Thursday, 15 January 2026

சல்லியர்கள் விமர்சனம்

 சல்லியர்கள் விமர்சனம்

 தமிழ் தேசிய திரைப்படம் எடுப்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்தேசியர்கள் நீங்கள் மேதகு 2 போன்று ஒரு படம் எடுத்தாலும் அதை பார்க்கத்தான் போகிறோம்.
 ஆதரிக்க தான் போகிறோம்.
 ஆனால் பெருவாரியான பொதுமக்கள் திரைப்படத்தை ஆதரிப்பதற்கு சில விடயங்கள் முக்கியம்!
அப்போதுதான் திரைப்படம் லாபம் ஈட்டும்!
 சல்லியர்கள் திரைப்படபானது குறைந்த பட்ஜெட், அரசியல் ரீதியான அழுத்தங்கள், டார்கெட்டட் ஆடியன்ஸ் குறைவு என அனைத்தையும் தாண்டி எடுக்கப்பட்டது என்பதை நன்கு அறிவேன்.
  இந்த படத்தை எடுத்தவர்களை அவர்களது துணிச்சலுக்காக நான் மிகவும் பாராட்டுகிறேன்!
  கீழே வரும் எனது விமர்சனம் படத்தை பார்க்காதவர்களை பெரிதாக பாதிக்காது!
ஸ்பாய்லர் சிறிது கூட வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதோடு படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்!
 நான் தி.கிட்டு அவர்களின் அடுத்த படைப்பை இன்னமும் மெருகேற்றும் வகையில் தான் இந்த விமர்சனத்தை முன்வைக்கிறேன்!
 அவர் விரும்பாவிட்டால் உடனே நீக்கவும் தயாராக இருக்கிறேன்! 

 ஒரு திரைப்படத்தின் நோக்கம் என்பது ஒரு விடயத்தை ஆவணப்படுத்தி வைப்பது என்று புரிந்து கொண்டால் அது தவறு என்று நான் கூறுவேன்.
  ஒரு திரைப்படம் வெற்றி பெற அந்தத் திரைப்படத்தின் மூலம் மக்கள் புதிதாக எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.
 அப்போதுதான் அந்த படம் வெற்றி பெறும்.
 உதாரணத்திற்கு 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
 அது ஏன் என்பது பலருக்கு புரியாது.
 அப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் அதில் அவர்கள் மக்கள் தெரிந்து கொள்ள புதிய பல செய்திகளை சேர்த்திருந்தது தான்.
 அதாவது கம்ப்ளைன்ட் இல்லாமலும் போலீஸ் ஒரு மொட்டை கடிதாசியை தாங்களே எழுதி ஒரு விடயத்தை கேஸ் ஆக்க முடியும் என்கிற தகவல்,
 மணல் கடத்தும் ஒருவனை ஒரு போன் கால் மூலம் ஒரு லட்சம் அபராதம் கட்ட வைக்க முடியும் என்கிற தகவல்,
 கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு துறை மூலம் மீட்கலாம் என்கிற தகவல்,
 துப்பாக்கி வைத்துக் கொள்ளும் ஒருவர் அதற்கு காவல் நிலையத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிற தகவல்,
 விளையாட்டாக நடத்தப்படும் ஒரு சங்கம் காவல்துறை மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற தகவல்,
 18 வயது நிரம்பாத ஒரு பெண்ணின் திருமணத்தை தான் யார் என்று வெளியே தெரியாமலேயே ஒருவர் நிறுத்த முடியும் என்கிற தகவல்,
இப்படி ஒரு சாதாரண காமெடி படத்திலேயே இத்தனை தகவல்களை கொடுத்திருக்கிறார்கள் என்றால் ராணுவம், போலீஸ், மருத்துவம் போன்ற துறைகளை திரைப்படத்தில் காட்டும்போது அவர்கள் பயன்படுத்தும் யுத்திகள் வழிமுறைகள் போன்ற தகவல்களை அதில் சேர்க்க வேண்டியது அவசியம்.

  சல்லியர்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் தவறி விட்டதாக உணர்கிறேன்.
 ராணுவமும் மருத்துவமும் காட்டப்படும் இப்படத்தில் ராணுவ யுத்திகள் மருத்துவ யுத்திகள் புதிதாக எதுவும் காட்டப்படவில்லை.
 
