Showing posts with label சாராயம். Show all posts
Showing posts with label சாராயம். Show all posts

Tuesday, 31 December 2024

குடியை விடுவோம்

குடியை விடுவோம்

குடியை விட தீர்மானித்த நல்லவர்களுக்கு...
எத்தனை முறை முயற்சித்தும் குடியை விட முடியவில்லையா?! 
பரவாயில்லை!
குடியை விடவேண்டும் என்ற உறுதியான எண்ணம் மட்டும் போதும்!
 குடிக்கும் அளவைக் குறைத்து குடியை விடுவது கடினம்!
 ஆனால் குடிக்கும் கால இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விடுபடலாம்
நேற்று குடித்திருப்பீர்கள்!
2 நாள் கழித்து குடியுங்கள்! 
பிறகு 5 நாள் கழித்து...
பிறகு 10 நாட்கள்...
பிறகு 20 நாட்கள்...
உங்களுக்கு எது வசதியோ அந்த இடைவெளியை பட்டியல் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்!
 ஒருவேளை சூழ்நிலை சந்தர்ப்பத்தால் உங்கள் பட்டியலில் ஓரிரு முறை தவறிவிட்டாலும் பரவாயில்லை!
 குடிக்கும் எண்ணம் வரும்போது அடுத்து நீங்கள் குடிக்கப் போகும் தருணத்தையும் அதற்காக காத்திருக்கிறோம்  என்ற உணர்வையும் நினைத்துப் பாருங்கள்.
பட்டியல்படி குடிக்கும்போது 'குடியை விடுவதற்காக குடிக்கிறேன்' என்று நினைத்துக்கொண்டு குடிக்க வேண்டும்!
உங்கள் குழந்தை அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவரது புகைப்படத்தை பர்சில் வைத்துக்கொண்டு அடிக்கடி பாருங்கள்.
குடியால் நடந்த கேடுகளையும் குடியை விடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் நினைத்துப் பாருங்கள்!
குடி எண்ணம் வரும்போது சாக்லேட், டீ அல்லது பிடித்த எதையாவது வாயில் போட்டுக் கொள்ளுங்கள்!
 சிறிது நாட்களில் குடி மீதான விருப்பம் குறைந்து இல்லாமல் போய்விடும்.
தினமும் குடிப்பவர்கள் கூட இப்படி செய்து 3-6 மாதத்தில் குடியை நிறுத்திவிடலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியம் சுத்தமாக நிறுத்திய பிறகு ஒருமுறை கூடத் தொடக் கூடாது! 
தொட்டால் மீண்டும் பிடித்துக்கொள்ளும்! 
 இந்த புத்தாண்டில் இந்த பதிவின் படி பின்பற்றி குடியை விட்டு உங்கள் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் பெரும் மகிழ்ச்சியைப் பரிசளிக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துகள்! 

Sunday, 23 June 2024

கல்கி எழுதிய மதுவிலக்கு சிறுகதை

கல்கி எழுதிய மதுவிலக்கு சிறுகதை

மதுவின் தீங்குகளை மிக எளிமையாக புரியவைக்கும் சிறுகதை இது!
அன்றும் கள், பீர், சாராயம் ஆகியவை ஆறாக ஓடின!
1920 களின் இறுதியில் மதுவிலக்கு காங்கிரஸ் கொண்டிருந்த முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது! 
கல்கி அவர்களும் மதுவிலக்கு நோக்கம் கொண்ட பல படைப்புகளை எழுதியுள்ளார்.
ராஜாஜி யுடன் இணைந்து மதுவிலக்கு பத்திரிகை நடத்தியுள்ளார்.
சரி கதைக்கு வருவோம்!

 கோவிந்தனும் வீரப்பனும்

கோவிந்தனும் வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள். 
கோவிந்தனுக்குப் பருத்தி ஆலையில் வேலை. வாரம் ஆறரை ரூபாய் சம்பளம்.
 வீரப்பனுக்கு ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை; அவனுக்கும் வாரம் ஏழு ரூபாய் சம்பளம்.
 மனைவியும் இரண்டு குழந்தைகளும் கோவிந்தனுக்கு உண்டு. வீரப்பனுக்கும் அப்படியே. 

கோவிந்தன் வாரத்திற்கு முக்கால் ரூபாய் வாடகை கொடுத்து ஐந்தாறு குடித்தனங்கள் உள்ள வீட்டில் ஒரு சின்ன அறையில் குடியிருந்தான். 
வீரப்பன் இதே மாதிரி அடுத்த வீட்டில் குடியிருந்தான்.
 ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இருந்தது. 
வீரப்பன் ஒர்க் ஷாப்பிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு சாராயக்கடை உண்டு. 
அவன் அந்தக் கடை வழியாகத்தான் வீட்டுக்கு வருவது வழக்கம். 
இந்தச் சிறு வித்தியாசத்தினால் அவர்களுடைய வாழ்க்கை முறையில் நேர்ந்த பெரும் வேற்றுமையைச் சொல்கிறேன் கேளுங்கள்.

சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு கோவிந்தனுக்கு ஆலையில் சம்பளம் கொடுத்தார்கள்.
 ரூபாய் ஆறரையையும் அவன் வாங்கிப் பத்திரமாய் முடி போட்டுக் கொண்டு குறுக்கு வழியாய் வீடு வந்து சேர்ந்தான். 
அவன் மனைவி சுந்தரமும், மகன் நடராஜனும் சந்தோஷத்துடன் அவன் வரவை எதிர்பார்த்திருந்தார்கள்.
 நடராஜன் திம், திம் என்று குதித்துக்கொண்டு, ''அப்பா! சமுத்திரம் பார்க்கப் போகவேண்டும். சமுத்திரம் பார்க்கப் போக வேண்டும்!'' என்று கூச்சலிட்டான். 
பிறகு கோவிந்தனும் அவன் மனைவியும் உட்கார்ந்து கணக்குப் பார்த்தார்கள்.
 பின்வருமாறு செலவு ஜாபிதா போட்டார்கள்.
ரூ. அ. பை.
வீட்டு வாடகை 0 12 0
அரிசி 1 8 0
பருப்பு, உப்பு, புளி
சாமான்கள் 1 8 0
மோரும், நெய்யும் 0 8 0
எண்ணெய் 0 4 0
கறிகாய் முதலிய
சில்லறைச் செலவுகள் 0 8 0
மொத்தம் 4 0 0
[அதாவது கல்கி காலத்தில் ரூபாய், அணா, பைசா என்று கணக்கிடுவர். அரிசி 1 8 0 என்பது ஒரு ரூபாய் எட்டணா, மொத்தம் 4 0 0 என்பது 4 ரூபாய்!]

வழக்கமாக சேவிங்ஸ் பாங்கியில் போட்டு வந்த முக்கால் ரூபாயையும் சேர்த்து ரூ. 4-12-0 தனியாக எடுத்து வைத்தார்கள். பாக்கிச் செலவு செய்வதற்கு ரூ.1-12-0 கையில் இருந்தது.
[அதாவது 16 அணா சேர்ந்தால் 1 ரூபாய் ஆகும்]

''சரி, சமுத்திரக் கரைக்குப் போகலாம், புறப்படு!'' என்றான் கோவிந்தன். 
சுந்தரம் மகனுக்கு சட்டையும் குல்லாவும் போட்டு நெற்றியில் பொட்டு வைத்தாள். 
தானும் முகங்கழுவிக் கண்ணாடி பார்த்துக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டாள். 
பிறகு கைக்குழந்தைக்குக் கம்பளிச் சட்டை போட்டு இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
 வழியில் கோவிந்தன் காலணாவிற்குப் பெப்பர்மெண்டு வாங்கி மகனுக்குக் கொடுத்தான்.
 கடற்கரையில் காற்று வாங்கப் பெரிய பெரிய மனிதர்களெல்லாரும் வந்திருந்தார்கள். 
ஆனால், பெரிய மனிதர், சின்ன மனிதர் எல்லாருக்கும் ஒரே காற்றுத்தான் அடித்தது.
 கோவிந்தனும் சுந்தரமும் அலையோரத்தில் உட்கார்ந்து ஆனந்தமாய் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 
மோட்டாரில் வந்தவர்களைவிட இவர்கள் அனுபவித்த இன்பந்தான் அதிகமென்று சொல்லலாம். 
நடராஜன் துள்ளிக் குதித்து விளையாடினான். 
அலை மோதிக் கொண்டு வரும்போது கரைக்கு ஓடுவதும், அலை திரும்பிச் செல்லும்போது அதைப்பிடிக்க ஓடுவதும் அவனுக்கு அற்புதமான விளையாட்டா யிருந்தது.
 இந்த சமயத்தில் தூரத்தில் பட்டாணிக் கடலை, முறுக்கு விற்பவன் போய்க் கொண்டிருந்தான்.
 நடராஜன் ஓடிச்சென்று அவனை அழைத்து வந்தான். 
அரையணா வுக்கு முறுக்கும் முக்காலணாவுக்குக் கடலையும் வாங்கினார்கள். 
நடராஜனுக்குத் தலைகால் தெரியவில்லை. 
திரும்பி வீடுபோய்ச் சேரும் வரையில் தனக்குக் கிடைத்த பங்கைத் தின்று கொண்டிருந்தான். பொழுது போனதும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள். 
மத்தியானமே சமைத்து வைத்திருந்த சாப்பாடு தயாராயிருந்தது. 
எல்லாரும் சாப்பிட்டுவிட்டுக் கவலையின்றித் தூங்கினார்கள். 
கடற்கரைக்குப் போய் வந்ததற்காக கோவிந்தனுக்கு உண்டான செலவு ஒன்றரை அணாதான். 
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்ததும் இன்றைக்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். 
பீபில்ஸ் பார்க்குக்குப் போக வேண்டுமென்று தீர்மானமாயிற்று.
 சுந்தரம் அவசரம் அவசரமாய்ச் சமையல் செய்தாள். 
கோவிந்தன் மார்க்கட்டுக்குப்போய்க் கறிகாய் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வேஷ்டி சட்டைகளுக்குச் சவுக்காரம் போட்டுத் துவைத்தான்.
 பிறகு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 நடராஜன் வீட்டுக் கணக்குகளைப் போட்டான்.
 எவ்வளவோ அவசரப்படுத்தியும் கிளம்புவதற்கு மணி ஒன்றாகி விட்டது. 
சுந்தரம் சிற்றுண்டிக்காக கொஞ்சம் அப்பம் செய்து ஒரு பொட்டணத்தில் கட்டி எடுத்துக் கொண்டாள்.
 புரசவாக்கம் வரையில் அவர்கள் நடந்து சென்று அங்கிருந்து டிராம் வண்டியில் போனார்கள்.
 மாலை நான்கு மணி வரையில் பீபிள்ஸ் பார்க்கைச் சுற்றிச் சுற்றி வேடிக்கை பார்த்தார்கள்.
 நடராஜனுக்குக் குரங்குகளை விட்டுப் பிரிந்து வருவதற்கு மனமே இல்லை. 
மூர்மார்க்கெட்டில் ஊதல் வாங்கித் தருவதாய்ச் சொன்னதின் மேல்தான் அவன் வந்தான். 
இதுவரை டிராம் சத்தம் ஒன்றரை அணாவும், பீபிள்ஸ் பார்க் டிக்கட் மூன்றணாவும் ஆக நாலரை அணா செலவாயிருந்தது. 
மூர் மார்க்கட்டில் அவர்கள் பின்வருமாறு சாமான்கள் வாங்கினார்கள். 

கோவிந்தனுக்குப் பித்தளை டிபன்பாக்ஸ் 0 11 0
சுந்தரத்திற்கு ஒரு தந்தச் சீப்பு 0 2 6 
நடராஜனுக்கு ஒரு ஊதலும் பெல்ட்டும் 0 3 0 
குழந்தைக்கு ஒரு ரப்பர் பொம்மை 0 2 6

சாயங்காலம் 5 மணிக்கு அவர்கள் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். 
போகும்போது டிராம் சத்தமும் சேர்ந்து ரூ. 1-9-0 செலவாயிற்று. 
நேற்று ஒன்றரை அணா செலவாயிற்று. 
ஆக ரூ. 1-10-6 போக பாக்கி இருந்த ஒன்றரை அணாவை ஒரு சிமிழில் போட்டு வைத்தார்கள். 
சுந்தரத்துக்குச் சேலை வாங்குவதற்காக இந்த மாதிரி ஏற்கனவே ரூ.2-8-0 வரையில் சேர்ந்திருந்தது.
 மறுநாள் திங்கட்கிழமை காலையில் சுந்தரம் புதிய தந்தச் சீப்பினால் தலையை வாரி முடித்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள்.
 சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு சுறுசுறுப்பாக வீட்டுக் காரியங் களைச் செய்தாள். 
ஏழரை மணிக்குள் கோவிந்தனுக்குச் சோறு போட்டு, மத்தியானத்திற்கும் பலகாரம் பண்ணிக் கொடுத்தாள்.
 கோவிந்தன் ஸ்நானம் செய்து, சுத்தமான வேஷ்டியும் சட்டையும் அணிந்து, புதிய டிபன்பாக்ஸை கையில் எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் ஆலைக்குப் புறப்பட்டான். 
நடராஜன் இடுப்பில் புதிய பெல்டு போட்டு அதில் ஊதலைத் தொங்கவிட்டுக் கொண்டு குதூகலத்துடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான்.
 குழந்தை கையில் ரப்பர் பொம்மையை வைத்துக் கொண்டு ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்தது.

