Wednesday 24 September 2014

அரபு நாட்டு வாழ்க்கை

அரபுநாட்டு வாழ்க்கை-கதையைத் தழுவி ஒரு கதை

எத்தனை முறைதான் விழுந்திருப்பேன் தெரியுமா?
‘என்னய்யா எழுதுறே நீ , இக்கிது புக்கிதுண்டு..’ என்று எகிறுவார் ஓர் எழுத்தாளர்.
எழுத்தாளர் ஆகவேண்டுமே, ‘மன்னிச்சிடுங்கண்ணே’ என்றபடி மல்லாந்து விழுவேன்.
அரபுநாடுகளில் ஒட்டகம் மேய்க்கும் அருமையான வேலைசெய்ய பயணம் சென்றதிலிருந்து எழுத்தாளர் கனவு கலைந்தது.
ஊருக்கு வந்திருந்தபோது
‘இவ்ளோ வருஷமா அரபுநாட்டுல இருக்கியே அத்தா…என்ன சேர்த்தே?’ என்று அடிப்பார் பயணத்தைப் பணயம் என்று குறிப்பிடும் கடன்கொடுத்த பயில்வான்.
'கடன்’ என்று சொல்லிக் கண்ணீருடன் விழுவேன்.
வீட்டில் இருக்கும்போது ஒருமுறை  ‘வூடாடா இது? நரஹம். நரஹம்டா நரஹம். எப்பப் பாரு, அதை ஏன் வாங்கிட்டு வரலெ, இத ஏன் வாங்கிட்டு வரலெ, அதுக்கு காசு தாங்க, இதுக்கு காசு தாங்கண்டு.. ஒரு நிமிஷம் மனுஷன் நிம்மதியா இருக்க முடியுதா இங்கே? ஒரு பாட்டு கேட்க முடியுதா? அட, கொஞ்சம் படிக்கத்தான் முடியுதா? போறேண்டா..போறேன். துபாய்க்கு இப்பவே போறேன்’ என்று வீடே கிடுகிடுக்க கத்திவிட்டு , போவது போல் ஒரு நடிப்பு நடித்துவிட்டு, நைசாக திரும்பிப் பார்த்தேன்.
குழப்பமான பார்வையுடன் என் மகன் என்னைப்பார்த்து மெதுவாகக் கேட்டான் ‘சூட்கேஸை எடுத்துட்டு போவலெ?’.
விழாமல் என்னால் என்ன செய்யமுடியும்.

‘வீணை யின்பக் குரலே வா
வீட்டின் இன்பச் சுடரே வா
தேனைப் பழித்த சுவையே வா
தேடும் நீண்ட விழியே வா’
- சேய்ச் செல்வத்தை இப்படித்தான் புகழ்ந்தார் புலவர் ஆபிதீன் காக்கா.
பிறகு , ‘ஏங்கிமுகம் வீங்கிமிக
ஏழையவன் தானழுதால் ஏனென்றுங் கேட்கஒரு பேயுமில்லை எம்மவரே’
என்று கொழும்பு சென்று குமுறினார் –
குடும்பத்தைப் பிரிந்து.
பின்னே எழுத்தாளன் எழுதியே வயிற்றைக் கழுவ இங்கே வழி இருக்கிறதா என்ன?
‘நாக மரங்கள் அதிகம் இருந்ததால் மட்டும் நம்மூருக்கு நாகவூர் என்று பெயர் வரவில்லை –‘நானிலம் போற்றிடும் நாகவூர் தர்ஹா’ புத்தகங்கள் சொல்வதுபோல. நம் வீட்டுப் பக்கத்திலுள்ள நாகநாதசுவாமிகள் கோயிலாலும்தான் அந்தப் பெயர் வந்ததுடா ஜக்கரியா. அதன் ஸ்தல புராணம் கேள்.
முன்பொரு காலத்திலே சம்புபத்தன் என்னும் பிராமணன் தன் குடு….’
எவ்வளவு அருமையாக நான் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று பார்த்தால் பயல் தூங்கிக்கொண்டிருக்கிறான்.
சரி என்று நகர்ந்து போனால் அவன் கால் ஜோராக ஆடுகிறது.
இவன்தான் ஜக்காரியா என் மச்சான் பெற்ற மணிமகுடம்.
நான் அரபுநாட்டில் இருப்பது இவன் வீட்டுக்கு வசதியாகப் போய்விட்டது; எப்போதும் எங்கள் வீடுதான்; என் மச்சானும் மச்சாளும் காதல்பண்ண தடையில்லை அல்லவா?
இவன் தூங்கிவிட்டால் என்ன?
தெருக்கள் தோறும் ஊரில் வழிந்து ஓடும் துவேஷத்தை ஒழிக்க சொல்லிக்கொண்டிருப்பேன். 'உங்கள் மார்க்கம்
எங்களுக்கு; எங்கள் மார்க்கம் உங்களுக்கு' –புகழ்ந்து சொல்ல.
என் வாப்பா போல வருமா?
‘எல்லாரும் நமக்கு வேணும்ங்கனி’ என்பார்கள்.
சொந்தங்களைப் பார்க்க அறந்தாங்கி , ஏம்பல் போகும்போதெல்லாம் ஆவுடையார்கோயிலில் இறங்கி ,கோயிலில் நுழைந்து, ஒவ்வொரு சிலையாக விவரித்து வளர்த்த வாப்பா… கல்லிலும் தெய்வம் காண்பவர்கள் கபடமில்லாதவர்கள் என்று சொன்ன வாப்பா.. ‘எல்லாப் பறவைகளுக்கும்
அத்திபழமே உணவாக இருக்க முடியாது’ என்று சொன்ன மௌலானா ரூமியை நேசித்த சீதேவி வாப்பா..
மலேயா சபராளி(பயணம் செய்பவர்) மொத்த வாழ்க்கையில் 313 நாட்கள்தான் குடும்பத்தோடு ஊரில் இருந்துவிட்டுப் போனார்கள் என் வாப்பா.
வாப்பா பயணத்திலிருந்து வந்தாலே எங்கள் வீடு ‘கப்சிப்’ என்றாகிவிடும். கண்டிப்பல்ல, மரியாதை. எதிரில் வந்தால் நைஸாக நகர்ந்து விடுவோம். வலிய அவர்கள் எங்களை இழுத்து வைத்து பேசினால்தான் உண்டு.
கடைசி சபருக்கு (பணத்திற்கு) முன்பு வரை அவர்கள் கொண்டுவந்த சாப்பாட்டு ஐட்டங்களைத்தான் மறக்க முடியுமா?
டப்பாவில் அடைக்கப்பட்ட பழங்கள்…அப்புறம் , கறுப்பு நிறத்தில் ஒருவித அரிசி…
பிசினரிசி என்போம். உம்மா அதை அவித்துச் சமைக்கும் விதம் அற்புதம். காலைப் பசியாறலின்போது அந்தப் பழங்களும் பிசினரிசியும் ரவாவில் செய்த’துல்லிசோறு’ம்.
அதெல்லாம் வாப்பா தினமும் மலேயாவில் சாப்பிடுவது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தால்
வாப்பாவின் நண்பரான ஆதம்காக்காதான் என்னிடம் நான் வேலைதேடி அந்தப்பக்கம் சென்ற சமயம் சொன்னார் ‘சூப்பு வித்துப் பொளச்சாரு உம்ம வாப்பா இங்கே. மூணு வேளையும் காஞ்சிப்போன ஆப்பம்… எப்பப்பார்த்தாலும் உங்களுவ நெனப்புதான். நீம்பரு எளுதுன காயிதம்லாம் காமிப்பாருங்குனி ரொம்ப பெருமையா..’ .
வாப்பா என்னை வழியனுப்பிவைத்துவிட்டு நாகவூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீடுவரை பொங்கிப்பொங்கி அழுதார்களாம்.
கண்ணெல்லாம் சிவந்து போய்விட்டதாம்.
உம்மா சிரித்துக்கொண்டே இதைச் சொல்லும்போதெல்லாம்
காரணம் புரிந்த என் கண்கள் சிவக்கும். கண்களால் அவ்வளவுதான் செய்ய
முடியும்.

‘ஊரோட வர்ரவன் பணக்காரனா இக்கிறாண்டா, வரும்போதே அவன் அரபியை ‘போட்டுட்டு’ வர்றான். சூப்பர்மார்கெட்டா தொறக்குறான். உமக்கு அது புடிக்கலெ, கஷ்டப்படுறியும். ஓய், போடுறதா இருந்தா நம்ம நாட்டுலெயே நல்லா போடலாம், வந்துடுறியுமா?’
என்பார் ஜப்பார்நானா. அவர் சொல்வது சரிதானா? முஸ்லீம் கட்சிகளே நூறுநூறாகப் பிரிந்து ஆளுக்கு ஓர் உண்டியல் வைத்துக்கொண்டு அள்ளுகின்றனவா?
நாசர்மாமா அறுபது வருடமாய் சிங்கப்பூர் சபராளியாக இருந்து – ஊரோடு போய் தன் குடும்பத்தோடு இருக்கலாம் என்று வந்த எழுத்தாளர்.
ஒருமுறை என்னிடம் அழுதார். ‘தம்பி.. தயவு செய்து அந்த மாதிரி பேத்தனமா முடிவு எடுத்து ஊரோட வந்துடாதீங்க. சல்லிக்காசுக்கு மதிக்கமாட்டாளுவ..
‘மச்சான்..மச்சான்’டு இருந்தா என் பொண்டாட்டி  என்னெட்டேர்ந்து காசு வந்த வரைக்கிம். இப்ப தன்னோட புள்ளைங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச உடனே என்னய தூக்கி எறிஞ்சிட்டா. வேலைக்காரன வுட இப்ப கேவலமா பொய்ட்டேன் தம்பி.. ப்ளீஸ், வெளில யார்ட்டெயாச்சும் சொல்லிடாதீங்க..’ என்றார்.
கண்கலங்கி விட்டது எனக்கு.
‘உங்கள யாரு போவ சொன்னா? இங்கேயே சம்பாதிங்களேன்..’ என்று இப்போதும் அஸ்மா (என் மனைவி) சொல்கிறாள். சம்பாதிக்க முடியாது,
நம் போன்றவர்கள் மூதலீடில்லாமல் எப்படி தொழில் தொடங்குவது?.
‘மாப்புள வந்து ரெண்டு மாசத்துக்கு மேல ஆவுதே. பயணம் போவலையா? ‘ என்று கவலைப்படும் மாமியார். அவர்கள் என்னிடம் நேரடியாக சொல்ல மாட்டார்களாம்.
உம்மா(அம்மா) அப்படிக் கேட்டதாக அஸ்மா சொல்வாள்.
‘அடுத்த மாசம் துபாய் போயாகனுமே, இந்த மாசத்தை ஓட்டப் பணம் வேணுமே’ என்று இந்த கடங்கார வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டு தலைசாய்ந்திருந்த நேரத்தில், ஸ்கூலிலிருந்து திரும்பிய
ஜக்கரியா இன்னொரு கேள்வி வீசினான்.
‘இன்னும் போவலெ மாமா?’.
என்னையும் சேர்த்து நாலு பேர் இருந்த ஒரு புகைப்படத்தைக் கொடுத்து ’இணையத்தில் போடப்போகிறேன், தலைப்பு சொல்லு புள்ளே’ என்றதற்கு ‘மூணு அறிவாளிகள்’ என்கிறாள் அஸ்மா.
மனைவி மக்களோடு ஊரில் வாழ்பவர்கள் அறிவாளிகள்.
யாரால் நான் முட்டாள் ஆனேன்?
நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர் என்கிறான் அல்லாஹ்.
Recession-இல் மாட்டிக்கொண்டு விழிக்கிற
துபாயின் நிலைமையோ கவலைக்குரியதாக
இருக்கிறது. ‘மூணு பேர் செய்ற வேலையை ஒரே ஆளா செய்றவனையெல்லாம் ஊருக்கு அனுப்பு’ என்றது ஒரு கம்பெனி.
அதாவது, ‘பத்து பேர் செய்ற.வேலையை ஒரே ஆளா செய்றவங்களை மட்டும் வச்சுக்க’ என்று அர்த்தமாம்.
வேலையிழப்பால்  மனநோயாளிகளாகி,
தற்கொலைகளும் அதிமாகிவிட்டன என்பதால், இந்தியத் தூதரகத்தோடு இணைந்து ஓர் இஸ்லாமிய அமைப்பு இங்கே ‘கவுன்ஸிலிங்’ மையம் தொடங்கும் நிலை.
சவுக்கடி பட்டாலும்
சவுதியே மேல். அதிகாலை3 மணியிலிருந்து 8மணிவரை ஆளுக்கு 15நிமிடங்கள் காலைக்கடனுக்காக தரப்படுகிற ஒருவரின் ‘தேறா’ அறையில் ஒரு வேடிக்கை நடந்தது.
புதிதாக விசிட்விசாவில் வந்த ஒருவருக்கு முதல்நாள் 20நிமிடம் கொடுக்கப்பட்டது. அடுத்தநாளும் அதே 20நிமிடங்களை அவர் எடுத்தவுடன் பெரிய சண்டை.
எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏராளம் உண்டு.
பார்க்கிறீர்களா என் பின்பக்கத்தை?
நான் தங்கியிருப்பது அல்-கூஸ்.ஆடுமாடுகளுக்கான ‘மஜ்பா’(பண்ணை) போன்றது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்  அடைபட்டுக் கிடக்கும் இடம், சாக்கடைகள் கருநிறத்தில் மலத்துடன் வழிந்தோடும் ஏரியா. மழைக்காலத்திலோ சொல்லவே வேண்டாம்.
