Friday 3 February 2017

தமிழர்நாட்டில் ஊர்முறை ஆட்சி

தமிழர்நாட்டில் ஊர்முறை
ஆட்சி

/==/^^/==/^^/==/^^/==/^^/==/^^/

ஊழல் எவ்வாறு நடக்கிறது?

ஒரு கதை சொல்லி புரியவைக்கிறேன்.

ஒரு பெரிய ஊர் இருந்தது (நாடு).

அடுப்பு ஒன்றுதான் இருந்தது (அரசு கஜானா)
ஒரு தலைவர் இருந்தார் (அரசியல்வாதி)
ஒரு பெரிய பாத்திரத்தைக் கொடுத்து "எல்லோரும் ஒரு படி அரிசையைப் போடுங்கள்
சேர்ந்து உண்போம்" என்றார் (வரி வாங்குதல்).

"எல்லாரும்தான் போடுகிறார்களே நாம் குறைவாகப் போட்டால் தெரியவா போகிறது" என்று பலர் ஒரு படியை விட குறைவாகப் போட்டனர் (வரி ஏய்ப்பு).

எல்லாரும் போட்ட பிறகு தலைவர் "இதில் கொஞ்சம் எடுத்தால் தெரியவா போகிறது" என்று பத்து படி எடுத்துக்கொண்டார் (ஊழல்).

சோறு சமைக்கப்பட்டது.
தற்போது சோறு வாங்க வரிசையில் நிற்கவேண்டும்.
அரிசி எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால் கடைசியில் வருவோருக்கு சோறு கிடைக்கவில்லை.
எனவே வரிசையில் முன்னால் செல்ல பல குறுக்கு வழிகளை ஆராய்ந்தனர்.

சிலர் வரிசையில் முன்னால் விட்டால் ஒரு குத்து அரிசி லஞ்சம் தர தயாராக இருந்தனர் (லஞ்சம்).
சில கூட்டமாக சேர்ந்து பலத்தால் மற்றவரைப் பின்னே தள்ள முற்பட்டனர் (இடவொதுக்கீடு).
சிலர் சோறுசமைக்கும் பணியில் சேர விரும்பினர் (அரசாங்க வேலை).
சிலர் வரிசையை ஒழுங்கு படுத்தும் காவலராக விரும்பினர் (காவல்துறை).
சிலர் தாம் தலைவராக வர விரும்பினர் (அரசியல் கட்சிகள்).

  ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அரிசி ஒன்றாக சேர்ந்து பிறகு பங்குபோடப்படுவதே.

இதை நாம் மாற்றவேண்டும்.
ஒவ்வொரு வீடும் தானே சமையல் செய்துகொள்ளவேண்டும்.

தமிழ் மண்ணில் ஒவ்வொரு ஊரும் தனி நாடு போல தன்னிறைவு அடைந்திருக்கவேண்டும்.

ஒரு ஊர் மக்கள் அவ்வூரின் தேவைகளை முடிந்தவரை தாமே நிறைவேற்றிக்கொள்ளுமாறு இருக்கவேண்டும்.

தற்போது இருப்பது போல ஒரு குடிமகனின் வரி நேரடியாக மத்திக்குப் போய் பெரும்பணமாகி பிறகு ஊழல் நடந்து அதன் பிறகு படிப்படியாக மக்களுக்கு வந்து சேர்வதற்குள் காணாமல் போகும் நடைமுறை இருக்கக்கூடாது.

ஒரு ஊர் என்பது குடும்பம் போல இருக்கவேண்டும்.

எப்படி ஒரு குடும்பத்தினர் குழந்தைகளைப் படிக்கவைத்து முதியோரை பராமரித்து வருமானம் ஈட்டி சேமிப்பு செய்து வீட்டைக் கட்டமைக்கின்றனரோ
அதுபோலவே

ஓர் ஊர் தமது குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்கி முதியோரை நோயாளிகளை பராமரித்து தமது ஊரை தாமே கட்டமைக்க வேண்டும்.