 இனி அடுத்த வீட்டில் வீரப்பனுடைய குடும்பத்தார் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையை எப்படிக் கழித்தார்களென்று பார்ப்போம். 
சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு வீரப்பனுக்கு ஏழு ரூபாய் கிடைத்தது. 
அவன் அதை வாங்கி அலட்சியமாய்த் தன் கந்தல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். 
வழியில் பீர் கடையைக் கண்டதும் ஒரு நிமிஷம் நின்று தயங்கினான். 
அப்போது உள்ளிருந்து ஒருவன், ''அண்ணே! ஏன் நிற்கிறாய்? வா!'' என்றான். 
வீரப்பன் கடைக்குள் நுழைந்தான். 
முதலில் ஒரு சீசா குடித்து விட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். 
ஆனால் தடுத்துக் கொண்டான்.
 ஒரு ரூபாய் கொடுத்துச் சில்லறை கேட்டான். 
சில்லறை கொடுக்கச் சற்று நேரமாயிற்று. 
இதற்குள் சில சிநேகிதர்கள் வந்தார்கள். 
அவர்கள் குடிக்கும் போது தான் மட்டும் சும்மாயிருக்கக் கூடாதென்று இன்னொரு சீசா கேட்டான். 
அதையும் குடித்த பிறகு, ''இன்று இரண்டு சீசா பீர் குடித்தாகிவிட்டது. நாளைக்கு வரக்கூடாது. ஆகையால் சாராயக் கடையில் ஒரு திராம் வாங்கிக் குடித்து விடலாம்'' என்று யோசித்து அப்படியே சாராயக்கடைக்குப் போனான். 
ஒரு திராம் வாங்கிக் குடித்து விட்டுப் பிறகு இன்னொரு அரை திராம் போடச் சொன்னான்.
 கடைக்காரன் கொடுத்த சில்லறையில் ஒரு அரைக்கால் ரூபாய் செல்லாப்பணம். 
வீரப்பனுக்கு போதை நன்றாக ஏறியிருந்தபடியால் அது தெரியவில்லை.
 கடைக்காரன் கொடுத்த சில்லறையை எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். 
அவற்றில் நல்ல இரண்டனா ஒன்று சட்டைப் பையில் விழாமல் தரையில் விழுந்தது. 
அதை அவன் கவனிக்கவில்லை. 
ஆகவே சாயங்காலம் ஆறு மணிக்கு நல்ல பணம் ரூ. 5-12-0ம் செல்லாப் பணம் இரண்டணாவும் எடுத்துக்கொண்டு அவன் வீடு போய்ச் சேர்ந்தான்.
 வீட்டில் அரிசி, பருப்பு சாமான் ஒன்றும் கிடையாது.
 அன்று காலைச் சாப்பாட்டுக்கே நாகம்மாள் அரிசி கடன் வாங்கிச் சமைத்திருந்தாள். 
எனவே மிகுந்த எரிச்சலுடன் அவள் வீரப்பன் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 
வந்ததும் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். 
வீரப்பன் தன்னிடமிருந்த பணத்தை அவள் முகத்தில் வீசி எறிந்து விட்டுத் தானும் கூச்சல் போட்டான்.
 இதைக் கண்டு அவர்களுடைய மகன் ராமன் ஏழு வயதுப் பையன், பயந்து வாசல் புறம் ஓடிப் போனான். 
நாகம்மாள் அதற்குப் பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கிக் கொண்டு வந்து சமையல் செய்தாள்.
 சாப்பிட்டு முடிய இரவு பத்து மணியாயிற்று. 
அப்புறம் அரைமணிநேரம் அவர்கள் காட்டுப் பூனைகள் போல் சண்டை போட்டுக் கொண்டிருந்து பிறகு தூங்கிப் போனார்கள். 
மறுநாள் காலையில் கறிகாய் வாங்கி வருவதற்ககாக வீரப்பன் பணம் கேட்டான்.
 நாகம்மாள் செல்லாப் பணம் இரண்டணாவைக் கொண்டு வந்து கொடுத்தாள். 
வீரப்பன் உடனே சண்டை பிடிக்கத் தொடங்கினான்.
 முதல்நாள் இரவு கடை சாமான் வாங்கியபோது நாகம்மாள் ஏமாந்து செல்லாப் பணம் வாங்கி வந்திருக்க வேண்டும் என்று சென்னான்.
 ''குடிவெறியில் நீதான் வாங்கிக் கொண்டு வந்தாய்'' என்றாள் நாகம்மாள். 
இந்தச் சண்டையின் போது ராமன் நடுவில் வந்து ''நோட்டு, பென்சில் வேண்டும்'' என்றான். 
அவனுக்கு ஒரு அறை கிடைத்தது. 
நாகம்மாள் போட்டிக்குக் கைக் குழந்தையை அடித்தாள். ஏக ரகளையாயிற்று. 
வீரப்பனுக்கு வேஷ்டி துவைக்க நேரங் கிடைக்கவில்லை. 
இத்தனை தொந்தரவுகளுக் கிடையில் நாகம்மாள் சமைத்தபடியால் குழம்புக்கு உப்புப் போட மறந்து போனாள். 
சாப்பிடும்போது வீரப்பன் குழம்புச் சட்டியைத் தூக்கி நாகம்மாள் மேல் எறிந்தான். 
அது குழந்தைமீது விழுந்தது. 
மறுபடியும் ரணகளந்தான்.
 இன்று பீர்க் கடைக்குப் போகவேண்டாமென்று முதல்நாள் வீரப்பன் தீர்மானித்திருந்தான். 
ஆனால் மாலை மூன்று மணி ஆனதும் இந்தத் தொல்லைகளையெல்லாம் மறந்து சற்று நேரம் ''குஷி''யாக இருந்து வரலாமென்று தோன்றிற்று.
 ஆகவே முழு ரூபாய் ஒன்றை எடுத்துக் கொண்டு சாராயக் கடையைத் தேடிச் சென்றான்.
 சாராயக்கடையில் பன்னிரண்டணா தொலைந்தது.
 அடுத்த சந்தில் சூதாடும் இடம் ஒன்று உண்டு.
 வீரப்பன் அங்கே போனான். 
பாக்கி நாலாணாவையும் அங்கே தொலைத்தான்.
 இருட்டிய பிறகு வீட்டுக்குக் கிளம்பினான். 
வழியில் குடி மயக்கத்தில் விளக்குக் கம்பத்தில் முட்டிக் கொண்டான். 
ஒரு புருவம் விளாங்காய் அளவுக்கு வீங்கிப் போயிற்று. 
வீட்டுக்குப் போனதும் படுத்துக் தூங்கிப் போனான்.
 நாகம்மாள் சாயங்கால மெல்லாம் ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தாள். 
இரவு சமைக்கவில்லை.
 ராமன் மற்றப் பிள்ளைகளுடன் தெருவிலும் சாக்கடையிலும் விளையாடிவிட்டு இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். 
நாகம்மாள் மத்தியானம் மீதியிருந்த சோற்றை அவனுக்குப் போட்டுத் தானும் சாப்பிட்டாள்.
 வீரப்பனை எழுப்பிச் சோறு போடவில்லை.
 திங்கட்கிழமை காலையில் வீரப்பனுக்குத் தலை நோவு பலமாயிருந்தது. புருவம் வீங்கி ஒரு கண் மூடிப்போயிற்று. 
முணுமுணுத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.
 நாகம்மாள் மெதுவாகத்தான் எழுந்திருந்தாள்.
 முதல்நாள் அழுது அழுது இப்பொழுது அவள் முகம் பார்க்க முடியாதபடி கோரமாயிருந்தது. 
தலைமயிர் ஒரே பரட்டை. முனகிக் கொண்டே குழம்பும் சோறும் செய்தாள். 
வீரப்பன் அவசர அவசரமாய் அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு விட்டு மத்தியானச் சோற்றுக்காகச் சண்டை போட்டு இரண்டணா எடுத்துக் கொண்டு அழுக்குச் சட்டையும் கந்தல் வேஷ்டியுமாக ஓடினான்.
 ராமனுக்கு அன்று காலை இரண்டு மூன்று தடவை அடி விழுந்திருந்தது. 
கணக்குப் போடவில்லை ஆகையால் பள்ளிக் கூடத்துக்கும் போய் அடிபட வேண்டுமேயென்று அவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே பள்ளிக்கூடம் சென்றான். 
கைக்குழந்தையைக் கவனிப்பார் யாருமில்லை. 
அது ஒரு மூலையில் படுத்து அழுது கொண்டிருந்தது.

