Tuesday 10 May 2016

விரல்சொடுக்கில் போரை வென்றவன்

விரல்சொடுக்கில் போரை வென்றவன்
*************
இன்றும் ஊரடங்கு உத்தரவு;
நான்காவது நாளாக;
நேரமில்லை நேரமில்லை என்று அரற்றிக் கொண்டிருந்தவன் நான்;
இப்போது பொழுதுபோகாமல் செத்துக்கொண்டிருந்தேன்;
என் மனைவியும் குழந்தைகளும் நிகழ்ச்சிகளே வராதத் தொலைக்காட்சியின் உயிரை வாங்கிக்கொண்டு இருந்தார்கள்; 
மேல்மாடிக்குச் செல்லலாமென்று யோசனை வர மேலே சென்று நாலாபுறமும் பார்த்தேன்;

எங்கோ துப்பாக்கிச்சூடு நடக்கிறது;
இதெல்லாம் இப்போது வழமையாகிவிட்டது;
எங்கோ புகைமூட்டம், எங்கோ வெடிச்சத்தம், சுற்றுக்கண்கானிப்பு வண்டிகளின் இரைச்சல் மணியோசை, கூச்சல், கதறல் இன்னும் என்னென்னவோ கேட்டன;
மேலே கண்கானிக்கும் விமானம் ஒன்று கடந்து சென்றது;
என் வீட்டின் முன்புறத்தை மேலிருந்து பார்த்தபோதுதான் கவனித்தேன்;
யார் அவன் ஏதோ ஒரு மீசையில்லாத தலைவரின் விளம்பரத்தட்டியை கம்பால் அடித்து நொறுக்குகிறானே?!
ஆர்வக்கோளாறு;
பனிரெண்டு படிக்கும் பையன்போல் உருவம்;
அரக்கு மேற்சட்டை;
அந்த தட்டியை உடைப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்;

நகரத்தின் முக்கிய சாலையின் கிளையிலிருந்து பிரியும் தெருவில் உள்ளது எங்கள் வீடு;
அந்த தெருவின் கோடியில் மேலும் சில மாணவர்கள் கடைகளையும், தட்டிகளையும், விளம்பரங்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்;
அப்போதுதான் அந்த சத்தம், சுற்றுக்காவல் வண்டியின் இரைச்சல்மணி சத்தம்;
வந்தாயிற்று இப்போது இவர்கள் ஓடிவிடுவார்கள் என்று நான் நினைத்ததற்கு ஏற்ப மாணவர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டனர்;
அந்த சத்தம் அருகில் நெருங்கியது சிலர் கையில் இருந்த கம்புகளைக் கீழே போட்டுவிட்டனர்; 
அவர்களுக்குள்ளாக பேச ஆரம்பிக்கும்போதே சரேலென அந்த வண்டி அங்கே வந்து நின்றது;
திமுதிமுவென சீருடையில் தலைக்கவசம் அணிந்துகையில் கம்புகளுடன் இறங்கி ஓடிவந்தனர் காவல்துறையினர்;
அந்த அரக்குச் சட்டை இன்னும் தட்டிகளை நொறுக்கிக் கொண்டு இருந்தான்;
இவன் செவிடனோ?!
முதலில் வந்தக் காவலரை அவன் ஏறிட்டுப்பார்த்தான் பிறகும் அவன் தட்டியை அடிக்க ஆரம்பித்தான்;
அந்தக்காவலர் நெருங்கி கம்பை ஓங்கி ஒரு அடி.
'சட்ட்டார்ர்' என்று ஒரு சத்தம், அந்த அடி அவன் முகத்தில் விழவேண்டியது ஆனால் கையால் தடுத்ததால் கையெலும்பில் மோதி அந்த சத்தம்;
ஆனாலும் அந்த இளைஞன் வலியைப் பொருட்படுத்தாமல் அந்த வாட்டசாட்டமான காவலரை நேருக்கு நேர் பார்த்தான்;
காவலர் இதைப் பார்த்து வியந்தவராய் அப்படியே நின்றுவிட்டார்;
பின்னாலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களில் முதலில் நின்றவன் அவர்களைப் பார்த்து கை நீட்டி ஆள்காட்டி விரலால் சுட்டியவாறு பெருங்குரலெடுத்துக் கத்தினான்; 

அப்போதுதான் அந்த அரக்குச் சட்டை தன் கம்பு வைத்திருந்த தன் கையை உயர்த்தி காவலருக்கு ஒரு அடி வைத்தான்;
அந்த வாட்டசாட்டமானக் காவலரின் இடதுகண் ஒரமாக விழுந்தது அந்த அடி;
அவ்வளவுதான் நிலைகுலைந்த அவர் முகத்தை கைகளால் மூடியவாறு குனிந்துகொண்டார்;
இப்போது வண்டியிலிருந்து ஒடிவந்து கொண்டிருந்த காவலர்கள் அவனை நெருங்கிவிட்டனர்;
கண்ணிமைக்கும் நேரத்தில் அத்தனைபேரும் அவனை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்;
ஆனால் அவன்
அப்போதும் வலியைப் பொருட்படுத்தாமல் முடிந்தவரை கையிலிருந்த மெல்லிய கம்பால் எதிர்த்து அடித்துக்கொண்டே இருந்தான்;
இதைப் பார்த்த மற்ற மாணவர்களும் சூரப்புலிகளாக மாறி கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு பாய்ந்தனர்;
கடுமையான மோதல் வெடித்தது;
காவலர்களோ இருபது இருபத்தைந்து பேர், மாணவர்கள் பதினான்கு பதினைந்து பேர்தான் இருப்பர்;
என் கவனமெல்லாம் அந்த அரக்குச்சட்டை மேல்தான்;
மாணவர்கள் காவலர்களை  அடிக்க ஆரம்பிக்கவும் அரக்குச்சட்டை இளைஞனை அடித்துக்கொண்டிருந்த காவலர் எண்ணிக்கை குறைந்துவிட்டது;

