Showing posts with label வடக்கெல்லை. Show all posts
Showing posts with label வடக்கெல்லை. Show all posts

Thursday, 4 October 2018

கன்னடர் கேட்ட கர்நாடகா

கன்னடர் கேட்ட கர்நாடகா

1928 இல் கன்னடர் ஒன்றுகூடி ஒரு குழுவை நியமித்தனர்.

அக்குழு கன்னடர் வாழும் பகுதிகளை கணக்கில் கொண்டு வரைபடம் ஒன்றைத் தயாரித்தனர்.

இந்தியாவை விட்டு வெள்ளையர் சென்றபிறகு தமக்கென மொழிவாரி மாநிலம் கேட்டுப் பெற இந்த முன்னெடுப்பைச் செய்தனர்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி, கொள்ளேகால், ஓசூர் ஆகியன சேர்க்கப்பட்டிருந்தன.
இதில் கொள்ளேகாலம் அவர்களிடம் போய்விட்டது.

தெலுங்கர் கேட்ட ஆந்திரா

தெலுங்கர் கேட்ட ஆந்திரா

1948 இல் தெலுங்கு கட்சிகள் அனைத்தும் கூடி ஒரு குழுவை நியமித்தது.
அதன் வேலை அமையவுள்ள தெலுங்கு மாநிலத்தில் எந்த பகுதிகளையெல்லாம் சேர்க்கவேண்டும் என்று வரையறுப்பது.
அவ்வாறு அவர்கள் வரையறுத்து மொழிவாரி மாநிலங்கள் அமைப்புக்கான கமிஷனிடம் சமர்ப்பித்த வரைபடம் * (இடப்பக்கம்) இங்கே தரப்பட்டுள்ளது.

* The Andhra Province
(memorandum submitted to the linguistic provinces commission)
by Dr.Lanka sundram M.A Ph.D

(அடைந்தது வண்ணப்படமாக வலப்பக்கம் தரப்பட்டுள்ளது)

இதில் சென்னையும் சேர்க்கப்பட்டிருந்தது.

நல்லவேளை ம.பொ.சி இருந்தார்.

Monday, 1 October 2018

கொள்ளைபோன கொள்ளேகால்

கொள்ளைபோன கொள்ளேகால்

தமிழகத்தின் வடக்கெல்லை என்றாலே எல்லாரும் வெங்கடத்தைக் காட்டுவர்.
அது வடகிழக்கு எல்லை மட்டுமே.
வட மத்திய எல்லை என்பது சங்ககாலத்தில் காடு. (பெரும்பாலை என்றும் குறிக்கப்படும்).

அக்காடுகளில் சிறு சிறு தமிழ் நாடுகள் இருந்தன.
(அவர்கள் தற்போது பழங்குடிகளாக, தனி மொழி பேசும் இனங்களாகத் திரிந்துவிட்டனர்)

பிறகு காடுகளுக்கு அந்தப் பக்கம் கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.

பிறகு தமிழர்கள் கன்னடரை விரட்டிவிட்டு தாம் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.

பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.

இன்றும் தென் கர்நாடகத்தில் முக்கிய நகரங்களில் தமிழர் கணிசமாக உண்டு.

இதனாலேயே இப்பகுதி பற்றிய இலக்கியச் சான்றுகள் தமிழருக்கு சாதகமாகவும்,

முதல் குடியேற்ற சான்றுகள் கன்னடருக்கு சாதகமாகவும்,

கோவில் கல்வெட்டுகள் மற்றும் நகரங்களின் பெயர்கள் மற்றும் மையநகர நிலவுடைமை தமிழருக்கு சாதகமாகவும்,

புறநகர் நிலவுடைமை மற்றும் தற்போதைய மக்கட்தொகைப் பெரும்பான்மை கன்னடவருக்கு சாதகமாகவும் உள்ளன.

இவ்வாறாக வடக்கெல்லையில் மத்திய பகுதி இழுபறியில் உள்ளது.

கர்நாடகா அமைந்த பிறகு அப்பகுதி தமிழ்க் கல்வெட்டுகளை அழித்தும் மறைத்தும் வந்துள்ளது.
இதனால் நமக்கான சான்றுகள் அழிந்துவிட்டன.
நம்மிடம் இருக்கும் மண்மீட்பு சான்றுகள் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் வெளிக்கொணரப் பட்டவையே ஆகும்.

இத்தோடு கன்னடருக்கு சாதகமான சான்றுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது.