தாங்க இயலாதவர்கள் துணிந்து வீதிக்கு வந்து போராடுவதும் அவர்களைக் கொத்தாக ‘cancel’ செய்து அனுப்புவதும் நடக்கிறது.
அன்று ‘பர்துபாய்’ நண்பரின் அறைக்குப் போயிருக்கும்போதுகூட ஒருவன் மூக்கைச் சுளித்துக்கொண்டு சொன்னான், ‘இங்கே யாராச்சும் அல்-கூஸ் ஆளு வந்திக்கிறாங்களா?’.
என் கதைகள் நாறுவதற்கான காரணத்தை இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடவுளே, வழியே பிறக்காதா என் தாய்த் திருநாட்டில்? வயதாகி, ஊரோடு ஒரேயடியாகப் போகுபவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை கொடுத்தால் என்ன? மானத்தோடு மரணம் வர மனமிரங்குவானா ஆண்டவன்?
‘பாடாவதி சபர்’ என்று சொல்வார்கள். ரொம்ப வருடங்களாக ஊருக்கே போகாதவரை அப்படிச் சொல்வார்கள். பத்திருபது வருடங்கள் கழித்துப் போனால் ஓர் உலக்கையைப் போட்டு அவரை தாண்டச் சொல்லும் ஊர்களும் உண்டு. என்னமோ ஒரு சம்பிராதயம்.
ஆறு மாதத்திற்கு மேல் மனைவியைப் பிரிவதே ஹராம் (தடைசெய்யப்பட்டது). காமம் தாங்காமல் படுக்கையை திட்டிப் பாடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக்கண்டு அதிர்ந்து , இரவில் நகர் உலா சென்ற கலிஃபா உமர் ரலியல்லாஹ் அவர்கள் , வெளிநாட்டிலிருந்த தன் படைகளுக்குப் போட்ட உத்தரவு இது.
என் அஸ்மாவே சொல்கிறாளே, ‘ஆறு மாசத்துக்கு மேல
தாங்கல' என்று.
‘இஸ்லாமிய’ நாடுகளுக்கு இதெல்லாம் தெரியாதா? தெரியும். ஆனால் ‘தொழில்வளம்’ பெருக வேண்டுமே…
‘இங்கேயே தணித்துக்கொள்வீராக’ என்று தெருவுக்கு நாலு ‘ஹோட்டல்கள்’ வைத்திருக்கிறது.
30 வருடமாக ஊருக்கே  போகாதவர்களில் ஒருவர் அவர். இங்கே அவர் இருக்கும்போது ஊரில் அவருக்கு ஏழெட்டு பிள்ளைகள் பிறந்தது முக்கியம். தன்னால இயலும்போது குப்பை பொறுக்கியாவது மனைவிக்கு பணம் அனுப்புகிறார் இப்போதும். ‘புள்ளைங்க என்ன பாவம் செஞ்சிச்சி தம்பி?’ என்று அவர் கேட்கும்போது அழுகை வந்துவிடும் – அவருக்கும் ,
நமக்கும். பெரும்பாலும் அவரைப் பள்ளிவாசலிலும் ·பாத்திஹா ஓதும் இடங்களிலும் பார்க்கலாம். ‘வத்னி மரைக்கார்’ என்று கேலியாக அவரைச் சொல்வார்கள். மண்ணின் மைந்தனான அரபியைத்தான் ‘வத்னி’ அல்லது ‘லோகல்’ என்று சொல்வது வழக்கம். விசாவெல்லாம் காலாவதியாகி எத்தனையோ வருடங்களாகி , எந்த ‘லேபர்’ அதிகாரிகளிடமும் மாட்டாமல், ஷார்ஜா, அல்-ஐன், அபுதாபி என்று என்று இங்கேயே இறைவனின்
அளப்பரிய கருணையால்(!) உழன்றுகொண்டு வரும் இவருக்கும் அந்தப் பெயர்.
நை·ப் ரோட்டில் (‘மதறாஸி’கள் கூடும் இடம்) அந்த வத்னி மரைக்காரிடம் ஒருவர் கேட்டார் ‘ஏன் ஊருக்கே போவலெ நீங்க?’.
‘ப்ச்.. வுடுங்க தம்பி’.
‘ஏன்?’
‘போனாலும் திரும்பிதானே வரனும்?’ என்றார் வத்னி மரைக்கார்.
முலக்கதை: http://www.sirukathaigal.c

1 comment: