Wednesday, 31 July 2019

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------

"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்

30.7.1886

முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...

1.சத்திய மூர்த்தி ஐயர்
2.ஈ.வெ.ராமசாமி
-------
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர்.

இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் என்று கூறப்படுபவர் சத்திய மூர்த்தி ஐயர்.

இவர் "இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது" என்று சொன்னதாகவும்,
அதற்குப் பதிலடியாக முத்துலெட்சுமி அம்மையார் "உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன்" என்று கூறி அவரின் வாயடைத்தார் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

குறிப்பாக, ஈ.வெ.ராமசாமிதான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது பற்றி ஆராய்வோம்!

முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்  சுயசரிதை நூல் எழுதியுள்ளார்.
அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது.

அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை,
(ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்று மட்டும் குறித்துள்ளார் ).

அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் எழுதி தொடர்ந்து குரல் கொடுத்ததாக கூறப்படும் ஈ.வெ.ரா. குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
---------
ஆம்.

முதலில் அவரைத் தூண்டியதாக அவர் கூறும் இருவரும் பார்ப்பனர்!

லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும்,
பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் செயல்படத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
--------
அவர் வழிகாட்டியாக சுட்டுவது காந்தியை!

அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும்,
அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று  புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார்.
'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
--------

முன்னோடிகளாக அவர் சுட்டியோர் திராவிடவாதிகள் அல்லர்!

1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரையே குறிப்பிட்டு பேசுகிறார்.
-------
ஈ.வே.ரா பற்றி பத்தோடு பதினொன்றாக கூட குறிப்பிடவில்லை!

  திராவிடவாதிகளில் நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை ஓரிடத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு திராவிடவாதியான நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான்  தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார்.

1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

ஒருவேளை யாரையும் விமர்சிக்க மனமில்லாமல் சத்தியமூர்த்தி ஐயரை விட்டிருக்கலாமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.

அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி.
1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.

பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

ஈ.வெ.ரா எந்த இடத்திலும் அம்மையாரின் நினைவுக்கு வரவில்லை.

  என்றால் ஈ.வெ.ரா குரல்கொடுக்கவே இல்லையா?!
அல்லது முத்துலட்சுமி அம்மையார் குறிப்பிடும் அளவுக்கு அது வலுவாக இல்லையா?!

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.

"பெரியாரின் ஆலோசனையின்படியே, சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேள்விகள் கேட்டார்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!

(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)

தகவல்களுக்கு நன்றி:-
Tamilthesiyan.wordpress.com

Saturday, 27 July 2019

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை - வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

இராசராசன் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பிராமணீயம் இல்லை
- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

** ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாச்சேரி என்றும் பறைச்சேரி எனவும் தனித்தனியாக குறிக்கப்படுள்ளது **

** விஜயநகர காலத்திற்கு பின்புதான் (நாயக்கர் ஆட்சியில்) பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டனர் **

**  சோழர் வழங்கிய நிலதானங்களில் 20% தான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது **

---------------

வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார் அவர்கள்,
""பிறகாலச் சோழர் கால வாழ்வியல்",
"சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்",
"தமிழகத் தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும்"
உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.

ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் மே.து.ராசுகுமார்.

சமீபத்தில் "சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம் நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான்"
என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.

இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.

"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ,
அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதனை நாம் மறுத்துவிட முடியாது.
எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம் புறந்தள்ள முடியாது.

வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது.
இதன் மூலமாக உற்பத்தி பெருகியது.

உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது.
உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது.

ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின்,
இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது"
என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.

பறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார்,

"தீண்டப்படாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. 
ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் பறையர்கள் தீண்டப்படாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள்?
எனவே பறையர்கள் அந்த காலத்தில் தீண்டப்படாதவர்களாக இல்லை எனலாம்.

அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டப்படாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம்.
அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டப்படாதவர்களாக இருந்திருக்கலாம்.

விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டப்படாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு" என்கிறார்.

மேலும்,
"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன.
பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார்.
அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது.

அதில்,
'சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில்
வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்'
என்று கூறியுள்ளார்.

பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை.
பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் "
என்று கூறும் ராசுக்குமார் மேலும் விளக்குறார்....

"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் முழு உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை.
பங்குதான் தரப்பட்டது.
அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது.

இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஏற்கெனவே இருந்த  குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல்.

சரி.
இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும்.
'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல.
வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது,
யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'.
அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள்.
இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

மற்றொருவகை 'குடிநீங்கா பிரமதேயம்'.
ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.

குடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள்.
ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை"
என்ற மே.து.ராசுக்குமார்,

ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை மேலும் விவரிக்கிறார்...

