Monday 16 May 2016

"எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

"எம்டன்" செண்பகராமன்
- ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு

செண்பகராமன் 1891ல் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட தமிழர் மண்ணான திருவனந்தபுரத்தில் "நாஞ்சில் வெள்ளாளர்" குடியில் பிறந்த தமிழர்.
அவரது பெற்றோர் திரு.சின்னசாமிப்பிள்ளை, திரு.நாகம்மாள் ஆகியோராவர்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த செண்பகராமன்.
மாணவர் பருவத்திலேயே விடுதலை உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
ஆங்கிலேயர்கள் மாணவர்களின் குடும்பத்தினரை எச்சரித்தனர்.
மாணவர்களின் தலைவர் போல இருந்த செண்பகராமனுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்தும் எச்சரிக்கை வந்தது.
இதனால் அவருக்கு நெருக்கடி முற்றியது.
இது பற்றி அறிந்த சர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்ற ஒரு ஜெர்மன் உளவாளி அவரை ஜெர்மனிக்கு அழைத்துசென்றார்.

1908-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் திகதி தனது 17வது அகவையில் என். எல். ஜி. யோர்க் என்ற ஜெர்மனிய கப்பலில் ஏறி செண்பகராமன் தலை மறைவானார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த செண்பகராமன் ஐரோப்பா சென்று மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆள் ஆனார்.
இத்தாலியில் போய் இறங்கி சிறிது காலம் அங்கே வாழ்ந்தார்.
அங்கு இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றார்.
பிறகு சுவிட்சர்லாந்திற்குச் சென்றார்.
அங்குள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் செண்பகராமன் பட்டம் பெற்றார்.

பிறகு சுவிட்சர்லாந்திலிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்றார்.
அங்கு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

வேலை செய்து படித்துக்கொண்டே சக இந்தியர்களைத் திரட்டி கூட்டம் போட்டார்.
இந்திய விடுதலை நிகழ்வுகளில் பங்குபெற்று சொற்பொழிவாற்றினார்.
இந்த நேரத்தில்தான் "ஜெய்ஹிந்த்" என்ற சொல்லை உருவாக்கினார்.

ஜெர்மானியர்களிடம் இருந்த பிரிட்டிஷ் வெறுப்புணர்வை புரிந்துகொண்ட செண்பகராமன் அங்கேயே நிலைகொண்டு போராட்டத்தைத் தொடர முடிவெடுத்தார்.
“இந்திய ஆதரவு சர்வதேச கமிட்டி” ஒன்று நிறுவினார்.
டாக்டர் செண்பகராமனே அதற்கு தலைவராக இருந்து “ப்ரோ இந்தியா” (Pro-India) எனும் ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளில் இந்திய விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

1914ல் ஜெர்மானியப் பேரரசராக இருந்த அப்போதிருந்த கெய்சர் வில்ஹெம் செண்பகராமனை அழைத்து ஆங்கில அரசுக்கெதிராக செயல்பட தான் உதவுவதாகக் கூறினார்.
செண்பகராமனின் தோற்றத்தையும் அறிவாளித்தனத்தையும் பார்த்த கெய்சர் அவரைத் தனது நண்பராக ஏற்றுக்கொண்டார்.
அரசு விழாக்களில் தன்னுடன் அழைத்துச்சென்றார்.
ஜெர்மன் அரசின் உயரிய பட்டமான "வொன்" செண்பகராமனுக்கு வழங்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் ஆங்கிலேய அரசு தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருந்த அந்த தீவிரவாத மாணவன் ஜெர்மனியில் தொடமுடியாத உச்சத்தில் இருப்பது தெரிந்தது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியரைத் திரட்டி ஆங்கில அரசுக்கெதிரான செருமானிய நடவடிக்கைகளில் ஒத்துழைக்க செண்பகராமன் முயல்வதும் தெரியவந்தது.

1914 முதல் உலகப்போர் மூண்டது.
ஜெர்மனியில் வாழும் இந்தியரைத் திரட்டி ஐ.என்.ஏ (Indian national volunteers) என்ற தொண்டர் படையை நிறுவினார்.

