத் திருப்பாட்டுப் பாடித் தாம் வாழ வழிதேடிக்கொண்ட தமிழ்ப் பதடிகள் சிலரும்;
எக்கட்சியும் சாராத தன்மானமுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும்;
ஆசிரியப் பெருமக்களும், மாணவ மணிகளும் ஆங்கில வழக்குரைஞர்களின் பரிந்துரையை எண்ணிப்பார்க்க வேண்டுமெனவும்,
கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கிடப்போர் இதுநாள் வரை தமிழ் இனத்திற்குச் செய்த மாபெரும் வஞ்சகத்திற்கு மன்னிப்புப் பெறும் வகையில்,
தாம் தமிழர் என்பதையுணர்ந்து தமிழ்த்தரையின் விடுதலைக்குப் போரிட வாருங்கள்'
எனவும் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

- தென்மொழி
(சுவடி : 14,
ஒலை 5-6,
1977)

நன்றி: அழகன் தமிழன்
--------------
மேற்கண்ட பதிவில் ஆரியர் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் என்கிற அடிப்படையில் வடயிந்திரையே என்று ஊகிக்கலாம்

Friday, 28 April 2017

வெறும் இராமசாமி ஈ.வே.ரா - பெருஞ்சித்திரனார் கட்டுரை

வெறும் இராமசாமி ஈ.வே.ரா
- பெருஞ்சித்திரனார் கட்டுரை

ஈ.வே.ரா 1965 மொழிப்போரில் இருந்து தொடர்ந்து வெளியிட்டு வந்த தமிழ் எதிர்ப்பு கருத்துகளைக் கண்டு சினமடைந்த பெருஞ்சித்திரனார் பதிலடியாக எழுதிய கட்டுரரையின் முக்கிய வரிகள் கீழே,

"கடந்த மாதம் 16-ஆம் பக்கல் அன்று 'விடுதலை'யில்  ‘தமிழ்’ என்ற தலைப்பில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் எழுதிய கட்டுரை கண்டு மிகவும் வருந்தினோம்.

அண்மையில் நடந்த தேர்தலில் தம் மண்டையில் விழுந்த அடியால் பெரியார் மூளை குழம்பிப் பிதற்றியுள்ளதாகவே நம்மைக் கருதச் செய்தது அக்கட்டுரை.

அவர் சிற்சில வேளைகளில் எழுதும் அல்லது கூறும் இத்தகைய கருத்துகள் தமிழ் மக்களுக்கிடையில் அவருக்குள்ள மதிப்பை அவர் கெடுத்துக் கொள்ளத்தான் பயன்பட்டிருக்கின்றனவே அன்றி,
அவர் உறுதியாகக் கடைப்பிடித்து வரும் பொதுமைக் கொள்கையை வளர்த்துள்ளதாகத் தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் எல்லாருடைய வெறுப்புக்கும் கசப்புக்கும் ஆளாகி வருவதற்கும்,
அவருக்குத் துணையாக நின்று பணியாற்றிய பலரும் விலகி போய்க் கொண்டிருப்பதற்கும் அவரின் இத்தகைய மூளை குழப்பமான கருத்துகளை அவ்வப்பொழுது அவிழ்த்து விட்டுக் கொண்டிருப்பதுதான் பெருங்காரணம்.

இந்தத் தேர்தலில் காமராசர் ஒருவர்க்காகத், தாம் மனமார ஆரிய அடிமை, பொதுநலப் பகைவன் என்று கருதிய பக்தவத்சலம் போன்றவர்களைக் கூட கைதூக்கிவிட எப்படித் தம் மானத்தையும் பகுத்தறிவையும் அடகு வைத்துப் பேசிக் கொண்டு திரிந்தாரோ ,
அப்படியே இதுபோன்ற கருத்துகளை முன்பின் விளைவுகளை எண்ணிப்பாராமல் வெளிப்படுத்துவதும் அவர் இயல்பு.

ஆனால் அவர் போன்று இல்லாமல் நாம் எந்நிலையிலும் அஞ்சாமை , அறிவுடைமை, நேர்மை இவற்றின் அடிப்படையில் உண்மையை உண்மை என்றும், பொய்மையைப் பொய்யென்றும் துணிந்து கூறிவருவதால் அவரைப் பற்றிய சிலவற்றையும் நாம் ஈண்டுக் கூற நேர்ந்தமைக்காக மிகவும் வருந்துகிறோம்.

அவரைப்போல் இரங்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு நாம் இதைக் கூறவில்லை.
தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான்.

பக்தவத்சலம் ஆரிய அடிமை.
பெரியார் திராவிட அடிமை.

இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ,
அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே இருக்கின்றார்.

இவர் பற்றி “திரு.வி.க.” அவர்கள் கூறியதாக ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
ஒருகால் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் (நாயக்கர்) , திரு.வி.க., ஈ.வே.ரா. மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம்.

