என் தாய் எனக்கு வேண்டும்
_____ ______ ______ ______ ______
எல்லாவற்றையும் மக்கச்செய்யும் மண் விதையை மட்டும்
முளைக்கச்செய்வதே இயற்கையின்
அறிவுக்கு எடுத்துக்காட்டு
இது யாரோ எழுதியது; நீங்கள் மறுத்தாலும் சரி நான்
கூறுவதுதான் உண்மை; மாந்தர் அனைவரும்
இயற்கையை நேசிக்கின்றனர்; அதனோடேயே கழித்துவிடத்
துடிக்கின்றன; எனக்கு மட்டும்தான் இந்த உணர்வா?! நான்
எங்கேயோ பணத்துக்காக ஊழியம் செய்பவன்; நான் பிறந்த
மண்ணுக்கு வந்திருக்கிறேன்; நான் பிறந்த மண்; என்
சொந்த மண்; என் தாய் நிலம்; இந்த மண் சுரந்த நீர்தான் என்
உடலில் ஓடும் குருதி; இந்த மண் விளைவித்த
பயிர்களும் விலங்குகளும்தான் என் உடலில் இருக்கும்
தசை; இந்த மண் தந்த மரங்கள் கொடுத்ததுதான் என்
நுரையீரல் உள்ளிழுத்த மூச்சு வேறு எந்த மண் தந்த
நீரும், பயிறும், விலங்கும் என்
உடலோடு ஒட்டுவதில்லை; இந்த
மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் என் தாய் தந்தையர்; இந்த
மண்ணோடு கலந்துவிட்டவர்தான் என் மூதாதையர்; இந்த
மண்ணில் கையூன்றிதான் நான் நடைபழகினேன்; இந்த
நிலம்தான் ஆறுகளையும் அருவிகளையும்
உற்பத்தி செய்து என் உடலைத் தூய்மையாக்கியது;
என்னை சூலுற்று, பெற்றெடுத்து, பால் கொடுத்து,
உடல்வளர்த்து, கழிவு நீக்கி, அறிவு புகட்டி,
கலவி தந்து, வாரிசு தந்து, முதுமை தந்து, மரணம்
தந்து மீண்டும் தனக்குள் உள்வாங்கிக்கொள்வதும் இந்த
மண்தான்; மாந்தன்
இயற்கையோடு இருக்கவே விரும்புகிறான்; நான்என்
தாயோடு அணைய விரும்புகிறேன் இதில் என்ன தவறு?! ;
வெயில்காலத்தில் ஒரு வேப்பமர நிழல் தரும்
இன்பத்தை மாளிகைக்குள்ளே விலையுயர்ந்த
குளிரூட்டியால் தரமுடியுமா? அதோ பாருங்கள்;
குருவிகளும், கிளிகளும் பாட்டுப்
பாடிக்கொண்டே குடியிருக்கும், காற்றில்
அசைந்தாடும், இலைகளையும் பூக்களையும் பழங்களையும்
உங்கள் உச்சந்தலையில் போட்டு வரவேற்கும் இந்த
நெடிதுயர்ந்த மரங்களைப் பாருங்கள்;
கட்டிக்கொண்டு தலைசாய்க்க உங்கள் மனம் வரவில்லையா?!
