வியட்நாம் பாண்டியன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான் !
அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர் ஸ்ரீமாறன்.
தமிழில் இதை திருமாறன் என்று
சொல்லலாம் .
வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி , ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை .
கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியட்னாமில் வோ- சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION ) இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை ) கல்வெட்டு குறிப்பிடுகிறது .
பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன .
கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன.
கல்வெட்டின் சில வரிகள் :-
. . . . . .. . ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . . . . . . . . . . .
ஸ்ரீ மாற லோ. . . . . ன. . . .. . . . குலதந்தனேன
க்ராபதிம் ஸ்வகன. . .. .. ச . . . . . . . .. .. ..
இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும் , அசையா சொத்து (ஸ்தாவர , ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான்.
எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான் .
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . . . .. . .என்று பாதியில் முடிகிறது கல்வெட்டு.
இதில் முக்கியமான சொற்கள் “ஸ்ரீமாற ராஜகுல ” என்பதாகும் .
இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது .
ஆனால் வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது .
திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN ) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY ) சீனாவை ஆண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா ’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர் .
சம்பா (CHAMPA ) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும் .
மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU ) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN ) என்றும் எழுதிவைத்துள்ளனர் .
இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO ) புதல்வன் என்றும் தெரிகிறது .
தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர் .
கி .பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது .
ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது .
ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி ’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை .
எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN ) என்று முடிவதால் இதை ‘ வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர் .
ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது .
இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் "ஸ்ரீமாறன்", "வர்மன்" என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன .
இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் "மூலவர்மன்" என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் 800 க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய ’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு ) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன :-
(1 ) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன் .
அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர் .
இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம் .
(2 ) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி )
ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம் .
பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.
(3 ) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க காலமன்னன் "நிலந்தரு திருவில் பாண்டியன்" என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது .
பல நாடுகளை வென்று தந்ததால் “நிலந்தரு” “ திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் .
(4 ) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்துமுறை ‘ மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் "முடித்திருமாறன்" .
நற்றிணை 105 , 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன் .
(5 ) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன .
அகத்தியர் “ கடலைக் குடித்த ” கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “ கடலைக் குடித்தார் ” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “ குல குரு ” என்றும் கூறுகிறது .
(6 ) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன் ,
பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6–61 )
(7 ) புறநானூற்றுப் பாடல் (புறம் 182 ) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “ கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி .
இவன் வெளிநாடு செல்லும்போதோ , வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.
(8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி .பி . முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர் .
(9 ) தென் இந்தியாவை கி .மு இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது .
(10 ) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன .
(11 ) ‘ மிலிந்த பன்ன ’ என்ற கி . மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம் , குஜராத் , சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது .
(12 ) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன .
அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன .
ரோம் (இத்தாலி ) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே !
Reference :
(1 ) R. C . MAJUMDAR - CHAMPA : HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985 .
(2 ) SANGAM LITERATURE –
ETTUTHOKAI & PATHUPPATTU
(3 ) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL
VARALATRU KAZHAGAM ,
MADRAS 1967.
நன்றி : லண்டன் சத் சங்கம் செய்தி மடல் .
- ச . சுவாமிநாதன்
www.eegarai.net/t108461-topic
Saturday, 29 August 2015
வியட்நாம் பாண்டியன்
Thursday, 27 August 2015
புலிகளும் இசுலாமியரும்
புலிகளும் இசுலாமியரும்
புலிகள்-இசுலாமியர்கள் கூட்டறிக்கையில் இருந்து
*முஸ்லீம்கள் தமிழ்த் தேசிய இனத்தில் தனித்துவமான கலை, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்ட இனக்குழு
*முஸ்லீம்களின் நிலம்தான் அதிகம் பறிபோயிருக்கிறது.
எனவே எமது மண் மீட்பு போராட்டம் முஸ்லீம்களின் உரிமைக்குரலையே முதன்மைப் படுத்துகிறது
*வடக்கு-கிழக்கு இணைந்த தாயகத்தில் முசுலீம்கள் 18%.