அக்கால் திரு.வி.க. இவரிடம்
“ஏன், ஐயா ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று கூறுகின்றீர்களே!
அதை விட்டுத் ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்று கூறினால் நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளுவோமே”
என்று கூறினாராம்.
அப்பொழுது பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களும் திரு.வி.க. கருத்தே சரி என்று கூறினாராம்.
சிறிதுநேரம் கழித்துத் திரு.வி.க. எழுந்து போய் மீண்டும் வந்தாராம்.
அவர் வருவதற்குள் ஈ.வே.ரா., பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களிடம்,
“ஏன் ஐயா, நீங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கூப்பாடு போடச் சொல்கிறீர்களே,
அப்படியே தமிழ்நாடு கிடைத்தால் அதில் உங்களுக்கும் எனக்கும் எப்படி ஐயா இடமிருக்கும்?
முதலில் நம்மையன்றோ தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் ஓடச் சொல்லுவார்கள்.
இது தெரியாமல் நீங்களும் பேசுகின்றீர்களே”
என்று கூறினாராம்.

பா.வே.மாணிக்கம் அவர்கள் உண்மையான தமிழ்த் தொண்டாரனதால் அதைப்பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லையாம்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரியாரின் உட்கோள் எவ்வாறு இருந்தது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
இதனை இங்கு ஏன் வெளிப்படுத்தினோம் எனில்,
பெரியார்க்குத் தமிழ் பற்றிய எண்ணமும் எந்த அளவில் இருந்தது, இருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவே ஆகும்.

ஆனால் திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையை இப்பொழுது இவரும் வற்புறுத்துவதில்லை.
தமிழ் நாடு பிரியவேண்டும் என்பதுதான் இப்பொழுது இவர் கொள்கையாக இருக்கின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினராவது திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டனர்.
ஆனால் இவரோ தம் திராவிட நாட்டுக் கொள்கையை மக்கள் உணராதவாறு சிறிது சிறிதாகப் பேச்சிலும் எழுத்திலும் கைநழுவவிட்டதுடன் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கொள்கையைச் சிறிதுசிறிதாக கைக்கொண்டும் விட்டார்.
இவர்தம் நாளிதழான “விடுதலை”யில் முன்பெல்லாம் தலைமுகத்துப் பொறித்து வந்த “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற வேண்டுரை இப்பொழுது எடுபட்டுப் போய்விட்டது.

இவரைப் பின்பற்றும் அன்பர்களும் காலத்திற்குக் காலம் மாறுபட்டவர்கள்.
ஆகையால், அதுபற்றி ஒருவரும் கவலைப்பட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை.

இவர் அரசியல் வீழ்ச்சி இப்படியாக முடிந்துவிட்டாலும் குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றி கண்டுள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
இத்துறையில் இவர் கண்ட வெற்றியே தமிழ்த் துறையிலும் இவரைப் இப்படிப் பேசச் செய்திருக்கிறது. //

// பாவாணர் ஒருகால் தாம் எழுதிய ஓர் அரிய ஆராய்ச்சி நூலை அச்சிட இவர் உதவி கேட்டார்.
இவரோ “பண உதவி ஏதும் செய்யமுடியாது;
வேண்டுமானால் அதை எப்படியாகிலும் அச்சிட்டுக் கொண்டு வாருங்கள்;
நான் விற்றுத் தருகின்றேன்.”
என்று கூறினாராம்.
பாவாணர் அவர்களும் அதை மெய்யென்று நம்பி, தம் துணைவியார் கழுத்தில் கிடந்த பொன்தொடரியை விற்று அதை அச்சிட்டுக் கொண்டு போய், விற்றுக் கொடுக்க கேட்டாராம்.

பெரியார் இரண்டு மூன்று உரூபா மதிக்கப்பெறும் அந்நூலை நாண்கணா மேனி விலைக்குக் கேட்டாராம்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிறைய உள.

பகுத்தறிவுக் கொவ்வாத பழங்கொள்கைகளைப் பேசித் திரியும் பத்தாம் பசலித் தமிழ்ப் புலவர்களை வேண்டுமானால் இவர் வெறுக்கலாம்.
அவர்களை நாமும் பாராட்டுவதில்லை .
அவர்களால் தமிழ்மொழிக்கு என்றும் கேடுதான்.

ஆனால் தமிழ்ப் பற்றும் , தமிழ்நாட்டுப் பற்றும் தமிழர் முன்னேற்றமுமே தலையாகக் கொண்ட மறைமலையடிகள், திரு.வி.க., பாவாணர் போன்ற மெய்த்தொண்டர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் , இவர்தம் பகுத்தறிவு கொள்கைகளையே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களாக வடித்தெடுத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கும் இவர் உதவாதிருந்த காரணமென்ன?

உ.வே.சா. , நா.கதிரைவேல் போன்றவர்களை இவர் மதிக்காமற் போனாலும் பாவாணர், பாரதிதாசன், இலக்குவனார் போன்றவர்களைக் கண்ணெடுத்தும் இவர் பார்க்காமல் போனதற்கும் அந்தத் தமிழ்தான் காரணமோ?

ஆம்; தமிழ்தான் காரணமென்றால் அந்தத் தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் பால் மட்டும் எப்படி முழு கருத்துக் கொண்டு இவர் தொண்டாற்றிவிட முடியும்?