அதாவது கல்வி இலவசம், மருத்துவம் இலவசம்.

இலவசம் என்பது இங்கே முதலீடு.
பெற்றோர் ஒரு குழந்தைக்கு கல்வியையும் உணவையும் வழங்கி முதலீடு செய்கின்றனர்.
அக்குழந்தை வளர்ந்து தன் உடல்திறத்தாலும் திறமையாலும் பெற்றோருக்கு சம்பாதித்து தருகிறது.
இது ஒரு சுழற்சி போல நடக்கிறது.

இத்தகைய நடைமுறையைக் கொண்டுவர நாட்டின் நிலங்களை எல்லாம் அரசுடைமை ஆக்கவேண்டும்.

சொத்து என்று யாருக்கும் எதுவும் கிடையாது.
நகைகளும் ஒரு குடும்பத்திற்கு இவ்வளவுதான் என சட்டம் இருக்கும்.

தமிழ் மண்ணில் எங்கே விவசாய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் இருந்தாலும் அவற்றை இடித்து தள்ளவேண்டும்.
சீமைக் கருவேல மரம் உட்பட தேவையில்லாத மரங்களை வேரோடு களையெடுக்கவேண்டும்.
நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்.

நகரங்களில் வாழ்வோரை அவர்களது சொந்த ஊருக்கே திரும்பச் செய்யவேண்டும்.

முழுவீச்சில் இயற்கை விவசாயம் செய்யவேண்டும்.

நிர்வாகத்தில் மேலே நடுவணரசு,
அதன் கீழே மாவட்டம்,
அதன் கீழே வட்டம்,
அதன் கீழே ஊர்.

ஊர் என்பதன் எல்லை வரையறுக்கப்பட்டு அதன் தலைவர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஊரில் இருக்கும் எல்லாமே பகிர்ந்தளிக்கப்படும்.
வீடுகளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
அதாவது இரண்டு, மூன்று வீடு வைத்திருப்பவரிடம் ஒரு வீடு தவிர மற்றதை பிடுங்கி வீடில்லாதோருக்கு வழங்கவேண்டும்.
இரண்டு கடை வைத்திருந்தால் அதில் ஒன்று வேறொருவருக்கு வழங்கப்படும்.

ஊரின் விவசாய நிலத்தின் வரப்புகளை அகற்றி அவ்வூர் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

அந்த ஊரில் யாருக்கு என்ன தொழில் தெரியுமோ அதை பதிவு செய்து 'இவர் கொத்தனார்' 'இவர் விவசாயி' 'இவர் கடை வைத்திருப்பவர்' 'இவர் ஓட்டுநர்' 'இவர் பொறியாளர்' 'இவர் ஓவியர்' 'இவர் கால்நடை வளர்ப்பவர்'  என சான்றளிக்கவேண்டும்.
(எல்லா வேலைகளையும் கல்வியில் சேர்க்கவேண்டும்,
அதாவது விவசாயி என்பவர் அத்துறையில் படித்து பட்டம் பெற்றவராக இருக்குமாறு ஆக்கவேண்டும்)

அவ்வூரில் என்ன வேலைவாய்ப்புகள் இருக்கின்றனவோ அவை அம்மக்களுக்கே பகிர்ந்தளிக்கவேண்டும்.
விவசாயம் தெரிந்த அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து திட்டமிட்டு விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டும்.
வீடுகட்ட தெரிந்த அனைவரும் சேர்ந்து சங்கம் அமைத்து எங்கே எந்த கட்டிட வேலைகள் உண்டோ அதைப் பகிர்ந்து செய்யவேண்டும்.
இதே போல ஆசிரியர்கள், கடைக்காரர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் ஊர் ஊருக்கு சங்கம் அமைத்து வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டும்.
அனைவரும் தத்தமது ஊருக்காக தத்தமது வீட்டுக்காகவே வேலை செய்கின்றனர்.
எனவே ஈடுபாட்டுடன் வேலை செய்வர்.

