Friday 11 October 2024

ஆய்த பூசனை

ஆய்த பூசனை

19.10.2018 அன்றைய பதிவு 

சங்ககாலத்தில் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது.
அதியமானின் தோழியான ஔவை போரைத் தவிர்க்கும் பொருட்டு தொண்டமானிடம் தூது போகிறாள்.
தொண்டைமான் தனது ஆயுத சாலையைப் பார்வையிட அழைத்துச் செல்கிறான்.

அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்து ஒரு ஔவை பாடல் பாடுகிறாள்.

"இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே  அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே"
(புறநானூறு -95)

இலக்கணம் பற்றி படிக்கும்போது பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணியில் நீங்கள் இதை ஏற்கனவே படித்திருக்கலாம்.

அதாவது ஔவையார் தொண்டைமானைப் பார்த்து,
இங்கே ஆயுதங்கள் எல்லாம் (துருவேறாமல் பாதுகாக்க) எண்ணெய் பூசப்பெற்றுத்
அழகுக்காக ஆயுதக் குவியல்களின்மீதும் அடுக்குகளின்மீதும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டு
ஆயுத வரிசைகளின்மேல் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு மினுமினுப்பாக அழகாகத் தெரிகின்றன.
அங்கே அதியமான் ஆயுதங்களோ ஓய்வே கிடைக்காமல் போரில் பயன்படுத்தப்பட்டு எப்போதும் பழுநீக்கத்திலேயே கிடக்கின்றன"
என்று கூறுகிறார்.

இதன் மூலம் அதியமான் தன்னைவிட பெரிய வீரன் என்று உணர்ந்த தொண்டைமான் அவனுடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடுகிறான்.

ஆம். ஆயுதங்களை அலங்கரித்து மரியாதை செய்வது (வணங்குவது அல்ல) தமிழர் பண்பாடு ஆகும்.

இதற்கு ஒரு விழாவும் இருந்துள்ளது.
அதன் பெயர் வாண்மங்கலம் (வாள்+மங்கலம்).
இது வாளுடை விழவு என்றும் அழைக்கப்பட்டது.

"மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது (புறத்திணையியல், 30, பாடாண் திணை)

"கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"
என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
(223, பாடாண் படலம்)

"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).

பதினாறாம் நூற்றாண்டு வாழ் புலவரான "காசிக்கலியன் கவிராயர்" என்பவர் எழுதிய "வீரபாண்டியன் வாண்மங்கலம்" என்னும் நூலின் பெயரை தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

புதுக்கோட்டை சமஸ்தான ஆவணமும் இப்புலவர் இயற்றிய வீரபாண்டியன் வாண்மங்கலம், வீரபாண்டியன் குடைமங்கலம், வீரபாண்டியன் நாண்மங்கலம் ஆகிய சிற்றிலக்கியம் பற்றி கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட நூற்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

"பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி"
என்று 5 ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் கூறுகிறது.

இந்த திருமுறை பாடலில் "மா நவமி" என்று அழைக்கப்படும் ஒன்பதாம் நாளான மங்கல விழாவிற்கு முன் அரசின் போர் யானையை நீராட்டி விழா எடுத்து கொண்டுவரப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்காலத்தில் புரட்டாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை பெண்-தெய்வ வழிபாடு செய்யபடுகிறது.
இதன் ஒன்பதாவது நாள்தான் ஆயுத பூசை.
இதற்கான தயாரிப்பாகவே (இப்போது வாகனங்களைக் கழுவி மாலைபோட்டு அலங்கரிப்பது போல) யானை நீராட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளது.

பத்தாவது நாள் விஜய தசமி இது வெற்றி விழா ஆகும்.

போரில் வெற்றி பெற்றவுடன் வென்ற மன்னன் தன் வாளுக்கு அபிசேகம் செய்து வெற்றியைக் கொண்டாடுவது அக்கால வழக்கம் (வாளுடை விழவு).
இதிலிருந்து விஜய தசமி வந்திருக்கலாம்.

வாளை வழிபடுவது போல அம்பு எய்வதற்கும் ஒரு விழா உள்ளது.
அன்று வன்னிமரம் அல்லது வாழைமரம் நோக்கி அம்பு எய்துகாட்டும் சடங்கு நடக்கிறது.

தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
(அகநானூறு 187)

மழவர் கொண்டாடிய இத்திருவிழா பல நாட்கள் நடந்துள்ளது.
அதில் முக்கியமான தலைநாள் அன்று நகரம் முழுவதும் புதுமணல் பரப்பியிருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

இவ்விழா பூந்தொடை அல்லது பூந்தொடு எனும் பெயரில் இன்றும் வேட்டுவர் (வேட்டுவக் கவுண்டர்) சமுதாயத்தால் புரட்டாசி திருவோணம் அன்று கொண்டாடப் படுகிறது.

மேற்கண்ட தரவுகளிலிருந்து நமக்குத் தெரிவன,
1) ஆய்த பூசனை தமிழர் விழாவே!
2) வெற்றிவிழா தமிழர் விழாவே!
3) பூந்தொடை தமிழர் விழாவே!
4) இன்று அவை பெயர் மாறியும் மத சடங்குகளாகவும் திரிந்து விட்டன.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விழாக்கள் தொடரவேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஆயுதபூசை தொழில் ரீதியாக பயனுள்ளதாக உள்ளது.
தொழிலகம், கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி பேணி அலங்கரித்து வைக்க அந்நாள் பயன்படுகிறது.

எனவே தொழில்கூடங்களில் அனைத்து தமிழரும் ஆயுத பூஜையைத் தொடர்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

Tuesday 8 October 2024

விஜய் தெலுங்குபதி

விஜய் தெலுங்குபதி

 "தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்" என்று கூறிய விஜய் சேதுபதி உண்மையில் ஒரு தெலுங்கர்!

 சேதுபதி எனும் தமிழர் குடிப் பட்டம் சேர்த்துக்கொண்டு ஏமாற்றுகிறார்.

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

26.09.2017 அன்றைய பதிவு

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

 2016 ஏப்ரலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் பேசினார் ஜெ. அப்போது சேலத்தில் 3 பேரும் விருத்தாசலத்தில் 2 பேரும் என 5 பேர் வெயிலில் தாக்கத்தால் இறந்தனர்!
 அப்போதும் வெயில் உச்சத்தில் இருந்த நேரம்!
 ஹெலிகாப்டர் தரையிறங்க பிரத்யேகமாக தளம் அமைக்கப்பட்டு அதில் ஜெ இறங்கி மேடையில் பத்து கூலர்கள் மத்தியில் அமர்வார் ஆனால் மக்கள் காலையிருந்து வெயிலில் காத்திருப்பர்!
 உயிரிழப்பு 5 பேர் மயங்கி விழுந்தவர்களோ 30  பேருக்கும் மேல்!
 இதையடுத்து கண்டனங்கள் குவிந்தன!
 பாமக ஜெ மீது கொலை வழக்கு பதிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரியது!
அதன்பிறகு தான் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் நடத்தினார்!

 இன்று மெரினாவில் அலட்சியத்தால் திமுக கொன்றது 5 உயிர்கள் என்றால் அன்று அதிமுக கொன்றதும் 5 உயிர்கள்தான்!
 இரண்டும் வேறு வேறு இல்லை!

 1992 இல் கும்பகோணம் மகாமகம் சென்று நெரிசல் உண்டாக்கி 60பேர் உயிரைக் குடித்தவர் ஜெயலலிதா என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.
 
 

Monday 7 October 2024

அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம்

அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம் 

 தி.மு.க தமிழ்தேசியம் பேசித்தான் ஆட்சிக்கு வந்தது!
 அண்ணாதுரை தனிக் கட்சி தொடங்கியதும் தமிழ்தேசிய கூறுகளை மட்டும் வைத்துக் கொண்டு திராவிட கூறுகளை கை கழுவி விட்டார்.
 திராவிடம் என்ற பெயரில் தமிழ்த் தேசியம் தான் பேசினார்!

  1949 இல் தி.க  விலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்தபோது அன்று ஈவேரா கூறிவந்த மக்களுக்கு ஒவ்வாமல் இருந்த வரட்டு நாத்திகம், கண்மூடித்தனமான பார்ப்பன வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டார்!
 தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, மதுவிலக்கு ஆகியவற்றை  முதன்மைக் கொள்கைகளாகக் கைக்கொண்டார்!

 1957 இல் முதல் தேர்தலிலேயே காமராசர், இராஜாஜி, ஈவேரா என்ற மூன்று பெரும் ஆளுமைகளைத் தாண்டி 14% வாக்கு பெற்றார்.

  அவர் பேசிய தமிழ்தேசியமும் அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கொள்கையும் தான் அவரை 1962 இல் 27% வாக்குபெற்று எதிர்க்கட்சியாக உயர்த்தியது (அப்போது அண்ணாதுரை நின்ற சொந்த தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றுவிட்டார். இதிலிருந்தே அவர் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவர் என்பதை அறியலாம்).

 1967 இல் 77% வாகுகள் பெற்றபோது அவரது முதன்மை வாக்குறுதிகளில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் ஒன்றாகும்!
 தான் தெலுங்கர் என்றாலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக நெடுஞ்செழியன் என்ற தமிழரைத் தான் முன்னிறுத்தினார். 

 அண்ணாதுரை வென்றதற்கு காரணம் தமிழர்களிடம் எப்போதுமே இருக்கும் 'இந்திய எதிர்ப்பு' மனநிலை மற்றும் 'தனிநாடு' அடையும் வேட்கை!

 வெற்றிக்காக மேலும் சில சமசரங்கள் செய்தார் என்பதும் வென்றபிறகு கொள்கைகளை எல்லாம் கைவிட்டார் என்பதும் உண்மை! 

 அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க நெடுஞ்செழியன் கைக்கு வந்தது!
 ஆனால் அவரை சதி செய்து வீழ்த்தி தமிழரல்லாதவர் கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

 பிறகு எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கிய போது பெயருக்கு மட்டுமே அதில் திராவிடம் இருந்தது! 
 மற்றபடி அது முழு தமிழர் கட்சியாக இருந்தது!
 புலிகளை வளர்த்துவிட்டது! 
 எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அதுவும் நெடுஞ்செழியன்  கைக்கு வந்தது.
 இப்போதும் தமிழரல்லாதார் அதை அபகரித்துக் கொண்டனர்.

 தமிழர்கள் எப்போதுமே தமிழ்தேசியத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
  நீதிக் கட்சி 'சொத்துள்ளவர்கள் மட்டும் வாக்களிக்கும் முறை' இருந்தபோது வென்றது ஏனென்றால் தமிழகத்தில் நிலவுடைமையும் செல்வமும் வந்தேறிகள் கையில் பெரும்பாலும் உள்ளது!
 ஈவேரா ஆதரித்த கட்சியோ நபரோ ஒருமுறை கூட தேர்தலில் வென்றதே இல்லை! 
 எவர் வென்றாலும் அவர்தான் தாவி ஒட்டிக்கொள்வார்!
 தோல்வியே காணாதவர் என்று கூறப்படும் கருணாநிதி இருந்தவரை திமுக ஒரே ஒருமுறை தவிர்த்து பெரும்பாலும் தோல்வி அல்லது மைனாரிட்டி ஆட்சி என்றுதான் இருந்தது!
 
 வாக்குப்பதிவு இயந்திரம் வந்தபிறகு தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை வராதபடி எப்போதும் நடக்கிறது!

 இப்போதும் குளறுபடிகள் இல்லாத தேர்தல் நடந்தால் தமிழ்தேசியம் பேசும் கட்சிதான் வெல்லும்! 
 

குலக்கல்வி என்ற அவதூறு

குலக்கல்வி என்ற அவதூறு

ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்,
1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டுவந்தார்.
2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்.

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டுவந்தார் என்பது.
அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச்  செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.
உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது.
அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை. அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.
Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
ஆசிரியர்கள் அப்போது குறைவு. புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.
அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணிநேரமாக பிரித்துக்கொடுப்பதுதான் திட்டம்.
சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.
இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.
மூன்றுமணிநேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.
இராஜாஜி "மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம்" என்று கூறினாராம்.
இதை அண்ணாதுரை பிடித்துக்கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்று பார்ப்பனர் இராசாசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.
இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று தாமே பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர். 
இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால்தான் இந்தத் திட்டமே அறியப்படுகிறது.

6000 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.
அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்துவந்தது.
இத்தகைய அமைப்புகள் அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த தெலுங்கு பகுதிகளில் அதிகம் இருந்தன.
அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.
அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.
ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 6000 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.
அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்துவருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர்.திரு.ஜெயமோகன்
---------------
அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.
எடுத்துக்காட்டாக,
அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.
உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.
25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த தமிழகத்தில்  திராவிடம் வந்து மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.

09.04.2016 அன்றைய பதிவு

Wednesday 2 October 2024

காந்தியை உருவாக்கியது தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள் காந்தியை உருவாக்கிய தமிழர்கள் காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார். இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே. ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே. அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம், தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம், கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன. மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன. ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர். ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர். இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர். அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம். தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம். சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள். மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000. பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000. ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000. ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000. ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000. கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500. அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர். ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர். அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது. காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர். ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். மக்களுக்காகப் போராடியவர். காந்திக்கு முன்னுதாரணம் இவரே. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை, பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான். தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான். தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான். ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார். வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி. வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார். தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே. மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது. அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம், ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது. ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது. காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர். காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார். 1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார். இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர். துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர். (ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!) 1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார். அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது. ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது. ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர். ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார். இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார். ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின. 1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார். இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார். 1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார். 1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்). இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர். பெரிய போராட்டம் தொடங்கியது. ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர். ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது. சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே. ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான். தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது. இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது. இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி. நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார். அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை. சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார். அப்போது அவருக்கு வயது 16. மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர். கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது. இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர். காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள். 1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர். 1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார். அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்! லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர் கைதாயினர். அதில் 4 பேர் தமிழர்கள். ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர். சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார். தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு. அவர் தம்பி நாயுடு. 8 முறை சிறை சென்றவர். அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது. ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர். இவர் 4 முறை சென்றவர். சொத்துகள் அனைத்தையும் இழந்தவர். செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர். வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி, காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி, மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை, ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர். அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும் நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார். வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை. 1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும் 1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன. மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே. இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும். ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே. 26.05.2017 அன்றைய பதிவு படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்

Monday 30 September 2024

வரலாற்றை நிறுத்திய வந்தேறிகள்

வரலாற்றை நிறுத்திய வந்தேறிகள்!

 வரலாறு ஒரு சக்கரம் போன்றது. 
 தமிழர் வரலாறு ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை (இமயம் வரை) ஆதிக்கம் செலுத்துவதாக சுழலும் (அப்படியே ஜெர்மனி போல).
 கரிகாலன் இமயத்தைக் குடைந்த ஆயிரம் ஆண்டு கழித்து ராஜேந்திரன் இமயம் வரை ஆண்டான். அதிலிருந்து ஆயிரம் ஆண்டு ஆகி தற்காலம் தமிழர்கள் அந்த எழுச்சிக்கு தயாராக இருந்தோம்.

 இதற்கு ஆரம்ப அடிப்படை  தேவையான கருத்தியல் சிந்தனைகள் தோன்றியிருந்தன.
 தனிநாடு, அகன்ற தமிழர்நாடு, குமரிக் கண்டம் போன்ற நிலம் சார்ந்த சிந்தனையும் நம்மிடம் வந்துவிட்டது. 

மாநில அதிகாரம், இந்திய அரசியலில் ஆதிக்கம், ஈழம், புலிகள், வீரப்பன், ஆயுதக் குழுக்கள், மும்பை முதல் மலேசியா வரை நிழலுலக ஆதிக்கம், உலகளாவிய குடியேற்றம், பொருளாதார பெருக்கம்,  மொழி வளர்ச்சி என நாம் 1980 - 2000 காலவாக்கில் ஏறத்தாழ பாதி வெற்றி அடைந்திருந்தோம்.

 நியாயப்படி நாம் 2009 இல் ஈழம் அடைந்து அவ்வழியே தமிழகத்தை ஆயுதப் புரட்சி மூலம் விடுதலை செய்து எல்லைகளை விரிவாக்கி சிங்களத்திற்கு பதிலடி கொடுத்து இந்நேரம் நம் தாய்நிலத்தில் ராணுவ பலத்துடன் தன்னாட்சியுடன் இருந்திருக்க வேண்டும்.
 இதன் விளைவாக தேசிய இனங்கள் எழுச்சி பெற்று அடுத்த கால் நூற்றாண்டில் (சோவியத் போல) இந்தியா உடைந்து தென்னிந்திய இனங்களின் நாடுகள் கூட்டாட்சி உருவாகி அதன் ஆதிக்கம் இமயம் வரை பாகிஸ்தான் வரை பரவியிருக்கும் (ஐரோப்பிய யூனியன், நேட்டோ போல).
 அடுத்த கால் நூற்றாண்டில் (அன்று கம்யூனிசம் போல) உலகின் மூலை முடுக்கெல்லாம் தேசிய இனங்களின் எழுச்சியும் பெரிய நாடுகள் உடைந்து புதிய நாடுகள் தோன்றுவதும் நடந்து உலகையே வழிநடத்தும் சக்தியாக நம் தமிழர்நாடு இருந்திருக்கும்!

 ஆனால் இது எல்லாமே மண் கோட்டை போல இடிந்துவிழுந்தது!
காரணம் வடுக சதி, அதன் நீட்சியான வந்தேறிகள், அதன் மையமான கருணாநிதி குடும்பம்!
 கருணாநிதி என்கிற கொடூர நரி வரலாற்று சுழற்சியையே நிறுத்தி விட்டான் என்றால் அது மிகையில்லை. 
 தமிழக முதலமைச்சர் பதவியை கைப்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று எல்லாவற்றையும் இழந்து ஈழம் அழிந்து, மக்கட்தொகை குறைந்து, தொடர்ந்து சுரண்டப்பட்டு, மண்வளங்கள் கொள்ளை போய், வாழ வக்கில்லாமல்,  தண்ணீருக்கு பிச்சை எடுத்து கண்டவனிடம் உதை வாங்கும் நிலையில் நிற்கிறோம்.

 ஆயுதம் ஏந்திய அத்தனை பேரும் கொல்லப்பட்டு தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்கள் நாதியில்லாமல் நல்ல சாவு கூட வாய்க்காமல் அழிந்து அடையாளமின்றி போய்விட்டார்கள்.

 கால சுழற்சி படி நாம் வல்லரசாக இருந்து கடலில் இறங்கி குமரிக் கண்டத்தை மீட்டு உலக கடற்கரை நகரங்கள் நமதே என்று நிறுவி இருந்திருக்க வேண்டும்.

 எதுவுமே நடக்காமல் போய்விட்டது!
இன்று தமிழினம் மிகவும் பரிதாப நிலையில் தற்கொலை செய்யப்போகும் ஒருவன் போல சோர்ந்து நிற்கிறது.

 அருண் மொழி ராஜராஜ சோழனும் சடையவர்மன் சுந்தர பாண்டியனும் அமர்ந்த அரியணையில் இன்று அவர்களின் கால்தூசு தேறாத அந்நியரெல்லாம் அமர்ந்துள்ளது மிகவும் வேதனை!

 இந்த இனத்தைப் பார்க்கையில் விரக்தியாகவும் இதன் வரலாற்றைப் படிக்கும் போது நம்பிக்கையும் ஏற்படுகிறது!
 இன்று தமிழர்களாக இருப்போர் அன்றைய மானத் தமிழர்களை சத்தமில்லாமல் இரவோடு இரவாக கொன்று புதைத்துவிட்டு அவர்களைப் போல வேடமிட்டு தமிழர்களாகிவிட்ட வந்தேறிகளோ என்று ஐயம் கூட வருகிறது.

 இருந்தாலும் எனக்கு நூறாண்டுகள் கழித்து ஒரு தகப்பன் தன் மகனுக்கு நம் இனம் இவ்வளவு இழிநிலையில் இருந்தோம் என்று கூறினால் அவன் அதை நம்பாமல் நகைப்பான் என்று ஏன் தோன்றுகிறது?!

06.10.2023 அன்றைய பதிவு மெருகேற்றி