உ.வே.சா. , இவரைப் ‘பிரபு’ வாக மதிக்கவில்லை என்று இவருக்குத் தமிழைப் பிடிக்காமற் போனால்,
இவரைத் தம் தெய்வமாக கருதிய பாவேந்தருக்காக , தமிழ்மொழி மேல் இவருக்கு ஆராக் காதலன்றோ ஏற்பட்டிருக்கவேண்டும்? //

//தமிழில் என்ன இருக்கின்றது? என்று இவர் கேட்கும் வெறுப்புக் கொள்கை ( Cynicism) தான் இவர் காணும் பகுத்தறிவு என்றால் அப்பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை.//

// தமிழ் மொழியில் உள்ள திருக்குறளைப் போன்றதோர் அறநூலும் ,
சிலப்பதிகாரம் போன்றதோர் இசை நூலும்,
புறநானூறு போன்றதொரு மற (வீர) நூலும் ,
மணிமேகலை பெருங்கதை போன்றதொரு துறவு நூலும் ,
அகநானூறு குறுந்தொகை போன்றதொரு காதல் நூலும் ,
திருமந்திரம் போன்றதொரு மெய்யறிவு நூலும்,
திருவாசகம் போன்றதொரு வழிபாட்டு நூலும் உலகில் வேறெந்த நாட்டிலும் வேறெந்த மொழியிலும் வேறெந்த மக்களிடையேயும் காண்பது அரிது என்பது நூற்றுக்கணக்கான மேனாட்டுப் பல்துறை அறிஞர்கள் எல்லாரும் ஒருமுகமாக ஒப்புக் கொண்ட பேருண்மையாகும்.

// இவர் அரசியல்காரர்;
அல்லது குமுகாயச் சீர்திருத்தக்காரராக விருக்கலாம்; ஆனால் ஒரு மொழிப் பேராசிரியராகவோ ,
வரலாற்றுப் பேராசிரியராகவோ,
மக்களியல் பேராசிரியராகவோ , ஆகிவிட முடியாது.
அவர் கூறியிருக்கின்ற தமிழைப் பற்றிய கருத்துகள் தம்மை ஒரு மொழிப் பேராசிரியராக எண்ணிக் கொண்டு கூறிய கருத்துகளாகும்.//

// மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமி தான்.

இவ்விருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்றார் என்பதற்காகவே வள்ளுவரை விட , தொல்காப்பியரை விட , திருமூலரை விட , கபிலரை விட , இளங்கோவை விட , முதிர்ந்த அறிவின் ஆகிவிடார்.//

// ஈ.வே.இரா. ஒரு குமுகாய சீர்திருத்தக்காரர்;
பகுத்தறிவு வழிகாட்டி;
அவர் ஒரு பேராசிரியரோ அறிவியல் வல்லுநரோ அல்லர். "

_ பாவலேறு பெருஞ்சித்தரனார்
தென்மொழி ஏடு,
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்,
தலைப்பு “பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி”.

நன்றி: tamilthesiyan.wordpress

சிலர் பெருஞ்சித்திரனார் எழுதிய தொண்டு செய்து பழுத்த பழம்' என்ற பாடலை வைத்துக்கொண்டு ஏதோ அவருக்கு ஈ.வே.ராதான் வழிகாட்டி என்பது போல எழுதுகிறார்கள்.

ஈ.வே.ராவின் சாயம் வெளுத்த பிறகு பாவலேறு, பாரதிதாசன், பாவாணர் ஆகியோர் பிற்காலத்தில் அவருக்கு எதிராக எழுதியதை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள்.

அது இனி நடக்காது.

Friday, 16 December 2016

பீர் முகமது

பீர் முகமது

இதுதான் “தனித் தமிழ்நாடும் தனித் தமிழீழமும் எம் இரு கண்கள்”
என்று சூளுரைத்து,
வாழ்நாளெல்லாம் தமிழின விடுதலைக்காகவே உழைத்த புலவர் மகிபை பாவிசைக்கோவின் இயற்பெயர்.

Monday, 15 August 2016

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி -பெருஞ்சித்திரனார்

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி
-பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று .
மற்றொன்று சீன இனம்.

உலகில் இன்று வாழும் தமிழ்மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும் .

சீனநாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும்

பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும்,

எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும் .

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்றுத் தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது.

கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர்.

மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர்.

தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான் .

மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன.

உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது.
அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது.

சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர் .

உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது.
அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

தென்மொழி, பெருஞ்சித்திரனார்.

Monday, 14 March 2016

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை

இராஜீவ்காந்தியைக் கொன்றவருக்கு புகழ்கவிதை
----------------------------

இராஜீவ் காந்தியை கொலை செய்தவர் தானு என்ற பெண் என செய்தி வெளியானதும்
பாவலேறு பெருஞ்சித்திரனார் அவரைப் புகழ்ந்து எழுதிய பாடல்.

இந்தபாடல் தென்மொழி இதழில் வந்தது.
பின் நூறாசிாியம் என்ற நூலில் 66வது பாடலாக சோ்க்கப்பட்டது.
இப்பாடலுக்கு ஐயாவின் 8 பக்க விளக்கமும் அதில் உள்ளது.