காற்றில் கலையும் தலைமுடியைப் பற்றி கவலைப்படாமல்
குழந்தைப்பருவ
நண்பனோடு பேசியபடி ஆற்றுக்கு செல்லும் சாலையில்
வண்டியிருந்தாலும் இறங்கி மெல்ல காலார
நடந்துசென்றது கிடையாதா?;
செருப்பை உதறி எறிந்துவிட்டு புல்தரையில்
வெறும்பாதத்துடன் நடந்து கால்வலித்ததும்
பொத்தென்று மல்லாக்க விழுந்தது உண்டா? புல்மேயும்
ஆடுகளும், ஈரவயல்களில் வாத்துக்களும், ஆற்றங்கரையில்
கொக்குகளும், மரப்பொந்துகளில் அணில்களும், தெளிவான
நீரில் மூழ்கியபடி ஊர்ந்து செல்லும் தண்ணீர்பாம்புகள
ும், குயில்களும், மைனாக்களும், மரங்கொத்திப்
பறவைகளும், சிட்டுக்குருவிகளும் தமது அன்றாட
நடவடிக்கைகளாலேயே உங்களுக்கு மட்டற்ற
உவகையை அளிப்பதில்லையா?! என் தாய் மண் இதில் என்
முகமும் மரபணுவும் ஒத்துப்போகும் என் மூதாதையர்
எத்தனை சரியாக பயன்படுத்தி வழிவழியாக
கைமாற்றி இன்று என்கையில் கொடுத்துவிட்டுச்
சென்றுள்ளனர்; ஆற்றோர இடுகாட்டில் ஏதோவொரு சாதிக்
கொட்டகையில் எரியூட்டப்பட்டு ஆற்றோடு போடப்பட்ட என்
மூதாதையரின் எலும்புத் துண்டுகள்
மூழ்கி நீந்தும்போது என் காலில் இடறி சொல்லவரும்
செய்தி என்ன?!
என் குலக்கொழந்தே!
நாங்கள் பெற்ற கோமானே! நம் தாய் மண்ணடா இது!
இதில்தான் நாங்கள் இருக்கிறோம்!
இதை பத்திரமாக காக்கவேண்டியது உன் பொறுப்படா என்
செல்வமே!
ஆம்; என் மூதாதையர் செய்தி யார்காதிலும்
விழவில்லை; எல்லோரும் மாற்றானுடன் சேர்ந்து என்
தாயை அடிக்கின்றனர்;
இப்போது குளிக்கும்போது காலில் இடறுவது உடைந்த
சாராய புட்டிதான்; மாற்றான் கையில் என் தாய்மண்
சிக்கிக்கொண்டது; ஆற்றுமண்ணையெல்லாம்
அள்ளுகின்றனர்; ,தொழிற்சாலைக் கழிவையெல்லாம்
கொட்டுகிறார்கள்; மதத்தின் பெயரால் அசுத்தம்
செய்கின்றனர்; மக்காத பொருட்கள் மண்டிப்போய்
கிடக்கின்றன; சந்தன மரங்களையும் தேக்குமரங்களையும்
வெட்டிவிட்டு தீவைத்து காட்டுத்தீயில்
கருகிவிட்டதாகக் கணக்கெழுதுகின்றன; காட்டுப்
புலியின் காலுக்கு கண்ணிவைத்து வாய்க்குள்
கத்தி பாய்ச்சிக்
கொலைசெய்து தோலை சேதமின்றி உரித்து விற்கிறார்கள்;
காட்டுக்குள் சிறுஅருவிகளை 'முக்கிய நபர்
அருவி'யாக்கினார்கள்; யோகாசனம் செய்பவனெல்லாம்
காட்டுக்குள்ளே மண்ணுக்கு மொட்டையடித்து அந்த
மொட்டைத்தலையில் கட்டடம் எழுப்பி வெளிநாட்டுப்
பெண்களோடு யோகாசனம் செய்கிறான்; காலம் காலமாக
காட்டுக்குள்ளேயே இயற்கையோடு இயற்கையாக
முழுமையான வாழ்க்கை வாழும் என்
சொந்தங்களை ஒழித்துகட்டத் தொடங்கிவிட்டனர்;
மண்ணுரிமைக்காகவும் நீர்உரிமைக்காகப் போராடும் என்
மக்கள் அடிக்கப்படுவதும், சுடப்படவதும்,
குண்டு எறிந்து கொல்லப்படுவதும், கலவரத்துக்கும்,
இனப்படுகொலைக்கும் ஆளாவதும் தொடர்கதையாகிவிட
்டது; காற்றில் கரியமில வாயுவை உயரமான
புகைபோக்கிகள் மூலமும், கலப்பட எரிபொருளைச்
செறித்துக் கக்கும் வாகனங்கள் மூலமும், வேதியியல்
பொருட்கள் மூலமும் கலந்துவிடுகின்றனர்;
பணவெறி முற்றி மண்ணையும் பாறைகளையும்
குடைந்து தாது எடுக்கின்றனர்; வயல்வெளிகளில்
நச்சு உரத்தைத் தெளித்து மண்புழுவையும் மனித
உயிர்களையும் கொல்கின்றனர்; மரபணு மாற்றப்பட்ட
காய்கறிகளை விதைத்து கொள்ளை பலன் அடைய
நினைக்கின்றனர்; பயிர்விளைந்த இடங்களில் வீடுகள்
முளைத்துவிட்டன; கதிரியக்க ஆலையைக் குளிர்விக்க
குடிநீரைச் செலுத்தி அதை சூட்டோடு கடலில்
விட்டு மீன்களையும் கொல்கின்றனர்; என் சொந்தங்களுக்கெல
்லாம் புற்றுநோய்; என் உறவினருக்கெல்லாம் வறுமை; என்
நண்பருக்கெல்லாம் வெளியூரில்தான் வேலை; என்
உடன்பிறந்தவனெல்லாம் குடிகாரன்; என்
பிள்ளைகளெல்லாம் திரைப்படப் பைத்தியம்;
என்னை ஈன்றெடுத்த என் தாய்மண்ணே என் உயிர் சமைத்த
அன்னை நிலமே உன்னைக் காக்கமுடியாது போனேனே;
எத்தனை எத்தனை தலைமுறைகளை நீ சுமந்தாய்
உன்னை தாங்க இன்று நாதியில்லையே; மாற்றான்
படுக்கையில் உன்னைப்போட்டு மதுவில் மூழ்கிக்
கிடந்தேனோ?! கலைந்த பின்னே ஏங்குகிறேன்
இது கனவாயிருத்திடக்கூடாதோ?!
சீராட்டி என்னை வளர்த்தாயே,அம்மா உன்னை சீரழிக்க நான்
விட்டேனோ?!
கண்ணீரைத் துடைத்துவிடுகிறேன் அது பயனற்றது;
விழிகளில் சிவப்பைப் படரவிடுகிறேன்
இதுவே விடிவுதரும்;
என் தாய் எனக்கு வேண்டும்;
என் மண் எனக்கு வேண்டும்;
நான் அவளை மீட்கப்போகிறேன்; இனியும் பொறுப்பதற்கில்ல
ை; நஞ்சுக்கொடி அறுந்ததும் பிஞ்சுக்குழந்தைபோல் என்
தாய்மண்ணின் மார்பில் சேரத்தான் போகிறேன்; என்
மண்ணுக்கும் எனக்கும் தொப்புள்கொடி இன்னும்
அறுபடவில்லை; என் தாயை எவனும் பெண்டாள
விடமாட்டேன்; உலகமே குருதியில் நனைந்தாலும் என்
முடிவு மாறாது; ஒரு பிடியளவேனும் என் மண்ணை நான்
மீட்கத்தான் போகிறேன்; என் உயிர் போனால் போகட்டும் என்
உடல் அதன் தாயிடம் போய்ச்சேர்ந்தால் போதும்; நீங்கள்
யாரும் வரவிட்டாலும் சரி; நான் மீண்டும் மீண்டும்
பிறப்பெடுப்பேன்; கிருமியாக ,புழுவாக,
பூச்சியாக, பூரானாக, புலியாக என்
தாய்மண்ணிலிருந்து வெளிவந்து என் குடிகெடுத்த
கொடியவர்களைப் பழிவாங்காமல் விடமாட்டேன்;
என் தாய்மண் தன்னை மீட்க அழைக்கிறதே அது என்
காதுகளில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
என் மகனே என்னை அழைத்துச்செல்லடா!
இந்த நாசக்காரர்களுக்கு நீ யாரென்று காட்டடா!
நான் ஊட்டிய முலைப்பால் உன் உடலில் தீர்ந்துபோனதா?!
நீயும் என்னைக் கைவிட்டுவிட்டாயா?!
என்னை வேசியாக்கி வேடிக்கை பார்க்கலாமா
நான் உன் தாயடா தாய்,
வெறும் மண்ணல்ல....
https://m.facebook.com/photo.php?fbid=417624481674544&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
Friday, 1 August 2014
என் தாய் எனக்கு வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment