Showing posts with label தமிழை மறந்த தமிழர். Show all posts
Showing posts with label தமிழை மறந்த தமிழர். Show all posts

Monday, 15 August 2016

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி -பெருஞ்சித்திரனார்

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி
-பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று .
மற்றொன்று சீன இனம்.

உலகில் இன்று வாழும் தமிழ்மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும் .

சீனநாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும்

பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும்,

எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும் .

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்றுத் தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது.

கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர்.

மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர்.

தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான் .

மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன.

உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது.
அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது.

சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர் .

உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது.
அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

தென்மொழி, பெருஞ்சித்திரனார்.

Wednesday, 13 January 2016

பிரதமர் நாகமுத்து

பிரதமர் நாகமுத்து

"காலக்காத்தாலே ஆறுமணிக்கெல்லாம் பறை மேளம் அடிக்கின்றனர் எதிர்க் கட்சியினர்.
இந்தக் கூலிகளைத் தூக்கியெறிவோம்"

இவை கயானா(Guyana) நாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி அதன் அதிபர் பாரத் ஜக்தீயோ (ஹிந்தியர்) ஒரு பொதுமேடையில் பேசிய வார்த்தைகள்.

இந்த இனவெறியின் 35ஆண்டு ஆட்சியை முறியடித்து இன்று கயானாவின் பிரதமராக வீற்றிருப்பவர்தான்
திரு.மோசஸ் வீராசாமி நாகமுத்து.

தமிழகத்து தமிழர்களால் சாதிக்கமுடியாத ஒன்றை
உலகின் மறுமூலையில் ஒரு தமிழர் சாதித்துள்ளார் என்பதில் இருந்து தாய்நிலத் தமிழர்கள் தம் மீதான அடக்குமுறை எவ்வளவு பெரியது அளவிலாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

250 ஆண்டுகளுக்கு முன்பு தென்னமெரிக்காவில் இருந்த பூர்வகுடிகளைத் துரத்திவிட்டு ஐரோப்பியர்கள் பங்கு போட்டுக் கொண்டனர்.
அதில் பிரிட்டிஷ்காரர்கள் கையில் இருந்த நிலப்பகுதிதான் (பிரிட்டிஷ்)கயானா.
தமிழகத்தைப் போல கிட்டத்தட்ட இருமடங்கு பெரியது.

முதலில் ஆப்பிரிக்க அடிமைகளை அழைத்துவந்து கரும்புத் தோட்டம் போட்டனர்.
உத்திரபிரதேசத்தில் இருந்தும் மதராஸ் மாகாணத்தில் இருந்தும் மக்களை அழைத்துவந்தனர்.
1845-1948 பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து 45 கப்பல்கள் வந்துள்ளன.
இதில் 21 கப்பல்கள் மெட்ராஸில் இருந்து வந்தவை.
இவர்கள் 'மதராஸி'கள் என்றழைக்கப்பட்டனர்.
1921 ன் கணக்குப்படி 60 ஊர்களில் 1500 மதராஸி (தமிழ்க்) குடும்பங்கள் அங்கே குடியிருந்துள்ளனர்.

இவர்களை அங்கே கொண்டுவரப்பட்ட வடஹிந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்றுக்கொண்டவர்கள் யார் தெரியுமா?
ஆப்பிரிக்கக் கறுப்பர்கள்.

ஆம். வடயிந்தியரை விட ஆப்பிரிக்கர்கள் தமிழர்களுக்கு நெருக்கமானவர்கள்.

பறையடித்தல், கறிவிருந்து, (சாமிவந்து) வெறியாடுதல்,  போன்ற பல ஒற்றுமைகள் இருந்ததால் ஆப்பிரிக்கரும் தமிழரும் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.

தமிழர்கள் அங்கே 70ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அதாவது10%,
இவர்கள் பெர்பீஸ் கோரண்டீன் (east berbice, corentine) பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
இவர்களில் 35% கிறித்தவர்கள்.
65% மதராசி மதம்!

ஆம். தமிழர்கள் மதம் இந்துமதம் கிடையாது.
ஆங்கிலேயர்கள்தான் அதைத் திரித்து ஒரே மதமாக்கினர்.
ஹிந்து என்ற வார்த்தையே 300 ஆண்டுகள் முன்பு கிடையாது.