 வீரப்பனைப் போன்ற எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வாழ்க்கை கள்ளு, பீர், சாராயக் கடைகளினால் பாழாகி வருகின்றது.

 அந்தக் கடைகளைத் தொலைக்க நீங்கள் என்ன உதவி செய்யப் போகிறீர்கள்?

[இந்த 2024 இல் அதாவது சரியாக நூறு ஆண்டுகள் கழித்து இன்றும் நிலைமை மாறவில்லை!]

Thursday, 20 June 2024

திராவிடமும் சாராயமும்

திராவிடமும் சாராயமும்

“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”
(விடுதலை 18.03.1971)

 சாகும் தருவாயில் ஈவேரா எழுதிய வார்த்தைகள் இவை.
 ஆரம்பத்திலேயே அதாவது 1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டபோதே இந்த நிலைப்பாட்டில் இருந்துள்ளார் ஈவேரா.

”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்."
"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
" மதுவிலக்கு அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.” 
(குடி அரசு 03.10.1937)

”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.
பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும் அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 09.11.1968)

’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. 
மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....
குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்?!
இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. "
”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று/சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.
அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்” 
’’மது கீழ்ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது."
“நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும் மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை"
(விடுதலை 16.02.1969)

“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. 
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்."
“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” 
(விடுதலை 18.3.1971)

 ஆனால் ஈவேரா தென்னை மரங்களை வெட்டினார் என்பது மட்டுமே திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்யப் படுகிறது

(இதுவரை 25.07.2015 அன்றைய பதிவு) 

 ஈவேரா காட்டிய வழிப்படி 1949 லிருந்து 25 ஆண்டுகள் மதுவிலக்கு நடவடிக்கை மூலம் குடியை மறந்திருந்த தமிழர்களை 1971 உல் அரசாங்க சாராயக் கடைகள் திறந்து குடிக்க வைத்தார் கருணாநிதி!

 மது ஒழிப்பை பரப்புரை செய்து 1991ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, கருணாநிதியின் "மலிவுவிலை மதுக்கடைகளை" (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார். 2003 இல் அவரே டாஸ்மாக் என்று மீண்டும் அரசாங்க சாராயத்தைக் கொண்டுவந்தார்.
 சசி பெருமாள் சாராயத்தை ஒழிக்க போராடி உயிரிழந்தபோது ஜெயலலிதா டாஸ்மாக் இல் போலீஸ் பாதுகாப்பு போட்டு சாராயம் விற்றார்.

 இவற்றை மிஞ்சும் வகையில் ஸ்டாலின் ஆட்சியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'கள்ளச் சாராய மரணங்கள்' மீண்டும் நிகழத் தொடங்கின.  
2023 இல் மரக்காணம் கள்ள சாராயம் அருந்தி 14 பேர் சாவு!
தற்போது 40 பேர் கள்ளக்குறிச்சி பகுதியில் சாவு!
இவர்களுக்கு மக்களின் வரிப்பணம் நபருக்கு பத்து லட்சம் நிவாரணமாக அறிவிக்கப் பட்டுள்ளது!
 சாதிக் பாட்சா போன்றோர் மூலம் போதைப்பொருள் வியாபாரமும் கொடிகட்டி பறக்கிறது.

 ஆக திராவிட விஷச்செடி யின் நீர் ஆதாரம் சாராயம்தான்!
 சாராய வருமானம் இல்லாமல் அரசு நடக்காது என்பதும் பொய்!
அரசு நினைத்தால் முடியும்!
மதுவுக்கு பதில் பால் பொருளாதாரத்தை கொண்டுவர முடியும்!
 கொரோனா காலகட்டத்தில் சாராயம் முற்றாக தடைபட்டபோது குடிகாரர்கள் எவரும் சாகவில்லை பைத்தியம் ஆகவில்லை சட்ட ஒழுங்கு பிரச்சனை கூட வரவில்லை!
ஆனால் மது குடித்தவன் தன் மூன்று மகள்களைக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது!

 மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருந்தால் மட்டுமே தாங்கள் ஆளமுடியும் என்பதாலேயே திராவிடம் உயிரைக் கொடுத்தாவது மதுவைத் திணிக்கும்! 

