Showing posts with label கரீபியன். Show all posts
Showing posts with label கரீபியன். Show all posts

Wednesday, 13 January 2016

பிரதமர் நாகமுத்து

பிரதமர் நாகமுத்து

"காலக்காத்தாலே ஆறுமணிக்கெல்லாம் பறை மேளம் அடிக்கின்றனர் எதிர்க் கட்சியினர்.
இந்தக் கூலிகளைத் தூக்கியெறிவோம்"

இவை கயானா(Guyana) நாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி அதன் அதிபர் பாரத் ஜக்தீயோ (ஹிந்தியர்) ஒரு பொதுமேடையில் பேசிய வார்த்தைகள்.

இந்த இனவெறியின் 35ஆண்டு ஆட்சியை முறியடித்து இன்று கயானாவின் பிரதமராக வீற்றிருப்பவர்தான்
திரு.மோசஸ் வீராசாமி நாகமுத்து.

தமிழகத்து தமிழர்களால் சாதிக்கமுடியாத ஒன்றை
உலகின் மறுமூலையில் ஒரு தமிழர் சாதித்துள்ளார் என்பதில் இருந்து தாய்நிலத் தமிழர்கள் தம் மீதான அடக்குமுறை எவ்வளவு பெரியது அளவிலாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

250 ஆண்டுகளுக்கு முன்பு தென்னமெரிக்காவில் இருந்த பூர்வகுடிகளைத் துரத்திவிட்டு ஐரோப்பியர்கள் பங்கு போட்டுக் கொண்டனர்.
அதில் பிரிட்டிஷ்காரர்கள் கையில் இருந்த நிலப்பகுதிதான் (பிரிட்டிஷ்)கயானா.
தமிழகத்தைப் போல கிட்டத்தட்ட இருமடங்கு பெரியது.

முதலில் ஆப்பிரிக்க அடிமைகளை அழைத்துவந்து கரும்புத் தோட்டம் போட்டனர்.
உத்திரபிரதேசத்தில் இருந்தும் மதராஸ் மாகாணத்தில் இருந்தும் மக்களை அழைத்துவந்தனர்.
1845-1948 பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து 45 கப்பல்கள் வந்துள்ளன.
இதில் 21 கப்பல்கள் மெட்ராஸில் இருந்து வந்தவை.
இவர்கள் 'மதராஸி'கள் என்றழைக்கப்பட்டனர்.
1921 ன் கணக்குப்படி 60 ஊர்களில் 1500 மதராஸி (தமிழ்க்) குடும்பங்கள் அங்கே குடியிருந்துள்ளனர்.

இவர்களை அங்கே கொண்டுவரப்பட்ட வடஹிந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்றுக்கொண்டவர்கள் யார் தெரியுமா?
ஆப்பிரிக்கக் கறுப்பர்கள்.

ஆம். வடயிந்தியரை விட ஆப்பிரிக்கர்கள் தமிழர்களுக்கு நெருக்கமானவர்கள்.

பறையடித்தல், கறிவிருந்து, (சாமிவந்து) வெறியாடுதல்,  போன்ற பல ஒற்றுமைகள் இருந்ததால் ஆப்பிரிக்கரும் தமிழரும் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.

தமிழர்கள் அங்கே 70ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அதாவது10%,
இவர்கள் பெர்பீஸ் கோரண்டீன் (east berbice, corentine) பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
இவர்களில் 35% கிறித்தவர்கள்.
65% மதராசி மதம்!

ஆம். தமிழர்கள் மதம் இந்துமதம் கிடையாது.
ஆங்கிலேயர்கள்தான் அதைத் திரித்து ஒரே மதமாக்கினர்.
ஹிந்து என்ற வார்த்தையே 300 ஆண்டுகள் முன்பு கிடையாது.

கயானாத் தமிழர்கள் தமது பழக்கவழக்கங்களை ஒன்றிணைத்து தனிமதமாக ஆக்கியுள்ளனர்.
இதில் அம்மன் வழிபாடு, குலதெய்வம் வழிபாடு, கொடை நடத்துதல், பலியிடுதல், என எல்லாம் உண்டு.
சாவுக்கூத்து அதாவது சாவுக்கு பறையடித்துக்கொண்டு ஆடுவதும் உண்டு.

பிராம்டன் என்ற இடத்தில் இருக்கும் அம்மன்கோவில் ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம்.
அங்கே ஐயனார், சங்கிலிக் கறுப்பன், மதுரை வீரன்,
இங்கே பூசாரிகள் தனியே கிடையாது.
மக்களில் ஒருவர்தான் பூசாரி.
பூசையின்போது சில தமிழ்ப் பாடல்களும் பொருள் விளங்காமலே பாடுகின்றனர்.

1940களில் இங்கே 'பாரத சேவாஸ்ரம சங்கம்' மற்றும் 'ஓம் இந்துத்வாம்' போன்ற ஹிந்து மத இயக்கங்கள் பெருமுயற்சி செய்தும் மதராஸிகளிடம் இந்துமதத்தைத் திணிக்க முடியவில்லை.
வெறுப்படைந்து கிறித்தவராக மாறியோர்தான் இன்றைய கிறித்தவர்கள்.

1921வரை தமிழர்கள் தாய்நிலத்துக்குத் திரும்புவதும் நடந்தது.
1947க்கு பிறகு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.
ஹிந்தியா 1947க்குப் பிறகு இங்கே ஹிந்தி, ஹிந்து மதம் போன்றவற்றைப் புதுப்பித்து வடயிந்தியர்கள் வாழ்வில் ஒளிபாய்ச்சியது.
இந்தி படங்கள் மூலம் ஹிந்தியைப் பரப்பினர்.
இந்தி தமிழர்களிடம் சிறிதளவு பரவியது.
ஆனால் நிலைக்கவில்லை.

ஆரம்பத்தில் இங்கே வந்தவர் பெரும்பாலும் படிப்பறிவற்றவராக இருந்ததால் ஆங்கிலேயர் கல்வி வசதி எதுவும் செய்து தராததால்
தமிழர்களுக்கு தனிநாடும் இல்லாததால்,
தமிழ் தாய்நிலத்தை வேற்றினத்தவரே ஆள்வதால்
கயானா தமிழர்கள் தமிழை மறந்துவிட்டனர்.

ஆனால் தமது பண்பாட்டை மறக்கவில்லை.
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரையே இடுகின்றனர்.
வீட்டிற்குள் இன்றளவும் சில தமிழ்ச் சொற்களைப் பேசுகின்றனர்.
மோசஸ் நாகமுத்து எழுதிய Hendree's cure எனும் நாவல்தான் கயானாத் தமிழர்கள் பட்ட பாட்டை பதிவு செய்த ஆகச்சிறந்த ஆவணம்.

வட இந்தியர்கள் ஆதிக்கமே அங்கே கொடிகட்டிப் பறந்தது.
35 ஆண்டுகள் அவர்களின் 'மக்கள் முற்போக்கு கட்சி'தான் ஆட்சி செய்கிறது.
தமிழர்களுக்கும் ஆப்பிரிக்கருக்கும் அவர்கள் எதுவுமே செய்யவில்லை.

இந்த இனவெறியை எதிர்த்து தமிழர்களையும் கறுப்பர்களையும் ஒன்றுதிரட்டி அக்கட்சியை மண்ணைக் கவ்வச் செய்துள்ளார் மோசஸ் நாகமுத்து.

கயானாவில் வேளாண்துறை ஆய்வாளராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.துரை வையாபுரி கயானா க்ரோனிக்கல் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்,
"கயானாவோடு தமிழகம் அனைத்துவிதமாக தொடர்புகளையும் ஏற்படுத்துவதை விரும்புவதாகக் கூறியுள்ளார்"

ஏற்படுத்துவோம்.

நன்றி:புதியவன்
முஸ்தபா தமிழ் அறக்கட்டளை (சிங்கப்பூர்)
https://m.facebook.com/musthafatrust

விரிவாக: www.velichaveedu.com/np-12116-01-png/

Thursday, 10 July 2014

கரீபியன் தமிழர்


கிறித்தவத் தேவாலயம் போன்ற கட்டிடத்தில் ஏசு சிலை இல்லை. ஆனால், வேறு ஏதோ தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவை மாரியம்மனையும் அய்யனாரையும் ஒத்திருக்கிறது.
அங்கே பூசாரி தன்னை ஒரு இசுலாமியர் என்கிறார் நோய்வாய்ப்பட்டு வந்த மக்களுக்கு வேப்பிலை அடித்து, சாமியாடி, மருந்து தருகிறார்.

யார் இவர்கள்? பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இவர்கள் முகம் இருக்கிறது; ஆனால் உடையோ வேறுமாதிரி இருக்கிறது.
இவர்கள் பெயர்களோ தமிழோடு ஒத்துப்போகிறது; ஆனால் பேசும் மொழி வேறு எதுவோ.
இவர்கள் சமைக்கும் உணவுவகைகளின் பெயரும் சுவையும் தமிழ்மண்ணோடு ஒத்துப்போகிறது; இவர்களின் இருப்பிடமோ தமிழ்மண்ணிலிருந்து பாதி உலகம் கடந்து இருக்கிறது.
கிறித்தவப் பெயர்களோ இசுலாமியப் பெயர்களோ வைத்துள்ளனர்; ஆனால் திருமணமுறை தமிழ்முறைப்படி உள்ளது.
நீங்கள் யார் என்று கேட்டால் 'தமிழர்' என்கின்றனர்.
வாழ்வதோ வேற்றின மக்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு பட்டியூரில்(குக்கிராமம்).

மிகவும் பின்தங்கிய மக்கள், தங்கள் வாழ்க்கையை அடையாளத்தைத் தொலைத்துவிட்ட மக்கள்.

நீங்கள் இந்தியர்கள் என்று அங்கே இயங்கும் இந்திய அரசு அமைப்புகள் இந்தியைக் கற்றுக்கொடுத்து இந்து சமயத்தை அந்த மக்களிடம் பரப்புகின்றன.

விடுமுறை நாட்களில் ஆடு,கோழி பலியிட்டு, கும்மிப்பாட்டு பாடி, விருந்துண்ணும்போது அவர்கள் தாங்கள் தமிழகத்தில் வாழ்ந்த கண்ட அனுபவித்த விடயங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

எந்த திசையில் இருக்கிறதென்றே தெரியாது ஆனாலும் அவர்கள் தமிழகத்தின் நினைவாகவே இருக்கின்றனர்.

(நன்றி: https://m.facebook.com/notes/தமிழ்-tamil/தமிழர்-வாழும்-நாடுகள்-கரீபிய-நாடுகளில்-தமிழர்-tamils-in-caribbean-தொகுப்பு-ப-திர/10150279415679710/?p=10

http://world4tamil.blogspot.in/2009/06/blog-post_2557.html?m=1

http://www.muthukamalam.com/essay/general/p26.html )