Wednesday 7 June 2023

கோவில் என்றால் பொதுதான்

 திரௌபதியம்மன் கோவில் பிரச்சனை பற்றி விரிவாகத் தெரியவில்லை.

 கோவில் என்றால் அது பொதுதான்.

 அது ஒரு சாதியில் ஒரு கொத்துக்குள் ஒரு கொடிவழி பங்காளிகள் முட்டுசந்துக்குள் கட்டிக்கொண்ட கோவில் என்றாலும் அதில் சாமி கும்பிட அனைவருக்கும் உள்ளது.

 ஆனால் கோவில் சடங்குகளில் வெளியாட்கள்  உரிமை கோருவதோ தலையிடுவதோ சரியாகாது.

 பொட்டல்புதூரில் எங்கள் சேனைத்தலைவர் சமுதாயம் கட்டிய மாயாண்டி கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்துவந்த பறையர் சமுதாயத்தினர் (பிற்கால கோவில் கட்டுமானத்தில் பங்களிப்பு செய்துள்ளனர்) கொடை நடத்த உரிமை கோரியபோது இதேபோல் பிரச்சனை ஆனது.
 அதாவது ஒரு ஊரில் 2,3 சமுதாயங்கள் சேர்ந்து நடத்தும் கோவில்களில் நான்காவதாக ஒரு சமுதாயம் கொடை நடத்த அனுமதி கேட்டு கொடை நடத்திக் கொடுத்து வழிபடுவது இங்கே அடிக்கடி நடக்கும்.
 நேர்த்திக் கடன் நிறைவேற்ற தனிநபர் கேட்பதும் உண்டு.
 ஆனால் ஒரு சமுதாயம் மட்டும் நடத்தும் கோவில்களில் இந்த கொடையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
 அது அதே சமுதாயத்தில் அதே கொத்தில் வேறு கொடிவழி கேட்டால் கூட விட்டுத் தருவது அரிது. 
 மேற்கண்ட பறையர் - சேனைத்தலைவர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து ஊர்சபை கோவிலைப் பூட்டிவிட்டனர்.
 அவரவர் தனித்தனியே கொடை நடத்துமாறு கூறிவிட்டனர்.
 கோவிலுக்கு வெளியே எங்கள் சமுதாயம் வாழைத்தண்டில் சந்தனம் அப்பி மாயாண்டி உருவம் செய்துவைத்து கொடை நடத்தியபோது அங்கே வந்த பறையர்கள் பூசை உரிமையைக் கோரி தெருக்களிலேயே குடும்பத்துடன் தங்கிவிட்டனர்.
இவர்களுக்கு உணவும் பிற உதவிகளும் எங்கள் சமுதாயத்தினர்தான் செய்தனர்.
 பிறகு ஊர்சபை கூடி சாமியாடி பூசை செய்யும் அவர்களது உரிமையை அவர்களுக்கே கொடுத்தனர்.
 ஒரு பறையர் சாமியாடி ஊர்சுற்றி எங்கள் சமுதாய வீடுகள் முன் நின்று கால்கள் கழுவப் பெற்று திருநீறு பூசி ஆசீர்வாதம் அளித்து பூசை நடத்திக் கொடுத்தார்.
 பிறகு அடுத்த கொடை வரும்போது சமாதானம் ஆகிவிட்டனர்.
பழையபடி கோவில் சடங்குகள் சேனைத்தலைவர் சமுதாயமும் பூசை உரிமை பறையர்களுக்கும் என்றவாறு தொடர்கிறது.
 இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிறு கீறல் கூட இல்லாமல் ஒரு கெட்டவார்த்தை கூட பேசாமல் இந்த பிரச்சனை நடந்து முடிந்தது.

 இதைப் போல இன்னொரு உதாரணமும் உள்ளது. வெள்ளங்குழி என்கிற கிராமத்தில் வயல்வெளிகள் மத்தியில் பள்ளர் பெருமக்களுக்குப் பாத்தியப்பட்ட இசக்கியம்மன் கோவில் உள்ளது. என் அப்பாவின் பாட்டி கன்னிப் பெண்ணாக இருக்கும்போது இருட்டிய பிறகு இந்த கோவிலின் அருகே ஓடும் வாய்க்காலைக் கடந்து குறுக்கு வழியில் வீட்டிக்குப் போனாராம். அப்போது இசக்கியம்மன் அவர் மீது இறங்கி காய்ச்சல் கண்டதாம். அந்த கோவிலுக்கு அழைத்துபோய் கூறி கேட்டபோது காத்து கருப்பு அடிக்கப் பார்த்த இந்த கன்னிப் பெண்ணை காப்பாற்ற அவளைப் பிடித்ததாகவும் இதற்கு கைம்மாறாக தனக்கு இந்த பெண் வாக்கப்படும் சந்ததி சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்றும் சாமி கூறிவிட்டதாம். 
 அதை என் அப்பாவின் ஆச்சி கடைபிடித்து என் ஆச்சி கடைபிடித்து என் அம்மா கடைபிடித்து இன்றும் தொடர்கிறது.
 
 

No comments:

Post a Comment