Saturday, 16 April 2016

வீரப்பனாரும் புலிகளும்

வீரப்பனாரும் புலிகளும்

15-08-1995
வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த 43 புலிகள் (3 பெண் புலிகள் உட்பட) தப்பித்தனர்

செய்தித்தாளில் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தார் மாறன்.
புலித் தளபதி மாறன்.

அவருடன் 4,5 புலிகள் வேலூர் காட்டுப்பகுதியில் ஒரு குகையில் பதுங்கியிருந்தனர்.

ஊருக்குள் போய்விட்டு ஒரு புலி வந்தார்.

"பழ.நெடுமாறன் ஐயாவுக்கு கடிதம் போட்டுவிட்டேன்.
தலைமைக்குத் தகவல் கொடுத்துவிட்டு நம்மை எப்படியும் அழைத்துச் சென்றுவிடுவார்"

"பணம் எப்படி கிடைத்தது?"

"ஊருக்குள் சென்று பேசியதுமே பேசும் தமிழ்நடையை வைத்து ஈழத்தான் என்று கண்டுபிடித்துவிட்டனர்.
உதவியும் செய்தனர்.
உணவும் தேநீரும் கூட கிடைத்தது"

"அடடா! தமிழ்நாட்டு மக்களின் பாசத்தை என்னவென்பது?
நீ புலி என்று கூறிவிடவில்லையே?"

"இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு நாம் தப்பித்த செய்தி தெரிந்துள்ளது.
அவர்களுக்குப் புரிந்திருக்கும்"

"சரி, நாம் காட்டில் இருக்கும் வரை கவலையில்லை"

"கையிலே பணமில்லை, உதவி வரும் வரை என்ன செய்வது?"

"காட்டிலே ஏதாவது பழம், கிழங்கு கிடைக்கக்கூடும்"

உணவு தேடி காட்டுக்குள் சென்றனர்.
காக்கி உடை தரித்த ஒரு கூட்டம் வருவது தெரிந்தது.

ஓடிப் போய் குகையினுள் பதுங்கிக்கொண்டனர்.

"யாரது குகை உள்ளே? பயப்படாமல் வெளியே வாருங்கள்.
நான் வீரப்பன் வந்திருக்கிறேன்"

வீரப்பன் என்ற பெயரைக் கேட்டதுமே புலிகளின் மனதில் நிம்மதி பிறந்தது.
புலிகள் வெளியே வந்தார்கள்.

"யார் நீங்கள்?"

"நாங்கள் புலிகள்"

"அடடே! நம் புலித்தம்பிகளா?!
ஏது இந்த பக்கம்?
ஓ சிறையில் இருந்து தப்பியவர்களா?"

"ஐயா! அதற்குள் உங்களுக்கு எப்படி தெரியும்?!!"

"காட்டில் இருந்தாலும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் எனக்குத் தெரிந்துவிடும்.
நேற்று இரவு இங்கே சந்தேகத்திற்குரிய சிலர் நடமாடியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனால்தான் காண வந்தேன்.
நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று யூகித்தேன்.
ஆமாம். அத்தனை வலிமையான கோட்டையில் இருந்து எப்படி தப்பித்தீர்கள்?"

"10 வாரங்களாகச் சுரங்கம் தோண்டி மதில் சுவர் ஏறிக்குதித்து தப்பித்தோம்"

"அடேயப்பா புலிகள் புலிகள்தான்.
சரி, இது என் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லை.
காட்டிற்குள் வந்தால் என்னுடன் பாதுகாப்பாக இருக்கலாம்.
உங்களை நான் பத்திரமாக அனுப்பிவைக்கிறேன்."

"இல்லை. இங்கேயிருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டோம்.
ஓரிரு நாட்களில் அழைத்துச் செல்ல வருவார்கள்."

"யார் வருவார்கள்?"

"அனேகமான 'தமிழ்நாடு மீட்சிப்படை' சுப.முத்துக்குமார்"

"ஓ. சரி கவனமாக இருங்கள்"

வீரப்பனாரின் தளபதி சேத்துக்குளி கோவிந்தன் ஒரு மஞ்சள் பையை கொடுக்க அதை மாறனிடம் கொடுத்தார்.
அது நிறையப் பணம் இருந்தது.

"தேவையானவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.
பணம் தீர்ந்துவிட்டால் என் பெயரைச் சொல்லி பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்.
நான் இரண்டொரு நாட்களில் மீண்டும் வருகிறேன்.
அதற்குள் கிளம்பிவிட்டால் பிரபாகரனை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்."

"நன்றி ஐயா, உங்களைச் சந்தித்ததே பெரிய பாக்கியம்.
தலைவர் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார்.
நான்காண்டுகள் முன்பு காவிரிக் கலவரம் நடந்தபோது படையோடு போய் கன்னடவரைத் தட்டிக் கேட்டீர்களாமே.
அந்த செய்தி எத்தனை பெருமையாக இருந்தது தெரியுமா?!"

வீரப்பனார் சிரித்துக்கொண்டே
"ஏனப்பா இப்படியான வீரசாகசங்களை பிரபாகரன் மட்டும்தான் செய்யவேண்டுமா?!
உங்கள் அண்ணன் தம்பிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்லர்.
வன்னிக்காடு அளவை ஒத்த காட்டுப்பகுதி என் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால் பிரபாகரன் என்னைவிடப் பெரிய ஆளாக வருவான்.
காலம் வரும்போது கைகோர்ப்போம்.
சரி. கவனமாக இருங்கள்"

கூறிவிட்டு வீரப்பன் போய்விட்டார்.

இரண்டொரு நாட்கள் கழித்து காக்கி உடை தரித்த காவலர்கள் அங்கே வத்தனர்.
வீரப்பனார்தான் வருகிறார் என்று நினைத்து அசட்டையாக இருந்த புலிகள் பிடிபட்டனர்.
மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர்.

இவர்களைத் தவிர சுவர் ஏறிக் குதிக்கும்போது இருவர் கால் முறிந்து பிடிபட்டனர்.

மற்ற அனைவரும் சுப.முத்துக்குமார் அவர்களால் பத்திரமாக ஈழத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

படம்: வீரப்பன் ஃபேன்ஸ் அசோசியேசன் (கேரளா)

No comments:

Post a Comment