மாகாண சபையில் 30%க்கு குறையாமல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
அரசு நிலப்பங்கீடு முஸ்லீம்களுக்கு
கிழக்கு மாகாணத்தில் 35% குறையாமல்,
மன்னார் மாவட்டத்தில் 30% குறையாமலும்,
ஏனைய வட மாவட்டங்களில் 5% குறையாமல் காணி வழங்கப்படும்.
*பல்கலைகழகம் வரை முஸ்லீம்களுக்கு பிரத்யேக வசதிகள் தரப்படும்
*இசுலாமியப் பல்கலைக் கழகம் நிறுவப்படும்
*வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படவில்லை எனில் அம்மாகாண சபையின் துணை-முதலமைச்சராக ஒரு முஸ்லீம் நியமிக்கப்படுவார்
இவை புலிகளும் இசுலாமியத் தலைவர்களும் செய்துகொண்ட உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்தான்.
மேலும் பல சலுகைகள் புலிகளால் இசுலாமியருக்கு வாக்களிக்கப்பட்டன.
1988ல் சிங்கள அரசுடனான புலிகளின் அதிகாரப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ராஜீவ் காந்தியின் முன்னிலையில் நடக்கவிருந்தது.
அப்போது அதிகாரப் பங்கீட்டில் இசுலாமியர் பங்கு பற்றி விவாதிக்க இசுலாமியத் தூதுக்குழு ஒன்று 'பக்ருதீன் முகமது' தலைமையில் சென்னை வந்து புலித்தளபதி 'கிட்டு'வை சந்தித்தது.
இருதரப்பினரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மேற்கண்ட அம்சங்கள் இருந்தன.
அதாவது 18% உள்ள இசுலாமியருக்கு 30% அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு அவ்வொப்பந்தம் கையெழுத்தானது.
மேற்கண்ட ஒப்பந்தமானது புலிகளுடனான இசுலாமியரின் இணக்கத்தை மேலும் அதிகமாக்கியது.
கிறித்தவருக்கு இல்லாத முக்கியத்துவம் இசுலாமியருக்கு ஏன்?
தமிழ் மக்களிடமிருந்து தமிழ்இசுலாமியரைப் பிரிக்கும் முயற்சி ஆங்கிலேய ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது.
கிறித்துவ, சைவ சமயங்களைப் பின்பற்றும் தமிழர்களைப் பொதுவாக "தமிழர்" என்றும்
பௌத்த, கிறித்துவ சமயங்களைப் பின்பற்றும் சிங்களவரைப் பொதுவாக "சிங்களவர்" என்றும்
ஆங்கிலேயர் குறிப்பிட்டனர்.
ஆனால் தமிழர்களான இசுலாமியர்களை அவர்கள் வெறுமனே "முஸ்லீம்" என்று குறிப்பிட்டனர்.
மூன்று இனங்கள் என்று பகுத்து இசுலாமியரை ஏனைய தமிழரிடம் இருந்து பிரித்து வகைப்படுத்தினர்.
இது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம் ஆகும்.
வடயிந்தியாவில் இது நன்றாக வேலை செய்தது.
தெற்கே அதுவும் தமிழரிடம் இது வேலை செய்யவில்லை.
தந்தை செல்வா(கிறித்தவர்) காலத்திலும் இசுலாமியர் தனியாகப் போராடவில்லை.
தமிழரோடு தமிழராகத்தான் போராடினர்.
இசுலாமியப் பகுதிகளில் தந்தை செல்வாவின் கட்சி வாக்குகளைப் பெற்றது.
"இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்" என்ற கட்சி மிகவும் பிற்பாடு 1981ல் தான் தொடங்கப்பட்டது.
அதுவும்கூட பரவலான ஆதரவைப் பெறமுடியவில்லை
(இதைத் தொடங்கிய அஸ்ரப் 2000ம் ஆண்டு சிறிலங்காவால் மர்மமான முறையில் வான்'விபத்தில்' கொல்லப்பட்டார்).
