Showing posts with label தமிழரைக் குனியவைத்துக் குதிரையேறும் திராவிடம்லு. Show all posts
Showing posts with label தமிழரைக் குனியவைத்துக் குதிரையேறும் திராவிடம்லு. Show all posts

Tuesday, 10 May 2016

திராவிடலு பகுதி-1

திராவிடலு பகுதி-1

************
இந்தியா- பல்வேறு இனங்கள் வாழும் பரந்த நிலப்பிரப்பு.

ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்டு,
ஆங்கில மொழியால் ஆளப்பட்டு,
மொழிவாரி இன உணர்வைவிட தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு மேலோங்கி,
அதனால் விடுதலை அடைந்து,
அதன்பிறகு மதவழியாக இரண்டு துண்டாடப்பட்டு,
மதவழிதேசியம் எனும் போலி தேசியத்தை
இனவழி தேசியம் தோற்கடித்ததால் மூன்று துண்டானது.

இனவழி தேசியத்தின் முதல் வெற்றியானது திரு.பசல் அலி அவர்கள் தலைமையில் அமைந்த கமிசன் பரிந்துரையின்படி
1956 நவம்பர் ஒன்றில் காந்தி, நேரு, காமராசர் மற்றும் பலரின் எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களை அமைத்ததாகும்.

அன்றைய எழுச்சிபெற்ற இனங்கள் தங்கள் நிலப்பரப்பை தக்கவைக்க கிளர்ந்தெழுந்தன.

அதுவரை மூன்று மாநிலங்களே இருந்தன.

கல்கத்தாவை தலைநகராகக் கொண்ட வங்காளம்,ஓரிசா,பீகார்,அசாம் மற்றும் மத்திரபிரதேசம் ஆகியவையும்,

பம்பாயை தலைநகராகக் கொண்டு பஞ்சாப், சிந்து,மகாராட்டிரம் மற்றும் குசராத் ஆகியவையும்,

சென்னையை (மதராசப்பட்டிணம்) தலைநகராகக் கொண்டு தமிழகம்,ஆந்திரா,கன்னடம் மற்றும் கேரளா ஆகியவையும்
ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் நூறு ஆண்டுகள் ஆளப்பட்டன.

மொழிக்கான முக்கியத்துவம் இல்லாததால் ஆங்கிலம் படித்த எவரும் எந்த இனமக்களையும் அதிகாரம் செலுத்த வழி ஏற்பட்டது.

இனவுணர்வை மழுங்கடிக்க ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட மாநில மொழிகள் கற்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மற்றமொழியினரை விட தமிழர் ஒரு மாபெரும் பிழை செய்தனர்.

அன்றைய தமிழர் செய்த பிழைக்கான தண்டனையை இன்றைய இளந்தலைமுறையினர் இன்றும் அனுபவித்து வருகின்றனர்.

...தொடரும்

திராவிடலு பகுதி-2

திராவிடலு
பகுதி-2
************

தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறன்.

இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னனியில் உள்ள திராவிடக்கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்கவேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்.
இப்போது விடயத்திற்கு வருவோம்.

அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் மாநில மொழிகளில் எதைவேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.

இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.

ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளிமாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.

ஆம், வெளிமாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக்கற்கலாயினர்.

அத்தோடு தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் அண்டைமாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழிசெய்திருந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக்கற்கலாயினர்.

இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர்,ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.
தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.

ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வந்தேறுகுடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.

மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.

இன்று ஈழப்பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.

தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.

தமிழரின் தனித்தன்மை(?)  என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும்.

அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.

அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதேநிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப்பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?

இதற்குக் காரணம் யார்?

இதில் திராவிடத்தின் பங்கு என்ன?
தொடரும். . . .

திராவிடலு பகுதி-3

திராவிடலு
பகுதி-3
**************
திராவிடம்  நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டுவந்தது என்பதைப் பார்க்குமுன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது.

திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'.

இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.

சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை  அறியுங்கள்.

திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.

இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்' ,'கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர்.
இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

திராவிடர்களின் பிரச்சாரப்படி  ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது
இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக்கொண்டு
சாதியை உருவாக்கி
மனுதர்மத்தை உருவாக்கி
கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி
ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர் .

ஆனால் உண்மை அதுவல்ல.
ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இதுவே உண்மை.

பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே.
இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலிசெய்தாலும் சரி.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும்  தமிழரே என்பதைக் கூற  என்ன அச்சம்?

ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.

பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும்
இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு
மற்றவர்கள் விலகிக்கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.

சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.

பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?

பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.

காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.
திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.

இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.

திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?

திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?

தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது?

. . . .தொடரும்

திராவிடலு பகுதி-4

திராவிடலு
பகுதி-4
*************

பிராமணர்களைப் பற்றி அறிந்து கொண்டோம்.
இப்போது அவர்களின் ஆதிக்கம் பற்றியும் திராவிடத்தின் பிறப்பு பற்றியும் தெரிந்துகொள்வோம்.

பிராமணர்கள் அந்தக்கால மன்னர்களால் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்த்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களாக இருந்தனர்.
இவர்கள் செய்த தொழிலும் அப்படியானது.
ஆன்மீக ரீதியான தொழிலைச் செய்தவர்களாதலால் மக்களும் இவர்களை உயர்ந்த குலத்தவராகவே எண்ணிவந்தனர்.

தொழில்வழிச் சமூக அமைப்பு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

உலகம் முழுவதும் மதவழிபாட்டைச் சேர்ந்த தொழில் செய்வோரும் மதம் வளர்ப்போரும் முதல்நிலையிலும்
நிலவுடைமையாளர், படைவீரர்கள் இரண்டாம் நிலையிலும்
விவசாயிகள், கைத்தொழில் செய்வோர் மூன்றாம் நிலையிலும்
உடலுழைப்பு மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நான்காம் நிலையிலும் இருப்பர்.

உலகின் எந்த மூலையிலும் இந்த வேற்றுமைகள் இருந்தே வந்துள்ளது.

பிராமணர்களின் வீழ்ச்சியானது மொகலாயர்கள் தமிழகம் வரை தமது ஆளுகையை பரப்பிய பிறகு ஆரம்பமானது
(தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் பல்லவர் ஆட்சியின்போது தொடங்கியது)
மன்னர்களின் ஆதரவு இல்லாது போக மக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு வந்தனர்.
(அதிலும் சில பிராமணர்கள் முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் உண்மை).
அப்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் தமிழரல்லாத நாய்க்கர்
(நாயக்கர் என்பதே தவறு,
நாயகர் என்ற தமிழ்ச்சாதியுடன் திரிக்கவே நாய்க்கரை நாயக்கர் ஆக்கினர்).

அவர்கள் ஏற்கனவே தமிழ்ப்பிராமணரை (பார்ப்பனரை) புறக்கணித்து சமசுக்கிருதத்தை வளர்க்கும் பிறமொழிப் பிராமணரை ஆதரித்தனர்.
இதனால் தமிழ்ப் பார்ப்பனரும் சமசுக்கிருதத்தை ஏற்க வேண்டியதாயிற்று.

நாய்க்க மன்னர்கள் ஆண்ட காலமே சமசுக்கிருதத்தின் வசந்தகாலமாகும்.
அக்காலத்தில் சமசுக்கிருதத்தில் பெருங்காப்பியங்கள் தோன்றியதையும்,
தமிழ் சிற்றிலக்கியங்கள் மூலம் உயிர்பிழைத்து வந்ததையும் 
இன்றுவரை தமிழ் மீண்டெழவில்லை என்பதையும் நினைவில் கொள்க.
18 ம் நூற்றாண்டுவரை முகலாயராலும் வேற்றின மன்னர்களாலும் தமிழ்ப் பார்ப்பனர் ஆதரிக்கப்படவில்லை.
வேற்றினப் பிராமணர் இதற்கு விதிவிலக்கு.
18ம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கில ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவ பிராமணர்கள் நிலை கவலைக்கிடமானது.
(ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்ற பழமொழி நினைவு வருகிறதா?!)
ஆங்கில ஆதிக்கம் வலுக்க வலுக்க இந்தியர் அத்தனைபேருமே பாதிக்கப்படையத் தொடங்கினர் 19ம் நூற்றாண்டு வந்ததும் ஒரு திருப்பம்.
1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம் இந்தியரின் கிளர்ச்சியால் கொண்டுவரப்பட்டது
(நாம் எட்டாம் வகுப்பில் படித்ததுதான் நினைவு வருகிறதுதானே?) .
அதற்கு முன்புவரை அனைத்து அரசாங்க பதவிகளும் ஆங்கிலேயருக்கே உரித்ததாயிருந்தது.

ஆம்; இந்திய விடுதலை எழுச்சி என்பதன் ஆரம்பமே ஆங்கிலேயருடன் போட்டியிட்டு அரசுப்பதவிகளை பெறுவதிலேயே தொடங்கியது.