ஜெர்மனியின் எம்டன் (Emden) என்ற போர்க்கப்பலை செண்பகராமன் பெற்றுக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கினார்.

1914ல் செப்டம்பர் 22 எம்டன் கப்பல் கடலில் நின்றபடி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை தாக்கிவிட்டு மறைந்தது.
அது தாக்கிய விதத்தை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
பயங்கரமான ஆட்களை எம்டன் என்ற பெயர்கொண்டு இன்றும் சென்னை மக்கள் அழைக்கிறார்கள்.

அன்று அந்த கப்பலின் தலைமைப் பொறியாளராகவும் இரண்டாம்கட்ட தளபதியாகவும் இருந்தது ஒரு 23 வயதான தமிழர் என்ற உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

1915ல் வீரேந்தர்நாத் சட்டோபாத்யாய் என்பவர் மூலம் வங்காள ஆயுத போராளிகளான ஜுகாந்தர் குழுவிற்கு ஆயுதங்களை அனுப்பிவைத்து உதவினார்.

1916 ஆப்கானிஸ்தான் மீது பிரிட்டிஷ் படை எடுத்தது.
அப்போது காபூலில் 'நாடுகடந்த இந்திய அரசாங்கத்தை' ஜெர்மனியின் கூட்டுப்படைகளின் ஆதரவுடன் இந்திய தலைவர்கள் ஏற்படுத்தினர்.
அதில் வெளியுறவு அமைச்சராக செண்பகராமன் நியமிக்கப்பட்டார்.

ஜெர்மனி போரில் தோற்றதும் 1919 ல் அங்கிருந்து ரஷ்யா தப்பிச்சென்று லெனினைச் சந்தித்து உரையாடினார்.

ஜெர்மனி சரணடைந்து வெர்ஸெயிர்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானபோது செண்பகராமனை பிரிட்டனிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் கோரினர்.
ஆனால் தமக்கு பெரிதும் உதவிய செண்பகராமனை ஜெர்மானியர் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

பிறகு ஜெர்மனி திரும்பிய செண்பகராமன் ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

உலகில் அத்தனை மூலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதைக் கண்ட செண்பகராமன் “ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்”
“ கீழ் நாட்டவர் சங்கம்” ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
இவற்றின் கிளைகளை நிறுவுவதற்காக பன்னிரண்டு மொழிகளில் மிகச் சரளமாக பேசும் திறமைபெற்ற செண்பகராமன் பட்டேவியா, பர்மா, சயாம், சீனா, எகிப்து, துருக்கி, அமெரிக்கா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.

அமெரிக்கா சென்றபோது செண்பகராமன்  கறுப்பர்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சொற்பொழிவாற்றினார்.
கறுப்பின மக்களுக்காக அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனை சந்தித்து நெடுநேரம் உரையாடினார்.

பிறகு தென்னாப்பிரிக்கா சென்றார்.
ஆங்கில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தென்னாப்பிரிக்காவில் செண்பகராமன் நுழைந்தது தெரிந்ததும் பிரிட்டிஷ் அரசு அவர் தலைக்கு ஒரு லட்சம் பவுண்ட் அறிவித்தது.

அவர் பயணம் செய்த எல்லா இடத்திலும் பிரிட்டிஷ் உளவாளிகள் அவரைப் பிடிக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனர்.
மாறுவேடமிடுவதிலும் பெயர்மாற்றிக்கொண்டு எல்லையைக் கடப்பதிலும் வல்லவரான செண்பகராமனை அவர்களால் பிடிக்கவேமுடியவில்லை.
அவர் உலகின் பல மூலைகளில் தோன்றி மறைந்து பிரிட்டிஷ் அரசைக் குழப்பினார்.

இறுதியில் பெர்லினுக்கே திரும்பிவிட்டார்.

1930-ம் ஆண்டில் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பெற்றார்.
பெர்லின் நகரில் வாழ்ந்துவந்த மணிப்பூரைச் சேர்ந்த லஷ்மி பாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

முதலாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம் ஒரு உணவு விடுதியில் செண்பகராமன் அமர்ந்திருந்தபோது
அடால்ப் ஹிட்லர் என்ற ஒரு இளைஞன் ஜெர்மானியர் உயர்ந்த ஆரிய இனமென்றும்
அவர்களே உலகை ஆளவேண்டும் என்றும்
இந்தியர்கள் ஜெர்மானியரால் ஆளப்படவேண்டிய கீழ்மக்கள் என்றும் ஒரு சிறிய குழு முன் நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான்.