"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது.
உண்மையில் அப்படியெல்லாம் இல்லை.
அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை.

அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்."
என்கிறார் ராசுக்குமார்.

நன்றி:
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி
- மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
11 ஜூன் 2019

Friday, 26 July 2019

தெலுங்கரின் எமன்

தெலுங்கரின் எமன்

இராசராசனுக்கு "தெலுங்கரின் எமன்" என்று பொருள்படும் வகையில் "தெலுங்கு குல காலன்" என்கிற பட்டம் இருந்ததா?!

ஆம்!

புதுக்கோட்டை க்கு வடக்கே உள்ளது நார்த்தமலை.
  இங்குள்ள திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 27 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது.
இதில்,
'இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

  கி.பி. 1431 ஆம் ஆண்டைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டும் உண்டு.
இதிலும்,
"கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணம்" குறிக்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பு 'மாவட்டம்' என்பதைப் போன்று 'வளநாடு' என்ற பெயரால் வகை பிரிக்கப்பட்டு ஆளப்பட்டன.
அப்படியான "இரட்டைபாடி கொண்ட சோழவளநாடு" எனும் மாவட்டத்தில் "தெலுங்க குல கால புரம்" எனும் ஊர் இருந்துள்ளது.
இதுவே இன்றைய நார்த்தமலை.

இது குலோத்துங்கன் காலத்தில் "குலோத்துங்க சோழ பட்டணம்" என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது.

(சான்று நூல்: சமணமும் தமிழும்
நூலாசிரியர்: மயிலை.சீனி. வேங்கடசாமி )

தந்தை வழியில் சாளுக்கியனான குலோத்துங்கன்,
தெலுங்கரை சோழர் அழித்ததை விரும்பவில்லை போலும்!

முதலாம் கல்வெட்டில் "இரட்டைபாடி கொண்ட" என்று உள்ளது.
இப்பட்டம் இராசராச சோழனுக்கு உரியதாகும்.

இரண்டாம் கல்வெட்டில் "கடலடையாது இலங்கை கொண்ட" என்றும் உள்ளது.
இது இராசராசன் கடல் தாண்டாமல் தன் மகனை அனுப்பி ஈழத்தைக் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது.

ஆக இந்த "தெலுங்ககுல கால புரம்"  இராசராசன் புதியதாக நிறுவிய நகரமாக இருக்கலாம்.

Wednesday, 24 July 2019

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???

இல்லை!

சமணர் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல.

அது ஒரு கற்பனையான பழைய நம்பிக்கை மட்டுமே!
அதை தொன்மம் என்று கூறமுடியுமே தவிர வரலாறு என்று ஒத்துக்கொள்ள ஆதாரங்கள் வேண்டும்.
 
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைத் தான்.

ஆனால் சமணரை வாதத்தில் வென்ற  (கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது.

250 ஆண்டுகள் கழித்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார்.
அதுவே பெரிய புராணம் ஆகும்.

அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல புனைவுக் கதைகள் செருகப்பட்டன.
  சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,
வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது,
கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது,
சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன.
இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கமாட்டார்கள் (திராவிட தத்துவவாதிகளைத் தவிர!).

கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை.
சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.

கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் சமண மடாலயங்களும், சமணக் கோயில்களும் கி.பி. 10ம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் செழிப்புடன் இருந்துள்ளன என்பதை கோ.செங்குட்டுவன் எழுதிய "சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்" எனும் நூல் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்.

எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.
அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் (எ-டு: கோவலன்).
வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்.
(கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு)
அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் (எண்ணாயிரம் சமணன்) செய்த ஏதோவொரு குற்றத்திற்காக அவன் கழுவேற்றப்பட்டிருக்கலாம்.

அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டு பரப்புரை நடபெறுவதாகவே ஊகிக்க முடிகிறது.

இந்த கட்டுக்கதையை தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி.

  தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரிலும்,
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலிலும்,
திருச்செந்தூர் கோயிலிலும்,
வைகுந்த பெருமாள் கோவிலும்
காஞ்சி கோவிலிலும் (இதன் தலை சிதைக்கப்படுள்ளது) கழுவேற்ற சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் கழுவேற்றும் ஓவியங்கள் உள்ளன.
 
மேற்கண்ட அனைத்திலுமே கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீசை தாடியுடன் காணப்படுகிறது.

சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்.
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை.

எந்த மூல ஆதாரங்களையும் காட்டாமல் இப்படியான பிற்கால பின்னொட்டு சான்றுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டே போவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?!

உண்மையில் சமணர் மொட்டைத் தலையுன் இருந்தனரா?!

