Friday 14 September 2018

இனக்காப்பு

இனக்காப்பு

அந்த குளிர்மண்டல நாட்டின் ஒரு பெருநகரத்தில் 5 விண்மீன் விடுதியில் வெதுப்பூட்டப்பட்ட பெரிய அறையில் அந்த நாட்டுக்கு தொடர்பில்லாத ஒரு இனத்து மக்கள் கூடியிருந்தனர்.

அந்த நாட்டு இனத்தைச் சேர்ந்த சிலரும் அங்கே இருந்தனர்.

அது ஒரு திருமண விழாவின் மாலைநேர வரவேற்பு நிகழ்ச்சி.

பெண்கள் பலரும் தமது பண்பாட்டு உடையில் இருந்தனர்.
பல வண்ணங்கள் மின்னும் அவர்களது உடையும் அவர்கள் அணிந்திருந்த பெரிய பெரிய நகைகளும் கண்களைப் பறிக்கும் வண்ணம் இருந்தன.

சில பெண்மணிகள் மணப்பெண்ணை விஞ்சும் அளவுக்கு தங்கம் அணிந்திருந்தனர்.
பல பெண்மணிகள் குறைவாக அணிந்திருந்தனர்.
தங்கம் அணியாத பெண்மணி யாரும் காணப்படவில்லை.

ஆண்கள் பலரும் இந்நாட்டு உயர்தர உடையில் இருந்தனர்.
சிலர் பண்பாட்டு உடையிலும் இருந்தனர்.
ஆண்கள் அனைவரும் பெயருக்கு நகை அணிந்திருந்தனர்.
சிலர் அணியவில்லை.

மணமக்கள் அதிகம் பேசிக்கொள்ளாததில் இருந்து அவர்கள் முன்பே ஒருவருக்கொருவர் அதிக அறிமுகமில்லாதவர் என்பது தெரிந்தது.
ஆனாலும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.
மணமகன் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்.
மணமகளோ தாய்நிலத்தவர்.
அறிமுகமில்லாதவரை பெற்றோர் ஏற்பாட்டில் இத்தனை வேறுபாடுகளை மீறி எப்படித்தான் திருமணம் செய்துகொள்கின்றரோ தெரியவில்லை.

மணப்பெண் வீட்டார் அனைவரையும் விழுந்து விழுந்து வரவேற்றனர்.
மணமகன் வீட்டார் அனைவரையும் அதிகாரம் செலுத்தியபடி இருந்தனர்.
மணமகள் வீட்டாருக்கு இந்நாட்டு மொழியும் புரியவில்லை.
அதிக ஆட்களும் இல்லை.
அதனால் அவர்கள் அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தனர்.

பாட்டுக் கச்சேரி குழுவும் அவ்வினத்து மொழியில் அவ்வினத்து இசையில் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.

என்னைப் பற்றி கூற மறந்துவிட்டேன்.
நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன்.
கல்லூரியில் பட்டம் பெறுவதற்காக இந்த இனத்து மக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை அர்ப்பணிக்கவுள்ளேன்.

இந்த இனத்தில் எனக்கொரு நண்பர் உள்ளார்.
அவர் நெடுநாள் பழக்கம்.
அவரை நம்பியே இந்த ஆய்வில் இறங்கியுள்ளேன்.
அவர்தான் இங்கே அழைத்துவந்தார்.

நான் இவ்வினத்து இளம்பெண்களை நோட்டமிட்டபடி இருந்தேன்.
அதோ அங்கே ஒருத்தி இருக்கிறாள்.
அந்த கூடத்தில் ஏறத்தாழ அனைவரது கவனமும் அவள்மீது இருந்தது.

அவள் அந்த இனத்தவள்தான்.
பதினாறு அகவை இருக்கலாம்.
பொதுவாக கதைகளில் வரும் பெண்கள் அழகாக இருப்பார்கள்.
இந்த கதையிலும் அப்படித்தான்.
ஏனென்றால் அழகான பெண்களைப் பற்றித்தான் பெரும்பாலான கதை, கவிதை, காவியமெல்லாம் எழுதப்படுகிறது.

அவள் இயல்பினாலும் பருவத்தினாலும் அதியழகாய் இருந்தாள்.
ஆனால் அந்த இனத்தாரைப் போலில்லாமல் இந்த நாட்டு கவர்ச்சியான உடையில் இருந்தாள்.
ஒப்பனையும் சற்று தூக்கலாகவே இருந்தது ஆனாலும் அது அவளது அழகைப் பாதிக்கவில்லை.
நிறைய இளைஞர்கள் அவளைச் சுற்றிவந்தனர்.
அவளும் அவர்களைப் புறக்கணிப்பதாய் இல்லை.

