Sunday 30 November 2014

தமிழரொற்றுமை

டி.எம்.காதர் பாட்சா பாடுகிறார்.

"சுருளிமலை மேவும் சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா - பசுந்
தோகை மயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா"

வெள்ளையர் காலத்தில் வாழ்ந்த இசுலாமியத் தமிழர் ஒருவர் கழுகுமலை முருகனுக்கு காவடி சிந்து பாடியுள்ளார்.

அடடா! இது எதற்கு பதிலடி தெரியுமா?

“சூர்க் கொன்ற ராவுத்தனே!
மாமயிலேறும் ராவுத்தனே”

என்று முருகனை ராவுத்தராக அருணகிரிநாதர் (15ம் நூற்றாண்டு) பாடியுள்ளாரே அதற்குத்தான்.

அசூரனைக் கொன்றால் தேவன்.
என்றால் சூரனைக் கொன்ற முருகன் அசூரனா?

ஆரியர் எல்லாரும் பிராமணர் என்றால் தமிழ்ப் பார்ப்பனன் ராவணன் மட்டும் எப்படி அரக்கன் ஆனான்?

மாற்றி எழுதியது யார்?

இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்ட தமிழ்ப் பார்ப்பனன் பாரதி அல்லாவைப் புகழ்ந்து பாட்டெழுதினான்..
இந்தியாவைப் பிளந்த முஸ்லீம் லீக்-ன் தலைவனான தமிழ் இசுலாமியன் காயிதே மில்லத் பாராளுமன்றத்தில் தமிழை இந்திய ஆட்சிமொழியாக்க வாக்கெடுப்பு நடத்தினான்.

பாலஸ்தீனப் பிரச்சனை இசுலாமியருக்கே சரியாகப் போய்ச்சேராத 70களில் தமிழ் இசுலாமியனை முந்திக்கொண்டு லண்டன் பத்திரிக்கைகளில் குரல் கொடுத்தான் சிறிசபாரத்னம்.
யாசர் அராபத் நேரில் அழைத்துப் பாராட்டி புலிப்போராளிகளுக்கு லெபனானில் பயிற்சி தருமளவு அவன் செயல்பாடு இருந்தது..
1995ல் யாழ் தமிழர்கள் படும் இன்னல் கண்டு மற்ற தமிழனை முந்திக்கொண்டு ஒரு இசுலாமியத் தமிழன் தீக்குளித்து ரத்னாவுக்கு பதிலடி கொடுத்தான்.

இசுலாமியத் தமிழனுக்கு முன்பே இசுலாமியனல்லாதத் தமிழன் மோடியை எதிர்த்திருப்பான்..
இசுலாமியனல்லாத தமிழனுக்கு முன்பே பீஜேவை ஒரு இசுலாமியத் தமிழன் எதிர்த்திருப்பான்.

தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து ஈழத்தடிகள் சிறைசென்றார்..
ஈழத்தில் சிங்களருடன் போர்புரிந்து தமிழகத்து இளைஞன் செங்கண்ணன் கரும்புலி மாவீரன் ஆகி ஈழத்தடிகளுக்கு பதிலடி கொடுத்தான்.

தமிழகத்தில் இருந்து ஈழம் சென்று சுப.முத்துக்குமார் களமாடி பிறகு தமிழகம் திரும்பினார்..
ஈழத்திலிருந்து நெப்போலியன் தமிழரசனுடன் களமாடி பிறகு ஈழம்திரும்பினார்.

புலி மாவீரர்கள் பொன்னம்மான், திலீபன், ரோய், தனு என பலருக்கு தமிழகத்தில் நினைவிடங்கள் உண்டு..
தமிழகத்து ஈகிகள் இருபெண்கள், ஒரு கரும்புலி உட்பட 14 மாவீரர் நினைவிடங்கள் ஈழத்தில் இருந்தன.

கேணல் அப்துல்லாவின் உண்மையான பெயர் நகுலராசா..
கேப்டன் ரகுவப்பாவின் உண்மைப்பெயர் ரகுமான்.

நம்பமுடியாதவை இன்னும்  பல உள்ளன.

பறையன் நடராசன் இந்தி எதிர்ப்பில் முதல் பலி ஆனான்.

ஈழத்துப் பார்ப்பனன் கணேசன் ஈழத்தில் பிரபாகரனுக்கு முன்பே ஆயுதம் ஏந்தினான்.

பள்ளருக்கு முதல்மரியாதை நடக்கும் மீனாட்சி கோவிலில் வைத்தியநாத ஐயர் ஆலயநுழைவு போராட்டம் நடத்தினார்.

ஆஸ்கர் மேடையில் ஒரு இசுலாமியன் தமிழ் பேசினான்.

பூலித்தேவன் காலாடிப்பள்ளனுக்கு நடுகல் நட்டான்.

தமிழ் பேசவும் எழுதவும் தெரியாத குஞ்சன் நாடார் கன்னியாகுமரியை தமிழகத்தில் இணைக்கும் முயற்சியில் உடல்வதை பட்டு உயிரை இழந்தார்.

மதுரையில் பிறந்த கண்ணகிக்கு மட்டக்களப்பில் அதிகமானக் கோவில்கள் உள்ளன.

ஈழத்து சைவருக்கு தலைமைத் திருத்தலம் தமிழகத்திலுள்ள சிதம்பரம் நடராசர் ஆவார்.

ஈழத்து சைவரான நாவலர் பைபிளை தமிழில் மொழிபெயர்த்தார்.

தமிழகத்து கிறித்துவர்கள் தேவநேயப்பாவணர், மா.சோ.விக்டர் ஆகியோர் வேர்ச்சொல் ஆராய்ந்து தமிழின் பழமையை நாட்டினர்.

தமிழ் வரலாற்றில் மட்டும் எல்லாமே தலைமாற்றி நடந்துவருகிறதே!!

ஆரியன், திராவிடன், பிராமணன், சூத்திரன்,சத்ரியன், இந்தியன், சிலோன்காரன், மலேசியன், இந்து, முஸ்லீம், மேல்சாதி, தலித், இன்னும் என்னென்னவோ அடையாளத்தைத் தலையில் கட்ட முயன்றார்கள்.

சு.சாமி, சோ, ஈவேரா, கருணாநிதி, ராஜீவ்காந்தி, மோகன்தாஸ் காந்தி, வாஜ்பாய், அநாரீக,  பண்டாரநாயக, சேனநாயக, மோடி,விவேகானந்தன், பீஜே, உசைன் பாரூக், விக்னேஸ்வரன், கருணா என்று எத்தனையோ முக்கியமானவர்கள் முக்கிமுக்கி பார்த்தார்கள்.

வெறும் காற்றுதான் வந்தது.

எவன் சொன்னான் ஒற்றுமை இல்லையென்று?

இனியும் இந்த பொய்  பரப்புரைக்கு(பிரச்சாரத்திற்கு) பலியாகவேண்டாம்.

வேற்றின ஆட்சி, சாதி புகுத்தல், பொருளாதார சுரண்டல், இனப்படுகொலை, இனக்கலப்பு, வரலாறு அழிப்பு அத்தனையையும் கடந்து நிற்கிறது தமிழுணர்வு.

இம்ரான் பாண்டியன் படையணியும், கிட்டு பீரங்கிப் படையணியும், சார்லஸ் ஆண்டனி படையணியும் சேர்ந்து அடித்ததால் வல்லரசு நாடுகள் திரண்டுவந்து எதிர்த்தன.

ஒவ்வொரு தமிழனும் மதம் கடந்து ஒன்றிணைந்தால் என்ன செய்யமுடியும் இவர்களால்?

காலம் கூடிவரும் வேளையிது .
மேன்மேலும் ஓங்குக

**தமிழரொற்றுமை**

( ஈழத்திற்காக ஹிந்தியப்படையைத் தாக்கிய தமிழகம்
https://m.facebook.com/photo.php?fbid=440305376073121&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13#440308276072831  )

No comments:

Post a Comment