ஆய்த பூசனை
 சங்ககாலத்தில் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது.
 அதியமானின் தோழியான ஔவை போரைத் தவிர்க்கும் பொருட்டு தொண்டமானிடம் தூது போகிறாள்.
 தொண்டைமான் தனது ஆயுத சாலையைப் பார்வையிட அழைத்துச் செல்கிறான்.
 அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்து ஒரு ஔவை பாடல் பாடுகிறாள்.
 
"இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே  அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே"
(புறநானூறு -95)
இலக்கணம் பற்றி படிக்கும்போது பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணியில் நீங்கள் இதை ஏற்கனவே படித்திருக்கலாம்.
அதாவது ஔவையார் தொண்டைமானைப் பார்த்து,
 இங்கே ஆயுதங்கள் எல்லாம் (துருவேறாமல் பாதுகாக்க) எண்ணெய் பூசப்பெற்றுத் 
 அழகுக்காக ஆயுதக் குவியல்களின்மீதும் அடுக்குகளின்மீதும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டு
 ஆயுத வரிசைகளின்மேல் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு மினுமினுப்பாக அழகாகத் தெரிகின்றன.
 அங்கே அதியமான் ஆயுதங்களோ ஓய்வே கிடைக்காமல் போரில் பயன்படுத்தப்பட்டு எப்போதும் பழுநீக்கத்திலேயே கிடக்கின்றன"
 என்று கூறுகிறார்.
இதன் மூலம் அதியமான் தன்னைவிட பெரிய வீரன் என்று உணர்ந்த தொண்டைமான் அவனுடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடுகிறான்.
ஆம். ஆயுதங்களை அலங்கரித்து மரியாதை செய்வது (வணங்குவது அல்ல) தமிழர் பண்பாடு ஆகும்.
 இதற்கு ஒரு விழாவும் இருந்துள்ளது.
 அதன் பெயர் வாண்மங்கலம் (வாள்+மங்கலம்).
 இது வாளுடை விழவு என்றும் அழைக்கப்பட்டது.
"மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது (புறத்திணையியல், 30, பாடாண் திணை)
"கயக்கு அருங்கடல் தானை 
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"
 என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
(223, பாடாண் படலம்)
"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).
பதினாறாம் நூற்றாண்டு வாழ் புலவரான "காசிக்கலியன் கவிராயர்" என்பவர் எழுதிய "வீரபாண்டியன் வாண்மங்கலம்" என்னும் நூலின் பெயரை தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
புதுக்கோட்டை சமஸ்தான ஆவணமும் இப்புலவர் இயற்றிய வீரபாண்டியன் வாண்மங்கலம், வீரபாண்டியன் குடைமங்கலம், வீரபாண்டியன் நாண்மங்கலம் ஆகிய சிற்றிலக்கியம் பற்றி கூறுகிறது.
ஆனால் மேற்கண்ட நூற்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
"பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி"
என்று 5 ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் கூறுகிறது.
இந்த திருமுறை பாடலில் "மா நவமி" என்று அழைக்கப்படும் ஒன்பதாம் நாளான மங்கல விழாவிற்கு முன் அரசின் போர் யானையை நீராட்டி விழா எடுத்து கொண்டுவரப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதாவது தற்காலத்தில் புரட்டாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை பெண்-தெய்வ வழிபாடு செய்யபடுகிறது.
 இதன் ஒன்பதாவது நாள்தான் ஆயுத பூசை.
 இதற்கான தயாரிப்பாகவே (இப்போது வாகனங்களைக் கழுவி மாலைபோட்டு அலங்கரிப்பது போல) யானை நீராட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளது.
பத்தாவது நாள் விஜய தசமி இது வெற்றி விழா ஆகும்.
 போரில் வெற்றி பெற்றவுடன் வென்ற மன்னன் தன் வாளுக்கு அபிசேகம் செய்து வெற்றியைக் கொண்டாடுவது அக்கால வழக்கம் (வாளுடை விழவு).
 இதிலிருந்து விஜய தசமி வந்திருக்கலாம்.
 வாளை வழிபடுவது போல அம்பு எய்வதற்கும் ஒரு விழா உள்ளது.
 அன்று வன்னிமரம் அல்லது வாழைமரம் நோக்கி அம்பு எய்துகாட்டும் சடங்கு நடக்கிறது.
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன 
(அகநானூறு 187)
 மழவர் கொண்டாடிய இத்திருவிழா பல நாட்கள் நடந்துள்ளது.
 அதில் முக்கியமான தலைநாள் அன்று நகரம் முழுவதும் புதுமணல் பரப்பியிருந்ததாக இப்பாடல் கூறுகிறது.
 இவ்விழா பூந்தொடை அல்லது பூந்தொடு எனும் பெயரில் இன்றும் வேட்டுவர் (வேட்டுவக் கவுண்டர்) சமுதாயத்தால் புரட்டாசி திருவோணம் அன்று கொண்டாடப் படுகிறது.
 
 மேற்கண்ட தரவுகளிலிருந்து நமக்குத் தெரிவன,
1) ஆய்த பூசனை தமிழர் விழாவே!
2) வெற்றிவிழா தமிழர் விழாவே!
3) பூந்தொடை தமிழர் விழாவே!
4) இன்று அவை பெயர் மாறியும் மத சடங்குகளாகவும் திரிந்து விட்டன.
 ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விழாக்கள் தொடரவேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
 
 ஆயுதபூசை தொழில் ரீதியாக பயனுள்ளதாக உள்ளது.
 தொழிலகம், கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி பேணி அலங்கரித்து வைக்க அந்நாள் பயன்படுகிறது.
எனவே ஆய்த பூசனையைத் தொடர்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
No comments:
Post a Comment