ஆனாலும் அவன் ஒருவனை நான்கைந்து காவலர்கள் விடாமல் அடித்துக்கொண்டே இருந்தனர்;

அந்த சின்ன இளைஞன்மேல் ஏன் இத்தனை ஆத்திரம் இவர்களுக்கு?!

அப்போதுதான் முகத்திற்கு நேராக வந்த ஒரு அடியைத் தடுத்து நிறுத்தி அந்தக் கம்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் அவன்;
'வெடுக்' என்று ஒரு பிடுங்கு,
நல்ல பருமனான அடிப்பதற்கென்றே செய்யப்பட்ட அந்த தடி அவன் கைக்கு வந்துவிட்டது;
இப்போது ஆரம்பித்தது வேடிக்கை, நன்கு பயிற்சி பெற்றவனிடம் வந்ததுபோல் அந்தத் தடி சுழன்றது;
விழுந்த அடிகளின் சத்தம் என் காதுகளுக்கே தெளிவாகக் கேட்டது;
அவனோடு மல்லுக்கு நின்ற நான்கைந்து காவலர்களுக்கு வசமான பதிலடி கிடைத்தது;
சிறிது நேரத்திலேயே அவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கத் தொடங்கினர்;
அந்த மாணவன் தோரணையாக நிமிர்ந்த நெஞ்சுடன் பின்வாங்கும் அந்த நான்கு காவலர்களையும் நிதானமாக தாக்கியபடி முன்னேறினான்;
அவர்கள் கீழே சரிய மற்ற மாணவர்களோடு சேர்ந்து மற்ற காவலர்களைத் தாக்கத்தொடங்கினான்;
காவல்துறையினர் பின்வாங்க ஆரம்பித்தனர்.
சில காவலர்கள் வண்டிக்கு ஓடி தடுப்பை எடுத்து வந்தனர்;
ஒரு அதிகாரி இடுப்பிலிருந்து துப்பாக்கியை வெளியேயெடுக்க முயற்சித்தார்;
ஆனால் இதற்குள் அனைவருமே மாணவர்களால் தாக்கப்பட்டனர்;
துப்பாக்கி எடுக்க முனைந்தவர் மண்டை உடைந்து கீழே விழுந்தார்;
அவர் துப்பாக்கி பறிக்கப்பட்டு அந்த அந்த இளைஞனிடம் கொடுக்கப்பட்டது;
தடுப்பு எடுத்து வெளியே வந்தவர்கள் வண்டியின் வாசலுக்குப் பக்கவாட்டில் நின்ற இளைஞர்களால் பின்புறம் தாக்கப்பட்டு மற்றவர்களுடன் ஓட்டம் பிடித்தனர்;
இப்போது அங்கே மாணவர்களும் முதலில் அந்த மாணவனிடம் அடிவாங்கிய நான்குபேரும் வேறு இரு காவலரும் கீழே கிடந்தனர்;
அவர்களை மற்ற மாணவர்கள் விடாமல் அடித்துக்ககொண்டு இருந்தனர்;
அந்த அரக்குச்சட்டை ஒரு குரல்தான் கொடுத்தான்,
அவர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டனர்;
அவன் அந்த துப்பாக்கி வைத்திருந்த காவலரின் அருகில் சென்று ஏதோ கூறினான்;
பிறகு பையிலிருந்து பேசியை எடுத்து பேசினான்;
வெவ்வேறு திசையில் காவலர்களைத் துரத்திச் சென்றவர்கள் திரும்பி வந்தனர்;
அப்போது மிக அருகில் துப்பாக்கிச் சத்தமும் இரைச்சல்மணிகள் அலற நெருங்கும் வாகனங்களின் சத்தமும் கேட்டது ;
உடனே இளைஞர்கள் அந்த கைவிடப்பட்ட காவல்வண்டியில் ஏறிக் கதவை மூடவும் பின்னாலிருந்து வந்த காவல்வண்டிகளில் முதல் வண்டியிலிருந்து தோட்டாக்கள் பாய்ந்தன;
ஆனால், அது ஏற்கனவே பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட வண்டியாதலால் எதுவும் ஆகவில்லை;
மாணவர்கள் அந்த வண்டியை எடுத்துக்கோண்டு கிளம்ப பின்னாலேயே துரத்தியபடி மூன்று வண்டிகள் சென்றன;

நான் கீழிறங்கி வந்தேன்;
மறைந்த என் தாத்தாவின் பருமனான தேக்குக் கைத்தடியை எடுத்துக்கொண்டு 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்கும் என் மனைவிக்கு பதிலளிக்காமல் தெருவில் இறங்கி வண்டிகள் போன திசையில் விரைவாக நடந்தேன்;
என் நெஞ்சு நிமிர்ந்திருந்தது.

No comments:

Post a Comment