இதற்கு ஒரு சான்றினைப் பார்ப்போம்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.
(சமணர் அதிகம் வாழ்ந்த ஊர்.
இங்கே இருக்கும் சமண கோவில் இன்றும் இயங்கிவருகிறது.
செயங்கொண்டார் சமணரா என்பது தெரியவில்லை)

இவர் பாடிய கலிங்கத்துப் பரணி சமணரின் தோற்றம் பற்றி கூறுகிறது.
அதாவது முதலாம் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்கத்து படைவீரர்கள் தலையை மழித்துக்கொண்டு தாங்கள் சமணர் என்று பொய்கூறி தப்பிக்கப் பார்த்ததாக கூறியுள்ளார்.

சரி! இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன??

தமிழ் வளர்த்த சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் மற்றும் பாண்டியர்கள் இனப்படுகொலை செய்யுமளவு கொடூரமானவர்கள் என்றும் நம்பவைப்பதற்காக மட்டுமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

சமணர் கழுவேற்றம் எனும் கட்டுக்கதை உருவானதும் பரவியதும் எப்படி?!

இக்கதையை முதன்முதலாக உருவாக்கிய நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள்.
இதனாலேயே இவர்களது நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.

  நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு கற்பனையைப் பதிவு செய்கிறார்.

சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடச் செய்கிறார்.

பிற்பாடு அருணகிரிநாதர் கூட இந்த கழுவேற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கழுவேற்றம் எனும் சடங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் நடத்தபடும் திருவிழா நாடகங்களில் இடம்பெற்று வந்தது.

பெரியபுராணம் 1860 களில் அச்சில் வெளிவந்த பிறகு மீண்டும் இந்த கட்டுக்கதை மக்களிடையே பிரபலமாகிறது.

வள்ளலார் இது பற்றி மனம் பதறி சிவனிடம் முறையிடுவது போல எழுதியுள்ளார்.

அதன்பிறகு தமிழறிஞர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில்
அ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர், மயிலை. சீனி.வெங்கடசாமி போன்றோர் சமண கழுவேற்றம் உண்மை என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய பெரும்பாலோர் சமணர் கழுவேற்றம் நடந்திருப்பதாக கூறுவதை மறுத்திருக்கின்றனர்.
இதையெல்லாம் விட தமிழ்ச் சமண அறிஞரான டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களும் நன்கு ஆராய்ந்து "இது வரலாற்றுச் சம்பவம் அல்ல" என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ஆக,

சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் வாதத்தில் தோற்ற சமணர் தண்டிக்கப்பட்டதற்கான அகச்சான்றுகள் இல்லை.

பல்லவ , பாண்டிய, சோழர்கள் வெட்டிய அனைத்து கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.

சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதாக பாண்டியர்கள் மீது வீண்பழி போடப்படுகிறது.
  ஆனால் உண்மையில் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகும் சமணர்க்கு குகைகளும் கற்படுக்கைகளும் பாண்டியர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அவை வருமாறு,

மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை
( சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது)
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
(யானைமலை நரசிங்கர் குடைவரை
பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது)
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை.

இத்தனை குழப்பத்திற்கும் காரணம் யார்?!

12 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடன் திருமண உறவின் மூலம் கலந்த சாளுக்கியர் அநாபய சாளுக்கியன் காலத்தில் சோழ அரசைக் கைப்பற்றி சோழர் என்ற பெயரிலேயே ஆட்சி செய்கிறார்கள்.
இவர்கள் சைவ  மதவெறியர்கள்.
பாண்டியநாடு வரை இவர்கள் ஆட்சியே என்பதால் பாண்டியர் மீது களங்கம் கற்பிக்கும் இந்த கழுவேற்ற கட்டுக்கதை இவர்கள் தூண்டுதலால் உருவாக்கப்படுகிறது.

மற்றபடி சமணரே கூட இப்படி ஒரு பழியை பாண்டியர் மீது போடவில்லை.
சமண மதம் சார்ந்த புராணங்களிலேயோ நூல்களிலோ  கல்வெட்டுகளிலேயோ கூட கழுவேற்ற சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.

கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணர்கள் தமிழில் எழுதிய நூல்கள் வருமாறு,
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்

சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன.

சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?

கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

இவர்களுள் ரொமிலா தாபரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.

இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுக்கப்படவில்லை.
சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று தீக்கதிரில் கட்டுரை எழுதிய (தெலுங்கரான) கம்யூனிஸ்டு
அருணன் கூட சரியான முறையில் இதுவரை இதை மறுக்கவில்லை.

முடிவாக,
கன்னட சாளுக்கியரால் உருவாக்கப்பெற்று
மதுரை தெலுங்கு நாயக்கர்களால் பரப்பப்பட்டு
வந்தேறி திராவிடவாதிகளால் மெருகேற்றப்பட்டு
தமிழர் மீது போடப்படும் வீண்பழியே "சமணர் கழுவேற்றம்" எனும் கட்டுக்கதை!