Showing posts with label சுப.முத்துக்குமார். Show all posts
Showing posts with label சுப.முத்துக்குமார். Show all posts

Thursday, 16 February 2017

தனித்தமிழர்நாடு போராளி சுப.முத்துக்குமார் அண்ணனின் சாகச வரலாறு

அண்ணனின் நினைவுகள்

எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் பார்வதிக்கும்,
தந்தை சுந்தரத்துக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.
தந்தையின் தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே வளர்கிறார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம் ஒரு காலத்தில் பொதுவுடமை சித்தாந்தம் பொங்கி வழியும் பூமியாக இருந்தது.
அதனால் ஈர்க்கபெற்று, சக மாணவர்கள் திரைப்பட ரசிகர்களாக அடையாளம் எடுத்தபோது அண்ணன் முத்துக்குமார் மணிக்கணக்கில் காரல் மார்க்சையும், சோவியத் யூனியனையும், மாவோவையும், சே'வையும் பற்றி பேசுவார் என்று விவரிக்கிறார்கள் அண்ணனை சிறுவயதில் அறிந்த தோழர்கள்!

பின்னர் சிறிதுசிறிதாக ஜெயவர்தனே மற்றும் அதுலத் முதலி காலங்களில் ஈழத்திலே பற்றி எறிந்த தீ மெதுவாக அண்ணனையும் பற்றிக் கொள்கிறது.
பழனியில் பள்ளிபருவத்திலேயே பல்வேறு அறப்போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.

ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ, தமிழக விடுதலையும் அத்துனை அவசியம் என்ற புரிதலுக்கு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, தோழர் தமிழரசன் வழியில் ஆயுத போராட்டத்திற்கு வித்திடுகிறார்.

குட்டிமணி, தங்கத்துரைகளின் படுகொலைகள், ஈகி திலீபனின் தியாகம் போன்றவை முத்துகுமாரையும் ஈழத்திற்கு நேரிடையாக அழைக்கிறது.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஆயுத பயிற்சிக்காக தமிழீழம் சென்றார்.
அங்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலோடு சிங்கள படைகளுக்கு எதிராக விடுதலை புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கு பெறுகிறார்.

தொடர்ச்சியாக தேசிய தலைவரின் தனி பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யபெற்று பணியாற்றுகிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

தமிழகத்தில் தமிழ்தேசிய விடுதலைக்காக தமிழ் தேசிய மீட்ச்சிப்படையை தலைமையேற்று வழிநடத்துகிறார்.
அத்துடன் தமிழ் ஈழ விடுதலைக்காக புலிகளுக்கு தேவையான அனைத்தையும் தொடர்ச்சியாக வேதாரணியம் கட்டுமாவடி, மணமேல்குடி பகுதிகளிலிருந்து அனுப்பி வருகிறார்.

தலைவர் பிரபாகரனின் தனிப்பாதுகாப்பு அதிகாரி ரோமியோ மற்றும் நான்கு பெண்போராளிகள் உட்பட பதினாறு போராளிகளை வேலூர் சிறையில் இருந்து தப்ப வைக்கும் அசைன்மென்ட் (பொறுப்பு) அண்ணன் முத்துகுமாரிடம் வழங்கபடுகிறது.

இப்போது அறிவியல் தொழில்நுட்ப வசதிகளுடன் ஹாலிவுட் திரில்லர்களில் வரும் காட்சிகளைப்போல உலகே வியக்கும் வண்ணம் புலிகள் வேலூர் கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் தோண்டி தப்புகிறார்கள்.

அவர்கள் உட்பட 43 போராளிகளை மிகக்கடுமையான மத்திய காவல் மற்றும் புலனாய்வுத்துறையின் கண்காணிப்புக்கு நடுவே கல்யாண வீட்டார் 'கெட்டப்'போடு (பாவனையில்) தமிழகத்தில் இருந்து தப்ப வைத்து விடுகிறார் முத்துக்குமார்.
அண்ணனின் சாதுர்யமும், சாமார்த்தியமும் பல போராளிகளையும், புலித்தலைமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பின் ஒருமுறை மணமேல்குடியில் விடுதலை புலிகளுக்கு அனுப்ப பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கபெற்றார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின் பிணையில் விடுதலை ஆகி தலைமறைவாகிறார்.

போராட்டம் சந்தனக்காட்டில் புதிய பரிமாணம் எடுக்கிறது.
வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் சேர்ந்து தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அள்ளிச்சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார் கடத்தல் திட்டத்தை சிறையிலிருந்தே வகுக்கிறார்.
அந்த கடத்தல் வீரப்பனார் ஒப்புதலோடு தோழர்களால் செவ்வனே முடிக்கபெருகிறது.
தமிழர்களின் சீவாதார பிரச்சினைகளான காவிரிநீர், பெங்களூரில் பல ஆண்டுகளாக திறக்கபடாது மூடி கிடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு, மலைவாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மற்றும் போராளி முத்துக்குமார் விடுதலை போன்ற கோரிக்கைகள் முன்வைக்கபடுகிறது.

பிறகு சிறையிலிருந்து பிணையில் வருகிறார்.
ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் சனநாயக அரசியலில் நெருக்கமாக ஈடுபடுத்திகொள்கிறார்.

பின் மீண்டும் ஒன்றரை ஆண்டு காலம் கழித்து வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டுசென்றதாக அண்ணன் கொளத்தூர் மணியுடன் கூட்டு அதிரடிப்படையால் கைதாகி கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கன்னட சிறையில் அடைக்கபடுகிறார்.
நான்கரை ஆண்டுகாலம் சிறைவாழ்க்கை, பின் மீண்டும் பிணையில் வருகிறார்.

மெல்ல மெல்ல ஈழத்தில் போர் உச்சத்தை எட்டுகிறது.
தமிழ் தேசிய சனநாயக அரசியலில் தீவிரமாகிறார்.
தொடர்ந்து இயன்ற வழிகளில் எல்லாம் புலிகளுக்கு தேவையானவற்றை அனுப்புகிறார்.
ஈழம் மெல்ல மெல்ல அழிகிறது!

ராமேஸ்வரம் பிரச்சினையில் மதுரையில் பிணை இடுவதற்காக தங்கி இருந்த சீமானை சந்தித்து தனி தீவிர போர்க்குண அரசியல் பாதையை ஊக்குவிக்கிறார்.
தோழர்களுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் அந்த பகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சிதமபரத்தை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தோற்க்கடிக்கிறார்
(ஆனால் அதன் பின் தேர்தலில் சிதம்பரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது சிதம்பரம் மற்றும் கருணாவின் தனித்திறமை சார்ந்தது).

மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை தோழர்களுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தினார்.
நாம் தமிழர் கட்சி பணிகளை தொடங்கி முழுமூச்சுடன் ஈடுபடும் வேளையில் புதுக்கோட்டை பெ.தி.க மாவட்ட பொறுப்பாளர் கரு. காளிமுத்து அவர்களின் புதல்வி மாதரசியை சாதி மறுப்பு மணம் முடிக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் கொடி அறிமுகம் தஞ்சையில் முடித்து திரும்பும் வழியில் ஈழத்திற்கு மருந்துகள், ரத்த பைகள் அனுப்பியதாக கருணாநிதி அரசால் ஜாபர் சேட்டால் கைது செய்யபடுகிறார்.

ஒன்றரை மாதம் கழித்து வழக்கை உடைத்து வெளிவந்து நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக பம்பரமாய் சுழன்ற அவர், அந்த பகுதிகளில் பல புலிக்குட்டிகளை வளர்த்தெடுக்கிறார்!

இவருடைய காலம் இதுவரையான நாம் தமிழர் வரலாற்றில் புதுக்கோட்டை, காரைக்குடி, தென் தஞ்சை மாவட்டங்களின் பொற்காலம் எனலாம். இந்த மூன்று மாவட்டங்களிலுமே அப்போதைய கருணாவின் ஆளுங்கட்சிக்கு இணையான செயல்பாடுகளை நாம் தமிழர் கொண்டிருந்தது என்பது ஆளுங்கட்சியினரே ஏற்றுக்கொண்ட வாதம்.
ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களையும் தன் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வளர்த்தெடுத்தார்.