புலிகள் தலையெடுத்ததும் அதுவரை 'முஸ்லீம்' என்று ஏடுகளில் குறிப்பிடப்பட்ட பெயரைத் திருத்தி 'இசுலாமியத் தமிழர்' என்றே குறிப்பிடத் தொடங்கினர்.
இவ்வளவு நெருக்கமாக இருந்த புலிகள்-இசுலாமியர் உறவு எப்படி சரிந்தது?
புலிகளையும் இசுலாமியரையும் எதிரிகளாக சித்தரிப்பவர்கள் இரண்டு முக்கிய சம்பவங்களைக் கூறுகிறார்கள்.
ஒன்று யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம்.
மற்றொன்று காத்தான்குடி படுகொலை.
இவற்றை கூர்ந்து நோக்குவோம்.
புலிகள்-இசுலாமியர் ஒற்றுமையைக் கெடுக்க நினைத்த சிங்கள அரசு சில பொறுக்கி்களைத் தேர்ந்தெடுத்து,
அதில் இசுலாமிய பொறுக்கிகளை 'ஊர்க் காவல் படை' என்ற பெயரில் உருவாக்கி ஆயுதம் கொடுத்து சைவ,கிறித்துவ தமிழர்களைத் தாக்கச் சொன்னது.
இதே பொறுக்கிகளில் இசுலாமியர் அல்லாதோரை அப்பாவி இசுலாமிய மக்களைத் தாக்கச்சொன்னது.
இசுலாமியர் மீதும் ஏனைய தமிழர்மீதும்
ஒருவர் மீது ஒருவர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்கள் பட்டியல் நீளமானது.
சிங்கள ஊடகங்கள் இசுலாமியர் தமிழரைத் தாக்குவதாகவும்
பதிலுக்கு புலிகள் இசுலாமியரைத் தாக்குவதாகவும் செய்திகளைப் பரப்பின.
இதன் தொடர்ச்சியாக 1990ல் அம்பாறையில் கலவரம் மூண்டது.
சிங்கள அரசின் ஆதரவுடன் இசுலாமியரல்லாத தமிழர்கள் மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டு பலர் விரட்டியடிக்கப்பட்டனர்.
இசுலாமியர் மீதும் தாக்குதல் நடந்தது.
யாழ்ப்பாணத்திலும் கலவரம் மூளும் சூழல் உருவாகிறது.
இந்த நேரத்தில்தான் புலிகள் தவறான முடிவொன்றை எடுக்கின்றனர்.
அதாவது குறைந்த அளவில் இருக்கும் இசுலாமியரை அங்கே இருந்து வெளியேற்றி சூழ்நிலை சரியானதும் திரும்ப அழைத்துக்கொள்ளலாம் என்று தமது வரலாற்றுப் பிழையான முடிவை தலைவர் எடுக்கிறார்.
(தலைவர் பிற்காலத்தில் இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்).
கலவரம் வரும் என்று அவசர அவசரமாக இசுலாமியர்கள் பொருட்கள் எதையும் எடுக்கவிடாமல் ஆங்காங்கே கூட்டப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுகிறார்கள்.
வரலாற்றுப் பிழைகள் எல்லா தலைவர்களின் வரலாற்றிலும் உண்டு.
ஐந்து வருடம் கழித்து 1995ல் யாழ்ப்பாணத்தின் அத்தனை தமிழர்களையும் தலைவர் வெளியேற்றினார்.
இதைப் போன்ற ஒரு முடிவுதான் யாழ் இசுலாமிய வெளியேற்றமும்.
ஆனால், இது தவறான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(இந்த நிலையில்தான் தமிழகத்தில் அப்துல் ரவூப் என்ற தமிழ்இசுலாமியர் யாழ் அகதிகளை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று முதன்முதலாக ஈழத்திற்காகத் தீக்குளிக்கிறார்)
யாழ் இசுலாமியரை திரும்ப அழைத்துவர புலிகள் அளித்திருந்த வாக்குறுதி இந்த யாழ் வெளியேற்றத்தால் நிறைவேறாமல் போனது.
இரண்டாவது காத்தான்குடி படுகொலை.
காத்தான்குடி பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் சிங்கள ராணுவ முகாமின் பாதுகாப்புடன் முழுக்க முழுக்க இலங்கை அரசின் பாதுகாப்பில் இருந்த பகுதி.