Friday, 26 May 2023

நடிக்கிறேன்

நடிக்கிறேன்

 அன்று ஒரு அவசர அழைப்பு உடனடியாக பிறந்த ஊர் விரைந்தேன். 
 அங்கே ஒரு நாடகம்!
என் உயிர்நண்பன் குடிப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒரு நாடகம் நடத்தினான். 
 பிற நாடகங்கள் போல இல்லாமல் இதன் கதை வித்தியாசமானது. அதாவது அளவாகக் குடித்தாலும் அழிவு நிச்சயம் என்பது கதையின் மையக் கரு. நான் போக தாமதமாகிவிட்டது. பல காட்சிகள் நடந்து முடிந்துவிட்டன. அதாவது அளவாகக் குடிக்கும் ஒருவனுடன் சக குடிகாரர்கள் ஒரு அற்ப விசயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சண்டை போடுகின்றனர். அவன் அமைதியாகப் போக விரும்பினாலும் அவர்களின் போதை அதை அனுமதிக்கவில்லை. அந்த ஒருவனை சூழ்ந்து அடித்து தள்ளிவிட அவன் கீழ விழ தலையில் அடிபடுகிறது. இதன் விளைவாக அவன் இறந்துவிடுகிறான். அவன் மனைவியும் மகனும் அனாதையாக நிற்கின்றனர். இதுதான் கதை. நான் சென்றபோது அவனை பிணக்கோலத்தில் சிதையில் கிடத்தினர். அவன் பிணமாக நடித்துக் கொண்டிருந்தான். என்னை அழச் சொன்னார்கள். என்னால் முடியவில்லை. எப்படி அழுகை வரும்?! அவன் என்ன உண்மையாகவா செத்துவிட்டான்?! இருந்தாலும் அவன் நன்றாக நடித்தான். மூச்சு கூட விடவில்லை. சரி நாடகம் முடிவை நெருங்கிவிட்டது. இதோ எழுந்துகொள்வான். நாங்கள் எப்போதும் போல காலாற நடந்து பேசிக் கொண்டே வெகுதூரம் செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாடகம் முடியவில்லை. சிதைக்கு தீ மூட்டினார்கள். அவன் அசையவேயில்லை. அவன் உடலில் நெருப்பு பற்றியது. அவன் எரிந்து சாம்பலாகப் போனான். ஆம் அவன் நடித்து முடித்துவிட்டான். இனி நான் தான் நடிக்க வேண்டும். நான் எப்போதும் போல் இருப்பதாக நடிக்க வேண்டும். நல்ல மனநலத்துடன் இருப்பதாக நடிக்கவேண்டும். அவன் எனக்கு முக்கியமில்லை என்பது போல நடிக்க வேண்டும். 
 வாருங்கள்! அனைவரும் நடிப்போம்! 
அரசாங்கம் விற்கும் சாராயம் எந்த ஆபத்தும் இல்லாதது என்பது போல நடிப்போம்!
நம்மைச் சுற்றி இளம் வயதுப் பிணங்களையும் விதவைகளையும் வைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல நாம் நடிப்போம்!

Monday, 3 April 2017

பாதி சாராயக்கடைகளை மூடிய சாதனையாளர் திரு. கே. பாலு

தமிழகத்தின் 6233 டாஸ்மாக் ல் (நெடுஞ்சாலைகளில் உள்ள) 3211 கடைகள் மூடப்படவுள்ளன.

2012 ல் வழக்கு தொடுத்து எத்தனையோ பெரிய தடங்கள் வந்தும் நேர்மையாக உறுதியாக நின்று இதை சாதித்துக்காட்டிய 'சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை' யின் தலைவர் திரு.கே. பாலு அவர்களையும் அவர் சார்ந்த 'பாட்டாளி மக்கள் கட்சி' யையும் தமிழக மக்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

தமிழகத்தில் தோராயமாக ஒருகோடி பேர் தினமும் குடிக்கின்றனர்.

 தமிழினத்தின் முதன்மையான பிரச்சனையை ஓரளவு வெற்றிகண்ட நாள் இது.

இதற்காகப் போராடிய மாணவி நந்தினி, உயிரையே கொடுத்த ஐயா சசி பெருமாள் ஆகியோரை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும்.

Saturday, 5 December 2015

மதுவிலக்கும் திராவிடமும்

இராஜாஜி 1949ல் நிறைவேற்றிய மதுவிலக்கால் 25 ஆண்டுகள் குடிப்பழக்கத்தை மறந்திருந்த தமிழகத்தை,
1971 ல் கருணாநிதி சட்டத்தை தளர்த்தி சாராயக்கடைகளைத் திறந்து குடிகார மாநிலமாக்கினார்.

1991ல் மது ஒழிப்பை பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அவர்கள் கருணாநிதியின் "மலிவுவிலை மதுக்கடைகளை" (மிடாஸ்) மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டுத் தன் ஆட்சியைத் தொடங்கினார்.
பிறகு டாஸ்மாக் கொண்டுவரப்பட்டது.

Tuesday, 4 August 2015

ஒரு படம் எடுக்கறோம் சார்

ஒரு படம் எடுக்கறோம் சார்

ஹீரோ ஒரு அப்பாவி (தெலுங்கன்)
ஒரு ஹீரோயின(வடயிந்தியர்) காதலிக்காரு.
கொஞ்சம் ரொமான்டிக் சீன், ரெண்டு டூயட் இங்க வைக்கறோம்.

ஹீரோவோட அழகான தங்கச்சிய நாலு குடிகாரர்கள் கற்பழிச்சி கொல்லுதாங்க.
ஹீரோ அவ பொணத்த பாத்து கதறி கதறி அழுறாரு.

(இந்த ரெண்டு சீனயும் அணுஅணுவா பிரிச்சு மேயறோம்)

நாலுபேருமே பெரிய எடத்து புள்ளைங்க

ஹீரோ சட்டப்படி போறாரு.
அது வழக்கம்போல நிக்கல.

(புல் மேக்கப்ல ஹீரோயின் ஆறுதல் சொல்றமாதிரி ஒரு சீன் இங்க வைக்கலாம்)

ஹீரோ வேறவழியில்லாம சட்டத்த கைல எடுக்குறாரு.
(நரம்பு பொடைக்கற மாதிரி இங்க ஒரு பாட்டு வைக்கறோம்)

அந்த நாலுபேரயும் புதுசு புதுசா யோசிச்சு விதவிதமா கொல்றாரு.

சாராய தொழிலதிபர்(நல்ல தமிழ்ப் பெயர் உடையவர்)தான் இதுக்கெல்லாம் காரணம்னு தெரியுது.

இங்க ஒரு ட்விஸ்ட்டு.
அவரோட பொண்ணுதா ஹீரோயின்.

தொழிலதிபரோட ஹீரோ மோதுறாரு.