அவள் தன்னினத்தாருடன் பேசும் மொழியில் இந்நாட்டு மொழியில் வார்த்தைகள் அதிகம் கலந்திருந்தன.
இளந்தலைமுறைப் பதுமையான அவள் மணமகனின் தங்கையாம்.
இவர்கள் இங்கே குடியேறி நான்கு தலைமுறைகள் ஆகிவிட்டதாகக் கூறினர்.
அப்படிப் பார்த்தால் இந்த தாக்கம் சற்று குறைவாகவே பட்டது.

திடீரென்று அனைவரும் விழுந்தடித்து வாசலுக்கு ஓடினர்.
ஒரு விலையுயர்ந்த மகிழுந்து வந்து நின்றது.
அதிலிருந்து ஒரு பெண் இறங்கினாள்.
அவள் எளிமையான உடையிலும் நகைகள் எதுவும் அணியாமலும் இருந்தாள்.
அவரைப் பின்தொடர்ந்து மெய்க்காவலுக்கு இரண்டு ஆண்கள் நடந்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் உட்பட அனைவரும் அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று பணிவுடன் விருந்தோம்பல் செய்தனர்.

ஆனால் அந்த மூவரும் ஒருவித இறுக்கத்துடனே நடந்துகொண்டனர்.

என் நண்பரிடம் அவர்கள் யாரென்று கேட்டேன்.
அவர்கள்தான் அந்த இனத்திற்காக நாடுகேட்டுப் போராடிய தீவிரவாதக் குழு. இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியாட்சி நடக்கிறது.
ஆனால் இவர்கள் இன்னும் இயங்குகிறார்கள்.
இவர்கள் தமது நாட்டின் மக்கள்வாழாப் பகுதிகளிலும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும் தனியே ஒரு நிழல் அரசாங்கமே நடத்துகிறார்கள்.
பிற நாடுகளில் இம்மக்களுக்கு எந்த இடர்ப்பாடு என்றாலும் இவர்கள் சரிசெய்து கொடுப்பார்கள்.
இந்த நாட்டில் குடியேறிய மக்களுக்கு இந்த பெண்தான் பொறுப்பு.
இவர் தீவிரவாதப்படையின் முக்கிய தளபதியும் ஆவார்.

இப்போது பாட்டு நின்றது.
அனைவரும் இந்த கதையின் நாயகியைப் பார்த்தனர்.
அவள் மேடைக்கு சென்று ஒலிவாங்கியப் பிடித்து தொண்டையைச் செருமிக்கொண்டாள்.

மாறுபட்ட இசை ஒலிக்கத் தொடங்கியது.
அவள் தனது இனிமையான காந்தக் குரலில் பாடத் தொடங்கினாள்.
அனைவரது முகத்திலும் வியப்புடன் கலந்த மகிழ்ச்சியை என்னால் பார்க்கமுடிந்தது.

அதிலும் குறிப்பாக அந்த மூன்றுபேர் முகத்திலும் ஒரு இன்ப அதிர்ச்சி தெரிந்தது.

அங்க அசைவுகளுடன் சுதி ஏற்றியிறக்கி மெல்ல நடனமாடியபடி அவள் பாடி முடித்ததும் அனைவரும் சத்தமாக நெடுநேரம் கைகளைத் தட்டினார்கள்.

அப்படியென்ன பாடிவிட்டாள் என்று என் நண்பனிடம் கேட்டேன்.

அவள் முப்பது ஆண்டுகள் பழமையான ஒரு பாடலைப் பாடியுள்ளாள்.
அது ஒரு திரைப்படப் பாடல்.
அதில் ஒரு கன்னிப்பெண் இரவில் தனிமையில் தன் காதலனை நினைத்து ஏக்கத்துடன் பாடும் பாடல்.
நாட்டுப்புற நடையில் இருந்த அந்த பாடலை இந்த புலம்பெயர்ப் பதுமை மிக நேர்த்தியாகப் பாடியுள்ளாள் என்பதே இந்த கைதட்டலுக்குக் காரணம்.

ஆம். அவள் என் கண்களுக்கு முன்னே உண்மையிலேயே அந்த 'ஏங்கும் பெண்ணாகவே' மாறிவிட்டிருந்தாள்.

இப்போது அந்த தீவிரவாதப் பெண் எழுந்துசென்று அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து பாராட்டி தோளில் தட்டிக்கொடுத்தார்.

பிறகு விடைபெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.
போகும்போது ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டுப் போயினர்.

இப்போது ஒவ்வொருவராக அனைவரும் மேடை நோக்கி விரைந்தனர்.
அவள் வாழ்த்துமழையில் நனைந்தபடி மேடையை விட்டு இறங்கினாள்.

நானும் அவளைப் பாராட்டும் சாக்கில் அவளை நோக்கி சென்றேன்.
அருகில் நின்று அவளது முகத்தைப் பார்த்தேன்.

அந்த தீவிரவாதத் தலைவியின் முகச்சாயலே அதில் தெரிந்தது.

No comments:

Post a Comment