 ஒரு ஆயுத இயக்கம் நடத்தும் ஒரு மருத்துவத்துறை....
 அதிலும் ராணுவ பகுதிக்குள் இருக்கும் ஒரு மருத்துவ முகாம்....
 அதிலும் அது பதுங்கு குழிக்குள் செயல்படுகிறது... என்றால் அதில் நிறைந்திருக்கும் சிக்கல்களையும் சவால்களையும் கூறி இருக்க வேண்டும் இல்லையா?!

 உதாரணமாக அந்த பங்கர் மின்சாரம் எப்படி பெறுகிறது அல்லது மழைக்காலத்தில் எப்படி சமாளிப்பார்கள் என்று காட்டி இருக்கலாம்.

  பிற போராளிகளுக்கும் மருத்துவம் படித்த போராளிகளுக்கும் என்ன வித்தியாசம் எத்தகைய சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன என்று காட்டி இருக்கலாம்.
 அல்லது சில மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்று கூறியிருக்கலாம்.

 திரைப்படத்தின் காலகட்டம் பற்றி தெளிவாக இல்லை 1990 களின் இறுதி என்று ஊகிக்க முடிகிறது.

 படம் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது, அன்றாட செயல்களை காட்டுவதுடன் வசனங்களைச் சேர்த்து கூட்டியிருக்கலாம். 

காதல் காட்சிகளிலும் இன உணர்ச்சி, மண் பற்று போன்றவை மட்டுமே பேசப்படுவது ஒட்டவில்லை.

 மருத்துவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு அரசு விவாதம் நடத்தும்போது அது ஒரு அரசுக்கு எத்தகைய பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்று விவாதிக்கப்பட வில்லை.

 மருத்துவ பிரிவு மீது எதிரிகளுக்கு ஏன் தனிப்பட்ட கோபம் என்று குறிப்பான காரணம் இல்லை 'காப்பாற்றப்பட உள்ள ஒரு ராணுவ வீரன் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு விடுவான் அதனால் பிழைப்பதற்குள் அவனை முகாமோடு சேர்த்து நாமே அழித்துவிடலாம்' என்று ஏதாவது லாஜிக் இருந்திருக்கலாம்.

எதிரி வீரனை அகற்றிவிட்டு அந்த இடத்தில் உயர்தர மருத்துவ போராளியை விட்டுவிட்டு போவது என்ன லாஜிக் என்று புரியவில்லை.

 ஒரு எதிரி வீரனை காப்பாற்றுவதால் இயக்கத்திற்கு என்ன நன்மை என்று காட்டியிருக்கலாம். அவனை திருத்துவார்களா அல்லது எதிர்தரப்பு பற்றிய தகவல்களை கூறவைப்பார்களா என்று எதுவும் காட்டப்படவில்லை.

வழக்கம் போல இந்த படத்திலும் இசை சத்தமாகவும் குரல் சன்னமாகவும் இருக்கிறது.
 இப்போது எல்லா படங்களிலும் ஒருவர் பேசுவது கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிகிறது ஆனால் குண்டூசி விழுவது கூட தெளிவாக கேட்கிறது இது ஏன் என்று புரியவில்லை.

மக்கள் 100% இயக்கத்திற்கு ஆதரவு தருகிறார்கள் என்பதும் இடிக்கிறது. சொற்ப மக்களாவது ஆயுத இயக்கத்திற்கு ஒத்துழைக்க மறுப்பார்கள் அதை இயக்கம் எப்படி சமாளிக்கிறது என்றும் காட்டியிருக்கலாம்.  

 உளவு அறிவது பற்றியும் வரவில்லை! 
இரு தரப்பும் எப்படி எதிர்தரப்பு நகர்வுகளை கணிக்கிறார்கள் என்று காட்டப்படவில்லை.

 தமிழ்தேசியவாதியாக எனக்கு ஒரு குறை.
படத்தில் தமிழகம் வரவேயில்லை.
 'தீவுக்கு அப்பாலும் நம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தமது அரசாங்கத்தை மீறி உதவுகிறார்கள்' என்று ஆரம்ப காட்சியில் படகுகள் பொருட்களைக் கைமாற்றும் இடத்தில் கூறியிருக்கலாம்.

போராளி குடும்பம் பிடிபட்ட பிறகும் அந்த குடும்பத்து பெண் மருத்துவ படிப்பில் சேர முடிகிறது என்பதும் இடிக்கிறது.
 அவரை இயக்கம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி மருத்துவ படிப்பு பெற வைத்ததாக காட்டியிருக்கலாம்.

 ராணுவ அதிகாரிகள் அவர்களது அலுவலகங்கள காட்டப்பட்ட அளவுக்கு இயக்கம் பற்றி பெரிதாக திரையில் வரவில்லை. 
ஒரு இயக்கம் எப்படி இயங்குகிறது அதிலும் மருத்துவ பொருட்களை எப்படி பல தடைகளைத் தாண்டி கொண்டுவருகிறது என்று காட்டியிருக்கலாம்.

 படத்தில் மருத்துவ போராளிகளிடம் எல்லாமே இருக்கிறது. பற்றாக்குறையாக எதுவுமே இல்லை.

 படத்தில் ஈழ பேச்சு வழக்கு அல்லது அதை ஒட்டிய சில சொற்களாவது பேசப்பட்டு இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். 

 பங்கர் வெளிப்பக்கத்தில் இருந்து உள்பக்கம் வரை கேமரா வரவில்லை. என்றால் பங்கர் என்று தனி செட் போட்டுள்ளது தெரிகிறது. 
ஆனாலும் ஒரு நிஜமான பதுங்கு குழிக்குள் நுழைந்தது போலவே இருக்கிறது. 
 கதைக்களம் அப்படியே ஈழத்திற்கு போய்விட்டது போல இருக்கிறது. 
 ஏனென்றால் வீடுகள், தெருக்கள், உடை போன்றவை மிக நேர்த்தியாக இருக்கின்றன. 
ஆரம்பத்தில் வரும் கதைச் சுருக்கம் அருமையாக இருக்கிறது! 
 நடிகர்கள் தேர்வு அபாரம்!
ஆஸ்பத்திரியில் உட்கார்ந்திருக்கும் ஒரு நடிகர் தவிர அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
இரண்டு நாயகிகள். இருவருமே கொள்ளை அழகு!
பின்னணி இசை அற்புதம்!
வசனம் மிகவும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது! 
துப்பாக்கிசூடு மற்றும் குண்டு காயம் படுவது தத்ரூபமாக இருக்கிறது. உண்மையில் சுட்டுவிட்டார்களோ என்பது போல இருக்கிறது!
 அறுவை சிகிச்சை காட்சிகளும் அப்படியே உண்மையிலேயே அறுத்து தைக்கிறார்களோ என்பது போல இருந்தது!
 கேமரா ஒர்க் அசாத்தியமாக இருக்கிறது! 
 கதையும் கூட அருமை! 
 மருத்துவர் ஆகி வெளிநாடு வசதி என்று போகாமல் இயக்கத்தில் இணைந்து இயங்கும் ஒரு பெண், 
 அங்கே சிகிச்சைக்கு வரும் இளம் போராளி அவன் நினைவில் வரும் காதலி,
 இந்த பதுங்கு குழியை தாக்க வரும் ராணுவம், 
 அதைக் காக்க வரும் இயக்கம்,
 அதிலிருந்து தப்பிக்கும் மருத்துவர்கள்,
 தான் கொல்லவந்த போராளிகளாலேயே காப்பாற்றப்படும் எதிரிவீரன் தன் செயல்களுக்காக வருந்துவது என்று சுவாரஸ்யமாக நகர்கிறது.

 தமிழர்கள் சார்பாக இந்த படத்தை உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 

 மொத்தத்தில் மூன்று விதமான மக்கள் இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும்!

 ஒன்று குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு தரமாக படம் எடுக்க முடியுமா என்று தெரிந்துகொள்ள நினைக்கும் சினிமாக் காரர்கள்!

 இன்னொன்று ஈழத்தின் மீது பாசம் கொண்ட தமிழர்கள்! 

 மூன்றாவதாக சினிமாவின் கழுத்தை நெரித்து பிடித்திருக்கும் சில அரசியல்வாதிகள் இந்த படத்தை பல நெருக்கடிகள் கொடுத்து ஒழிக்க நினைப்பதை முறியடிக்க நினைக்கும் சினிமா ரசிகர்கள்! 

 இப்படியான படங்கள் தொடர்ந்து வெளிவரவும் வெற்றிபெறவும் வேண்டும்! 
 அது காலத்தின் கட்டாயம்! 

சல்லியர்கள்! வெல்லுவார்கள்! 

 
 




No comments:

Post a Comment