Sunday 13 November 2016

திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்

திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்

"நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு,
என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது."
- ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

இதன் பிண்ணனியை சிறிது ஆராய்வோம்.

தென்னிந்திய நல சங்கம் (எ) நீதிக்கட்சியில் இருந்து 1923ஆம் ஆண்டு ஒரு குழு சி.ஆர்.ரெட்டி என்ற தலைமையில் பிரிந்து 'ஜனநாயக நீதிக் கட்சி' என்ற ஒன்றைத் துவக்கி அப்போது மெட்ராஸ் மாகாண (பழைய தமிழக மாநிலம்) ஆட்சியில் இருந்த பனகல் அரசர் பனங்கன்டி ராமராயநிங்கார் என்ற தெலுங்கர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராய் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருகின்றனர்.

பனகல்ராஜா பதவியைக் காப்பாற்ற பார்ப்பனர் கால்களில் போய் விழுந்தார்.
'தி இந்து' கஸ்தூரி அய்யங்காரின் ஆதரவைப் பெற்றதோடு மற்றொரு காங்கிரஸ் பத்திரிகையாளர் மலையாள பிரமணரான பணிக்கருக்கு சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பதவியளித்தார்.
பல்வேறு சலுகைகளை அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அளித்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
(The politics of south india 1920 -1937
By Christopher John Baker, page70)

பிறகு 1926இல் அறநிலையக் குழுவிற்கு முதல் தலைவராக நீதிபதி சர்.டி.சதாசிவ ஐயர் நியக்கமிக்கப்பட்டு, ஐயர்-ஐயரல்லாதார் உறவு பலப்படுத்தப்பட்டது.

1926இல் ஆறாண்டு கால ஆட்சியை நீதிக்கட்சி இழந்தது.
திரும்பவும் அதிகாரத்தைக் கைப்பற்ற பிராமணர்களுடன் கைகோர்க்க நீதிக்கட்சியினர் தயாராய் இருந்தனர்.

1928 மதுரையில் ஜனவரி மாதம் கூடிய நீதிக்கட்சி 10வது மாநாட்டில் பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்னும் தீர்மானம் பனகல் அரசரால் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தோற்கடிக்கப்படுகிறது.

  ஓராண்டு கழித்து 1929ஆம் ஆண்டு நெல்லூரில் நடைபெற்ற நீதிக்கட்சி 11வது மாகாண மாநாட்டில் இந்த தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு தோல்வி அடைந்தது.

இதைத்தான் ஈ.வே.ரா குடியரசு ஏட்டில் எழுயுள்ளார்.
ஆக முதல் திராவிட கட்சி தனது பிராமண எதிர்ப்பைக் கைவிட்டு பிராமணர்களையும் தம்மோடு சேர்த்துக்கொண்டதை ஈ.வே.ரா எதிர்க்கவில்லை ஆமோதித்துள்ளார்.
ஆனாலும் நீதிக் கட்சியிலிருந்த பிராமண எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை இருமுறை தடுத்துள்ளனர்.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர்மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்கவைத்தார்.

அடுத்த ஆண்டு 1930ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது.
அதில் போடப்பட்ட தீர்மானப்படி மெட்ராஸ் மாகாணத்திலிருந்த காங்கிரஸ் மத்திய சட்டசபை உறுப்பினர்கள் டாக்டர் யூ.ராமராவ் (தெலுங்கர்) மற்றும் ராமதாஸ் பந்துலு(தெலுங்கர்) ஆகியோர் ராஜினாமா செய்து விட்டனர்.

அதனால் காலியான இரண்டு இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி ஏ.ராமசாமி முதலியாரையும்  டி.ஆர்.ராமச்சந்திர ஐயரையும் நிறுத்துகிறது.
எத்தனையோ பிராமணரல்லாதார் இருக்க டி.ஆர்.ராமச்சந்திர ஐயரை நிறுத்தவேண்டிய அவசியம்
ஏன் வந்தது?
இத்தனைக்கும் டி.ஆர்.ராமச்சந்திரையர் இந்து வருணாசிரம ஸ்தாபன தலைவர் ஆவார்.

