Monday, 26 June 2023

தகப்பன் தலைவன் மன்னன்

தகப்பன் தலைவன் மன்னன் 

ஆண்டு: கி.பி.2216

ஒரு அரசியல் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு

 சென்ற மாதம் நமது தலைவர் abcd அவர்களை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் எதையும் மறுக்கவில்லை. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். அதில் நம் ttt-நாட்டை ஆளும் நமது t-ராணுவம் ஏன் அனைத்துலக சபை மக்களாட்சிக்கு அழைத்தபோது ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பவில்லை என்று கேட்கப்பட்டுள்ளது.
 நமது t-இனம் பல்வேறு சுரண்டல்களுக்கும் அடக்குமுறைக்கும் கலவரங்களுக்கும் இனப்படுகொலைக்கும் ஆளான போது உலகம் முழுக்க கேட்கும்படி நாங்கள் இதைத் தான் கேட்டோம். எங்களுக்கு ஜனநாயக வழியில் வாக்கெடுப்பு நடத்தி தனிநாடு தர உயிரைக் கொடுத்து உடலை எரித்து போராடினோம். அப்போதெல்லாம் செவிசாய்க்காத இந்த உலகமும் உலக சபையும் சர்வதேச ஜனநாயக சக்திகளும் நாம் திருப்பி அடிக்கத் தொடங்கியபோது நமக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர். இப்போது நம் போன்ற அடக்குமுறைக்கு உள்ளாகும் இனங்களுக்கு நாம் உதவும்போது சத்தமாக கத்துகிறார்கள். 

 நாங்கள் நடப்பது எங்கள் தலைவர் abcd காட்டிய வழியில் தான். இந்த உலகில் ஒவ்வொரு மொழிவழி இனங்களும் தனிநாடு அடையும்வரை நாங்கள் ஓயப் போவது இல்லை. 

 எங்கள் ஆயுத வர்த்தகத்தை குறை கூறும் எவரும் இன விடுதலை என்பது ஆயுதம் தூக்காமல் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற சூழல் நிலவுவது பற்றி பேச மறுப்பது ஏன்?
 ஒரு அரசு ஒரு குறிப்பிட்ட மக்களை சுரண்டும்போது அதிலிருந்து அவர்கள் விடுபட ஜனநாயக வழியில் முயற்சிக்கும் போது அதை ஆயுதத்தால் அடக்கும் அரச பயங்கரவாதம் இந்த உலகில் இருக்கும் வரை ஆயுதங்களுக்கான தேவையும் எங்கள் ttt- நாட்டு ஆயுத நாட்டாமை தொடரவே செய்யும்.

  நாங்கள் தலையெடுத்த பிறகுதான் இந்த உலகில் இனப் படுகொலைகள் நின்றன. பெரிய நாடுகள் சிறிய நாடுகளை சுரண்டிவதும் அரசுகள் சிறுபான்மையினரைச் சுரண்டுவதும் பெருமளவு குறைந்தது. பிற நாடுகள் போல எங்கள் விடுதலை போதுமென்று எங்களால் இருக்க முடியாது. எங்களைப் போல யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

 எங்கள் தலைவர் காட்டிய வழியில் உலகில் மூத்த இனமென்கிற பொறுப்புடன் படை கட்டினோம், தாய்நிலத்தை மீட்டோம், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை மீட்டோம், உட்கட்டமைப்புகளைப் பெருக்கினோம், ஆயுதங்கள் தயாரித்தோம், எங்களைப் போன்றவர்களை உலகளாவி ஒன்று திரட்டினோம். தொடக்கத்தில் கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய நாம் பிறகு இன ஒடுக்குமுறை முளை விடும் இடங்களைக் கண்டறிந்து முன்பே விடுதலைக்கான விழிப்புணர்வு ஊட்டினோம். 

 இந்த நூறாண்டுகளில் ஏறத்தாழ 32 இனங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளோம். 
50 இனவழி நாடுகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. நாங்கள் நடத்துவது ராணுவ ஆட்சிதான். 
எங்களை வழிநடத்துவது எதிர்க்ககட்சி மற்றும் தலைவர் வழிநடக்கும் tt- தீவிரவாதிகள் தான்.
 ஏன் நாங்கள் அவர்கள் சொற்படி நடக்க வேண்டும் என்று அறிய வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.

 எமது தலைவர் தாய்நிலத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஜனநாயகத்தால் முடியாத சீர்திருத்தங்களை தனது 8 ஆண்டு சர்வாதிகார ஆட்சியில் செய்துவிட்டு நாட்டை விடுதலைப் படையிடம் ஒப்படைத்தார். அவரது காலத்தில் அத்தனை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டிருந்தன. விளைநிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், காடு என அத்தனையும் ஆக்கிரமிப்புகள் இடித்து நொறுக்கபட்டு மீட்கப்பட்டன. மத கட்டுமானங்கள் எல்லாமே தகர்க்கப்பட்டன. அதில் இருந்த செல்வங்களைக் கைப்பற்றப் பட்டன. இனத்தின் பகைவர்கள் ஒழிக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகள், பைத்தியங்கள், உழைக்க முடியாதவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். அருங்காட்சிய பொருட்கள் அனைத்தும் விற்கப்பட்டன. தொழிற்சாலைகள், வாகனங்கள், மரங்கள், தனியார் ஆடம்பர பொருட்கள் என எல்லாமே விற்கப்பட்டு நாடே காலியானது. ஏனென்றால் 30 ஆண்டுகால விடுதலைப் போரில் நாடே சுடுகாடாக ஆகிவிட்டிருந்தது. மக்கள் கால்வயிறு உணவு இல்லாமல் அல்லாடும் நிலை. எங்கும் பஞ்சம், பட்டினி, நோய் என்று எழ முடியாத சூழல். மண் மலடாகி குடிநீர் நஞ்சாகி இருந்தது எங்கள் தாய்நிலம். உலக நாடுகள் எதுவும் உதவ முன்வரவில்லை. இந்த நிலையில்தான் தலைவர் ஆட்சி தொடங்கியது. தலைவரிடம் இருந்தது ஆயுதமும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டுமே!  தாய்நிலத்தை சுத்தமாக்கிவிட்டு இழந்த எல்லைகளை மீட்ட தலைவர். உலகில் தன் போன்று இருந்தவர்களைத் திரட்டினார். அவர்களிடம் பொருள் பெற்று ஆயுதங்களை தயாரித்து விற்றார். போர்த் தந்திரங்களை விற்று விடுதலைக்கு உதவினார். தமது ஆட்களை அனுப்பினார். உலகில் விடுதலை வேண்டிய இனங்களை தீவிரவாதிகளாக மாற்றினார். அவர்கள் கொலை செய்தனர், கொள்ளை அடித்தனர் அவர்களுக்கு ஆயுதம் கொடுத்த எமக்கும் அதில் பங்குண்டு. 7 ஆண்டுகளில் கடனில் இருந்து சுழியத்திற்கு கொண்டுவந்தார் தலைவர். தாய்நிலத்தில்  வறட்சியைத் தாங்கும் தாவரங்களை நட்டார். காடுகளை அழித்து விவசாய நிலங்கள் ஆக்கினார். தண்ணீர் தரும் தென்னை, பனை போன்ற மரங்களை நஞ்சான நிலத்தில் நட்டார். உலகத் தலைவர்களைக் கடத்தி பிணையத் தொகை கேட்பது, பணத்திற்காக கொலைசெய்வது, தேடப்படும் குற்றவாளிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு அளிப்பது, பிற நாட்டு வங்கிகளைக் கொள்ளை அடித்தது, பிற நாடுகளின் அரசாங்க கட்டமைப்பை குண்டு வைத்து தகர்த்து போட்டி நாடுகளிடம் பணம் பெறுவது, போதை மருந்து கடத்தல் என அவர் செய்யாத அட்டூழியமே இல்லை. ஆனால் அவர் முடிந்த அளவு பொதுமக்களுக்கு சேதம் இல்லாமல் செய்தார். தலைவரது தூண்டுதலால் அப்போது விடுதலைக்காக போராடிய அத்தனை இனங்களும் இதைச் செய்தன. இதைக் குறை சொல்பவர்கள் அரச பயங்கரவாதம் எங்கள் மக்களை இனப் படுகொலை செய்து பெண்களையும் குழந்தைகளையும் கற்பழித்த போதும் இறந்த உடல்களில் இருந்து உடல் உறுப்புகளை வெளிநாடுகளுக்கு விற்றபோதும் புதைத்த பிணங்கள் முழுமையாக மக்க வேதிமருந்துகள் வாங்கப்பட்டு இனப் படுகொலை தடயங்கள்  மறைக்கப்பட்ட போதும் மௌனம் காத்தது ஏன்?  தலைவர் ஆட்சி முடிந்த பிறகு அவர் விலகிக் கொள்ள அவரது t- படை ஆட்சி பொறுப்பை ஏற்றது. ராணுவம்  பலப்படுத்தப்பட்டு தாய்நிலத்தை ஆட்சி செய்கிறது.
 தலைவரது தீவிரவாதக் குழு தனியாக இயங்குகிறது. எதிர்க்கட்சி, உளவுத்துறை, வெளியுறவு செயல்பாடுகளைத் தொடர்கிறது. ஏனென்றால் ttt நாடு அங்கீகரிக்கப்படும் என்று நினைத்து அதை தனியாகவும் நாடு செய்யமுடியாததை செய்ய தீவிரவாதிகள் தனியாகவும் இருக்க வேண்டும் என்றும் தலைவர் நினைத்தார். ஆனால் ttt நாடு அங்கீகரிக்கப்பட்டால் பிற நாடுகளில் அரசியல் தலையீடு செய்ய முடியாது. இதைத் தலைவரால் ஏற்கமுடியவில்லை. உலகம் முழுக்க இனரீதியான கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க தலைவர் விரும்பவில்லை. தலைவர் தலைமையில் இருந்து விலகிய பிறகும் வெளிநாடுகளில் தலைவர் நடவடிக்கைகள் தொடர்ந்தன இப்போதும் தீவிரவாத tt-படை அதைத் தொடர்கிறது. தேர்தல் நடக்காமல் இல்லை. தாய்நிலத்தில் பெயருக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதில் விடுதலைப் படையினரும் தீவிரவாதப் படையினரும் தலைவர் ஆதரவாளர்களும் பதவியில் அமர்ந்தனர். அதன் பிறகும் நாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களை தலைவர் வழிகாட்டிய படியே ttt நாட்டு அரசு செய்தது. நாட்டின் பிரச்சனைக்குரிய அல்லது பாதுகாப்பற்ற பகுதிகள் தலைவர் மற்றும் அவரது தீவிரவாத படையான tt படை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. நாட்டில் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் குடியேற்றம் நடந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை சிறிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. உணவுக்காக மக்கள் வேலை செய்தனர். ராணுவம் சார்ந்த தொழில்களே செய்யப்பட்டன. பிற நாடுகளில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு கைகளாலும் சிறிய ரக தொழிற்சாலைகளிலும் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் வேறுநாடுகளுக்கு குடிபெயரவோ, போதைப் பொருள் விளைவிக்கவோ தடை விதிக்கப்பட்டது. எல்லை தாண்டி படை சென்று அணைகளை உடைத்து தண்ணீரை விடுவித்தது. நஞ்சான நிலத்தடி நீர் கொஞ்சம் மேம்பட்டதும் வறட்சி தாங்கும் தானியங்கள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து மழை மேகங்கள் தடுக்கப்பட்டு செயற்கை மழை பொழிவிக்கப்பட்டது. பிறகு நஞ்சான சதுப்பு நிலங்கள் தூர் அள்ளப்பட்டு கடலில் கொட்டப்பட்டது. பல ஆண்டுகளாக எமது மண், மலை, காடுகள், பொருளாதாரம் என அனைத்தையும் சுரண்டிய அண்டை இனங்களிடம் அதே வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இனப் படுகொலைக்கு காரணமான அண்டைநாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களுக்கு ஆதரவளித்த குறிப்பிட்ட மக்கள் அவர்களின் சொத்துகளை அனுபவித்து வந்த வம்சாவளிகள் என அனைவரும் கொல்லப்பட்டு செல்வம் கைகப்பற்றப் பட்டது. உலகம் முழுவதும் இவர்கள் பதுக்கி வைத்திருந்த செல்வங்கள் மிரட்டல் மூலம் மீட்கப்பட்டன. இது அத்தனையும் ttt நாடு நாலாபக்கமும் சூழப்பட்டு போர் நடந்த வேளையில் செய்யப்பட்டது. பணம் கைக்கு வந்ததும் வேற்றின கூலிப்படைகள் வரவைக்கப்பட்டு போர் நடந்தப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்கள் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டது. அதாவது உலக வல்லாதிக்க நாடுகள் செய்த அத்தனையையும் தலைவர் செய்தார். அவர் தலைவராக இல்லை தகப்பனாக இருந்தார். இனத்தை தன் பிள்ளையாக நினைத்தார். இந்த இனத்தை மீண்டும் ஈன்றெடுத்த தாயாக மாறினார். அவரை இனவாதி என்பவர்கள் வேற்றினத்தார் வெளியேற்றம் மற்றும் பதில் இனப் படுகொலை நடவடிக்கைகளால் அனாதையான குழந்தைகளை எங்கள் இனத்தில் குழத்தை இல்லாதவருக்கும் திருநங்கைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்து வளர்க்கச் செய்தார். அவர்களைக் கண்கானிக்கவும் செய்தார். நூறாண்டுகளில் அவர்கள் இனத்தோடு கலந்து கரைந்துவிட்டனர். அப்படிப் பார்த்தால் t-இனத்தில் மிகப் பெரிய இனக்கலப்பு செய்தது தலைவர்தான்.

t- தாய்நிலத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக நன்றியுடன் நடந்துகொண்டு விடுதலைப் போரில் ஆரம்பத்தில் இருந்தே பங்களித்த ஒரு இனம் இப்போதும் ttt -நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு நலமாக வாழ்கின்றனர். 
 பெண்கள் மட்டுமல்லாது திருநங்கைகள் ராணுவத்துக்கு தகுதியானவர்கள் என்று தனி படையணியை உருவாக்கிய போது அவர்களின் சாதனைகளைக் கண்டு உலகம் முழுவதிலும் இருந்து திருநங்கையர் எங்கள் ராணுவத்தில் இணைந்தனர். அவர்களும் எங்கள் நாட்டுக் குடிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

 தாய்நில விடுதலைக்குப் பங்களிக்காத t- இனத்தவர்களையும் தலைவர் தண்டித்துள்ளார். அவர்கள் தனியாக முத்திரை குத்தப்பட்டு இன்று அவர்களின் சந்ததியினர் அந்த அடையாளத்துடன் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த வாய்ப்பிலும் முன்னுரிமை கிடையாது.

தலைவர் abcd வறட்டு குருதித் தூய்மை பேசும் இனவெறியர் அல்லர். அவர் உலகத் தலைவர் ஆகும் தகுதி உடையவர்

 தலைவரும் அவரது ராணுவமும்  செய்த சாதனைகள் எவ்வளவு முயன்றும் மூடி மறைக்க முடியாத எரிமலையாக தகித்தது. இதே சூடு பல நாடுகளுக்கு பரவியது. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கொதித்து எழுந்தனர். தலைவர் நடந்த வழியை அவர்கள் சிந்தாந்தமாக ஏற்றுக் கொண்டனர். இது ஒரு மதம் போல பரவியது.

  அவர்கள் எமது நாட்டுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். பணம், உணவு, வளம் என் எது முடியுமோ அதைக் கொடுத்து ஆயுதங்களையும் வழிகாட்டுதலையும் வாங்கிக்கொண்டனர். பெரிய நாடுகள் உடைந்தன. இனங்கள் விடுதலை அடைந்தன. தம் தாய்நிலத்தை தமது தலைவர் மூலம் ஆளத் தொடங்கின.

  இந்நிலையில் தலைவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். மண்ணை ஆளாவிட்டாலும் நாட்டையும் உலகத்தையும் தொடர்ந்து வழிநடத்தினார். தாய்நிலத்தில் மீண்டும் காடுகள் உருவாக்கப்பட்டன. கதியற்று பல நாடுகளில் இருந்த t-மக்கள் மீண்டும் தாயகம் அழைத்துவரப் பட்டனர். வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருந்த சில t-மக்களும் பலவந்தமாக தாய்நிலம் வரவழைக்கப்பட்டனர். 

 நாடு வளர்ச்சிப் பாதையில் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த்து. அதே வேளையில் இயற்கையை வளர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பகைவர்கள் உதவியது இங்கேதான். காட்டுக்கு அவர்களின் பிணங்களே நல்ல உரமாக ஆனது. நாளடைவில் நாடே காடாக மாறிவிட்டது. எங்கள் நாடே காட்டு வாழ்க்கைக்கு மாறிவிட்டது. மக்கள் விசப்பூச்சி விரட்டி களிம்புகளை உடலில் தேய்த்துக்கொண்டு விசமுறிவு மருந்துகளைக் கையில் வைத்துக்கொண்டு காட்டுக்குள் வாழ்கின்றனர். பூமி மேலிருந்து பார்த்தால் எங்கள் நிலம் பச்சையாகவும் அண்டை இனங்கள் நிலம் வறண்டும் காணப்படுகிறது. 

 தலைவர் ஒரு சொட்டு நீரையும் ஒரு பச்சை இலையையும் கூட அண்டை இனங்களுக்கு எப்போதும் கொடுக்கக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளார். ஒரு மனிதன் செய்த தவறுக்கு அவரது சந்த்திகளும்  பொறுப்பு என்றும் விதி வகுத்துள்ளார். இன்று தெருவெங்கும் பழங்களும் காய்கறிகளும் கொட்டிக் கிடக்கிறது. சாக்கடையில் கூட தூய தண்ணீரும் ஓடுகிறது.  அண்டை இனங்கள் பஞ்சம் வந்து செத்துக்கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் நாங்கள் இயற்கைக்குக் கேடான எதையும் ஏற்பதில்லை அவர்கள் வளர்ச்சி என்று இயற்கையைக் கொன்றனர். எங்கள் நாட்டிற்குள் ஊடுறுவ முயன்று தினமும் உயிரை விட்டுக்கொண்டு இருக்கின்றனர். நாங்கள் இருந்திருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கின்றனர். இதுவே அவர்களுக்கு நாங்கள் கொடுத்த தண்டனை. உலகையும் உலக இனங்களையும் நேசிக்கும் நாங்கள் எங்களைச் சுரண்டிய அண்டை இனத்தாருக்கு இரக்கம் காட்டுவதில்லை. இதை வெளிப்படையாகக் கூற எங்களுக்கு அச்சம் இல்லை ஏனென்றால் நாங்கள் சாவைப் பார்த்தவர்கள். 

 எங்கள் முன்னோர்கள் தலைவர் தலைமுறைக்கு முன்னால் சற்று அரசியல் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் சுரண்டலை ஆரம்பத்திலேயே தடுத்திருப்பார்கள். அண்டை இனத்தாரின் முன்னோர்கள் சுரண்டிக் கொழுக்கவும் பழகி இருக்க மாட்டார்கள். இந்த மோசமான நிகழ்வுகள் நடக்காமலே போயிருக்கும். அப்பாவி மக்களைச் சுரண்டுவது குற்றம் என்றால் அப்பாவியாக இருப்பதும் குற்றம்தான். அந்த வகையில் எங்கள் முன்னோர்களின் சந்ததிகளான நாங்களும் குற்றவாளிகள்தான்.



No comments:

Post a Comment