இங்கே மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த அப்பாவி மக்களை புலிகள் சீருடை அணிந்த ஒரு குழு ஆயுதங்களுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டு மக்களைக்கொன்றது மட்டுமல்லாமல் ஒருவர்கூட பிடிபடாமல் தப்பிவிட்டனர்.
புலிகள் மீது பழிபோட்டது சிங்கள அரசு.
புலிகள் மறுத்துவிட்டனர்.
புலிகள் சிங்கள மக்களையே கூட இவ்வாறு தாக்கியதில்லை.
இது அரசாங்கம் திட்டமிட்டு நடத்திய படுகொலை.
(முதல் பள்ளிவாசல் படுகொலையானது 1976ல் புத்தளம் வணிக சாலையை இலங்கை அரசு சிங்களப் பகுதிவழியே திருப்பியபோது
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பொத்துவில் பள்ளிவாசலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்ததது.
சிங்கள போலீஸ் ஒரு முஸ்லீம் ஏ.எஸ்.பி தலைமையில் 9பேரைக் கொன்றுபோட்டது)
மேற்கண்ட இரண்டும் தமிழ்இசுலாமியரை புலிகளுக்கு எதிராகத் திருப்ப சிங்கள அரசு செய்த திட்டமிட்ட சதி ஆகும்.
புலிகளுக்கு கிடைத்த இசுலாமிய ஆதரவானது குறைந்ததே ஒழிய
சிங்கள அரசின் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை.
வடக்கு-கிழக்கு இசுலாமியர் தங்கள் ஆதரவை புலிகளுக்கு தொடர்ந்து வழங்கினர்.
(புல்மொட்டை என்ற இசுலாமிய சிற்றூர் புலிகளுக்கு அதிகமான போராளிகளைக் கொடுத்துள்ளது).
சில முஸ்லீம் தலைவர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு சிங்கள அரசு அவர்களுக்கு சலுகைகள் வழங்கி புலிகளை விமர்சிக்கவைத்து
அதன்மூலம் ஒட்டுமொத்த இசுலாமியரும் புலிகளை வெறுப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இலங்கை முழுவதும் வாழும் தமிழ்இசுலாமியர்கள் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
கல்வியறிவும் மிகவும் குறைவு.
இலங்கை அரசோ அல்லது அதோடு ஒட்டிக்கொண்டு பிழைக்கும் இசுலாமிய தலைவர்களோ அம்மக்களுக்கு யாதொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
சில சலுகைகளை அளித்து புலிகளுக்கு எதிராக அவர்களை பயன்படுத்தவே நினைக்கிறார்கள்.
புலிகளின் போராட்டமானது இசுலாமியநாடான வங்கதேச விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டது.
புலிகள் "பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்" (லெபனான் நாட்டில்) பயிற்சி கூட பெற்றுள்ளனர்.
இசுலாமியர்கள் மீது வெறுப்பைக்காட்ட அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை.
புலிகள் நடத்திய முதல் போரில் முதல் களப்பலி ஜுனைத்தின் என்ற தமிழ்இசுலாமியர்தான்.
ஜின்னா, அக்பர், பசீர், இம்ரான், அன்சார், ரகுமான் போன்ற மூத்த போராளிகள் பலர் இருந்தனர்.
நியாஸ், டானியேல், மஜித் போன்ற எத்தனையோ இசுலாமிய மாவீரர்கள் புலிகளாக மரித்துள்ளனர்.
இம்ரான் பாண்டியன் என்ற படையணி கூட இருந்தது.
பல இசுலாமியரல்லாத போராளிகளுக்கு கடாபி, அக்பர், சல்மான், அப்துல்லா போன்ற இசுலாமியப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இசுலாமியப் போராளிகளுக்கு இசுலாம் சாராத பெயர்கள் தரப்பட்டிருந்தன.
(1987ல் குப்பி கடித்து இறந்த 12 புலிகளில்
கேணல் அப்துல்லாவின் உண்மையான பெயர் நகுலராசா.
கேப்டன் ரகுவப்பாவின் உண்மையான பெயர் ரகுமான்).
இருந்தாலும் இது குறைவுதான்.
அரசியலிலும் ஆயுதப்போராட்டத்திலும் இசுலாமியத் தமிழர்கள் முழுமையாக இறங்காததே இதற்குக் காரணம்.
2009 ஈழப் படுகொலைக்குப் பிறகு நிலை முற்றிலும் மாறிவிட்டது.
ஈழத்தில் வாழும் இசுலாமியர்களில் புலிகளை எதிர்ப்போரும் புலிகளை ஆதரிப்போரும் சரிசமமாக உண்டு.
ஆனால் தமிழுணர்வு இல்லாத தமிழ்இசுலாமியரோ
சிங்களரை விரும்பும் தமிழ்இசுலாமியரோ இல்லை.
தமிழகத்தில் புலிகளை வெறுக்கும் தமிழ்இசுலாமியர் கிடையவே கிடையாது.
தமிழகத்தில் முதன்முதலாக ஈழ ஆதரவு கூட்டத்தை சென்னை சீரணி அரங்கில் நடத்தியவர் ஒரு இசுலாமியர்தான்.
தமிழரை சாதியாக மதமாக பிளவுபடுத்தும் அரசியல் என்றும் வெற்றிபெற்றதில்லை.
சில பிழைப்புவாதிகள் தங்கள் காலத்தை ஓட்டத்தான் இதைச் செய்கின்றனர்.
இசுலாமிய தமிழ்ச் சிறுமி அப்பாவி ரிசானாவை நடுவீதியில் தலையை வெட்டிக் கொன்ற சவுதி அரேபிய மக்களுக்கு இல்லாத இசுலாமிய உணர்வு இங்கே தீவிரமாக வலியுறுத்தப்படுவதில் நியாயமில்லை.
தமிழ்இசுலாமியரை தமிழரிடமிருந்து தனிமைப் படுத்தி தங்கள் பிழைப்புக்கு வழிதேடும் சில தமிழக இசுலாமிய மதவாதிகள் இதைப் புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது.
Monday, 24 August 2015
நாடார்-மறவர் மோதலின் தொடக்கம்
நாடார்-மறவர் மோதலின் தொடக்கம்
நாயக்க ஆட்சி தென்தமிழகத்தில் வலுவிலக்கவும்
அதுவரை வேளாண்மையிலும் காவலிலும் நன்கு பயிற்சியிருந்த மறவர் பாளையக்காரர்களாக உருவெடுத்தனர்.
பார்ப்பன, வேளாள சமூகங்களுக்கு அடுத்ததாக வளமான நிலங்கள் இவர்கள் கைவசம் இருந்தன.
விவசாயத்தில் பயிற்சியில்லாத நாடார்கள் ஆற்றுப்படுகைக்கு வெளியே வறண்ட நிலங்களை பெருமளவில் வாங்கி கிணற்றுப் பாசனம் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பனைத்தொழில் செய்து பொருளாதாரத்தில் மேலெழுந்தனர்.
1885 நவம்பரில் கமுதியிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் திருவிழா நடக்கவிருந்தது.
வழிபாடு நடத்த கோவில் நிர்வாகத்திடம் நாடார்கள் அனுமதி கேட்டனர்.
கோவில் அறங்காவலரான ராமநாதபுரம் அரசர் பாஸ்கரசேதுபதி திருவிழா நடத்த அனுமதி அளித்தார்.
ஆனால், நாடார்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று விதித்தார்.
அதுவரை அப்படி ஒரு கட்டுப்பாடு அக்கோவிலில் இல்லை.
நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1897ல் மே மாதத்தில் திடீரென்று இந்த பிரச்சனை முற்றிப்போய் நாடார்கள் சிலர் துணிச்சலுடன் குழுவாகத் தீவட்டிகளுடன் கோவிலுக்குள் நுழைந்தனர்.
கருவறைக்குள்ளேயே நுழைந்து பூசை செய்தனர்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் பாஸ்கரசேதுபதி தலைமையில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய தடைவிதிக்கவேண்டும் என்றும்
கோவிலைச் சுத்தப்படுத்த செலவுத் தொகை ரூ 2500 வழங்கவேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.
இதன்பிறகு 1899 ல் நடந்தது சிவகாசிக் கலவரம்.
தென்காசியிலும் கலவரம் மூண்டது.
கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆங்கிலேய நீதிமன்றம் 1899 ஜூலை 20ம் தேதி
நாடார்கள் சமூக தகுதிநிலை குறைந்த மதிப்பீட்டில் இருக்கிறது என்றும்
அதை அவர்கள் தாண்டிசென்றுவிட்டனர் என்றும்
நாடார்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது.
குற்றம்சாட்டப்பட்ட நாடார்களுக்கு கோவிலை புனிதப்படுத்த ரூ500 அபராதமும் விதித்தது.
சட்டப்படி எதையும் பார்க்கும் நீதிமன்றமே இப்படி தீர்ப்பை வெளியிட்டதை மறவர்களே எதிர்பார்க்கவில்லை.
உடனடியாக நாடார்கள் தமிழகம் முழுவதும் ரூ4200 நிதி திரட்டி வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றனர்.
அங்கேயும் நாடார்களுக்கு எதிரான தீர்ப்பே வழங்கப்பட்டது.
நாடார்கள் ஆங்கில அரசின் உச்சநீதிமன்றமான லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தனர்.
1908ல் நாடார்களுக்கு எதிரான தீர்ப்பையே ஆங்கிலேய உச்சநீதியும் வழங்கியது.
இதை குருட்டுவாக்கில் இரு சாதிகளுக்கிடையேயான வெறுப்பாக பார்க்காமல் இதன்பின்னால் இருக்கும் அரசியலை உற்றுநோக்குவோம்.
நாடார்கள் மிகமோசமாக ஒடுக்கப்பட்டது இன்றைய கேரளாவின் தென்பகுதி மற்றும் கன்னியாகுமரியை உள்ளடக்கிய திருவாங்கூர் சமஸ்தானத்தில்தான்.
இது பரவலாக அனைவருக்கும் தெரியும்.
அதற்கு வடக்கே நாடார்கள் மீதான ஒடுக்குமுறை என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.
இந்த வழக்கு நடைபெற்றபோதுகூட தஞ்சாவூரிலும் சிதம்பரத்திலும் நாடார்கள் வழிபாடுகளையும் விழாக்களையும் நடத்தியுள்ளனர்.
திடீரென்று கமுதியில் கோவிலில் நுழைய தடைவிதிக்கப்பட்டது எந்த அடிப்படையும் இல்லாதது என்று நாடார்கள் வாதிட்டனர்.
சிதம்பரம் கோவிலின் தீட்சிதரை அழைத்துவந்தனர்.
அவர் சிதம்பரம் கோவிலில் நாடார்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சாட்சி கூறினார்.
1872ல் கூட திருவைகுண்டம் கோவிலில் நாடார் நுழைய தடைவிதிக்க ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.
எந்த அடிப்படையும் இல்லையென்று அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையெல்லாம் மீறி தீர்ப்பு நாடார்களுக்கு எதிராக வர ராமநாதபுர அரசர் மறவர்களை விட்டு நீதிபதியை மிரட்டினார் என்று ஜி.எஸ்.பிரைஸ் என்ற வெள்ளையன் பயனீர் நாளிதழுக்கு கடிதமாக எழுதி அதை வெளியிடச்செய்தார்.
(26 ஜூன் 1897).
இதையடுத்துதான் கலவரம் மூண்டது.
கிறித்துவ மிசனரிகள் நாடார்களை ஏற்கனவே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தன.
1899ல் பெரிய கலவரம் நடந்து ஓயவும் சரியாக ஆங்கிலேய நீதிமன்றம் அநியாயமான முதல் தீர்ப்பை வழங்கியது.
முதல் தீர்ப்பு ராமநாதபுரம் அரசர் செய்தவேலை என்பது உண்மையென்றே கொண்டாலும்
லண்டனிலும் அதே தீர்ப்பு வந்ததே.
பாஸ்கர சேதுபதி லண்டன் வரை மறவரை தூண்டி மிரட்டல் விடுத்திருக்கமுடியாதுதானே.
இதன்விளைவாக நடந்தது என்ன?
கூட்டம் கூட்டமாக நாடார்கள் கிறித்துவத்தைத் தழுவினர்.
(இதற்கான முதல் அடித்தளம் திராவிடத் தந்தையான கால்டுவெல்லால் போடப்பட்டது.
1849ல் "திருநெல்வேலி சாணார்கள்" புத்தகத்தை கால்டுவெல் எழுதினார்.
நாடார்கள் மீது பல்வேறு இழிவுகளைச் சுமத்தி எழுதியிருந்தார்.
1881ல் "History of Tennevelli" என்ற புத்தகத்தை எழுதிய கால்டுவெல் மீண்டும் நாடார்களைப் பற்றி தரக்குறைவாக வரலாற்றைத் திருத்தி எழுதினார்.
இதனால் கொதிப்படைந்து மிரட்டல் நாடார்களுக்குப் பயந்து தலைமறைவும் ஆனார்).
அதாவது தாமிரபரணி ஆற்றின் பாசனப் பகுதியில் ஆற்றுப்படுகையில் மறவரும், ஆற்றின் நிலத்தடி நீர் கிடைக்கும் வறண்ட நிலத்தில் நாடாரும் தொழிலின் காரணமாக நிலைபெற்றிருந்தனர்.
இவ்விரு நிலைகளுக்கும் இடையேயான நிலங்களைக் கைப்பற்றுவதில் போட்டி ஏற்படுகிறது.
இதுதான் மறவர்-நாடார் மோதலின் மிகச் சிறிய அளவிலான முதல் ஆரம்பம்.
மறவர்-நாடார் மோதல் எங்கே ஆரம்பித்தது என்றுகூட இப்போது பலருக்கும் தெரியாது.
போட்டியில் வெற்றி தோல்வி என்றுகூட எதுவும் இல்லை.
மழைநன்றாகப் பெய்தால் மறவர்களுக்கு பெரிய வருமானம்.
மழைபொய்த்தால் பெரிய இழப்பு.
நாடார்களுக்கு எப்போதும் கிடைக்கும் நிலத்தடி நீர்.
குறைவான ஆனால் நிலையான வருமானம்.
மதவாதிகள் தங்கள் பங்குக்கு தூண்டிவிட்டனர்.
கிறித்துவ மதகுருக்கள் நாடார்களையும்
கோவில் பூசாரிகள் மறவர்களையும் ஆதரித்தனர்.
போட்டி என்றோ முடிந்துவிட்டது.
ஆனால் அப்போதே முடிந்திருக்கவேண்டிய சண்டையானது, ஆக்கிரமிப்பு வெள்ளையருக்கும், மதவாத போட்டிகளுக்கும், கட்சி அரசியலுக்காகவும் இன்றுவரை தொடர்கிறது.
இது நீறுபூத்த நெருப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இது மீண்டும் எப்படி தொடங்குகிறது பாருங்கள்.
காங்கிரஸ் மிதவாதம் தீவிரவாதம் என்று இரண்டாக உடைகிறது.
பிறகு காந்தி-நேதாஜி மோதலானது.
பிறகு காங்கிரஸ்-பார்வர்டு ப்ளாக் மோதலானது.
பிறகு காமராசர்-முத்துராமலிங்கனார் மோதலானது.
பிறகு பள்ளர்-மறவர் மோதலானது.
இது இன்று மள்ளர் இயக்கங்கள்-திராவிடக் கட்சிகள் மோதலாக முற்றிலும் வேறுவடிவம் பெற்றுள்ளது.
ஆகவே தமிழரே,
நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் மாற்றான் வந்து மூக்கை நுழைக்கும்வரை அது பெரிய மோதலாக வெடித்ததில்லை.
நாம் நமக்குள் மோதிக்கொள்வது எதிரிகளுக்கும் வந்தேறிகளுக்கும்தான் நன்மையில்போய் முடியும்.
இனியேனும் அரசியல் பார்வையுடன் சிந்தித்து செயல்படுவோம்.