உடனே அருகிலிருந்த செண்பகராமன் அவனை விவாதத்திற்கு அழைத்து இந்தியர்கள் ஒன்றும் கீழ்மக்கள் இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவி அவனது திமிரை அடக்கினார்.
ஹிட்லர் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்ட பிறகே அவனை விட்டார்.
( அன்று அதிகம் அறியப்படாத அந்த இளைஞனே பின்னாளில் ஜெர்மனிய அதிபராகி
தன் உயிரைப் பறிப்பான் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்)

ஜெர்மனி செல்லும் இந்திய தலைவர்கள் அனைவரும் செண்பகராமனை போய்ப் பார்க்காமல் வருவதில்லை.
சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, அவரது தந்தை பண்டித மோதிலால் நேரு, லால்சந்த், ஹீராசந்த், விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் டாக்டர்.பிள்ளையின் வீட்டில் தங்கியவர்கள் ஆவர்.

நேரு தனது சுயசரிதையில் பொறாமையுடனும் வெறுப்புடனும்
கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
"நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையைச் சந்தித்தோம்.
அவர் பழைய யுத்தகோஷ்டியைச் சேர்ந்தவர்களில் பெயர்பெற்ற அங்கத்தவர்.
பெர்லினில் அவர் மிக படாடோபமாக வாழ்ந்துவந்தார்.
அங்குள்ள இளம் மாணவர்கள் அவருக்கு பொருத்தமற்ற பட்டம் ஒன்றை வழங்கினர்.
டாக்டர் பிள்ளை தேசியம் ஒன்றில் மட்டுமே தம் சிந்தனையைச் செலுத்தினார்.
பொருளாதார, சமூக பிரச்சனைகளில் போதிய அக்கறை காட்டவில்லை.
உருக்கு தொப்பி அணிந்த ஜெர்மனிய தேசியவாதிகளுடன் எவ்வித வேறுபாடுமின்றி மிக சகஜமாகப் பழகினார்.
நாஜிக்களுடன் கலந்து சற்றும் பயமின்றி பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் டாக்டர் பிள்ளை முதன்மையானவர்.
நான் மீண்டும் சிறையில் இருந்த காலத்தில் பெர்லின் நகரில் டாக்டர் பிள்ளை மரமடைந்ததைக் கேள்வியுற்றேன்"

17வயதில் தலைமறைவான செண்பகராமன் பிள்ளை.
1933 அக்டோபர் 7 அன்று தனது  தலைமறைவு வாழ்க்கையின் 25வது ஆண்டைக் கொண்டாட ஒரு விழா ஏற்பாடு செய்தார்.
ஜெர்மனியின் பெரிய மனிதர்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டனர்.

ஹிட்லரை அடியபணிய வைத்த அந்த வீரத்தமிழ்மகன் ஹிட்லர் ஆட்களால் மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1934 மே 26 அன்று செண்பகராமன் சாகும் முன் தன் மனைவியிடம் கடைசி ஆசையாக,
தன் அன்னையின் அஸ்தி கரைக்கப்பட்ட அதே கரமனை ஆற்றில் தன் அஸ்தியில் பாதியைக் கரைத்துவிட்டு நாஞ்சில் நாட்டு வயல்களில் மீதி அஸ்தியைத் தூவுமாறு கூறிவிட்டு இறந்தார்.

நாஜிகள் அவரது உடலை எரியூட்டியபிறகு அவரது மனைவி கெஞ்சி கதறி அவரது அஸ்தியை வாங்கிக்கொண்டார்.
பிறகு அவர் நாஜிக்களால் மனநல மருத்துவமனையில் அடைத்துவைக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பி இத்தாலி சென்று ஸ்பெயின் வழியே 1936ல் மும்பை வந்து சேர்ந்தார்.
அதன்பிறகு அவர் தன் கணவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற 30 ஆண்டுகள் படாதபாடு பட்டார்.
நேருவும் காந்தியும் கூட அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர ஒத்துழைக்கவில்லை.

Free Press Journal of Bombay என்ற பத்திரிக்கை செம்டம்பர் 12, 1966 அன்று வெளியிட்ட செய்தி கீழ்வருமாறு
" In early 1930's Dr.Pillai incurred the wrath of Hitler whose ominous rumblings were just beginning to be heard.
In May 1934, Pillai died of suspected slow poisoning.
His body was cremated in Berlin."

லட்சுமிபாயின் பெருமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செண்பகராமன் இறந்து 32ஆண்டுகள் கழித்து 1966 செபடம்பர் 19ல் இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.டெல்லி மூலம்,
மும்பையிலிருந்து எர்ணாகுளம் வரை செண்பகராமனின் அஸ்தி எடுத்துவரப்பட்டு கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது.
ஆனால் நாஞ்சில் வயல்களில் தூவப்படவில்லை.
அந்த தமிழனின் கடைசி ஆசை கூட அரைகுறையாகத்தான் நிறைவேற்றப்பட்டது.

செண்பகராமனைப் பற்றி அவர் உதவி செய்த வங்காள ஆயுத போராளிகள் மூலம் அறிந்த சுபாஷ் சந்திரபோஸ் அவரை ஒருமுறை சந்தித்தார்.
அவர் இறந்துபோன பிறகு அவர் வழியிலேயே போராட முடிவு செய்தார்.
காங்கிரசிலிருந்து விலகினார்.
1941ல் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி ஜெர்மனி சென்று அதன் அதிபர் ஹிட்லரிடம் உதவி கேட்டார்.
ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல் மூலம் தனது நட்பு நாடான ஜப்பானுக்கு ஹிட்லர் அவரை அனுப்பினார்.
ஜப்பானிடம் இருந்த இந்திய கைதிகளைக் கொண்டு செண்பகராமனனின் I.N.V போலவே I.N.A ஐத் தொடங்கி செண்பகராமனின் முழக்கமான ஜெய்ஹிந்தையே தனது முழக்கமாகவும் வைத்துக்கொண்டார் நேதாஜி.
ஆக நேதாஜியின் குரு செண்பகராமனே.

உசாத்துணை:-
நூல்: மாவீரன் செண்பகராமன் (1968)
ஆசிரியர்: யோகா பாலச்சந்திரன்
வெளியீடு: கொழும்பு கலைச் சங்கம்

படம்: நக்கீரன்
-------------------------
செண்பகராமன் ஒரு குசராத்தியாகவோ தெலுங்கராகவோ இருந்திருந்தால் சாலைகள், கல்லூரிகள், நிலையங்கள், சிலைகள், பாடப்பகுதி என்று தூள்கிளப்பியிருப்பார்கள்.
தமிழன் என்பதால் பெயர்கூட வெளிவரவில்லை.
தமிழகத்தில் படேல் சாலையும், காந்தி நகரும், நேரு அரங்கமும், ஓமந்தூரார் கட்டடமும் இருக்கும்.

ஆனால் செண்பகராமனுக்கு தமிழகத்தில் ஓரே ஒரு சிலைதான் உள்ளது.
அதுவும் இறந்து 75 ஆண்டுகள் கழித்து 2009ல்தான் நிறுவப்பட்டது.

தமிழகத்துக்கு வெளியே ஒரு முட்டுசந்துக்குக் கூட ஒரு தமிழ்த்தலைவர் பெயர்கூட இல்லையே அது ஏன்?

டெல்லியில் பாரதி பெயரில் ஒரு சாலை உள்ளது.
அவர் பார்ப்பனத் தமிழராக இல்லையென்றால் அதுகூட இருக்காது.

தமிழர்கள் இந்திய சுதந்திரத்திற்காக சிந்திய குருதி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் வீணாகப் போனதே?!

இந்தியா தமிழர்களுக்கான நாடா?

1 comment:

  1. மலையாளிகள் செண்பகராமனை மலையாளி என கூறிப் பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.

    ReplyDelete