இந்த தமிழினத்தின் அறிவிக்கபடாத தளபதி மர்ம நபர்களால் புதுகை நகரின் மத்தியில், அண்ணா சிலை அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இடத்தில் பிப்ரவரி 16, 2011 அன்று கயவர்களால் வெட்டி வீழ்த்தபட்டார்.

இந்த பாதகத்தை செய்தது தனிப்பட்ட எதிரிகளாக இருக்க வாய்ப்பில்லை,
ஏனெனில் இது எதிரியும் அவனை சார்ந்த உற்றார் உறவினரும் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்பதை எளிதில் அவதானிக்க முடியும்.

ஆகவே, இது அரச பயங்கரவாதமா என்பது சிவகங்கை தொகுதியை உள்ளடக்கிய புதுகை மாவட்டத்தின் 'சிதம்பர ரகசியம்'!

அண்ணனின் இறுதிச்சடங்கில் அப்போது பேசிய அய்யா நெடுமாறன், முத்துகுமாரின் வீர தீரங்களை தாண்டி, எனக்கே சில நேரம் விளங்காத அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் வல்லவன் முத்துகுமார் என்றார்.

சீமான் பேசும்போது, நான் சமகாலத்தில் சந்தித்த மிகச்சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவன் முத்துக்குமார், அவன் எனக்கு அரசியல் ஆசான் என்றார்.
முத்துகுமார் தூக்கிய ஆயுதத்தை விட அவன் சிந்தனை பேராபத்து என்று உணர்ந்தவர்கள் தான் அவனை சிதைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

சமீபத்தில் உரையாடும்போது தோழர் ஏகலைவன், அண்ணனோடு நெருங்கி பழகியதை வைத்து, போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, போராளிகளாகவே பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் இவன் அவ்வாறு பிறந்தவன் என்றார்.

சுருக்கமாக,
10 ஆண்டுகாலம் தமிழ் தேசிய விடுதலைக்காக சிறை வாழ்வு,
5 ஆண்டுகாலம் தலைமறைவு ஆயுத போராட்ட வாழ்வு,
4 ஆண்டுகாலம் மக்கள் சனநாயக அரசியல் வாழ்வு.

சாகத் துணிந்தவன் சரித்திரம் ஆகிறான்!
சாகப் பயந்தவன் தரித்திரம் ஆகிறான்!

நன்றி: Saravanan Thangappa

Saturday, 16 April 2016

வீரப்பனாரும் புலிகளும்

வீரப்பனாரும் புலிகளும்

15-08-1995
வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்

செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன்.
புலித் தளபதி மாறன்.

அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப்பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.

ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.

"பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.
தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்றுவிடுவார்"

"பணம் எப்படி கிடைத்தது?"

"ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.
உதவியும் செய்தனர்.
உணவும் தேநீரும் கூட கிடைத்தது"

"அடடா! தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?
நீ புலி என்று கூறிவிடவில்லையே?"

"இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.
அவர்களுக்குப் புரிந்திருக்கும்"

"சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை"

"கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?"

"காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்"

உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.

ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக்கொண்டனர்.

"யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.
நான் வீரப்பன் வந்திருக்கிறேன்"

வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.
புலிகள் வெளியே வந்தார்கள்.

"யார் நீங்கள்?"

"நாங்கள் புலிகள்"

"அடடே! நம் புலித்தம்பிகளா?!
ஏது இந்த பக்கம்?
ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?"

"ஐயா! அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?!!"

"காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.
நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனால்தான் காண வந்தேன்.
நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.
ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?"

"10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்"

"அடேயப்பா புலிகள் புலிகள்தான்.
சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.
காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.
உங்களை நான் பத்திரமாக அனுப்பிவைக்கிறேன்."

"இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.
ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்."

"யார் வருவார்கள்?"

"அனேகமான 'தமிழ்நாடு மீட்சிப்படை' சுப.முத்துக்குமார்"

"ஓ. சரி கவனமாக இருங்கள்"

வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.
அது நிறையப் பணம் இருந்தது.

"தேவையானவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.
பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.
நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.
அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்."

"நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.
தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.
நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.
அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?!"

வீரப்பனார் சிரித்துக்கொண்டே
"ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்யவேண்டுமா?!
உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்.
வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.
காலம் வரும்போது கைகோர்ப்போம்.
சரி. கவனமாக இருங்கள்"

கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.

இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.
வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.
மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.

மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

படம்: வீரப்பன் ஃபேன்ஸ் அசோசியேசன் (கேரளா)

Friday, 27 November 2015

தமிழ்நாட்டு விடுதலையில் வீரப்பனாரின் இணைவு

வீரப்பன்டா……எங்க வீரப்பன்டா……
்்்்்்்்்்்்்்்்்்்்்்்

தமிழ்நாட்டு விடுதலையில் வீரப்பனாரின் இணைவு:
  
1995,96 களில் சென்னை சிறையில் வீரப்பனார் படையைச் சேர்ந்தவர்களும் தமிழகம்-தமிழீழம் இணைந்த பரந்த தமிழ்நாட்டை மீட்கப் போராடிவரும் தமிழ்நாடு மீட்சிப்படை(TNRT)ஐச் சேர்ந்தவர்களும் இருந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.

அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் தத்தமது இடத்திற்குச் சென்று இருபடையினரும் இணைய வழிவகுத்தனர்.

ஏற்கனவே தமிழர்களுக்காகப் பலமுறை ஓங்கிக் குரல்கொடுத்தவரும் தமிழ்த்தேசியத்தின் அழிக்கவியலா அடையாளமுமான வீரப்பனாரைச் சந்திக்க தநாமீப-வின் தளபதி சுப.முத்துக்குமார் (நாம் தமிழர் இயக்கத்தை நிறுவி வேரூன்றவைத்ததில் பெரும்பங்காற்றியவர்) அவருடைய சந்தனக்காட்டுக்குச் சென்றார்.

பரந்துவிரிந்த காடு, எத்தனைப் பெரிய படையும் நுழையமுடியாத அளவுக்கு வீரப்பனாரின் வலிமையான அந்தக் கோட்டையை பார்த்து அசந்துபோனார் முத்துக்குமார்.

முத்துக்குமாரையும் அவரது தநாமீப படையையும் அவர்களுக்கும் புலிகளுக்கும் இருந்த தொடர்பையும் நன்கு அறிந்திருந்த வீரப்பனார் முத்துக்குமாரைப் பார்த்ததும் ஆரத்தழுவி அணைத்துக்கொண்டார்.

18000 சதுர கி.மீ பரப்பளவுள்ள காட்டில் கிட்டத்தட்ட 6000ச.கி.மீ பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரும்,
தலைக்கு 40லட்சம்(1990களில்) அறிவிக்கப்பட்டிருந்தவரும்,
இந்திய ராணுவப்பிரிவையே தோற்கடித்தவரும்,
தமிழக காவல் மற்றும் வனத்துறை,
கன்னட காவல் மற்றும் வனத்துறை,
போதாக்குறைக்கு மத்திய ரிசர்வு படை அத்தனைக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிவருபவருமான வீரப்பனாரைச் சந்தித்ததை பெரும்பேறாக எண்ணினார் சுப.முத்துக்குமார்.

முத்துக்குமாரும் சாதாரணமானவரல்ல.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவந்த தநாமீப-வின் முன்னனித் தளபதி,
கிட்டத்தட்ட அதன் தலைவர் போன்றவர்.
தமிழ்நாட்டின் வரைபடத்தில் மூக்குபோன்ற பகுதிக்கு கீழே இருக்கும் கடற்கரைப்பகுதி(புதுக்கோட்டை மாவட்டம்) வழியாக இலங்கை- இந்திய ராணுவத்தை மீறி புலிகளுக்குத் தேவையான அனைத்தையும் தமிழகத்திலிருந்து கொடுத்து வாங்கும் அளவுக்கு நெருக்கம்.
ஈழத்தின் தேசியத்தலைவராம்,
தமிழ்த்தாயின் தலைமகனாம்,
பிரபாகரனைச் சந்தித்து சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்றவர்.
வீரப்பனாரிடம் புலிகளின் படைவலிமையையும் நவீன ஆயுதங்கள் பற்றியும் தமிழ்மக்களின் விடுதலை பற்றியும் நீண்டநேரம் கலந்துரையாடினார்.

