Wednesday 24 October 2018

இரண்டு புதிய அணைகள் - முல்லைப்பெரியாறு அணை டம்மியாக்கப்பட்டு உடைக்கப்படும்

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக மேலும் இரண்டு அணை
- அனுமதி வாங்கியது கேரளா

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடந்த வரலாறு காணாத மழை ஏற்படுத்திய சுவடுகள் இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை.
அதற்குக் காரணமாக மலையைக் குடைந்து கட்டடங்கள், சாலைகள் எனப் பலவற்றை அமைத்திருந்ததும், கிட்டத்தட்ட 43 அணைகள் கட்டியிருந்ததையும் சுற்றுச் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டினர்.
இதனால் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டதையும், வீடுகள் இடிந்ததையும் சுட்டிக் காட்டினர்.
ஆனால், கேரள அரசோ முல்லைப் பெரியாறு அணையின்மீது குற்றம் சாட்டியது.
இதற்குப் பல எதிர்ப்புகள் எழுந்தபோதும், தனது திசையைத் திருப்பாமல் முல்லைப் பெரியாறு அணையின் கீழே மேலும் ஒரு புதிய அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

இந்தப் புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிறது.
இந்த இடம் வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது.

இதற்கான சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நாடி அனுமதியும் வாங்கிவிட்டது கேரளா.

இதனை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது.
2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கொஞ்சம் திருப்பிப் பார்க்க வேண்டும்.
"அணை தொடர்பான சிக்கல்களுக்குத் தமிழகமும், கேரளாவும் ஒரு மனதுடன் முடிவெடுத்து நீதிமன்றத்தை அணுகலாம்.
கேரளா தனியாக அணையைக் கட்ட விரும்பினால், தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, அதைச் சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தோடு இணைக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக கேரளா தனித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்து சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கையைத் தயார் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறது கேரளா.

இதுபற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம்.
"தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்ய கேரள ந அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது மிகப்பெரும் சூழலியல் பேரிடராகும்.

கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை பொழிவினால் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு ஒட்டுமொத்த மாநிலமே நீரில் மிதந்ததற்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து பல சுரங்கங்கள், சாலைகள், ரிசார்ட்டுகள் என அமைத்ததே முக்கியக் காரணமாகும்.

மேலும் தேவையே இல்லாத இடங்களில் மின்சார உற்பத்திக்காக அணைகள் கட்டியதும் இப்பேரழிவுக்கு முக்கியக் காரணமாகும்.
உலக நாடுகள் பலவும் இப்பிரச்னையை உணர்ந்து பல ஆண்டுகளுக்குமுன் கட்டிய அணைகளை இடித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் அணைகள் கட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது எனப் (reservoir induced seismicity ) பல ஆய்வுகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இன்னொரு அணையைக் கட்டுவது அறிவார்ந்த செயல் கிடையாது.

அதுமட்டுமன்றி முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் புதிய அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காமல் போய்விடும்.

மேலும் 2014-ம் ஆண்டு, முல்லைப் பெரியாறு வழக்கில் ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில் 'இரண்டு மாநிலங்களும் ஒருமனதாக புதிய அணை கட்ட முடிவு எடுத்து நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும், கேரள அரசு அணை கட்ட விரும்பினால் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் பெற்று அதைச் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தோடு இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கியிருக்கும் இந்த முதற்கட்ட அனுமதி வெளிப்படையான நீதிமன்ற அவமதிப்பாகும்.
தமிழக மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய சுற்றுச்சூழல்துறையின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,200 அடி கீழ்த்திசையில் புதிய அணை அமைக்கப்படவுள்ளதால் நிச்சயமாக தமிழகத்துக்கு நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அணையின் உயரம் 174.6 அடி, நீளம் 1,214 அடி.
இதற்குத் துணை அணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு 663 கோடியாகும்.
இந்த அணை கட்டுவதால் 0.017 டி.எம்.சி நீரை மட்டுமே அதிகமாக தேக்கி வைக்க முடியும்.
0.502 சதுர கிலோமீட்டர் மட்டுமே நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிக்கும்.

ஆனால் முல்லைப் பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்தச் சிறிய அளவு நன்மைக்காக மிகப்பெரும் சூழலியல் சீர்கேட்டை அனுமதிக்க முடியாது.
புதிய அணை கட்டி முடித்த பின்னர் பழைய அணையானது பகுதி பகுதியாகச் செயலிழக்கம் செய்யப்பட்டு உடைக்கப்படும் எனவும்,
அனைத்து அனுமதிகளும் பெறப்பட்ட 4 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

கேரளா, "முல்லைப் பெரியாறு அணையின் வாழ்நாள் முடிந்துவிட்டது,
அண்மைக் காலமாக கேரளாவில் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன,
அதனால் புதிய அணை தேவைப்படுகிறது,
புதிய அணை கட்டினால் மக்களைப் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ள முடியும்" என்று தனது கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதற்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு அணை முழுப் பலத்தோடு இருக்கிறது என்று அறிக்கை கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா, தமிழக அரசோடு ஆலோசிக்காமல் இரண்டு அணைகளைக் கட்ட சுற்றுச்சூழல் தாக்கீடு அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்கிவிட்டது.

இதில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

இனி முடிவு தமிழக அரசின் கைகளில்...!

நன்றி: Tamilri.com (TRI)

No comments:

Post a Comment