இதே 1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடந்தபோதும் அதில் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

தஞ்சை ஜில்லா சார்பில் இந்திய சட்டசபைக்கு சர்.சி.பி.ராமசாமி ஐயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் நீதிக்கட்சி ஆதரவு தந்தது.

1934 செப்டம்பர் மாதம் சென்னையில் பொப்பிலி ராஜா தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக பிராமணர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியே விட்டனர் நீதிக்கட்சினர்.

நீதிக்கட்சி 1944ஆம் ஆண்டில் சேலத்தில நடந்த மாநாட்டில் நீதிக்கட்சி ஈ.வே.ரா தலைமையில் திராவிடர் கழகமாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பிறகு ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.
(திராவிட சதிவேலையின் காரணமாக காங்கிரசு ராஜாஜி மற்றும் காமராசர் குழுவாக பிளவுபட்டிருந்தது).
என்னயிருந்தாலும் ஒரு பெயருக்கேனும் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருக்கலாம்
ஆனால் மூச்சுகூட விடவில்லை திராவிடக் கட்சியினர்.

பிறகு ஈ.வே.ரா தனது வளர்ப்பு மகளை திருமணம் செய்ததும் அண்ணாதுரை பிரிந்து சென்று 1949ல் தி.மு.க என்று கட்சி தொடங்கினார்.
இதனால் ஈ.வே.ராமசாமி  அண்ணாதுரையை எதிர்த்து செயல்பட பிராமணர் காலில் போய் விழுந்தார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பாலசுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

அண்ணாதுரையும் இதற்கு விதிவிலக்கில்லை.
1957ல் நெடுஞ்செழியனின் தோல்வி குறித்து வழக்கு வாதிட வந்த பிராமணரான வி.பி.ராமனை அண்ணாதுரை கட்சியில் சேர்த்துக்கொண்டார்.
கட்சி கூடல்கள் அனைத்தும் அவர் வீட்டிலேயே நடந்தன.

1959 ல் தி.மு.க 90 இடங்களில் வென்றது.
காமாட்சி ஜெயராமன் என்ற பிராமணப் பெண்ணை மேயராக்கினார் அண்ணாதுரை.

1967ஆம் ஆண்டு அண்ணாதுரையின் பிராமணரான ராஜாஜியின் சுதந்திராக் கட்சி உடன் ஏற்படுத்திக் கூட்டு ஏற்படுத்திக்கொண்டது.

இதே காலத்தில் அதாவது 1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை எதிர்த்துக் காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

தி.மு.க காஷ்மீர் பண்டித பிராமணரான இந்திராகாந்தியுடன் கூட்டுவைத்ததை நாடறியும்.

இதன் பிறகு  1972ல் தொடங்கப்பட்ட திராவிட கட்சியான அ.தி.மு.க இரண்டாக உடைந்து எம்.ஜி.ஆர் மனைவியான மலையாள பிராமணர் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும்
கன்னட பிராமணரான ஜெயலலிதா தலைமையிலும் செயல்பட்டு
இன்று தமிழகமே திராவிடத்தின் பெயரில் பிராமணரால் ஆளப்படுகிறது.

ஆக தொடக்கத்தில் இருந்து இறுதிவரை திராவிடம் பிராமணருடன் கூட்டுசேர்ந்தே இயங்கிவருகிறது.

நன்றி: கு.காமராஜ்,
("அந்திமழை" இதழ் சூன் 2015)
நன்றி: செ. அருள்செல்வன்,
(அண்ணாவின் அரசியல் குரு, பக்கம் 212.)
நன்றி: முகநூல் தமிழ்தேசிய பதிவர்கள்

No comments:

Post a Comment