Wednesday, 24 July 2019

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???

இல்லை!

சமணர் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல.

அது ஒரு கற்பனையான பழைய நம்பிக்கை மட்டுமே!
அதை தொன்மம் என்று கூறமுடியுமே தவிர வரலாறு என்று ஒத்துக்கொள்ள ஆதாரங்கள் வேண்டும்.
 
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைத் தான்.

ஆனால் சமணரை வாதத்தில் வென்ற  (கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது.

250 ஆண்டுகள் கழித்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார்.
அதுவே பெரிய புராணம் ஆகும்.

அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல புனைவுக் கதைகள் செருகப்பட்டன.
  சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,
வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது,
கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது,
சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன.
இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கமாட்டார்கள் (திராவிட தத்துவவாதிகளைத் தவிர!).

கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை.
சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.

கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் சமண மடாலயங்களும், சமணக் கோயில்களும் கி.பி. 10ம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் செழிப்புடன் இருந்துள்ளன என்பதை கோ.செங்குட்டுவன் எழுதிய "சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்" எனும் நூல் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்.

எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.
அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் (எ-டு: கோவலன்).
வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்.
(கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு)
அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் (எண்ணாயிரம் சமணன்) செய்த ஏதோவொரு குற்றத்திற்காக அவன் கழுவேற்றப்பட்டிருக்கலாம்.

அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டு பரப்புரை நடபெறுவதாகவே ஊகிக்க முடிகிறது.

இந்த கட்டுக்கதையை தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி.

  தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரிலும்,
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலிலும்,
திருச்செந்தூர் கோயிலிலும்,
வைகுந்த பெருமாள் கோவிலும்
காஞ்சி கோவிலிலும் (இதன் தலை சிதைக்கப்படுள்ளது) கழுவேற்ற சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் கழுவேற்றும் ஓவியங்கள் உள்ளன.
 
மேற்கண்ட அனைத்திலுமே கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீசை தாடியுடன் காணப்படுகிறது.

சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்.
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை.

எந்த மூல ஆதாரங்களையும் காட்டாமல் இப்படியான பிற்கால பின்னொட்டு சான்றுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டே போவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?!

உண்மையில் சமணர் மொட்டைத் தலையுன் இருந்தனரா?!

இதற்கு ஒரு சான்றினைப் பார்ப்போம்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.
(சமணர் அதிகம் வாழ்ந்த ஊர்.
இங்கே இருக்கும் சமண கோவில் இன்றும் இயங்கிவருகிறது.
செயங்கொண்டார் சமணரா என்பது தெரியவில்லை)

இவர் பாடிய கலிங்கத்துப் பரணி சமணரின் தோற்றம் பற்றி கூறுகிறது.
அதாவது முதலாம் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்கத்து படைவீரர்கள் தலையை மழித்துக்கொண்டு தாங்கள் சமணர் என்று பொய்கூறி தப்பிக்கப் பார்த்ததாக கூறியுள்ளார்.

சரி! இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன??

தமிழ் வளர்த்த சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் மற்றும் பாண்டியர்கள் இனப்படுகொலை செய்யுமளவு கொடூரமானவர்கள் என்றும் நம்பவைப்பதற்காக மட்டுமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

சமணர் கழுவேற்றம் எனும் கட்டுக்கதை உருவானதும் பரவியதும் எப்படி?!

இக்கதையை முதன்முதலாக உருவாக்கிய நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள்.
இதனாலேயே இவர்களது நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.

  நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு கற்பனையைப் பதிவு செய்கிறார்.

சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடச் செய்கிறார்.

பிற்பாடு அருணகிரிநாதர் கூட இந்த கழுவேற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கழுவேற்றம் எனும் சடங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் நடத்தபடும் திருவிழா நாடகங்களில் இடம்பெற்று வந்தது.

பெரியபுராணம் 1860 களில் அச்சில் வெளிவந்த பிறகு மீண்டும் இந்த கட்டுக்கதை மக்களிடையே பிரபலமாகிறது.

வள்ளலார் இது பற்றி மனம் பதறி சிவனிடம் முறையிடுவது போல எழுதியுள்ளார்.

அதன்பிறகு தமிழறிஞர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில்
அ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர், மயிலை. சீனி.வெங்கடசாமி போன்றோர் சமண கழுவேற்றம் உண்மை என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய பெரும்பாலோர் சமணர் கழுவேற்றம் நடந்திருப்பதாக கூறுவதை மறுத்திருக்கின்றனர்.
இதையெல்லாம் விட தமிழ்ச் சமண அறிஞரான டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களும் நன்கு ஆராய்ந்து "இது வரலாற்றுச் சம்பவம் அல்ல" என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ஆக,

சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் வாதத்தில் தோற்ற சமணர் தண்டிக்கப்பட்டதற்கான அகச்சான்றுகள் இல்லை.

பல்லவ , பாண்டிய, சோழர்கள் வெட்டிய அனைத்து கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.

சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதாக பாண்டியர்கள் மீது வீண்பழி போடப்படுகிறது.
  ஆனால் உண்மையில் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகும் சமணர்க்கு குகைகளும் கற்படுக்கைகளும் பாண்டியர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அவை வருமாறு,

மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை
( சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது)
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
(யானைமலை நரசிங்கர் குடைவரை
பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது)
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை.

இத்தனை குழப்பத்திற்கும் காரணம் யார்?!

12 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடன் திருமண உறவின் மூலம் கலந்த சாளுக்கியர் அநாபய சாளுக்கியன் காலத்தில் சோழ அரசைக் கைப்பற்றி சோழர் என்ற பெயரிலேயே ஆட்சி செய்கிறார்கள்.
இவர்கள் சைவ  மதவெறியர்கள்.
பாண்டியநாடு வரை இவர்கள் ஆட்சியே என்பதால் பாண்டியர் மீது களங்கம் கற்பிக்கும் இந்த கழுவேற்ற கட்டுக்கதை இவர்கள் தூண்டுதலால் உருவாக்கப்படுகிறது.

மற்றபடி சமணரே கூட இப்படி ஒரு பழியை பாண்டியர் மீது போடவில்லை.
சமண மதம் சார்ந்த புராணங்களிலேயோ நூல்களிலோ  கல்வெட்டுகளிலேயோ கூட கழுவேற்ற சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.

கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணர்கள் தமிழில் எழுதிய நூல்கள் வருமாறு,
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்

சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன.

சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?

கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

இவர்களுள் ரொமிலா தாபரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.

இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுக்கப்படவில்லை.
சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று தீக்கதிரில் கட்டுரை எழுதிய (தெலுங்கரான) கம்யூனிஸ்டு
அருணன் கூட சரியான முறையில் இதுவரை இதை மறுக்கவில்லை.

முடிவாக,
கன்னட சாளுக்கியரால் உருவாக்கப்பெற்று
மதுரை தெலுங்கு நாயக்கர்களால் பரப்பப்பட்டு
வந்தேறி திராவிடவாதிகளால் மெருகேற்றப்பட்டு
தமிழர் மீது போடப்படும் வீண்பழியே "சமணர் கழுவேற்றம்" எனும் கட்டுக்கதை!

No comments:

Post a Comment