கல்வெட்டு தலைமையகம் மற்றும் வைப்பகம் மைசூரிலேயே இருப்பது இதற்கு காரணம்.
தமிழகதிற்கு தனியே கல்வெட்டு தலைமையகமும் வைப்பகமும் தராத ஹிந்திய நடுவணரசு தமிழகத்து அகழ்வாராய்ச்சி துறைக்கு தமிழரை தலைவராக நியமிக்காமலும் நிதி ஒதுக்காமலும் காலி பணியிடங்களை நிரப்பாமலும் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்துவருகிறது.

வரலாற்றில் நமது பகுதியாக இருந்த இடங்கள் நம் கையை விட்டு போனதைக்கூட தாங்கிக்கொள்ளலாம்.

ஆனால் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டபோது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழர் 90% வாழ்ந்த சில பகுதிகளும் அண்டை மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆந்திராவிடம் உள்ள இன்றைய சித்தூர் தென்பாதி,
கேரளாவிடம் உள்ள பாலக்காடு கிழக்குபாதி போல 1956 இல் அன்றைய  பெரும்பான்மை தமிழர் வசம் இருந்தும் அநியாயமாக கர்நாடகாவுக்கு கொடுக்கப்பட்டது சாம்ராஜ்நகர் கிழக்கான கொள்ளேகாலம்.

தமிழர் செறிந்து வாழ்ந்த இப்பகுதிகளை அண்டை மாநிலங்கள் தமது எல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக்கொண்டனர்.

ஆனால் இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த 95% தமிழர் வாழ்ந்த இடுக்கி மாவட்டம் கேரளாவிலேயே இருக்கிறது.

தமிழர் நடத்திய மண்மீட்பு போராட்டங்கள் கன்னியாகுமரி மற்றும் திருப்பதி நோக்கியே இருந்தன.

இரண்டிலும் பெரும்பாடு பட்டு பாதி வெற்றியே அடைந்தோம்.

கன்னியாகுமரி போராட்டத்தில் கேட்ட 9 தாலுகாக்களில் நான்கரை தாலுகாக்கள் கிடைத்தன.

திருப்பதி வரை கிடைக்காவிட்டாலும் திருத்தணி வரை கிடைத்தது.

கொள்ளேகால் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த, 

வீரப்பனார் பிறந்த பகுதியான இது கன்னடரிடம் உள்ளது.

Wednesday, 4 July 2018

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?

தற்போது ஸ்ரீ காளஹஸ்தி (sri kalahasti) என்று அழைக்கப்படும் காளத்தி புகழ்பெற்ற சைவ திருத்தலம் ஆகும்.

  கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் "சந்தமார் அகிலொடு" என்று தொடங்கும் பதிகமும் "வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் பதிகமும் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் "விற்றூணொன் றில்லாத" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் "செண்டா டும்விடையாய்" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

இக்கோவில் உள்ள மலை (கைலாசகிரி என்று ஆவணங்கள் குறித்தாலும்) சிவனுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார் பெயரால் "கண்ணப்பர் மலை" என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

இது பண்டைய தமிழ்நாடான தொண்டைநாட்டின் பகுதியென்பதால் காளத்திக்கு அருகே தொண்டமநாடு அல்லது தொண்டைமான் நாடு எனும் ஊர் உள்ளது.

கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் "கயிலை பாதி காளத்தி பாதி" எனும் அந்தாதி பாடியுள்ளார்.
இது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
இதே ஆசிரியர் எழுதிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த "கல்லாட தேவ நாயனார்" இயற்றிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் அதே பெயரைக் கொண்ட இன்னொரு நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

கிபி 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் இத்தலத்தை கோவிலாகக் கட்டினான்.

இங்கே உள்ள கண்ணப்பர் கோவிலுக்கு மண்டபமும் தாழ்வாரமும் ராஜேந்திர சோழன் காலத்து வேளிர் மன்னன் "கங்கைகொண்டான் இருங்கோளன்" என்பவரின் தாயார் "புத்தங்கையார்" கட்டிக்கொடுத்துள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் "காளத்தி உடையான் மரக்கால்" என்ற அளவுக் கருவி பயன்பாட்டில் இருந்ததாகக் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலின் கல்வெட்டுகள் இறைவனை "தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார்" என்று குறிக்கின்றன.

இப்பகுதியில் ஓடும் ஆறு தற்போது "சொர்ணமுகி" என்று அழைக்கப்படுகிறது.
இது கிபி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் நாயன்மார்களின் வரலாற்றினைத் தொகுத்து படைத்த திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்) கண்ணப்ப நாயனார் பற்றிய பகுதியில் "பொன்முகலி" என்று குறிக்கப்பட்டுள்ளது.
(தேவாரம் "முகலி" என்று மட்டும் குறிக்கிறது).

கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் காளத்திநாதரைப் புகழும் பாடல் "சிரத்தானத்தில்..." என்று தொடங்கி "திருக்காளத்திப் பெருமாளே" என்று முடிகிறது.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "சேறைக் கவிராயர்" (கவிராச பிள்ளை அல்லது ஆசுகவிராயர் என்றும் அறியப்படுபவர்) பாடிய உலா ஒன்று உள்ளது.
"திருக்காளத்திநாதர் உலா" அல்லது "காளத்தியாள்வார் உலா" என்று இது அழைக்கப்படும். சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட படைப்பு ஆகும்.
அதே புலவர் "திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை" எனும் நூலையும் எழுதியுள்ளார்.
இதைக் கண்டெடுத்து பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா ஆவார்.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் "வேளாக்குறிச்சி ஆதின" சீடரான "வீரை ஆனந்தக் கூத்தர்" இத்தலத்தின் மீது இயற்றிய "திருக்காளத்திப் புராணம்" புகழ்பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டில் சிவப்பிரகாசர் என்பவரும் அவர் தம்பியும் சேர்ந்து இயற்றிய "சீகாளத்தி புராணம்" எனும் படைப்பும் உண்டு.

இதன் தலபுராணம் 18 ஆம் நூற்றாண்டில் கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரால் சேர்ந்து பாடப்பட்டுள்ளது.

பொன்முகரி ஆற்றுக்கு செல்லும் படித்துறை முகப்பில் ஒரு சிலை உள்ளது.
1912 ஆம் ஆண்டிலேயே 9 லட்சம் செலவில் திருப்பணி செய்த "தேவக்கோட்டை இராமநாதன் செட்டியார்" என்பவரின் சிலைதான் அது.

"பொங்கல்" அன்றும் திருவிழா அன்றும் ஆக ஆண்டின் இரண்டு நாட்களில் மட்டும் உற்சவர் மலையை வலம் வரும் சடங்கு நடக்கிறது.

தமிழக எல்லையில் இருந்து வெறும் 64கி.மீ தொலைவில் இருக்கும் காளத்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஆகும்.

திருப்பதி போல காளத்தியும் தமிழகத்தின் பகுதியே ஆகும்.

  இது ஆந்திராவுக்கு போனது ஏன்?

கிபி 1516 ல் கிருஷ்ணதேவ ராயர் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று கட்டியுள்ளார்.
63 நாயன்மார் சிலைகளுக்குப் போட்டியாகத் தொடர்பேயில்லாமல் பாண்டவர் சிலைகளை கொண்டுவந்து வைத்தார்.
கிருஷ்ண தேவராயரின் அவைப்புலவர் தூர்ஜாட்டி "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர மகாத்யம்" எனும் நூலும் "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சதகம்" எனும் நூலும் இயற்றியுள்ளார்.

அதன்பிறகு அச்சுதராயர் ஒரு பதினாறுகால் மண்டபம் கட்டியுள்ளார்.

இது தவிர தெலுங்கருக்கும் காளத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Sunday, 1 October 2017

திருத்தணி மீட்பு - பெரிய சாதனையா?

திருத்தணி மீட்பு - பெரிய சாதனையா?

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 01.04.1960 அன்று திருத்தணி தமிழகத்துடன் சேர்க்கப்பட்டதுதான்.
ஆனால் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவுள்ள நிலத்தை பிடுங்கிக்கொண்டுதான் தெலுங்கர் நமக்கு அப்பகுதியைக் கொடுத்தனர்.

ஆந்திரா நமக்கு கொடுத்த நிலம் 1049 ச.கி.மீ (405 சதுர மைல்) பரப்பளவு.

பதிலுக்கு நம்மிடம் பிடுங்கியதோ 844 ச.கி.மீ (326 சதுர மைல்) பரப்பளவு.

அதாவது வெறும் 200 ச.கி.மீ மட்டுமே நம்மால் மீட்க முடிந்தது.

அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்த பகுதியோ ஏறத்தாழ 70,000 ச.கி.மீ.
அதாவது இன்றைய தமிழகத்தைப் போல பாதி அளவு.

இதில் ஆந்திரா பறித்தது மட்டுமே ஏறத்தாழ 32,000 ச.கி.மீ.

இதற்கு முன் 200 ச.கி.மீ பரப்பளவை மீட்ட சாதனை ஒன்றுமே இல்லை.

Tuesday, 18 July 2017

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்

ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்

ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.
( கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை)

1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.

----------
மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.
(மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை)

1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை

பறிபோனது மண் மட்டும் அல்ல.
அதில் வாழும் மக்களும்
அவர்களின் வாக்குகளும்
அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும்தான்.

தகவலுக்கு நன்றி: Asa Sundar
-----------------

(22 மார்ச் 2016 அன்று முகநூல் பதிவாக இட்டது)

1953 சித்தூர் மீட்புக்கு தமிழகம் தந்த ஆதரவு

1953 சித்தூர் மீட்புக்கு தமிழகம் தந்த ஆதரவு

17.05.1953 தேதியிட்ட இந்த 'செங்கோல்' இதழில் 'சித்தூர் கிளர்ச்சிக்கு ஆதரவு' என்ற தலைப்பு உள்ளது.
கீழே திருவண்ணாமலையில் நடந்த ஊர்வலத்தின் படம் உள்ளது.

சித்தூர் தமிழகத்துடன் இணைய 1953 மே மாதத்தில் தமிழகம் முழுவதும்  ஆதரவான கூட்டங்கள் நடந்ததைக் குறித்து செய்திகள் மாவட்ட வாரியாக உள்ளன.

சென்னையில்,
வண்ணையம்பதி (வாணியம்பாடி)யில் பொதுகூட்டம் நடந்தது.

திருச்சியில்,
திருச்சி நகரிலும் உறையூரிலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

தஞ்சையில்,  திருத்துறைப்பூண்டியிலும் கும்பகோணத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.

சேலத்தில்,
கொண்டாலம்பட்டி பொதுக்கூட்டத்தில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.
சித்தூரின் 6 தமிழ் தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைய தீர்மானம் இயற்றப்பட்டது.
கிச்சிப்பாளையத்திலும் சித்தூர் தினம் கொண்டாட்டமும்
கிருஷ்ணகிரியில் 3மைல் நீள ஊர்வலமும் நடத்தப்பட்டன.

வட ஆற்காட்டில்,
ஆம்பூரில் சர்வகட்சிக் கூட்டமும் கலவையில் கூட்டமும் திருப்பத்தூரில் ஊர்வலமும் நடந்தன.

மதுரையில்,
பழனியில் ஊர்வலமும் மேலூரில் சித்தூர் தினக் கொண்டாட்டமும் நடந்தன.

சித்தூரில்,
சித்தூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
வள்ளிமலையிலும் அத்திமாஞ்சேரியிலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.
திருத்தணியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலியில்,
சங்கரநயினார்கோயிலில் (சங்கரன்கோயில்) கூட்டம் நடத்தப்பட்டது.

பம்பாயில்,
தாராவியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.

ம.பொ.சி நடத்திய மண்மீட்பு  அறப்போருக்கு தொடர்ச்சியாக ஆதரவு தந்த செங்கோல் எனும் இவ்விதழின் ஆசிரியர் ஆ.கோ. வெங்கட ராமானுஜன் என்று உள்ளது.

(பெயரை வைத்தும் முகவரி திருவல்லிக்கேணி என்று இருப்பதை வைத்தும் இவர் பார்ப்பனத் தமிழர் என்று ஊகிக்க முடிகிறது)

நன்றி: சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (முகநூல் பக்கம்)
நன்றி: Kalai Mohan

Friday, 1 April 2016

திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு

திருத்தணியைத் தமிழகம் மீட்ட வரலாறு

ஈ.வே.ரா:-
“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த 30 வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை.
யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம் நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர மாற்ற வேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை.
தமிழர்களில்தான் ஆகட்டும் இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத் தவிர,
“குமரி முதல்
வேங்கடம் வரை”
என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?”
(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்,
தொகுதி-2, பக்கம் 723, 724)

செங்கல்வராயன் (அப்போதைய சென்னை மேயர்):-
"சென்னையை ஆந்திரத்தின்
தலைநகரமாக்க சென்னையில் வசிக்கும் சிறுபான்மை தெலுங்கர்கள் விதண்டவாதம் பேசினால்,
குடிக்க தண்ணீர் தரமாட்டோம்
பிணத்தை எரிக்க சுடுகாடு தரமாட்டோம்"

முத்துராமலிங்கத்தேவர்:-
தமிழரசு காணவும், தமிழகத்தின் எல்லைகளை மீட்கவும் தமிழை அரசு மொழியாக்கவும் சரியான நேரத்தில் தமிழ் அரசு கழகம் முன் வந்திருக்கிறது.
தமிழ்நாடு - தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
அந்த அலைக்கழிவு, முடிவில் ‘தமிழ் மாகாணம்’ என்று கூட சொல்ல இயலாது ‘எஞ்சிய சென்னை’ என்பதன் முறையிலேயே இழிவான முறையில் தமிழ் மாகாணத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
சரித்திர சான்றான திருப்பதியையும் இழந்து நிற்கிறது.
இந்நிலையில், சென்னையை ஒட்டி, ஜனத் தொகையிலும் சர்வமுறையிலும் தமிழ்நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து
நிற்கிறது.
இதற்கென ஒரு போராட்டம் எழுந்த பின்னரும் காங்கிரஸ் மந்திரிசபை ஆங்கிலேய முறையை பின்பற்றி அடக்குமுறையால் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக தெரியவில்லை.
எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரிசபை வழக்கம்போல அசட்டுத்தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்கநேரும்.
அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும் என்று எச்சரித்து தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசிகூறுகிறேன்"
  (7.6.1956 அன்று கன்னியாகுமரியில் பேசியது)

திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்
1.4.1960

"திருத்தமிழ்க்கு உயர்திசைச்
சிறப்புடைத் திருத்தணிகை"
என்று திருப்புகழ் பாடியவர் அருணகிரிநாதர்.

தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக விளங்கிய வடவெல்லையான திருப்பதியை இழந்து தமிழர்கள் பரிதவித்து நின்ற போது சற்று ஆறுதலான தீர்ப்பொன்று 1957ஆம் ஆண்டில் எல்லை ஆணையர் எச்.வி. படாஸ்கர் என்பவரால் அளிக்கப்பட்டது.

அது என்னவெனில்,
தமிழ்ப்பகுதிகளாக விளங்கிய திருத்தணி, திருவாலங்காடு, வள்ளி மலை, ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசால ஆந்திரம் கேட்டு தெலுங்கர்கள் 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு தமிழ்ப்பகுதிகளை தெலுங்கர்கள் அபகரித்து கொண்டனர்.
அதில் தமிழர்கள் இருகண்களெனப் போற்றும் மாலவன் குன்றமும் (திருப்பதி)
வேலவன் குன்றமும் (திருத்தணி) அடங்கும்.

1946ஆம் ஆண்டிலிருந்து-
"வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,
தணிகை தமிழருக்கே"
-என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் விடாது முழங்கி வந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை கவெரா (ராமசாமிநாயக்கன்), அண்ணாத்துரை (அரைத்தேலுங்கர்) போன்றவர்கள் எழுப்பிய காரணத்தாலும்,
காங்கிரசு கட்சியில் தலைவராக விளங்கிய காமராசரின் தமிழின உணர்வற்ற போக்காலும் ம.பொ.சி.யின் குரல் ஒற்றை தனிமனிதரின் குரலாகவே பார்க்கப்பட்டது.

அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழின உணர்வு இந்திய, திராவிடக் கட்சிகளால் மழுங்கடிக்கப்பட்ட காரணத்தால் ஆந்திரர்கள் தமிழர்களின் தலைநகரான சென்னையைக் கூட தயக்கமின்றி உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது.

நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும் தலையிட்டு "தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்"
என்று ம.பொ.சி. முழக்கமிட்டார்.
அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது.

சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன.
முதல்வர் இராசாசி துணையோடு சென்னை தமிழர் வசமானது.

ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன.
இதில் ம.பொ.சி. போற்றி வந்த இராசாசியும் உள்ளடக்கம்.
ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக்குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர்,திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார்.
இராசாசி ஆட்சியில் நீதிமன்றம் இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது.
அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்க வில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப் பட்டது.
நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது.

இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.

தில்லி அரசும், ஆந்திர அரசும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தமிழர் மீது வஞ்சனை காட்டி வருவதைக் கண்டித்து ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது.
அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது.
போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல் தொடர்வண்டி சங்கிலியை இழுத்து தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பி.கோவிந்தசாமி என்பவர் இராஜ மந்திரி சிறையிலும்,
மாணிக்கம் என்பவர் பழனி சிறையிலும் மாண்டனர்.

போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும்,
ஆந்திர அரசும் தங்களுக்குள் ஒப்புக்கு பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.
இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது.
பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு திசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.

1957ஆம் ஆண்டு வெளிவந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கபம்போல் காலம் கடத்தியது.

நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை தெலுங்கு உறுப்பினர்கள் பல முட்டுக்கட்டைகளை போட்டு வந்தனர்.
அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் மூலம் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.

1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.

ம.பொ.சி. தில்லிஅரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார்.
அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 1.4.1960இல் நடைபெற்றது.
அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற ஈகியர்களை நினைவு கூறுவோம்!

நன்றி: Kathi Nilavan
நன்றி: சந்தோஷ் கதிர்வேலன்
நன்றி: Velmurugan Ramalingam
நன்றி: பெருமாள் தேவன்