தமிழகத்து தர்கா வழிபாடு
டடடடடடடடடடடடடடடடட
பள்ளிவாசல் வேறு தர்கா வேறு
பள்ளிவாசலில் சமயகுரு 5 வேளை பாங்கு கூறி அழைப்பார்.
பிறகு கூட்டு வழிபாடு நடைபெறும்.
இங்கே பிற சமயத்தினரும் இசுலாமியப் பெண்களும் பள்ளிவாசல் செல்வதில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்வதே 'தர்கா'
வழிபாடு.
தர்கா என்பது இறையடியார் ஒருவர் உடல் அடக்கமான இடத்தைச் சுற்றி எழுப்பப்படும் கோவில்.
(திறந்தவெளிக் கல்லறைகளும் உள்ளன)
பள்ளிவாசலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட பச்சை நிறத்தில் வெள்ளைநிறப் பிறை நிலாவும், விண்மீனும் கொண்ட கொடி ஏற்றப்பட்டிருக்கும்.
இங்கே அந்த இறையடியாரை யாரும் வணங்குவதில்லை.
அந்த இறையடியாருக்காக ஆண்டவனிடம் வேண்டுகிறார்கள்.
இங்கே பல்வேறு சமயத்தவரும் இசுலாமியரும் வந்துபோகிறார்கள்.
நேரக்கட்டுப்பாடு இல்லை.
வழிபாட்டு விதிகள் இல்லை.
அதாவது தமது ஊரில் ஒரு பெரிய மனிதர் மறைந்தபிறகு (அவர் இசுலாமியராய் இருந்தாலும்) அவ்வூர் மக்கள் (பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்) அவரது நினைவைப் போற்றும் நாட்டார் வழிபாட்டு முறையே தர்கா வழிபாடு.
'சீறாப் புராணம்' எழுதிய உமறுப்புலவரின் திறந்தவெளி தர்காவை சுற்றி (பிள்ளைப்பேறு நேர்த்திக் கடனுக்காகக்) கட்டிடம் எழுப்பியவர் 'பிச்சையாக் கோனார்' என்பவராவார்.
இறையடியார்கள் இறைவனடி சேர்ந்த நாளில் 'சந்தனக்கூடு' விழா நடக்கிறது.
பத்து நாட்களுக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பில் பச்சைநிறத்தில் பிறை மற்றும் விண்மீன் கூடிய துணி கட்டி ஊர்வலமாக எடுத்துச்சென்று தர்காவின் வாசலில் கட்டுவார்கள்.
(இது தமிழர்கள் அனைவரும் திருக்கோவில்களில் விழா எடுக்கும் முன்பு கொடியேற்றும் வழக்கம்தான்.
தமிழக கத்தோலிக்க தேவாலயங்களிலும் இத்தகைய கொடியேற்றம் உண்டு).
பிறகு பத்துநாட்கள் கல்லறையைச் சுற்றி அமர்ந்து தமிழிலும் அரபியிலும் இறையடியாரின் புகழைப் பாடுவார்கள்.
பத்தாம் நாளில் சந்தனத்தைக் குழைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சந்தனக்கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச்செல்வர்.
இதற்கு பரம்பரை பரம்பரையாக மாடும் வண்டியும் தருவோர் பல்வேறு சமயத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.
இவ்வூர்வலத்தில் சிலம்பாட்டம் கழியாட்டம் போன்ற தமிழ் கலைகளும் இடம்பெறும்.
பிறகு சுமந்துவந்த குடத்திலிருந்து சந்தனத்தை கல்லறை மீது பூசுவர்.
பிறகு சிறிதளவு சந்தனத்தை வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.
பிறகு கந்தூரி விருந்து நடைபெறும்.
இதற்கான செலவு அவ்வூர் மக்கள் அனைவரிடமும் பெறப்பட்ட வரியிலிருந்து கிடைக்கிறது.
(நன்கொடை அதிகம் கிடைக்கும் சில பெரிய தர்காக்கள் விதிவிலக்கு).
இரவு அவ்வூரார் அனைவரும் மதவேறுபாடின்றி அமர்ந்து இறைச்சி விருந்து உண்பார்கள்.
தமிழகத்தில் மிக பழமையான தர்கா இராமேஸ்வரத்திலுள்ள 'ஆபில் காபில்' தர்கா.