(பெற்றோரின் தொழிலையே பிள்ளைகள் செய்ய எந்த கட்டாயமும் இல்லை.
அவரவர்க்கு எந்த தொழில் விருப்பமோ அதைச் செய்யலாம்.
சுத்தம் செய்ய தனியாக யாரும் கிடையாது.
தத்தமது வீடுகளை தாமே சுத்தம் செய்யவேண்டும்.
கடைகளிலும் தாம் பயன்படுத்தியதைத் தாமே சுத்தம் செய்யவேண்டும்.
பொது இடங்களை குப்பையாவதை  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுக்கவேண்டும்.
பொது இடங்களை சுத்தம் செய்ய மாணவர்களை சுழற்சிமுறையில் பயன்படுத்தலாம்)

எந்த தொழிலுக்கும் கருவிகள், பொருட்கள் வழங்குவது ஊர்தலைவர் பொறுப்பு.
அதாவது உழும் கருவி, புத்தகம், வாகனம், கால்நடைகள், உபகரணங்கள் என.

அனைவருக்கும் மாதந்தோறும் சேர்ந்த மொத்த வருவாய் ஊர் தலைவரால் பகிர்ந்தளிக்கப்படும் அதுவே சம்பளம்.
நடுவணரசு ஒரு வரித்துறை வைத்திருக்கும்.
அது இதையெல்லாம் கண்கானிக்கும்.
ஊர்தலைவர் ஆண்டு முடிவில் அத்துறையிடம் கணக்கு காட்டவேண்டும்.

என்ன உற்பத்தி செய்கிறோம்?
என்ன திட்டங்கள் செயல்படுத்துகிறோம்?
என்ன செலவு ஆனது?
ஊருக்கு வந்த வருவாய் என்ன?
அதை எவ்வாறு பகிர்ந்தளித்தோம்?
நடுவணரசு கேட்ட நிதி போக சேமிப்பில் எவ்வளவு வைத்துள்ளோம்?
என எல்லாமே பதிவு செய்யப்படும்.
ஊர் மக்களின் பார்வைக்கும் வைக்கவேண்டும்.

(தற்போதைய நிலை மொத்தமாக அரசிடம் பணம் கொடுத்துவிட்டு பிறகு தம் பகுதி அரசியல்வாதி மூலம் நிதி ஒதுக்க கோருவது என்றவாறு உள்ளது)

தலைவரைக் கண்கானிக்க நடுவணரசு அதிகாரி ஒருவர் இருப்பார்.
அவர் அந்த ஊருக்கு தொடர்பில்லாத ஊர்க்காரராக இருப்பார்.
இவர் ஆட்சியர் (கலெக்டர்) போல, தேர்வு மூலம் இப்பதவிக்கு ஆளெடுக்கலாம்.
தேவையானபோது ஆலோசனை வழங்குவார்.
நடுவணரசுக்கும் ஊருக்கும் பாலமாக இருப்பார்.

கடைகள் ஊர்தலைவர் பொறுப்பு.
விற்பனை செய்பவருக்கு சம்பளம் மட்டுமே.
கடையின் லாபம் ஊர் வங்கியில் சேரும்.
கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இருக்காது.
அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், வெல்லம் என அவ்வூரில் விளைந்த அத்தியாவசியப் பொருட்கள் அவ்வூர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
எந்த அத்தியாவசியப் பொருள் அவ்வூரில் இல்லையோ அது (நடுவணரசுக்கு தகவல் தெரிவித்து) அருகிலிருக்கும் ஊரிலிருந்து வாங்கப்பட்டு கடைகளில் விற்கப்படலாம்.

(ரேசன் கடை போலதான் இதுவும்.
ஆனால் விவசாயிக்கு குறைந்த விலை கொடுத்து மாநிலம் முழுவதும் மொத்தமாக கொள்முதல் செய்து அதில் திருடி கலப்படம் செய்து மாதக்கணக்கில் சேமித்துவைத்து தரம்கெடுத்து காலாவதியாக்கி பிறகு மக்களுக்கு பிச்சைபோடும் இன்றைய நிலை இருக்காது)

அத்தியாவசியமல்லாத பொருட்கள் எது வேண்டுமென மாதந்தோறும் வீடுவீடாக கணக்கெடுத்து அதை நடுவணரசுக்கு அனுப்பி வாங்கிக்கொள்ளலாம்.
அதாவது ஒரு ஊர் தாண்டிய வணிகம் நடுவணரசின் பார்வையில் இருக்கவேண்டும்.

ஊரில் தயாரிக்க முடியாதவை நேரடியாக நடுவணரசிடமிருந்து வாங்கவேண்டும்.
அதாவது ஒரு ஊர் கணக்கெடுத்து நடுவணரசிடம் சொல்லி 1000 டிவி வாங்கலாம்.

ஒரு ஊரின் அனைத்து பிரச்சனைகளும் ஊர்தலைவரே கவனிக்கவேண்டும்.
அவருக்கு உதவியாக பத்துபேரை நியமிக்கலாம்.
ஊரவை என்று அழைக்கலாம்.
இவர்களையும் தேர்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.
(ஊரில் 10% பேர் தலைவருக்கு எதிராக கையெழுத்து போட்டு புகாரளித்தால் அவர் மீது நடுவணரசு விசாரணை நடத்தப்படும்)

(பெரிய ஊராக இருந்தால் அதை இரண்டு மூன்று ஊர்களாகப் பிரிக்கலாம்.
மக்கட்தொகையை அளவீடாகக் கொள்ளலாம்)

ஒரு ஊருக்கு பாலம், சாலை, பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், காவல்நிலையம், விளையாட்டு மைதானம், பொதுவாகக் கூடுமிடம், திரையரங்கு, நூலகம், அரசு அலுவலகம், வழக்கு மன்றம், நீதி மன்றம், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை, விவசாய ஆராய்ச்சி மையம், திருமண மண்டபம், திருவிழா என எல்லாவற்றையும் அவ்வூர் மக்களே நிதி திரட்டி அவ்வூர் மக்களே கட்டிக்கொள்ளவேண்டும்.
மருத்துமனையில் மருத்துவரும் காவல்நிலைய காவலர்களும்
பள்ளிக்கூட ஆசிரியரும் அவ்வூர் மக்களே முடிந்தமட்டும் இருத்தல் வேண்டும்.
(நீதி வழங்கும் பதவிகள் வெளியாட்கள் இருக்கலாம்)

ஊர் பெயரை தமது பெயருடன் சேர்த்து பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கலாம்.
அதாவது சாதிக்குப் பதிலாக ஊர்.
(தந்தையின் ஊரை அடையாளமாக பயன்படுத்தலாம்)

ஊர் மாறினாலும் அடையாளப்பெயரை மாற்றவேண்டிய அவசியமில்லை.
ஆனால் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு (மணமான பெண்கள் தவிர) குடிபெயர்ந்தால் தகுந்த காரணம் கூறவேண்டும்

அவ்வூரின் வருவாய் மற்றும் வரிகள் அவ்வூரின் சேமிப்பு வங்கியிலேயே இருக்கும்.
ஊருக்கென்று தனியாக ஒரு வார இதழ் நடத்தப்படும்.

ஊர்மக்கள் முடிந்தவரை அவ்வூரிலேயே வாழவேண்டும்.
பிழைப்பு தேடி வேற்றிடம் செல்வதோ குடிபெயர்வதோ முடிந்த அளவு தடுக்கப்பட வேண்டும்.
ஊரே காவல்நிலையம் கட்டி ஊரின் இளைஞர்களே காவல்துறையாக இருப்பர்.
இவர்கள் மாவட்ட தலைவரின் பொறுப்பில் இருப்பார்.
மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய வேலை காவல்துறையை இயக்குவதே.

தமிழர்நாட்டு நடுவணரசின் முக்கிய வேலைகள் இராணுவத்தை பராமரிப்பது மற்றும் தகவல் தொடர்பு ஏற்படுத்துவது மட்டுமே.
(இராணுவத்திற்கு எல்லையோர ஊர் மக்களுக்கு முன்னுரிமை)

இது போக சுற்றுலா, ஆராய்ச்சி துறை, திரைப்படத் துறை, பெரிய தொழிற்சாலைகள், நீண்டதூர போக்குவரத்து என ஒரு ஊரால் முடியாதவை நடுவணரசின் கீழ் வரும்.
அதற்கு என்ன செலவு ஆகுமோ அதை கணக்கு செய்து நடுவணரசு அறிவிக்கும் அந்த செலவை ஊர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக நடுவணரசு ஒரு நெடுஞ்சாலை போடவேண்டுமானால் அச்சாலை செல்லும் ஒவ்வொரு ஊர் தலைவரிடமும் அனுமதி வாங்கவேண்டும்.
பிறகு நிதி பெற வேண்டும்.
சாலையை அமைப்பதும் பராமரிப்பதும் அந்த அந்த ஊரின் பொறுப்பு.

ஒரு அணை கட்டவேண்டுமானால் அந்த அணையால் எந்த ஊர்கள் நன்மையடைகின்றனவோ அவற்றிடம் அனுமதி வாங்கவேண்டும்.
நிதி வாங்கவேண்டும் பிறகு அவ்வூர் மக்களை வைத்தே கட்டித்தர வேண்டும்.

இதே போல மின் உற்பத்தி நிலையம், தொழிற்சாலை, சிறைச்சாலை, என ஒரு ஊரால் தனியாக முடியாததை பல ஊர்கள் அல்லது ஒரு வட்டார ஊர்கள் சேர்ந்து செய்யலாம்.
எந்த ஊர்கள் சேர்ந்து திட்டத்தை செய்கின்றனவோ அவை நடுவணரசுக்கு தகவல் தந்து இசைவு பெற்று பிறகே செய்துகொள்ளவேண்டும்.

ஒரு பல்கலைக் கழகம் அமைக்க அந்த வட்டார ஊர்களே நிதி தரவேண்டும்.
(அப்பல்கலையில் அவ்வட்டாரத்தில் என்ன தொழில் அதிகமோ அதை கற்றுத்தரவேண்டும்.
வேளாண் கல்லூரி, சிற்பக் கல்லூரி, கடல்வளம் என )
அது எந்த ஊரில் கட்டப்படுகிறதோ அந்த ஊர் அதை பராமரிக்கவேண்டும்.
வட்டார போக்குவரத்து அவ்வட்டார ஊர்களே நிதி திரட்டி பேருந்துகள் வாங்கி அவ்வூர்களின் ஓட்டுநர்களை அமர்த்தி அந்த அந்த ஊராரே பேருந்துநிலையம் கட்டி பராமரிக்கவேண்டும்.

ஆனால் முழு நாட்டையும் இணைக்கும் போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து,  கடல்வழிப் போக்குவரத்து ஆகியன நடுவணரசு பார்த்துக்கொள்ளும்.

ஊர்கள் அதாவது குடியிருப்புகள் இல்லாத பகுதிகள் (காடு, கடற்கரை, பொட்டல்) வட்டார அரசின் பொறுப்பில் இருக்கும்.
அல்லது அருகாமை ஊர்கள் அப்பகுதியை பகிர்ந்துகொள்ளலாம்.

இரண்டு ஊருக்கிடையே போடப்படும் ஒப்பந்தம் முறையாக பதிவு செய்யப்படவேண்டும்.
ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் பிரச்சனை வந்தால் அதை அவ்வட்டார ஊர்த்தலைவர்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும்.
வட்டார பேச்சுவார்த்தையில் பிரச்சனை தீர்க்கமுடியாவிட்டால் வட்டார நீதிமன்றத்தில் (உயர்நீதி மன்றம்) சட்டப்படி வழக்கு போடவேண்டும்.
அங்கும் தீராவிட்டால் (உச்சநீதி மன்றம்) கொண்டுசெல்லலாம்.

நீதிமன்றங்கள் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பணிச்சுற்றல் (ஷிப்ட்) முறையில் ஆண்டுக்கு 360 நாட்களாவது இயங்கும் (8-2, 2-8).

தமிழகத்தில் ஏறத்தாழ 15,500 ஊர்கள் (கிராமங்கள்) உள்ளன.
தமிழகம் இழந்த பகுதிகள் மற்றும் ஈழம் சேர்த்து அமையும் தமிழர்நாட்டில் கிட்டத்தட்ட 30,000 ஊர்கள் இருக்கும்.

ஆண்டுதோறும் சிறப்பான தனிமனிதருக்கு சங்கம் விருதளிக்கும்.
சிறப்பான சங்கத்திற்கு ஊர் விருதளிக்கும்.
சிறப்பான ஊருக்கு நடுவணரசு விருதளிக்கும்.

இது ஒரு அடிப்படை சிந்தனைதான்.
இதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் வரலாம்.

இது தற்போதைய நடைமுறையை விட மிக சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் தமிழகத்தில் பழங்கால முறை இதுவே.
எந்த ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் அது அரசின் உச்ச தலைமையை பாதித்ததே ஒழிய இந்த ஊர்முறையை பாதிக்கவில்லை
(நாயக்கராட்சி வந்து நிலவுடைமை சமூகத்தை உருவாக்கி சுரண்டலை ஆரம்பிக்கும் வரை).
இன்றும் கூட பல சிற்றூர்கள் இவ்வடிப்படையில் இயங்கிவருகின்றன.

ஊர்தலைவர் பழைய ஜமீன்தார் போல ஆதிக்க சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
தேர்தல்முறை அதனை ஓரளவு தடுக்கமுடியும்.
ஊர்தலைவர் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது இருமுறை தலைவராக இருந்தவரோ அவரது வாரிசுகளோ மூன்றாவதுமுறை ஆக இயலாது என்றவாறு.

மக்களின் அன்றாட வாழ்க்கை அடிப்படை நேர்மையையும் புரிந்துணர்வையும் சார்ந்தே இயங்குகிறது.
ஒரு நாடு இயங்குவது சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அரசமைப்பின் அடிப்படையிலோ இல்லை.
சொல்லப்போனால் முதலமைச்சராக, பிரதமராக இருப்பவர் ஒவ்வொரு துறையையும் பற்றி தெரிநாதவர் கிடையாது.
நாடு தானே இயங்குகிறது.
ஒருங்கிணைப்பு மட்டும்தான் இவர்கள் வேலை.

ஆக மக்களின் புரிந்துணர்வு எப்படி ஒரு பெரிய ஊர்த்திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்கிறதோ அதே போல உள்ளூர் திட்டங்களை மக்கள் நடத்திக்கொள்ள முடியும்.

சுருக்கமாக,
ஒவ்வோரு ஊரிலும் ஒவ்வொரு வளம் இருக்கும்.
வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பும் அதைப் பயன்படுத்த மனிதவளமும் இருக்கும்.
இதை மக்கள் பயன்படுத்தி தன்னிறைவாக வாழமுடியும்.
ஊர்கள் சேர்ந்தே நாடு உருவாகிறது.
ஊர் தன்னிறைவு பெற நாடும் தன்னிறைவு பெறும்.

வளர்ந்த நாடுகள் சட்டங்களால் வளர்ந்தன அல்ல.

மக்களின் சிந்தனையையும் செயலையும் மேம்படுத்தியதாலேயே வளர்ந்தன.

No comments:

Post a Comment