'சர்.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்' எனும் வெள்ளையரால் தொடங்கப்பட்ட 'இந்தியக் காங்கிரஸ்' என்பது அந்தக்காலத்தில் 'மெக்காலே' பாடத்திட்டம் எனும் கட்டாய ஆங்கிலவழி மூலம் (ஆங்கிலச் சேவகத்திற்கென்றே) உருவாக்கப்பட்ட கல்வியைக் கற்றோருக்கு வேலைவாங்கித்தர பாடுபட்டதேயாகும்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த பிராமணர்கள் குலத்தொழிலாக ஓதுதல், மனனம் செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தவர்களாதலால்  அவர்கள் கல்விகற்று அரசாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தனர் .

பின் 1919 'மாண்டேகு செம்சுபோர்டு' சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முன்பைவிட அதிகமான அளவில் இந்தியருக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.
பின்னர் ஆங்கிலேயரின் பிடி இறுக இறுக உள்நாட்டு வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுக்க இந்திய வணிகத்தில் இருந்த ஆதிக்க வர்க்கத்தினர் பிழைப்பிலும் மண்விழுந்திருந்தது.
அவர்களும் ஆங்கிலக்கல்வி கற்று பதவிகள் பெறும் முன் அத்தனை பதவிகளிலும் பிராமணர்கள் நிறைந்துவிட்டனர்.

பிராமணர்கள் மீண்டும் ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்தனர்.

அதாவது நாம் நினைப்பதுபோல நிதிக்கு, நீதிக்கு, வேளாண்மைக்கு, கல்விக்கு என அனைத்திற்கும் தனித்தனி துறைகள் அமைக்கும் 'செக்கரட்ரியேட்' முறையின் வருங்காலத்தை முன்பே கணித்து பிராமணர்கள் அதில் புகுந்துவிடவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலில் எதிர்கொண்ட சமூகம் என்ற வகையில் தானாக அவர்கள் சென்றடைந்தனர்.

இப்பாது பதவிகளைப் பெறுவதில் ஆங்கில-இந்தியப் போட்டியைவிட பிராமணர்-பிராமணரல்லாதோர் போட்டி கடுமையாக ஏற்பட்டது.

இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் மூளையைக் கசக்கினர்.
திராவிடம் பிறந்தது.

. . . தொடரும்

திராவிடலு பகுதி-5

திராவிடலு
பகுதி-5
*************

ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலைசெய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.
இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.
ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்துகொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.
மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும்,
அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும்,
மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?!  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்குத்தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்தவேதத்திலும் கிடையாது.
இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்'(Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளையெல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'. 

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால் ,மதத்தால், நிறத்தால் ,சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி
அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.
அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க,ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல்வகை.
'திராவிடம்'  இரண்டாம்வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

தொடரும். . . .

திராவிடலு பகுதி-6

திராவிடலு
பகுதி-6
*************

ஆங்கிலேயர் 'திராவிடத்தை' உருவாக்கியது என்பது முன்பே ஊகித்து செய்தது அது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் கழித்து அவர்களுக்குப்  பயன்பட்டது.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் 'உங்கள் சிறப்பை ஆராய்கிறேன் பேர்வழி' என்று கூறிக்கொள்ளும் சில ஆராய்ச்சியாளர்களையும் மதபோதகர்களை அப்பகுதி மக்களோடு கலந்துவிடுவர்.

இதைப் பொதுவாக அன்றைய அனைத்து காலணியாதிக்க நாடுகளும் செய்தன என்றாலும் ஆங்கிலேயலர் இதை மிகவும் சிரத்தையுடன் செய்தனர்.

இன்றும் 'ஆங்கில மொழி' உலகை ஆட்டிப்படைக்கக் காரணம் அன்றைய ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் சென்று அப்பகுதி மக்களின் இனவரலாறு, மதம், உணவுப்பழக்கம், பண்பாடு,மருத்துவம், கலாச்சா நம்பிக்கைகள் என அத்தனைத் தகவல்களையும் ஆங்கிலத்தில் தொகுத்து வைத்ததேயாகும்.
(அப்போதுதானே பிரித்தாள முடியும்!)

மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் தமிழரை ஆராய வந்த வெளிநாட்டவர் தமிழ்மேல் காதல்கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்து  தமிழரோடு தமிழராக
ஒன்றிவிட்டனர்.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்தான் வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்றவர்கள்.

அவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் 'திரு.ராபர்ட் கால்டுவெல்'.

'திராவிடம்' என்கிறக் கருத்தியலை உருவாக்கியவர்.

இவர் 1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.

