Monday, 8 December 2014

தலைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

தலைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனக்கு அரசியல் பிடிக்காது என்பவர்களுக்கு நான் கூறுவது, 
அரசியல் பிடிக்காது என்பதன் நேரடிப் பொருள் உங்களுக்கு மக்களைப் பற்றிக் கவலையில்லை; 
மக்களைப்பற்றிக் கவலையில்லை என்பதன் நேரடிப்பொருள் உங்களுக்கு மாந்தநேயம் இல்லை;
  மாந்தநேயம் இல்லை என்பதன் நேரடிப்பொருள் நீங்கள் ஒரு தன்னலவாதி; 
தன்னலவாதி என்பதன் நேரடிப்பொருள் உங்களை நீங்களே காறித்துப்பும் ஒருநாள் வந்தேதீரும்.

சுரணை வந்தவர் மேற்கொண்டு படியுங்கள்;  சரி.அரசியலில் பங்கேற்க நீங்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுப்பது முதல்படி; உங்கள் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களைப் பட்டியலிடுங்கள்;  அவற்றின் தொடக்கம் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் அதை சரியாக உங்களுக்கு அடையாளம் காட்டுபவர்தான் தலைவர்; 

தலைவர் என்பவர் எப்படியிருப்பார்;  1)அவர் அஞ்சாத நெஞ்சமும் தன்னம்பிக்கையும் படைத்தவராக இருப்பார்; 
2)தற்காலத்திற்கு முந்தைய வரலாற்றை நன்கு அறிந்திருப்பார் அதில் குறைந்தது 50ஆண்டு பிற்பாடுவரையான வரலாற்றைக் கரைத்துக் குடித்திருப்பார்; 
3)தான் பிறந்த காலத்திலிருந்து 30வருடங்கள் பின்னோக்கி சென்று பிறந்தவர்போல் சிந்திப்பார்; 
4)500வருடங்கள் முன்னோக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும் 30ஆண்டுகளில் என்னென்ன நடக்கலாம் என்று யூகிப்பவராகவும் இருப்பார்;
  5) வார்த்தைகளைச் சரியாக பயன்படுத்துவார்;
  6)மக்களிடம் போய்ச்சேர பிரபலமாகவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்;
7)இரக்ககுணம் கொண்டவராக இருப்பார்; 
8)பல்வேறு துறைகளில் ஆழமற்ற ஆனால் பரந்த அறிவைக் கொண்டிருப்பார்;
9)நவீன மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வார்;
10)ஏழையாக இருந்திருப்பார் அல்லது தாய், தந்தை மூலம் குறிப்பிட்ட கொள்கை ஊட்டப்பட்டிருப்பார்;
10)தியாகங்கள் பல செய்திருப்பார்;
11)அவரது சிறிய சிறிய தவறுகளும் பெரிதாக பேசப்படும்.  சரி.

சிறந்த தலைவர் எப்படி இருப்பார்;
1)அவர் எந்தக்கொள்கையை வலியுறுத்துவாரோ அதன்மீதே எதிராளியை விட பெரிய விமர்சனம் வைத்திருப்பார்;
2) நேர்மைக்காக எதையும் செய்வார்;
3)எந்த கொள்கையை வலியுறுத்துகிறாரோ அதில் வெறிபிடித்தவராக இருப்பார் ஆனால் அதை மறைமுகமாக உணர்த்துவார்;
4) பலவருடங்கள் தோல்வியடைந்தவராக இருப்பார்;
5) மக்களை ஒருங்கிணைப்பதில் மும்முரமாக இருப்பார்;
6)எதிரிகள் அவரை கொஞ்சமும் சரியானவர் என்று ஏற்கமாட்டர்;
7) தாம் வாழும்காலத்திற்குப் பிறகும் தமது கொள்கைகள் நிலைத்திருக்க ஆவன செய்வார்; 
8)போராடும் உணர்வைத் தூண்டுவார்;
9)எளிமையாக இருப்பார்;
10) குடும்பத்தை முன்னிறுத்தமாட்டார்;
11) எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கி தமது கொள்கைக்கு ஏற்றவாறு வளைத்து அதன்மூலம் கோட்பாடுகளை உருவாக்குவார்;
12) கடவுள் நம்பிக்கை இல்லாதவராக அல்லது மட்டுப்பட்ட அளவு கடவுளை நம்புபவராகவோ இருப்பார்;
13) எதை ஆதரிக்கவேண்டும் என்பதில் தடுமாறினாலும் எதை ஒழிக்கவேண்டும் என்று தெளிவாக இருப்பார்; 

