Monday 1 December 2014

நல்லவன் படும் பாடு

நல்லவன் படும்பாடு

"நீ ஏன் இதையெல்லாம் விட்டுவிடக்கூடாது?"

"அதுதான் அதுதான் ரொம்ப எளிது,
ஒரு சொடுக்கு போடுவது போல. ஆனால் முடியாது.
தெருவில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான். கண்டுகொள்ளாமல் செல்வது எளிது. என்ன கொஞ்சநேரம் மனம் பதைபதைக்கும் பிறகு மறந்துவிடும். ஆனால், அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்று, அலைந்துதிரிந்து, ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால் உசாவல்(விசாரணை), வழக்கு,பழிப்பேச்சு, பண இழப்பு, கால இழப்பு என அனைத்தும் சந்தித்துவிட்டு அதன்பிறகு காப்பாற்றியவன் நன்றியை நினைக்காமல் போவான் என்று தெரிந்தபின்னரும், மறுபடி வேறொரு இடத்தில் வேறொருவன் அடிபட்டுக் கிடந்தால் மீண்டும் உதவச் செல்கிறான் என்றால் அவன் செய்வதுதான் கடினம்.

இந்த உலகத்திலேயே பரிதாபத்தற்(இரக்கத்திற்)குரிய பிறவி யாரென்றால் 'நேர்மையாக இருக்க நினைப்பவன்' இவனை ஊரே ஏறிமிதிக்கும்.

நீங்கள் நீளமான குண்டும் குழியுமான ஒரு பாதையில் செல்கிறீர்கள் இடையில் சில அடிகளுக்கு பாதை சீராக இருக்கிறது என்று வையுங்கள் அதற்கு என்றைக்கோ அங்கே நின்ற ஒரு நேர்மையாளன்தான் காரணம்.
அத்தகையவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள்.

நேர்மையாளனை விடவும் இரக்கத்திற்குரிய பிறவி யார் தெரியுமா?

தப்பைத் தட்டிக்கேட்க நினைப்பவன்.

தட்டிக்கேட்கும் ஒரு போராளியின் தோள்மேல் உலகமே ஏறிநிற்கும்.
கொள்ளைக்காரனுக்கும் ஏமாற்றுபவனுக்கும் உயிரைக் கொடுக்கவும் எல்லாரும் ஆயத்தமாக(தயாராக) இருப்பார்கள்.
'நேர்மையாளனுக்கு' அவனுடைய பெற்றோரும் உடன்பிறந்தோரும் மனைவியும் பிள்ளைகளும் நண்பர்களும் உடனிருப்பவர்களும்கூட உதவமாட்டார்கள்.
அதைவிட கொடுமை, ஒரு தட்டிக்கேட்க நினைக்கும்  'போராளிக்கு' அவன் குடும்பமும் நண்பர்களும் மட்டுமல்லாது அவனது கைகளும் கால்களும் உடல்நிலையும் மூளையும் மனதும் கூட ஒத்துழைப்பதில்லை.
எல்லாரும் எல்லாமும் எதிர்ப்பார்கள் அல்லது பின்னிக்கு இழுப்பார்கள்.

ஆனாலும் ஒரு உணர்ச்சி, உள்ளே ஒரு குரல் அவனை தொடர்ந்து இயங்கவைக்கிறது.

அவன் முரட்டுத்தனமான தன்னலமுடையவனாக(சுயநலவாதியாக) இருக்கிறான்.
அவன் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
தான் செய்வதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், தன்னை எல்லாரும் மறந்துவிடுவார்கள் என்று தெரிந்தும், கொஞ்சம் வளைந்தால் வாழ்க்கையே வளமாகிவிடும் என்று அறிந்தும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவன் தொடர்ந்து இயங்குகிறான்.
அவனுக்கு அவன்தான் முக்கியம்.
தன் முன் தானே விழுந்துவிடாமல் இருக்க அவன் எவரையும் தூக்கியெறிய தயங்குவதில்லை.

நான் ஒரு தீவிர இறைமறுப்பாளன். என் நண்பரனுடைய நண்பர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்.  அதன்மீது பற்றுள்ளவர்.
அவரை என் நண்பன் என்னிடம் அழைத்துவந்தான். நான் அவருக்கு சரியான பதிலடிகொடுப்பேன் என்று என் நண்பர் எதிர்பார்த்தான்.
ஆனால், நான் அவரை உண்மையில் பாராட்டினேன். அவரது சிந்தனையும் செயலும் ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்களுக்காவது பலனளிக்கும். எதைப்பற்றியுமே சட்டை செய்யாத  கையாலாகாதவர்கள் மத்தியில் ஏதோவொரு கொள்கைக்காக ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக சிந்திப்பவர்கள் எவ்வளவோ உயர்வானவர்கள்.
ஒரு இனத்திற்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானவர்கள்.
மாந்தவுரிமைக்காகப் போராடுபவர்கள் அவர்களினும் உயர்வானர்கள்.
முழுஇயற்கைக்காகவும் போராடுபவர் ஈடுஇணையே இல்லாதவர்கள்.

போராடுவது என்றால் வேலைவெட்டியைப் போட்டுவிட்டு வீதிக்குவருவது என்று பொருள் இல்லை.
சிந்திப்பது, செயலாற்றுவது, பரப்புரை செய்வது, வாழ்ந்துகாட்டுவது, வழிகாட்டுவது, சாதிப்பது, ஆதரவளிப்பது என பல நிலைகளில் எதையாவது செய்வது.

இனவுணர்வு, மதவுணர்வு, சாதியுணர்வு போன்றவையெல்லாம் அடிப்படையான உணர்ச்சிகள்.
இதற்காகப் போராடுபவர்கள் சிந்திப்பவர்கள் அத்துணை சிறப்புடையவர்கள் அல்லர்.
ஆனால், அதையும் கூடச் செய்யாமல் பாலுணர்வு, பசியுணர்வு என அற்ப உணர்ச்சிகளுக்காக வாழும் பிறவிகள்  கண்ணும் காதும் கைகளும் கால்களும் இல்லாத புழுக்கள் வாழும் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.
தனது குடும்பத்திற்காக வாழுபவர்கள் தெருவோரத்தில் குட்டிபோட்டு அதை வளர்த்துவிடும் ஒரு நாயின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள்.

நிறைமாத கருவை சுமந்துகொண்டு ஒரு சிறுத்தை வேட்டைக்குச் செல்கிறது. ஓடிப் பிடித்த இரையை உண்டுவிட்டு யார் துணையுமின்றி குட்டிகளை ஈனுகிறது. உடனே மீண்டும் வேட்டைக்குச் செல்கிறது. அந்த குட்டிகள் தானே வேட்டையாடும் வரை அவற்றிற்கு உணவளிக்கிறது. தாய்க்கு வயதான பிறகு அக்குட்டிகள் தாயை கவனிப்பதில்லை. இறுதியாக அந்த தாய்சிறுத்தை முதிர்ச்சியடைந்து வேட்டையாடமுடியாமல்  பசியால் இறந்துவிடுகிறது.
இப்போது சொல்லுங்கள் ஒரு மானிடப் பெண்ணின் தாய்மை அந்த சிறுத்தையின் தாய்மைக்கு சிறிதும் ஈடாகுமா?.
தனக்காக தனது குடும்பத்திற்காக வாழ்பவர்கள் பிடுங்குபவர்களாக மட்டுமே இருக்கின்றனர். தாங்குபவர்களாகவும் கொடுப்பவர்களாகவும் இருக்கும் நேர்மையாளரையும் போராளிகளையும் இவர்கள் ஏளனம் செய்து தம்மை பெருமையாக வேறு எண்ணிக்கொள்கிறார்கள்.

ஒரு போராளிக்கு எப்போது உண்மையான மனநிறைவு(நிம்மதி) கிடைக்கிறது தெரியுமா?

அவன் சாகும்போது.

எப்படி போர்களத்தில் வீரமரணம் அடையும் நொடியில் ஒரு மறவனுக்கு பெருமகிழ்ச்சி கிடைக்குமோ அதேபோல.
கடைசி நொடியில் அவன் தன்னை நினைத்து பெருமையோடு சாகிறான்.

இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஒரு போராளி என்றால் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மற்றவர்கள் மாறுவார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வேண்டாம்.
ஏனென்றால் அது நடக்காது என்று பாதிவாழ்க்கைக்குப் பிறகுதான் உங்களுக்குத் தெரியும்.

*உங்களுக்குள் ஒரு போராளி இருந்தால் இந்தநொடி உயிர்பெறட்டும்*

இப்போதும் நீங்கள் ஒரு போராளியாக உணரவில்லையென்றால் இப்படியே மீதிவாழ்வையும் கழித்துவிடுங்கள்.
போராளியாக மாற முயற்சிக்கவேண்டாம்.
ஏனென்றால் அது உங்களால் முடியாது.
ஒரு பதிவைப் படித்து போராளியாக எவனும் ஆகமுடியாது.
கொஞ்சநேரம் உசுப்பேறிவிட்டு சரியாகிவிடுவீர்கள். ஆனால்,
போராளி பிறக்கிறான். பிறந்த மறுநொடி தாயை தூக்கியெறியும் துணிச்சலுடன், எதையும் மனதால் பார்க்கும் கண்களுடன், அணையாத உள்நெருப்புடன், கடலளவு நேயத்துடன் ஒரு காவியநாயகனாக இந்த மண்ணில் தோன்றுகிறான்.
அவனுக்கு யாரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்து அவன் வாழ்வதில்லை.
கடினமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தபிறகு தன்போன்ற போராளிகள் தொடர்ந்தும் பிறந்துகொண்டிருப்பார்கள் என்ற ஒரே நம்பிக்கையில் அவன் மரணத்தை மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொள்கிறான்.

என் மரணமும் அப்படியே அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

( மூன்றாம் தலைவர்
https://m.facebook.com/photo.php?fbid=4
98313006939024&id=100002809860
739&set=a.108935022543493.9865
.100002809860739 )

No comments:

Post a Comment