ஸ்காட்லாந்தில் கல்வி கற்ற இவர் மொழியாராய்ச்சியிலும் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

கிறித்துவ மதத்தை பரப்ப 1838ல் தமிழகத்துக்கு வந்தார்.
தமிழருடன் நெருங்கிப்பழக தமிழ் கற்க ஆரம்பித்து தமிழின்மீது ஈடுபாடு அதிகமாக, தமிழர் வரலாற்றை ஆராயத்தொடங்கினார்.

தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையையும் வடமொழிகளிலிருந்து அவை முற்றிலும் வேறுபட்டவை என்பதையும் உலகிற்கு எடுத்துக்காட்ட இவர் எழுதிய 'திராவிட மொழிகளின் ஓப்பிலக்கணம்' இன்றும் திராவிடவாதிகளின் வேதநூலாக உள்ளது.

இவரைப்பற்றிய விமர்சனங்களும் உள்ளன.
'சாணார்' மக்களைப் பற்றி இவர் எழுதிய நூலின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு கடுமையாக இருக்க ஆங்கில அரசே அந்நூலைத் தடைசெய்யும் நிலையும் வந்தது
(அப்போது இவர் இரண்டு வருடங்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது).
இவர் கிறித்துவ மதத்தில் தீவிரமாக இருந்தவர் என்றும் தெரியவருகிறது.
ஆனால் இவர் தமிழுக்கு செய்த தொண்டைக் கருத்தில்கொண்டால் இவர் உண்மையில் தமிழ்ப்பற்றுள்ளவர் என்றே தெரிகிறது.

எது எப்படியோ, இவர் பிராமணரே ஆரியர் என்றோ தென்னிந்தியர் அனைவரும் ஒரே இனத்தவர் என்றோ கூறவில்லை.

இவர் எடுத்துரைத்த 'திராவிடம்' தென்னிந்திய மக்கள் பேசும் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததென்ற கருத்தியலை முன்வைக்கிறது அவ்வளவே.

திராவிடம் அல்லது திராமிடம் எனும் சொல் 'தெற்கு' எனும் பொருள்தருவதாக வடமொழியில் வழங்கிவந்ததாகக் கூறுவர்.

திராவிடப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட,
ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை பற்றிப் பாடிய பாடலில் 'திரமிட' எனும் சொல் தெற்கு என்ற பொருள்படும்படி கையாளப்பட்டுள்ளது.

"த்வ சத்ன்யாம்
மான்யே தாரணிதாரா கன்யே ஹிருதயதா
பய பராப்ஹார பரிவஹதி சாரச்வத்மியா
தஹயவாத்யா தாட்தம் திரமிட
சிசு ராசவத்யா தாவா யாத்
காவீனம்
ப்ரோயுதனா மஜானி காமனியா கவாயிதா"

இப்பாடலில் ஆதிசங்கரர் திரிஞானசம்பந்தரை 'திராவிடசிசு' என்று இழிந்து கூறுவதாக திராவிடவாதிகள் மேடைதொறும் பொய்ப்பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

முட்டி மோதி உருண்டு புரண்ட பின்பு அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆதாரம் இதுதான்.
இதுவும் உண்மையா என்றால் அதுவும் இல்லை.
முழுப்பாடலையும் ஆராய்கையில், இது திருஞானசம்பந்தரை புகழ்வதாகவே அமைந்துள்ளது.

"தெற்கில் ஒரு குழந்தை உன் மார்பில் பால் குடித்ததால் சிறந்த அறிவுடன் விளங்குகிறது" என்று பார்வதியை புகழ்வதாக இப்பாடல் பொருள் தருகிறது.

தவிர இதில் 'திரமிட' என்ற வார்த்தைதான் வந்துள்ளது 'திராவிட' என்று வரவில்லை.
(திராவிட- எதிலிருந்து வந்தது என்பதைப் பின்னர் விளக்குகிறேன்)
இவற்றைக் கூறியது ஏனென்றால், திராவிடம் என்ற சொல் தமிழுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதது என்பதையும்,
திராவிடம் என்ற கருத்தியலே தற்போதைய 'திராவிடக் கோட்பாட்டுக்கு' முரணானது என்பதையும் விளக்கவே.

நூறுவருடம் எடுபடாத ஒருகோட்பாடு எப்படி நடைமுறையில் திடீரென்று குதித்தது?
தமிழ்ப் பிராமணர்களே ஆரியர் என்று எப்படி நம்பவைக்கப்பட்டது?
மற்ற மொழியினரும் தம்மொழிப் பிராமணரை அந்நியராகக் கருதினரா?

தொடரும். . .