கயானாத் தமிழர்கள் தமது பழக்கவழக்கங்களை ஒன்றிணைத்து தனிமதமாக ஆக்கியுள்ளனர்.
இதில் அம்மன் வழிபாடு, குலதெய்வம் வழிபாடு, கொடை நடத்துதல், பலியிடுதல், என எல்லாம் உண்டு.
சாவுக்கூத்து அதாவது சாவுக்கு பறையடித்துக்கொண்டு ஆடுவதும் உண்டு.

பிராம்டன் என்ற இடத்தில் இருக்கும் அம்மன்கோவில் ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம்.
அங்கே ஐயனார், சங்கிலிக் கறுப்பன், மதுரை வீரன்,
இங்கே பூசாரிகள் தனியே கிடையாது.
மக்களில் ஒருவர்தான் பூசாரி.
பூசையின்போது சில தமிழ்ப் பாடல்களும் பொருள் விளங்காமலே பாடுகின்றனர்.

1940களில் இங்கே 'பாரத சேவாஸ்ரம சங்கம்' மற்றும் 'ஓம் இந்துத்வாம்' போன்ற ஹிந்து மத இயக்கங்கள் பெருமுயற்சி செய்தும் மதராஸிகளிடம் இந்துமதத்தைத் திணிக்க முடியவில்லை.
வெறுப்படைந்து கிறித்தவராக மாறியோர்தான் இன்றைய கிறித்தவர்கள்.

1921வரை தமிழர்கள் தாய்நிலத்துக்குத் திரும்புவதும் நடந்தது.
1947க்கு பிறகு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
ஹிந்தியா 1947க்குப் பிறகு இங்கே ஹிந்தி, ஹிந்து மதம் போன்றவற்றைப் புதுப்பித்து வடயிந்தியர்கள் வாழ்வில் ஒளிபாய்ச்சியது.
இந்தி படங்கள் மூலம் ஹிந்தியைப் பரப்பினர்.
இந்தி தமிழர்களிடம் சிறிதளவு பரவியது.
ஆனால் நிலைக்கவில்லை.

ஆரம்பத்தில் இங்கே வந்தவர் பெரும்பாலும் படிப்பறிவற்றவராக இருந்ததால் ஆங்கிலேயர் கல்வி வசதி எதுவும் செய்து தராததால்
தமிழர்களுக்கு தனிநாடும் இல்லாததால்,
தமிழ் தாய்நிலத்தை வேற்றினத்தவரே ஆள்வதால்
கயானா தமிழர்கள் தமிழை மறந்துவிட்டனர்.

ஆனால் தமது பண்பாட்டை மறக்கவில்லை.
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரையே இடுகின்றனர்.
வீட்டிற்குள் இன்றளவும் சில தமிழ்ச் சொற்களைப் பேசுகின்றனர்.
மோசஸ் நாகமுத்து எழுதிய Hendree's cure எனும் நாவல்தான் கயானாத் தமிழர்கள் பட்ட பாட்டை பதிவு செய்த ஆகச்சிறந்த ஆவணம்.

வட இந்தியர்கள் ஆதிக்கமே அங்கே கொடிகட்டிப் பறந்தது.
35 ஆண்டுகள் அவர்களின் 'மக்கள் முற்போக்கு கட்சி'தான் ஆட்சி செய்கிறது.
தமிழர்களுக்கும் ஆப்பிரிக்கருக்கும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை.

இந்த இனவெறியை எதிர்த்து தமிழர்களையும் கறுப்பர்களையும் ஒன்றுதிரட்டி அக்கட்சியை மண்ணைக் கவ்வச் செய்துள்ளார் மோசஸ் நாகமுத்து.

கயானாவில் வேளாண்துறை ஆய்வாளராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.துரை வையாபுரி கயானா க்ரோனிக்கல் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்,
"கயானாவோடு தமிழகம் அனைத்துவிதமாக தொடர்புகளையும் ஏற்படுத்துவதை விரும்புவதாகக் கூறியுள்ளார்"

ஏற்படுத்துவோம்.

நன்றி:புதியவன்
முஸ்தபா தமிழ் அறக்கட்டளை (சிங்கப்பூர்)
https://m.facebook.com/musthafatrust

விரிவாக: www.velichaveedu.com/np-12116-01-png/

Monday, 13 July 2015

தொழிலாளித் தமிழன்

தொழிலாளித் தமிழன்

*****************

ஹிந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடுமாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.

ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.

பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக்கொண்டு  மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டுவிட்டது.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா,  தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.

அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.

இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்

தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்

சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்

மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000

பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000

ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000

ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000

ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000

கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500

அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய்நிலத்தை விட்டு வெளியேறினார்கள்

வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை
இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப்போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும்தான்.

1947க்குப் பிறகு ஹிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்

80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்

தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.
படித்துவிட்டு
ஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக்கொண்டே போகிறது.

இதையெல்லாம் தாண்டி  ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்

இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ளவேண்டும்

இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.

வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்....

வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.

ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்லவேண்டும்.

தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.

1949ல் 'மலேயா கணபதி' 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.
அவரது தோழர் 'மலேயா வீரசேனன்' 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்
இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும்
ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக்கொல்லப்பட்டனார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த  'தில்லையாடி வள்ளியம்மை' 16வயதில் போராடி இறந்தார்.

மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.

1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000  தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.

தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் 'முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்' என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.
தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.

தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்

மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்தபோது ஹிந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.

ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலைசீவப்பட்டு கொல்லப்பட்டாளே
நம்மால் என்ன செய்யமுடிந்தது?

மலையகத் தமிழர் வெளியேறியபோது அந்தமானில் குடிவைக்க ஹிந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.

பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.
தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழிசெய்திருக்கலாம்.

வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.

எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்.

இன்றைய தமிழினத்துக்கு ,
கடினமாக உழைக்கவேண்டிய அவசியமில்லாமல் சுகமாக வாழப்போகும் வருங்கால தமிழர்நாட்டு குடிமகன்களின் சார்பாக
'உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்'
_____________________________
மேலும்
https://m.facebook.com/photo.php?fbid=393369544100038&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Thursday, 10 July 2014

கரீபியன் தமிழர்


கிறித்தவத் தேவாலயம் போன்ற கட்டிடத்தில் ஏசு சிலை இல்லை. ஆனால், வேறு ஏதோ தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவை மாரியம்மனையும் அய்யனாரையும் ஒத்திருக்கிறது.
அங்கே பூசாரி தன்னை ஒரு இசுலாமியர் என்கிறார் நோய்வாய்ப்பட்டு வந்த மக்களுக்கு வேப்பிலை அடித்து, சாமியாடி, மருந்து தருகிறார்.

யார் இவர்கள்? பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இவர்கள் முகம் இருக்கிறது; ஆனால் உடையோ வேறுமாதிரி இருக்கிறது.
இவர்கள் பெயர்களோ தமிழோடு ஒத்துப்போகிறது; ஆனால் பேசும் மொழி வேறு எதுவோ.
இவர்கள் சமைக்கும் உணவுவகைகளின் பெயரும் சுவையும் தமிழ்மண்ணோடு ஒத்துப்போகிறது; இவர்களின் இருப்பிடமோ தமிழ்மண்ணிலிருந்து பாதி உலகம் கடந்து இருக்கிறது.
கிறித்தவப் பெயர்களோ இசுலாமியப் பெயர்களோ வைத்துள்ளனர்; ஆனால் திருமணமுறை தமிழ்முறைப்படி உள்ளது.
நீங்கள் யார் என்று கேட்டால் 'தமிழர்' என்கின்றனர்.
வாழ்வதோ வேற்றின மக்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு பட்டியூரில்(குக்கிராமம்).

மிகவும் பின்தங்கிய மக்கள், தங்கள் வாழ்க்கையை அடையாளத்தைத் தொலைத்துவிட்ட மக்கள்.

நீங்கள் இந்தியர்கள் என்று அங்கே இயங்கும் இந்திய அரசு அமைப்புகள் இந்தியைக் கற்றுக்கொடுத்து இந்து சமயத்தை அந்த மக்களிடம் பரப்புகின்றன.

விடுமுறை நாட்களில் ஆடு,கோழி பலியிட்டு, கும்மிப்பாட்டு பாடி, விருந்துண்ணும்போது அவர்கள் தாங்கள் தமிழகத்தில் வாழ்ந்த கண்ட அனுபவித்த விடயங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

எந்த திசையில் இருக்கிறதென்றே தெரியாது ஆனாலும் அவர்கள் தமிழகத்தின் நினைவாகவே இருக்கின்றனர்.

(நன்றி: https://m.facebook.com/notes/தமிழ்-tamil/தமிழர்-வாழும்-நாடுகள்-கரீபிய-நாடுகளில்-தமிழர்-tamils-in-caribbean-தொகுப்பு-ப-திர/10150279415679710/?p=10

http://world4tamil.blogspot.in/2009/06/blog-post_2557.html?m=1

http://www.muthukamalam.com/essay/general/p26.html )