மேற்கண்டவாறு சில தலைவர்கள் இருப்பார்கள் அவர்களைப் பற்றி ஓரளவு அலசுங்கள்.  தலைவர் உங்களிடம் என்ன சொல்வார்;

1)உங்களில் ஒருவன் என்பார்;
2)தான் வலியுறுத்தும் கொள்கையை தாய்க்கு நிகராக வற்புறுத்துவார்;
3)தமக்குத் தோதுவானவற்றை வரலாற்றிலிருந்து உருவித் தருவார்;
4)உலகமே உங்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறுவார்;
5) நீங்கள் முட்டாளக்கப்பட்டுள்ளதாக கூறுவார்;
6)உங்களிடம் ஒற்றுமை இல்லை உணர்வு போதவில்லை என்று குற்றம்சாட்டுவார்;
7)வாழ்ந்துகாட்டிய ஒரு முன்னாள் தலைவனை முன்வைப்பார்;
8)நீங்கள் நெடுநாள் ஆழமாக நம்பும் விடயங்களைக் கைவிடச்சொல்வார்;
9)கடந்தகாலப் பெருமைகளைக் கூறி நீங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர் என்று நம்பச் செய்வார்;
  10)வேறுஒரு பிரிவினர் வாழ்வாங்கு வாழ்வதாகக் காட்டி அவர்கள் மீது பொறாமை ஏற்படுத்துவார்;
11)உங்களின் அன்றாடப் பிரச்சனைக்கான தீர்வு தன்னிடம் இருப்பதாக நம்பவைப்பார்.

இந்த பதினொரு வாதங்களிலும் ஒவ்வொரு தலைவனையும் பொருத்திப் பாருங்கள்;  நன்கு யோசியுங்கள் பிறகு அவரது கொள்கைகளை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுங்கள்;
மாந்தநேயம், தாய்ப்பாசம், தன்மானம், தியாக உணர்வு என்று எல்லாரிடமும் எடுபடுகின்ற சராசரியானக் கொள்கைகளுக்குப் பின் ஓடாதீர்கள்;
அவை விலங்குகளுக்குக் கூட உண்டு; பிரபலமானவர்களையே தேடாதீர்கள்; உங்கள் தேடல் கொஞ்சம் ஆழமானதாக இருக்கவேண்டும்;
ஓரிரு குறைகளைக் காட்டிவிட்டு கையாலாகாமல் இருக்காதீர்கள்;  மனிதனாய்ப்  பிறந்தால் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எதாவது செய்யவேண்டும் அதை உணருங்கள்;
நீங்கள் நடக்கும் சாலை நேர்மையான ஒருவனால் போடப்பட்டதென்றால் அதில் நேர்மையற்ற ஒருவனால் குண்டும் குழியும் ஏற்படுத்தப்படுகிறது என்பதை உணருங்கள்;
சுற்றியுள்ள நான்கு பேரிடம் கொண்டுசென்று துரும்பையாவது நகர்த்துங்கள்;
எல்லாருக்கும் நல்லவனாயிருப்பதில் யாதொரு விறுவிறுப்போ சிறப்போ கிடையாது;
உங்கள்  அன்றாடப் பிரச்சனைகளுக்காகவாவது நீங்களே தீர்வுகாண முற்படுங்கள்;

முதல்படியில் அடியெடுத்து வையுங்கள் போகப் போக தெளிவு பிறக்கும்; எல்லாவற்றுக்கும் மேலாக குரல் உயர்த்தினால் அடிவிழுமோ என்று பயந்து சாகாமல் இருங்கள்.

https://m.facebook.com/photo.php?fbid=409062199197439&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment