எனது தவறுகளும் குழப்பங்களும்
எனது தவறுகள்.....
* கோசர் வடுகர் என்று கூறியிருந்தேன் அது தவறு அவர்கள் தமிழரே!
(இதை ஏற்கனவே எழுதியுள்ளேன்)
* ராஜேந்திர சோழன் காலத்தில் வடக்கத்தி பிராமணர் குடியேற்றம் நடந்ததாக எழுதியுள்ளேன். அதுவும் தவறு. அப்போது நிலம் பெற்றவர்கள் வைணவ (தமிழின) பார்ப்பனர்களே!
* போத்தீஸ் நிறுவனம் சேனைத்தலைவர் உடையது என்று கூறியது தவறு. அது மூப்பனார் பட்டம் கொண்ட (தமிழின) சாலியர் குடி உடையது.
* தாலியறுத்தான் சந்தை ஒரு பொய்க் கதை என்பது அறிந்ததும் என் புத்தகத்தில் அதை நீக்கிவிட்டேன் (இதை ஏற்கனவே எழுதியுள்ளேன்)
அதேபோல முலைவரி என்பதும் ஒரு கட்டுக் கதை என்றும் நிரூபணம் ஆகிவிட்டது.
* தமிழர்நாடு வரைபடம் தயாரித்த போது பல வரைபடங்கள் வெளியிட்டு கருத்து கேட்டு குழப்பம் - ஆராய்ச்சி - தெளிவு என்று பயணித்தபோது பல தவறான வரைபடங்கள் வெளியிட்டுள்ளேன்.
எனவே எனது "தனித் தமிழர்நாடு - வட்டார எல்லைகள்" எனும் வரைபடம் இறுதியானது ஆகும் (என் புத்தக முகப்பிலும் இருக்கும்).
இதேபோல இதன் அடுத்த கட்ட நகர்வு "அகன்ற தமிழர்நாடு" மற்றும் குடியேற்ற திட்டமான "அகன்ற தமிழகம்" ஆகியனவும் இறுதியானதே!
(இவற்றை விளக்க "வரைபடங்களின் தொகுப்பு வரைபடம்" ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்)
* எனது புத்தகம் "தனித் தமிழர்நாடு" என் பதிவுகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த தொகுப்பு.
எனவே இணைய பதிவுகளை ஒப்பிடும்போது புத்தகத்தில் உள்ளதே இறுதியானது ஆகும்
* தன் தலையை தானே அறுக்கும் நவகண்டம் பலி தமிழர் முறை என்று கூறியிருந்தேன். அது தவறு. அது சாளுக்கிய கலப்பு சோழர் (குலோத்துங்கன்) வருகையால் ஏற்பட்டது ஆகும்.
* ஆரம்ப காலத்தில் சைவ நாயன்மார்கள் மதவெறி பிடித்தவர்கள் என்று பெரியபுராணம் கூறுவது அடிப்படையில் எழுதியிருந்தேன். அது தவறு. பெரியபுராணம் வேற்றினத்தார் ஆட்சியில் உள்நோக்கத்துடன் எழுதப்பட்ட தவறான நூல் ஆகும். இதை சமணர் கழுவேற்றம் பொய் என்று அறிந்தபோது அறிந்துகொண்டேன்.
* ஆரம்ப காலத்தில் ராமன் ஒரு வடவன் என்று தாத்தாச்சாரியார் கூறியபடி எழுதியுள்ளேன். பிற்பாடு தமிழ் இலக்கியங்களில் இராமன் பற்றி வருவதை அறிந்து தெளிந்துகொண்டேன்.
(ஏற்கனவே இராமன் தமிழனே என்று பல பதிவுகள் எழுதிவிட்டேன்)
* பிற்கால பாண்டிய அரசில் இசுலாமிய அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள் தமிழர்கள் என்று எழுதியுள்ளேன். இது தவறு. அவர்கள் ஈரான் நாட்டு சிற்றரசர் மரபைச் சேர்ந்த அராபியர்கள் ஆவர்.
* சிவசங்கர் மேனன் தனது புத்தகத்தில் கருணாநிதி புலிகள் அழிவதை விரும்புவதாக கூறியுள்ளதாக எழுதியுள்ளேன். அது உண்மைதான். ஆனால் அது புத்தகத்தில் நேரடியாக கூறப்படவில்லை. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி என்றே குறிப்பிட்டுள்ளார்.
* சுப.முத்துக்குமார் ஈழத்திற்கு சென்று தலைவருக்கு நெருக்கமாக இருந்ததாக எழுதியுள்ளேன். அவர் ஈழத்திற்கு உதவியதும் பயணம் செய்ததும் உண்மை. ஆனால் தலைவர் கூட இருந்தமைக்கு சான்று கிடைக்கவில்லை.
* தலைவர் பிரபாகரன் இந்திய புலிகள் போர் முடிந்த பிறகும் தமிழகம் வந்து சென்றதாக எழுதியுள்ளேன். அது தவறு
(அவரது குடும்பம் பாலச்சந்திரன் பிரசவத்தின் போது சென்னை வந்தனர்).
* ஈழத்தில் பொன்னம்பலம் ராமநாதன் தெலுங்கு வம்சாவளி என்று எழுதியிருந்தேன். அது தவறு. போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை.
* மதுரை சுல்தான்கள் செய்த கொடுமைகளுக்கு மதுரா விஜயம் தவிர்த்த சான்றுகள் இல்லை என்று கூறியிருந்தேன் ஆனால் அரேபிய பயணி இபின் பதுத்தா குறிப்புகள் சான்றாக உள்ளன.
* கோசர்களின் கடவுள் முருகன் என்று கூறியிருந்தேன். அதுவும் தவறு. ஆவியர் குடியின் தலைவன்தான் முருகன்.
* சென்னை எனும் பெயர் சென்னப்ப நாயக்கர் எனும் தெலுங்கர் பெயரால் ஏற்பட்டது என்று எழுதியுள்ளேன்.
அவர் தமிழின வன்னியரா அல்லது தெலுங்கரா என்பதில் குழப்பம் உள்ளது. ஆனால் சென்னை என்பது தமிழ்தான். சென்னிநல்லூர் என்ற கல்வெட்டும் மாதரசன் பட்டிணம் என்ற கல்வெட்டும் உள்ளது. சென்னை எனும் பெயரை வள்ளலார் குறிப்பிட்டும் உள்ளார்.
* அம்பேத்கர் தனது முதுநிலை பட்டப் படிப்பில் காட்டிய புள்ளிவிபரத்தில் மதராஸ் மாகாணம் அதிக வரி கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை எழுதியுள்ளேன். இது உண்மைதான். ஆனால் புள்ளிவிபரப் படி ஆரம்பத்தில் கல்கத்தா அதிக வரி கட்டிவந்துள்ளது பிறகு குறுகிய காலம் மதராஸ் முந்திக் கொண்டது பிறகு பம்பாய் முதலிடம் பிடித்து கடைசி வரை முதலிடமாக இருந்தது.
இப்போதும் இந்திய அரசுக்கு அதிக வரிகட்டி குறைந்த நிதி பெறுவதில் முதலில் மகாராஷ்டிரா பிறகு தமிழ்நாடுதான். வங்கதேசம் பிரிந்துவிட்டதால் அவர்கள் இந்த சுரண்டலில் இருந்து தப்பிவிட்டனர் எனலாம்.
* முத்துராமலிங்க தேவர் காங்கிரஸ் எதிரிகளை ஒன்று திரட்ட சவார்க்கருக்கு உதவிப் பணம் அளித்தார் என்று எழுதினேன். பிற்பாடு அது தவறு என்றும் அது வேறொருவர் என்று அறிந்த பிறகு புகைப்பட ஆதாரத்துடன் எழுதி திருத்திக்கொண்டேன்.
* சிசேரியன் கூடாது என்று உணர்ச்சிப் பூர்வமான பதிவு எழுதி மருத்துவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டிய பிறகு அறிவியல் பூர்வமான பதிவு ஒன்று எழுதியுள்ளேன்
எனக்கு இருக்கும் குழப்பங்கள்.....
* மௌரியர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இளஞ்சேட் சென்னி தலைமையில் அமைக்கப்பட்ட தமிழர் கூட்டணிப் படையில் சேரநாடு இருந்ததாக எழுதியுள்ளேன். சத்திய புத்ர என்று அசோகர் குறிப்பிடுவது அதியமான் அரசையே! அதியமான் சேர மரபுதான். ஆனாலும் சேரநாடு இந்த கூட்டணியில் இருந்தது என்று உறுதியாகக் கூறமுடியவில்லை.
* முத்துராமலிங்கத் தேவர் மதுரை கோவிலில் ஆலய நுழைவு நடத்தியதாக நான் எழுதியுள்ளேன். ஆனால் அதுவும் உறுதியாகத் தெரியவில்லை.
* தீரன் சின்னமலை மைசூர் அரசிடமிருந்து கொங்கு பகுதியை மீட்டதாக எழுதியுள்ளேன். தீரன் சின்னமலை உண்மையா கற்பனையா என்பதும் தெரியவில்லை (ஆனால் பாலக்காடு கணவாய் மீதான உரிமைக்காக கொங்கு வேளாளர்கள் ஆங்கிலேயருடன் மோதியுள்ளனர்).
* பாரதியார் கடைசி காலத்தில் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து ஊர் திரும்பியதாக கூறுவதிலும் எனக்கு குழப்பம் உள்ளது எனவே அது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.
* அழகுமுத்து கோன் மறவரா கோனாரா என்கிற குழப்பமும் உள்ளது எனவே அது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.
* சோழ வம்சாவளி என்று கூறிக் கொள்ளும் பிச்சாவரம் வன்னியர் குடும்பம் பல்லவ வம்சாவளி என்றும் கூறப் படுகிறது.
இவர்கள் 1900 களுக்கு பிறகே சோழர் பரம்பரை என்று உரிமை கோரியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதில் குழப்பம் உள்ளதால் இது பற்றி நான் எதுவும் எழுதவில்லை.
* நம்பியாண்டார் நம்பி இராசராச சோழன் காலத்தவர் என்பதில் எனக்கு குழப்பம் உள்ளது. சிதம்பரம் தீட்சிதர் பிடியிலிருந்து சுவடிகளை மீட்ட காலம் ராசராச காலத்தில் அல்ல சாளுக்கிய கலப்பு சோழரான இரண்டாம் ராஜராஜன் காலத்தில் என்பது எனது ஊகம்.
எனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதுடன் குழப்பங்கள் தெளிய தேடல் தொடரும் என்றும் கூறிக்கொள்கிறேன்
No comments:
Post a Comment