அதோடு நிற்கவில்லை, தமது இயக்கத்தினர் சிலரை வீரப்பனாரிடம் அனுப்பிவைத்தார்.
வீரப்பனாரின் படையினர் சிலரைத் தம்மோடு இணைத்துக்கொள்ளவும் இருந்தார்.
அதோடு நில்லாமல் பெரம்பலூரில் முந்திரிக்காட்டில் இயங்கிவந்த தமிழ்நாடு விடுதலைப் படையினரையும்(TNLA) தொடர்பு கொண்டு வீரப்பனாருடன் இணைய வழிவகுத்தார்.

கியூபா போராட்டத்தில் 'சே'யும்- 'ஃபிடல் காஸ்ட்ரோ'வும் இணைந்தது போன்ற மாற்றங்கள் நிகழவிருந்தன.

ஆனால், தமிழ்மக்களின் தலைவிதி, முத்துக்குமார் காவல்துறையிடம் பிடிபட்டுவிட்டார்.
இருந்தும் அவர்செய்த அரிய செயல்கள் பலனளிக்கவே செய்தன.
அடுத்தடுத்த காவல்நிலையத் தாக்குதல்கள், அரசியல்புள்ளிகளின் கடத்தல்கள் என வீரப்பனாரின் நீண்டகால அமைதிக்குப் பிறகான புலிப்பாய்ச்சல் நிகழ்ந்தது.

Friday, 17 October 2014

தமிழர் நாட்டுக்கொடி ஏற்றும் வீரப்பனார்

அரிய புகைப்படம்

தமிழர் நாட்டுக்கொடியை ஏற்றும் *வீரப்பனார்*

!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!'!

தமிழ் நாட்டுக்கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி(தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது.

வீரப்பனார் தமிழர் விடுதலைக்குழுக்களான
தமிழர் நாடு விடுதலைப் படை
(TNLA)
தமிழர் நாடு மீட்புத் துருப்புகள்
(TNRT)
ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கியபோது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

படத்தில்
வீரப்பனாருடன் சேத்துக்குளி கோவிந்தன்.
தெளிவான கொடியை ஓரமாகச் சேர்த்துள்ளேன்.
பட உதவி: balan tholar.

தமிழர் விடுதலையின் பெருமைமிகு அடையாளமான வீரப்பனாரின் நினைவுநாளில் இந்தப்பதிவை அவரது நினைவேந்திப் பதிகிறேன்.

(தமிழர் விடுதலையில் வீரப்பனார் இணைவு
https://m.facebook.com/photo.php?fbid=371299332973726&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ).

Thursday, 10 July 2014

ஏனய்யா இருநாடுகள்?


மொட்டையாகப் பேசி
மொட்டையடிப்போர்

(×)தமிழனை தமிழன் ஆளவேண்டும்(×)

(×)தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்(×)

மேலோட்டமாகப் பார்த்தால் இம்முழக்கங்கள் தமிழரின் மனநிலை சரியான இலக்கு நோக்கி மாறிவருவதைக் குறிக்கின்றன;
அம்மாற்றம் மகிழ்ச்சி தருவதே;
இன்று இவற்றை எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்;
மொட்டை கட்டையாக சொல்லப்படும் மேற்கண்ட முழக்கங்கள் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை.

முதலில் 'தமிழனை தமிழனே ஆளவேண்டும்' என்பது,
தமிழரை தம்மைத் தாமே ஆள்வதுதான் முறை;
ஆனால் எப்படி ஆளவேண்டும் என்பதுதான் கேள்வி;
சுருங்கிவரும் தாய்நிலத்தை வலுவான படையால் காவல்போட்டு, அந்நியர் உள்ளே வராமல், தமிழர் வெளியே செல்ல தேவையேதும் இல்லாமல், தமிழ் மக்கள் தமக்குத் தேவையானதை தாமே செய்துகொண்டு தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாறுமளவு ஆள்வது அதுவும் எவர் ஆதிக்கத்திற்குக் கீழும் இல்லாமல் ஆள்வதுதான் 'தமிழனைத் தமிழனே ஆளுதல்' என்பது.
அதை விடுத்து, மக்கள் சந்தித்த அழிவால் ஏற்பட்ட வலியை வாக்குகளாக மாற்றி, ஒப்புக்கு சப்பானியான தமிழக முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பிரச்சனை வரும்போதெல்லாம் தீர்மானமோ கடிதமோ தயார் செய்து நேரடியாக பிரதமர் அலுவலக குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றிவளைத்து பல கைகள் மாறி அக்குப்பைத் தொட்டிக்கு கொண்டு சேரச்செய்துவிடுவது, பின் வாய்ச்சவடால் விட்டே தமிழரை ஆள்வது, அதுவும் ஹிந்தியா மற்றும் அதன் முதலாளிகளான வல்லாதிக்க நாடுகளின் காலடிக்குக் கீழ் தமிழர்களை ஆள்வது 'தமிழரைத் தமிழர் ஆள்வது' என்று எப்படி ஆகும்?

இனி எவனாவது தமிழனைத் தமிழன் ஆளவேண்டும் என்று மொட்டையாகக் கூறினால் அடித்து துரத்திவிடுங்கள்.

தமிழக முதலமைச்சராக ஒரு தமிழன் வருவதுதான் நியாயம்;
அதை நாம் செய்துதான் ஆகவேண்டும்;
அதற்காக அதுவே போதும் என்று நினைக்காதீர்கள்;
நீங்கள் மேல்வலிக்காமல் போடும் வாக்கு எந்த பெரிய மாற்றத்தையும் கொணராது.

தமிழ்நாடு என்று அழைக்கப்படும் பாதி சுருங்கிய நம் தாய்நிலத்தில் 28ல் ஒருவராக ஒரு முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு நாக்கு கூட வழிக்கமுடியாது.
நம்மை நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரிகளிடம் அதைவிட பெரிய பெரிய நிலமும் மக்கள் தொகையும் நாடும் படையும் இருக்கிறதே!
நாம் படையொன்றை நிறுவாமல் ஒரு நாற்காலியை கைப்பற்றுவதன் மூலம் என்னத்தைக் கிழிக்கமுடியும்?

முதலில் தமிழக அரசை கைப்பற்றி அதன் ஆதரவோடு படைநிறுவோம் என்று கூறுவோர் இன்னும் பரிதாபத்திற்குரிய ஏமாளி.
தமிழக அரசைக் கைப்பற்ற 15ஆண்டுகளாவது ஆகும்; அதற்குள் ஈழத்தில் ஒரு தமிழன் இருக்கமாட்டான்;
அதன்பிறகு ஈழவலியை மறந்துபோன மக்களுக்கு உணர்ச்சியூட்டி புரட்சிசெய்வது நடக்குமா?

தவிர தந்தை செல்வா இருந்தவரை விடுதலைப் போராளிகள் தலைதூக்க முடிந்ததில்லை; காரணம் மக்கள் என்றுமே தீவிரவழியை விரும்பமாட்டார்கள், அவர்கள் மனம் கவர்ந்த அரசியல்வாதி கிடைத்துவிட்டால் அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள்; ஆனால் இன்று தமிழரின் நிலையானது அன்று தந்தை செல்வா மறைவிற்குப் பிறகான காலம் போன்றது; அப்போது சரியான நேரத்தில் ஈழஇளைஞர்கள் பதிலடி கொடுத்தார்கள்; மக்கள் ஆதரவு குவிந்தது;
ஆயுதப்போராட்டமா அது தீவிரவாதம், அதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பவர்கள் தலைவர் பெயரைக்கூட சொல்லக்கூடாது; என்று நீங்கள் அவரை தலைவராகக் கருதத் தொடங்கினீர்களோ அன்றே அவரது போராட்ட வடிவத்தை ஏற்றவராகிறீர்கள்;
அவர் வருகைக்காக இனியும் காத்திருப்பதாகக் கூறி கையாலாகமல் இருக்கவேண்டாம்; எப்போதுமே இத்தகைய மாபெரும் தலைவர் இறந்துவிட்டதாக எதிரிகள் அறிவிப்பதில்லை; அப்படி அறிவித்தால் மக்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துவிடுவார்களே, அதனால் தலைவர் இருக்கிறார் என்று கூறி கூறியே அம்மக்களை தேங்கிநிற்கச் செய்வார்கள்; அதற்காக தலைவர் இல்லை என்று உறுதியாகக் கூறவில்லை; 16வயதில் உழைக்கத் தொடங்கிய தலைவர் 40வருடங்கள் போராடி அத்தனையையும் இழந்துவிட்டார்; இனி அவருக்கு ஓய்வுகொடுங்கள்.
தலைவரே கூட "தமிழ்மக்கள் யார் அவர்களுக்காக போராட முன்வருகிறாரோ அவரையே கடவுளாக்கி பொறுப்புகளைச் சுமத்தி தாம் விலகிக்கொள்கிறார்கள்" என்று கூறியும் வந்துள்ளார்; தமிழரின் எழுச்சி ஈழப்படுகொலைக்கு பதிலடி தருமளவு இல்லை; அந்த கொஞ்ச நஞ்ச எழுச்சியும் அரசியல்வாதிகள் கபளீகரம் செய்யுமுன் புரட்சியின் தொடக்கம் அரங்கேறவேண்டும்;
வல்லாதிக்கத்தை உட்கார்ந்த இடத்திலிருந்து அடிக்கும் போர்மறவர்கள் நம்மண்ணில் உதிக்கவேண்டும்;
அதற்கு இதுவே சரியான நேரம்.

இரண்டாவது 'தமிழருக்கு ஒரு நாடு வேண்டும்' என்கிற மொட்டையான முழக்கம்;
ஈழத்தையும் குறிக்கவேண்டும், தனித் தமிழ்நாடு என்றும் குறிக்கவேண்டும்; என்ன ஒரு தந்திரம்?!
முன்பு நம் தாத்தன் இந்தியா என்ற கொள்கைக்கு முழு ஆதரவையும் வழங்கினான்;ஆங்கில ஆதிக்கம், பொதுவான சமயங்கள், வரலாற்று தொடர்புகள் என்று பல காரணங்கள் இருந்தன;
அது தவறென்று தெரிந்த நம் அப்பனும் திராவிடம் என்ற முழக்கத்திற்கு முழு ஆதரவு வழங்கினான்; தென்னிந்தியரில் மூத்த இனம் தமிழினம் என்றும், தென்னிந்தியர் ஒரே இனம் என்றும் குறிக்கும்படியான மொட்டைகட்டையாக ஒரு கொள்கை; இன்று நாம் முழுமூச்சுடன் திராவிடத்தை எதிர்க்கவேண்டியுள்ளது; காரணம் அன்றே தொலைநோக்குப் பார்வையில்லாததுதான்;

பட்டும் திருந்தினோமா?
இல்லை; இன்று ஈழம் ஈழம் என்று கத்துகிறோம்; தமிழரைத் துண்டாடும் கொள்கைதான் ஈழம் என்ற கருத்தியல்;
பாக் நீரிணைப்புக்கு அந்த பக்கம் ஈழம் இந்தப் பக்கம் தமிழகம்; இரு புறமும் ஒரே மக்கள், ஒரே பிரச்சனை, நாம் ஏன் ஈழம் மட்டும் கோருகிறோம்;
இருபுறமும் தமிழர்கள் வாங்கிய அடிகளில்தான் என்னே ஒற்றுமை!
இந்த பதிவில் விளக்கியுள்ளேன்=
https://m.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13

உலகில் தமிழர் எண்ணிக்கை 1.1%
இதற்குள் என்னய்யா சாதி, மத, வட்டார பிரிவுகள்?

உலக நிலப்பரப்பில் தமிழர் தாய்நிலம் வெறும் 0.15%
இதற்குள் ஏனய்யா இருநாடுகள்?

ஆகவே தமிழரே
மொழி, இனம், நாடு மூன்றும் ஒன்றாக அமைந்தால்தான் வல்லரசாவது எளிது;
தமிழ் மொழி, திராவிட இனம், இந்திய நாடு என்பது பலபேருக்கு மனைவியாக வாழ்வது போன்றது;
நீங்களும் நானும் கண்டவனுக்கு முந்திவிரித்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்;

எவன் வேண்டுமானாலும் ஏறிமேயலாம் என்ற வேசிவாழ்க்கை இனியும் நமக்குத் தேவையா?

சிந்திப்பீர்.


https://www.facebook.com/photo.php?fbid=440074406096218&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739