இவர்கள் ஆதாமின் மகன்கள் ஆவர்.
(ஆபெல், கெய்ன் என்று பைபிள் கூறுகிறது).
மிகவும் புகழ்பெற்ற தர்கா 'நாகூர் தர்கா' ஆகும்.
இவரை 'முகைதீன் ஆண்டவர்' என்று எல்லாமதத்தினரும் அழைக்கின்றனர்.
இதுபோல குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பீர்முகமது தர்கா,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு அருகிலுள்ள ஏர்வாடி செய்யது இப்ராகிம் தர்கா,
திருச்சியிலுள்ள நத்தார்வலி தர்கா,
ஆகியன குறிப்பிடத்தகுந்த தர்காக்கள்.
இது தவிர வட்டார ரீதியாக புகழ்பெற்ற பல தர்காக்கள் உள்ளன.
"நாகூர் தர்கா"விற்கு 'அச்சுதப்பநாயக்கர்' எனும் தெலுங்கு மன்னர் முப்பது வேலி நிலம் வழங்கியுள்ளார்.
இதே தர்காவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் 'துக்கோசி' 131 அடி கோபுரம் கட்டித்தந்து இளங்கடமனூர் எனும் ஊரையும் நன்கொடை அளித்துள்ளார்.
இன்று தஞ்சை மராட்டிய மன்னர் கந்தூரி அன்று குடும்பம் சந்தனமும் பட்டுசால்வையும் அனுப்பிவைக்கின்றனர்.
இந்த நாகூர் தர்காவின் கல்லறை மீது போர்த்தப்படும் போர்வை சென்னையைச் சேர்ந்த 'பழனியாண்டிப் பிள்ளை' என்பவரது பரம்பரையினர் அனுப்பிவைக்கின்றனர்.
"கோரிப்பாளையம் தர்கா"விற்கு கூன்பாண்டியன் (சுந்தரபாண்டியன்) எனும் பாண்டிய மன்னன் 15000 பொன் வழங்கியுள்ளான்.
இதில் ஏற்பட்ட ஒரு பூசலை தீர்த்து பொறிக்கப்பட்ட நாயக்கர்கால கல்வெட்டுச் சான்று உள்ளது.
அருப்புக்கோட்டை பள்ளிவாசல் கட்ட நிலம் கொடுத்தவர்கள் (தெலுங்கு) நாயக்க மக்கள்.
"ஏர்வாடி தர்கா"விற்கு 'முத்துக்குமார் விஜயரகுநாத சேதுபதி' எனும் சேதுபதி மன்னர் விளைநிலங்களையும் சில வரிகளைகளையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
இதே மன்னர் 1745ல் புதுக்குளம் ஊரை 'ஆபில் காபில் தர்கா'வுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இத்தர்காவில் 19 வலிமார்கள் சமாதிகள் உள்ளன.
இங்கே பல்வேறு சாதியார் பரம்பரை பரம்பரையாக சில பங்களிப்புகளைச் செய்துவருகின்றனர்.
இங்கே சந்தனக்கூடு குடம் கொண்டுசெல்லும் மரக்கூட்டினை வழங்குவோர் ஆசாரிகள்.
கூடுகட்ட கயிறு, நார் போன்றவை நாடார்கள் பொறுப்பு.
கூடு அலங்கரிப்பு பறையர் மற்றும் கோனார் பொறுப்பு.
நெய்பந்தத்துணி வண்ணார்கள் பொறுப்பு.
சந்தக்கூடு விழாவில் அனைத்து மதத்திலிருந்தும் 2லட்சம் பேர் கூடுவர்.
திருநெல்வேலி-மதுரை சாலையில் "காட்டுப் பள்ளிவாசல்" என்ற தர்கா உள்ளது.
'இப்ராகிம் ராவுத்தர்' என்பவரும் அவரது நண்பர் 'முத்துக்கோனார்' என்பவரும் இங்கே அடக்கமான இறையடியார்களுக்கு சிறிய அளவில் வழிபாட்டைத் தொடங்கினர்.
இன்று கூரையில்லாத கட்டிடம் தர்காவாக இயங்குகிறது.
மதுரையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் திருப்பத்தூர் அருகேயும் ஒரு "காட்டுப் பள்ளிவாசல்" இருக்கிறது.
ஏழு பார்ப்பனப் பெண்களையும் இரண்டு பிராமணக் குழந்தைகளையும் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த 'சையது பக்ருதீன்' அடக்கமான தர்கா இது.
இராமநாதபுரம் மன்னர் 'கிழவன் சேதுபதி' (1674-1710) இத்தர்காவுக்ககு கொடைகள் வழங்கியுள்ளார்.
இங்கே நடக்கும் சந்தனக்கூடு விழாவில் கள்ளர் சாதியினர் பெருமளவு கலந்துகொள்கின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு பார்ப்பன பெண்ணுக்கும் அவரை கள்வர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த "பக்கிரி சாய்பு"வுக்கும் தர்கா உள்ளது.
தூத்துக்குடி வைப்பாறு சிற்றூரில் "ஒலியுல்லா தர்கா"வின் கந்தூரி விழாவில் தெலுங்கு கம்பளத்து நாயக்கர்கள் பெரிய பங்களிப்புகளைச் செய்கின்றனர்.
ஊத்துமலை தேவர்குளம் அருகே "கான்சாமாடன்" எனும் தர்காவை மறவர் மக்கள் வணங்குகின்றனர்.
ஊத்துமலை ஜமீன்தார்கள் முன்னின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை நடத்துகின்றனர்.
ஊர்மக்கள் பசுமாடு ஈன்றபிறகு கறக்கும் முதல் பாலை இச்சமாதியில் ஊற்றுகின்றனர்.
நாகூருக்குத் தெற்கேயுள்ள "முத்துப்பேட்டைத் தர்கா" 'கருப்பையாக் கோனார்' என்பவர் கட்டியதாகக் கூறுகிறார்கள்.
திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள "அகோரி கானுமியா ஒளி" தர்காவிற்கு மருதுபாண்டியர் மானியம் வழங்கியுள்ளனர்.
கி.பி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் ஐயர் தமிழிலும் இசையிலும் நல்ல புலமை பெற்றவர்.
அவர் இசுலாத்தைத் தழுவி 'மீனா நூர்தின்' என்று பெயரை மாற்றிக்கொண்டார்.
இவரது தர்கா மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ளது.
நாகப்பட்டிணத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் இடையில் "பாப்பாக்கோயில் தர்கா" உள்ளது.
இரண்டு இறையடியார்களுடன் இசுலாத்தைத் தழுவிய பார்ப்பனப் பெண் (ஹபீஸ் அம்மா) ஒருவரது உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சேலம்-பெங்களூர் சாலையில் தொப்பூர் என்ற இடத்தில் "ஹாவாலிக் தர்கா" உள்ளது.
இங்கேயும் இசுலாமைத் தழுவிய பார்ப்பனப் பெண் அடக்கமாகியுள்ளார்.
இங்கே அசைவ விருந்து கிடையாது.
இங்கே அன்னதானம் நடக்கும்போது முதலில் இசுலாமியரல்லாத சிலருக்கு வழங்கிவிட்டு பிறகே அனைவருக்கும் அன்னதானம் தொடங்குகிறது.
தஞ்சை நகரின் கிழக்கே மாரியம்மன் கோவில் பழைய தெருவில் "பாப்பாத்தியம்மன் தர்கா" உள்ளது.
இவரும் பார்ப்பனராயிருந்து இசுலாமைத் தழுவியவரே.
கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ நாயன்மார் சேரமான் பெருமாள் (சேர மன்னர்).
'பொன்வண்ணத்தந்தாதி', 'திருவாரூர் மும்மணிக்கோவை', 'திருக்கயிலாய ஞான உலா' போன்ற சைவ இலக்கியங்களைப் படைத்துள்ளார்.
இவர் சுந்தரரின் நண்பர்.
கேரளமான்மியம் என்ற வடமொழி நூலும் கேரளோற்பத்தி என்ற மலையாள நூலும் இவர் மெக்கா சென்று நபிகள் நாயகம் முன்னிலையில் இசுலாமைத் தழுவியதாகக் கூறுகின்றன.
'சிராஜிதின்' என்று பெயர் மாற்றிக்கொண்டாராம்.
திரும்பும் வழியில் மரணமடைந்ததாகவும் இவரது உடல் தூத்துக்குடி குலசேகரப் பட்டிணம் அருகே கரை ஒதுங்கியதாம்.
அங்கேயே கடற்கரையில் இவருக்கு தர்கா உள்ளது.
இங்கே கல்லறை அறையில் ஒரு சன்னல் சிதம்பரனாதர் கோவிலின் நுழைவாயிலுக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வழியாகப் பார்த்தால் கோவிலின் கருவறையைக் காணமுடியும்.
திருநெல்வேலி நான்குநேரி அருகே விஜயநாராணம் என்ற ஊர் உள்ளது. அங்கே செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை என்பவர் வசித்துவந்தார்.
இவரது நண்பர் மாடசாமித் தேவர்.
மாடசாமித் தேவரின் தங்கைக்கும் மேத்தப்பிள்ளைக்கும் தவறான உறவிருப்பதாக மேத்தப்பிள்ளையின் வேலைக்காரன் சொல்ல
மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளையையும் தனது தங்கையையும் கொன்றுவிட்டார்.
வேலைக்காரன் சொன்னது பொய் என்று தெரிந்த பிறகு மாடசாமித் தேவர் மேத்தப்பிள்ளைக்கு தர்கா எழுப்பினார்.
தன் தங்கைக்கு நடுகல் நட்டார்.
இன்றுவரை அவரது வம்சாவளியினர் அந்த தர்காவுக்காக அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.
தன் குழந்தைகளுக்கு மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர் வைக்கின்றனர்.
அதோடு நடுகல் வைத்த இடத்தை 'கன்னியம்மன்' தெய்வமாகவும் வழிபடுகின்றனர் மாடசாமி வம்சத்தார்.
"மேத்தப்பிள்ளை அப்பா தர்கா" என்ற பெயருடைய இந்த தர்காவில் ஆடி 16 அன்று சாதிமத பேதமில்லாமல் ஆயிர்காணக்கில் மக்கள் கூடுகின்றனர்.
இங்கே வாழும் மறவர் மக்கள் தங்கள் வீடுகளில் மக்களைத் தங்கவைத்து விருந்தோம்புகின்றனர்.
240 ஆண்டுகளாக இது நடந்துவந்தாலும் இதுவரை காவல்துறை வந்து நடத்தித்தந்தது கிடையாது.
இதுபோல இன்னும் பலப்பல தர்காக்கள் உள்ளன.
அனைத்திலும் பல சமயத்தாரும் பங்கேற்கின்றனர்.
நன்றி: தர்காக்களும் இந்து-இசுலாமிய ஒற்றுமையும்
-ஆ.சிவசுப்பிரமணியன்
-----------------------------------
இசுலாமிய தீவிரவாதிகள் தர்கா வழிபாட்டை எதிர்ப்பதற்குக் காரணம் மத நல்லிணக்கனம் ஏற்பட்டால் தம் பிழைப்பை நடத்தமுடியாது என்பதால்தான்.
இதிலே ஒருபடி மேலே போய் குரானுக்குப் போட்டியாக தவ்கீத்து சமாஅத்து என்ற கூட்டம் திருக்குறளை வேறு வம்புக்கிழுக்கிறது.
இசுலாம் பரவியுள்ள அனைத்து இடங்களிலும் அந்த அந்த இனத்தின் பழமையான பழக்க வழக்கங்கள் இசுலாமிய வழிபாட்டிற்குள் கலந்துள்ளதைக் காணமுடியும்.
இது இயல்பான ஒன்றே.
மக்களுக்காகதான் மதம்.
மதத்திற்காக மக்கள் அல்லர்.
----------------------------
இறைமறுப்பாளனான என் தனிப்பட்ட கருத்து,
தர்கா வழிபாடு செய்யப்படும் இறையடியார்கள் யாருமே அத்தனை பெரிய ஈகி(தியாகி)கள் கிடையாது.
இந்த வழிபாடும் அதனுடன் இணைந்த சடங்குகளும் மூடநம்பிக்கைகளேயன்றி வேறில்லை.
Friday, 8 April 2016
தமிழகத்து தர்கா வழிபாடு
Labels:
ஆதி பேரொளி,
இசுலாமியர்,
இறை மறுப்பு,
கல்லறை,
சமாதி,
தர்கா,
நடுகல்,
மதம்,
முஸ்லீம்,
மூட நம்பிக்கைகள்,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
arumai masha allah
ReplyDeleteஅருமை
ReplyDelete