Thursday 20 November 2014

பரத்தையும் பரத்தனும்

பரத்தையும் பரத்தனும்.

சங்ககாலத்தில்... என்றாலே

ஓடிவிடுகிறான் இன்றைய தமிழன்

வரலாறு படிப்பது ஏன் என்று கொஞ்சம் பார்ப்போமா?

நேரடியாக மோதமுடியாத வல்லரசான ரோமன் பேரரசை சுற்றுப்பாதையில் சென்று ஆல்ப்ஸ்  பனிமலையை ஏறி இறங்கி  ஹனிபல்  நிர்மூலமாக்கினான்.
இது நடந்து 2000 ஆண்டுகள் கழித்து மாவீரன்  நெப்போலியன் அதேபோல ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுற்றுப்பாதையில் சென்று ஆஸ்திரியாவை வென்றான்.
ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான்.
பிறகு நெப்போலியன் ரஷ்யநாட்டின் மீது குளிர்காலத்தில் படையெடுத்துச்சென்றதால் தோற்றான்.
இதுநடந்து 150ஆண்டுகள் கழித்து ஹிட்லர் ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான். நெப்போலியனின் வரலாறை ஹிட்லர் கவனத்தில் கொண்டிருந்தால் வெற்றி மேல் வென்றி குவித்த நாஜிப்படைகள் வலிமைகுறைந்த ரஷ்ய படையிடம் குளிர்காலத்தில் தோற்று மண்ணைக்கவ்வியிருக்காது.

பழங்காலத்தில் நடந்ததை அறிவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவே ஐரோப்பாவரை செல்லவேண்டிவந்தது.
மற்றபடி இந்தப் பதிவு போர்பற்றியது அன்று. நாகரீகம் பற்றியது. இல்லறம் பற்றியது.
-----------------

சங்ககாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு தோன்றாதபோது கூட்டமாக வாழ்ந்த இனங்களில் எவரும் எவருடனும் சேர்ந்து பிள்ளைபெறலாம் என்ற நிலை இருந்தது.
பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற முறை, திருமணம், நிலையான இடத்தில் வாழ்க்கை, குடும்ப அமைப்பு ஆகியன தோன்றின.
ஆனாலும், பழைய முறைப்படி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தவர்களும் இருந்தனர். இப்படிப்பட்டோர் பரத்தை என்றும் இவர் ஊரில் வாழ்ந்த பகுதி 'பரத்தைச் சேரி' (சேரி=சேர்ந்துவாழும் இடம்) அழைக்கப்பட்டது.
இவர்கள் குடும்பமாக வாழ்வோரைப் போலவே மதிக்கப்பட்டனர்.
--------------
பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் தன்னை நாடிவரும் தலைவனைப் பற்றிக் கேலியாகப் பின்வருமாறு கூறுகிறான்.

எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
(குறுந்தொகை:8)

என் வீட்டிற்கு வந்தால், "தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான். ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்.

பரத்தைக்குத் தலைவன் வீட்டுக்குச் சென்றுவரும் உரிமைகூட இருந்ததோ என்னவோ?
----------------------
தலைவன் பரத்தையை நாடிச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். அவனை வீட்டுவாசலிலேயே நிறுத்தி தலைவி கேள்வி கேட்கிறாள். தலைவன் உடனே தலைவியின் காலில் விழுந்து தான் பரத்தை வீட்டுக்குச் சென்றது தவறுதான் என்றும் அதற்காக பொறுத்தருளுமாறும் மன்றாடுகிறான். உள்ளம் உருகிப்போன தலைவி அவனை தூக்கி "நீ இப்படிக் காலில் விழுவதை நீ காதல் கொண்ட என் தங்கைகளான பரத்தைகள் கண்டால் சிரிப்பார்களே?!" என்று கேலியாகக் கூறுகிறாள்.

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என...

தொல்காப்பியம் (கற்பியல்:6)

பரத்தைகளை தங்கைகள் என்று அக்காலப்பெண்கள் குறிப்பிடும் அளவுக்கு அப்பெண்களுக்கு மதிப்பு இருந்துள்ளது.
---------------
மேற்கண்ட இருபாடல்களிலிருந்தும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு அடங்கிநடந்தது தெரிகிறது. அதுபோல, அக்காலத்தில் வேட்டையாடுதலிலும்  போர்புரிவதலிலும் ஆண்கள் ஈடுபட்டதால் ஆண்களின் உயிரிழப்பு பெண்களின் உயிரிழப்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்திருக்கும். அப்போது தலைவன்(கிழவன் அதாவது ஆண்) தலைவி(கிழத்தி)யை மணமுடித்தோடு  காமக் கிழத்தி (வைப்பாட்டி)கூட வைத்துக்கொண்டனர்.
அப்போதைய சூழலுக்கு அது சரியாக இருந்தது.
இதனால் பெண்கள் அடிமைநிலையில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
திருமணச்சீர் (வரதட்சணை) வாங்கும் பழக்கமானது அப்போது இல்லை. மாறாக பரிசம் (பணம்) கொடுத்து மணப்பெண்ணை அழைத்துவரும் முறை இருந்துள்ளது.
-------------------
பரத்தைப் பெண்கள் மட்டுமன்றி ஆண் பரத்தர்களும் இருந்துள்ளனர்.

பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
திருக்குறள்:1311

'புலவி நுணுக்கம்' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பெண்கள் எப்படியெல்லாம் சின்னச் சின்ன காரணங்களைக்கொண்டு தலைவனிடம் ஊடல் செய்வார்கள் என்று விவரிக்கிறார். அதில் மேற்காணும் குறள் வருகிறது.
தலைவனை பெண்கள் பலரும் விரும்புவதைக் கண்டு பொறாமை கொண்டு தலைவி தலைவனிடம்,
பெண் இயல்பு உள்ள அனைவரும் பொதுப்பொருள் போல உன்னை தன் கண்களால் விழுங்குகிறார்கள் (பார்த்து ரசிக்கிறார்கள்) பரத்தனுக்கு ஈடான உன்னை (உன் மார்பை) நான் இனித் தழுவமாட்டேன்" என்று சினந்துகூறுகிறாள்.

சிலப்பதிகாரத்தில் . "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்ற சொற்றொடர் வருகிறது.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது, கவுந்தியடிகளும் சேர்ந்துகொண்டார். அப்போது வழியில் இரு பரத்தர்கள் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, சங்ககாலத்தில் தமிழர் வாழ்வியலில் பெண்ணடிமை நிலவியதாகக் கூறவியலாது.

கற்பு என்பது காலத்திற்கு காலம் மாறுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.

போரும் அரசியலும் கற்பியலும் மிகப் பழமையானவையும் நெருங்கிய தொடர்புடையவையும் ஆகும்.

Politics is war without blood,war is politics with blood.

Politics is the second oldest profession,and the first is prostitution.

No comments:

Post a Comment