அணுகுண்டு கண்டுபிடிச்சி 70வருசம் ஆனாலும் ஒரு துப்பாக்கி கூட இல்லாம அம்பது அடியாட்கள் கத்தி கபடாவோட வர்றாங்க.
ஹீரோ ஒத்தயாளா அவங்கள பொளக்கறாரு.
(ஈரோ ஒடம்பு லைட்டா ரெண்டு வெட்டுக்காயம் )

இந்த மோதல்ல ஹீரோவோட அம்மாவயோ அப்பாவயோ ப்ரண்டயோ இழந்திருதாரு.

மக்கள் ஈரோவுக்கு ஆதரவா பேட்டி குடுக்கறாங்க.
சாராயம் குடிக்கறதால ஏற்படுற பாதிப்புகள கண்ணீரோட காட்றோம்.

கடசில ஹீரோ மூளய யூஸ் பண்ணி க்ளைமேக்ஸ்ல கொடூரமா வில்லன சாகடிச்சிருதாரு.

மக்கள் எல்லாரும் இப்டி ஒரு ஈரோ வருவாருனு நம்பிக்கையோட எழுந்து போறாங்க.

எவன் ஈரோவா ஆகணும் நெனச்சாலும் அவன் வாழ்க்கைல அத்தனையையும் புடுங்கிட்டு விட்ருவோம்னு மறைமுக மிரட்டலும் இதில கலந்துருக்கோம் அதால பெரிய கொந்தளிப்பு எதுவும் வராது.

5ஸ்டார் ஓட்டல்ல ஸ்டோரி டிஸ்கசன்.
பாரின் சரக்கு ஒன்னுவிடாம வாங்கிவச்சிருங்க அண்ணையாகாரு.

Friday, 24 July 2015

ஈ.வே.ரா மது ஆதரவு

இது ஈ.வே.ரா வழி :p

“ஒரு மனிதனைப் பார்த்து

நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும்

நீ மது அருந்தக்கூடாது என்று சொல்வதற்கும்

என்ன பேதம் என்று கேட்கின்றேன்.”

(விடுதலை 18.3.71)

’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும்

மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது.

மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....

குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. " (விடுதலை 16.2.69).

”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது.
நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)

1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள்,
குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள்
அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள்.
இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் புண்ணிய சேத்திரங்களுக்கு அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள்.
(குடியரசு 3.10.1937)”

"கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.”
(கு.அ.3.10.1937)

‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல.
ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”
(கு.அ.3.10.1937)

”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ

அது போல் போலீசாரும்,

அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று

மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான்.

அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்”
(விடுதலை 16.2.69)

’’மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது.
(விடுதலை 16.2.69)”,

“நான் கீழ் ஜாதி என்பதை

எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ

அப்படித்தான்
குடிகாரன் குற்றவாளி என்பதையும்

மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும்

ஒப்புக்கொள்வதில்லை.
(விடுதலை 16.2.69)”

“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)

”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம்.
வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும்.
மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும்.

பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும்

அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும்

என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
(விடுதலை 9.11.68)

“இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது.
அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது.
கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு.
இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன்.
(விடுதலை 18.3.71)

Wednesday, 15 July 2015

தண்ணிவண்டி தமிழர்களே !

தண்ணிவண்டி தமிழர்களே !

ஒரு சொட்டு பிராந்தி நாக்கில் பட்டவுடன்
வாந்தியில் மிதக்கும் பித்த உடம்புக்காரன்கூட
பெருமுயற்சி செய்து பயிற்சி எடுத்து
குடிகாரனாக மாறுகிறான்.

அந்த அளவுக்கு தமிழகத்தில் குடிக்கலாச்சாரம் புகுந்துவிட்டது.

குடிக்காதவனை தீண்டத்தகாதோர் பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
குடிப்பழக்கமில்லாதவனை ஏதோ வேட்டிகட்டத்தெரியாதவன் போல பார்க்கின்றனர்.

குடிப்பழக்கம் உலகம் முழுவதும்தான் இருக்கிறது.
முன்னேறிய நாடுகளில் ஆண்களும் பெண்களும் குடிக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக வாழவில்லையா?
அவர்கள் குடிப்பதற்கும் இங்கே குடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

அவர்கள் வாரத்திற்கு 5நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி இரண்டு நாட்கள் தங்களுக்காக செலவளிக்கின்றனர்.
பிக்னிக், சினிமா, என்று போய்விட்டு சனிக்கிழமை இரவு க்ளப்க்கு சென்று குடிக்கின்றனர்.
நிதானத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குச் செல்கின்றனர். மீதிபேர் அங்கேயே விழுந்துகிடந்துவிட்டு விடிந்ததும் செல்கின்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுவேலைகளைச் செய்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டுவிட்டு மறுபடி திங்கள் கிழமை ஒழுங்காக வேலைக்கு செல்கின்றனர்.

இங்கே அப்படியா?
இருட்டத் தொடங்கியதுமே கைகால் நடுங்கத் தொடங்கிவிடுகிறது.
தலையை விற்றாவது குடித்தே ஆகவேண்டும் என்று பதைபதைப்பு தொடங்கிவிடுகிறது.
குடித்தாலும் நிதானமே இல்லாத அளவுக்கு குடிப்பது, வேட்டி விலகி தெருவில் விழுந்துகிடப்பது, குடல் வெளிவர வாந்தி எடுப்பது, கண்டபடி உளறுவது, பைத்தியம் பிடித்ததுபோல நடந்துகொள்வது, குப்பைமேட்டில் படுத்துக்கிடப்பது, தாறுமாறாக வண்டி ஓட்டி சாவது அல்லது கொலைசெய்வது,  வீட்டுக்குப்போனால் வெறிவந்து மனைவியை அடிப்பது, குடிநாற்றத்தோடு பிள்ளைகளைக் கொஞ்சுவது
இதையெல்லாம் பெருமையாக நினைப்பது (?!?????)

ரயிலில் வரும்போது நம் தமிழ்குடிமகன்கள் பண்ணும் கூத்து இருக்கிறதே.
குடித்துவிட்டு படுத்தவன் இடையில் ஒன்றுக்கு போய்விட்டு வெளியே வருவான்.
அடுத்த அரைமணிநேரத்துக்கு அந்த கழிவறைக்குள் மூக்குள்ளவன் நுழையமுடியாது.
அவன் மூச்சிலும், வியர்வையிலும், ஒன்றுக்கு விட்ட இடத்திலும் சகிக்கமுடியாத சாராயவாடைதான் வரும்.
இத்தகைய நாற்றம்பிடித்த கழிசடையாக இருப்பதுதான் பிடித்திருக்கிறதா?

சாலையில் அங்கங்கே மூன்று சுவரும் ஒரு தொட்டியும் கட்டி ஒன்றுக்கு போக ஏற்பாடுசெய்ய துப்பில்லாத அரசாங்கம், வீதிக்கு நான்கு சாராயக்கடைகளை திறந்துவைத்துள்ளது.
அரசாங்கத்தைச் சொல்லியும் குற்றமில்லை. நன்றாகக் கொள்ளையடிப்பவனாகப் பார்த்து ஓட்டு போட்டு ஆட்சியைக் கொடுத்தால் அவன் எதில் வருமானம் வருமோ அதைத்தான் செய்வான்.
கர்நாடகாவிற்கு சென்றால் தெரியும்.
இங்கே வயிறுமுட்ட குடிக்க 300 ரூ ஆகுமென்றால் அங்கே 180ரூ தான் ஆகும்.
அங்கே சாராயக் கடைகளில் வரிசை நிற்காது.
அங்கேயும் குடிக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், இந்த அளவு இல்லை.
அங்கே ஊருக்கு 4தண்ணிவண்டி என்றால் இங்கே தெருவுக்கு 4.
தமிழனை குடிக்கும் சாதனையில்(?) எவனாலும் அடிக்கமுடியாது.
மலையாளி கொஞ்சம் போட்டிபோடுவான்.
மற்றபடி குடிப்பதற்காகவே வாழ்வது தமிழினம் மட்டுமே.
கரிகாலன் காலத்திலேயே ரோமாபுரியிலிருந்து சாராயம் வந்துள்ளது.
ஔவையும் அதியமானும் கள் குடித்த வரலாறு இருக்கிறது.
இந்திய மாநிலங்களில் குடியால் குடல் அவிந்து செத்தவர்களில் முதலிடம் தமிழகம்.
இரண்டாம் இடம் கேரளா.

குடிப்பதற்கும் முன்னேறுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. குடிக்காமல் இரு என்றுகூடச் சொல்லவில்லை.
குடியுங்கள். ஆண்களும் பெண்களும் கூட குடியுங்கள்.
ஆனால், அளவாகக் குடியுங்கள். வாரம் ஒருமுறை குடியுங்கள்.

வீட்டுக்குப் போனால் பொண்டாட்டிக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவு குடிக்காதீர்கள்.

வருமானத்தை குடியில் இழந்து பிறகு கடைசிக்காலத்தில் இழுத்துக்கொண்டு கிடந்து மேலும் செலவுவைத்து செத்தும் கெடுத்தவன் ஆகாதீர்கள்.

உங்களை நினைத்தாலே கூனிக்குறுகும் நிலைக்கு உங்கள் பிள்ளைகளை ஆளாக்காதீர்கள்.

குடியை விடுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.
மொடாக்குடிகாரர்கள் பலர் 15,16 ஆண்டுகளுக்குப் பிறகு குடியை விட்டு திருந்தி வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

குடிப்பதால் எந்த நன்மையும் கிடையாது.
பணத்தையும் கொட்டி, உடலையும் கெடுத்து ,குடலை நாசமாக்கி,  அருவருப்பான காரியங்களில் ஈடுபட்டு, பிறரை முகம்சுளிக்கவைத்து, குடும்பத்தினரை அவமானப்படவைத்து,  காலையில் தலைவலியுடன் எழுந்து வேலைக்குச் சென்றாலும் சரியாக எதையும் செய்யமுடியாமல்
அடச்சை
இந்த பிழைப்பு தேவைதானா?
கவலையை மறக்க உடல்சோர்வைப் போக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

அளவாகக் குடியுங்கள்.தீவிரக் குடிகாரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளுஙங்கள்.
கள் கிடைத்தால் அதைக்குடியுங்கள் கெடுதி குறைவு.
பீர் குடித்தால்கூட கெடுதி குறைவு.
அளவாகக் குடிப்பவர்கள் அதை அப்படியே பின்பற்றுங்கள்.
குடியைத் தொடாதவர்கள் தொடாமலே இருங்கள்.
தீவிர குடிகாரர்கள் குறைத்துக்கொள்ள வழி உண்டா பாருங்கள்.

ஒரு விசயத்தில் கொஞ்சம் சந்தோசம் கிடைத்தாலே அதில் மூழ்கி அடிமையாவது தமிழன் பழக்கம்.
நடிகனுக்கு சிலைவைத்து பாலூற்றுவது, பார்த்த படத்தையே திரும்ப பார்ப்பது, பிடித்த காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வது என்று பல்வேறு செயல்பாடுகளில் இப்பழக்கம் வெளிப்படுகிறது.

இந்த குணத்தைப் பயன்படுத்தி நம்மை சீரழிக்கப்பார்க்கிறார்கள்.

கவனம்.