Monday, 21 November 2022

பெங்களூர் நகரம் முழுக்க தமிழர்கள்



பெங்களூர் நகரம் முழுக்க தமிழர்கள் 


 1951 இல் வெளியான பெங்களூர் மாவட்ட மொழிவழி வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.

 இதில் பெங்களூர் நகரம் முழுக்க தமிழர்களால் நிறைந்துள்ளது. நகருக்கு வெளியே பிற வட்டங்களில் தெலுங்கர் மற்றும் கன்னடர் உள்ளனர்.

 தமிழர்களிடம் இருந்து பெங்களூரைப் பிரித்தது இடையில் உள்ள தெலுங்கர் குடியேற்றமே ஆகும். ஆனால் மறுபக்கமாக கன்னடர் இடையில் புகுந்து குடியேறி தெலுங்கரிடமிருந்து பெங்களூரைப் பிரித்தது போல் உள்ளது இவ்வரைபடம். 


வரைபடத்திற்கு நன்றி: ஸ்ரீநிதி (twitter)

Friday, 18 November 2022

கண்டித் தமிழர் ரித்திஷ்

கண்டித் தமிழர் ரித்திஷ் 

 ஜே.கே.ரித்திஷ் 1973 இல் இலங்கை கண்டி மாநகரில் பிறந்தார். இவரது தந்தை குழந்தைவேலு மற்றும் தாய் ஜெயலட்சுமி. இவருக்கு மூன்று வயதாக இருந்த போது இவரது குடும்பம் ராமநாதபுரம் வந்து குடியேறினர். இவருக்கு சாந்தி,மணி என்று இரு அக்காக்கள் உண்டு. 2007 இல் ஜோதீஸ்வரி என்பவரைத் திருமணம் கொண்டார்.
  இவர் தனது நண்பர் சின்னி ஜெயந்த் மூலம் 2007  'கானல் நீர்' எனும் படம் எடுத்து திரைத்துறையில் நுழைந்தார். 

2009 இல் தி.மு.க சார்பாக தேர்தலில் நின்று 3 லட்சம் வாக்குகள் வாங்கி தன்னை எதிர்த்து நின்ற அதிமுக சத்தியமூர்த்தியை விட 69,000 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். மத்திய அமெச்சரும் ஆனார்.

 2011இல் ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.  

 LKG திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். நடிகர் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். 

2014 இல் அதிமுக விற்குத் தாவிய ரித்தீஷ் 2019 இல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Thursday, 17 November 2022

நரிக்காரர் குறவர் ஆனது எப்போது

நரிக்காரர் குறவர் ஆனது எப்போது?

 குறத்தி மகன் (1972) என்கிற படம் எடுக்கிறார்கள். அதைப் பார்ப்பவர் குறவர்கள் என்றாலே ஊசி பாசி விற்றுக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டு 'ஓ சாமியோ!' என்று அழைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் அது நரிக்காரர் பற்றிய படம். அதில் காட்டப்படும் எதுவுமே குறவர் வாழ்வியலில் இல்லை. 
அம்மையார் ஜெயலலிதா 'கந்தன் கருணை' (1967) திரைப்படத்தில் குறத்தியாக நடித்திருப்பார். அதுதான் உண்மையான குறவர் தோற்றம்.

 BC இல் மிகவும் பின்தங்கியவர்கள் MBC என்று கொண்டுவரும்போது 'நக்கலே' என்கிற பெயரில் BC இல் இருந்த 'நரிக்காரர்கள்' பெயர்மாற்றப்பட்டு 'நரிக்குறவர்' என்கிற பெயரில் MBC இல் சேர்க்கப் படுகிறார்கள். அதற்கு முன்னர் 'நரிக்குறவர்' என்று எந்த சாதியும் கிடையாது. இப்படி புதியதாக ஒரு சாதி உருவாக்கப்பட்டது முறையில்லை என்று சட்டநாதன் அறிக்கை கூட சுட்டுகிறது. ஆந்திராவில் இன்னமும் நரிக்கார மக்கள் நக்கலே என்றுதான் ஆவணங்களில் குறிக்கப்படுகின்றனர்.

 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குஜராத்தின் மோவார் எனும் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பஞ்சத்தின் காரணமாக புலம்பெயர்ந்து ஆந்திரா வந்தவர்கள் இந்த நரிக்காரர்கள். அவர்களின் தாய்மொழி ஹிராணியம் என்கிற எழுத்து வடிவம் அற்ற மொழி. 

குறவர்கள் ஆதி தமிழ்க்குடி. சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர் 'குறமகள் இளவெயினி' எழுதிய 18 பாடல்கள் புறநானூற்றில் உண்டு. குறவர்கள் முழுத் தமிழர்கள். நரிக்காரர்கள் மொழி, கலாச்சாரம் என முற்றிலும் தமிழர்களுக்கு வேறானவர்கள். இந்த பெயர் குழப்பதால் குறவர்களின் வாழ்வியல், அடையாளம், பண்பாடு ஆகியன சிதைவிற்கு உள்ளாகிறது. 

எம்.ஜி.ஆர் தொடங்கி பல தலைவர்கள் நரிக்காரர்கள் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். குறவர்களும் வரவேற்கிறோம். அவர்கள் முன்னேற்றத்தை நாங்களும் விரும்குகிறோம். ஆனால் எங்கள் அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது.

நன்றி: 
இரணியன் அவர்களது பேட்டி
Dots media (29.09.2022)

 குறவர்கள் காடுகளில் வாழும் பழங்குடிகள்.
குற்றாலம் மலையில் சன்னியாசி புடவு பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துகள் 'குறவ' என்று உள்ளது. முருகனுக்கு பெண் கொடுத்த தமிழ்க் குடி அவர்கள்.
 நரிக்காரர்கள் நகரங்களில் தெருவோரத்தில் வாழும் நாடோடிகள். நாகரிகம் அற்றவர்கள். இரவு நேரங்களில் குறவர் குறத்தி ஆட்டம் என்கிற ஆபாச நடனம் நரிக்காரர் செய்வதே! இன்று குறவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் நரிக்காரர்கள் கைக்குப் போய்விட்டன.
 ஆம்!
 நரிக்காரருக்கு மத்திய (குஜராத்திகள்) அரசால் பழங்குடி (ST) இடவொதுக்கீடு  கொடுத்துவிட்டது. அதே மாதத்தில் குறவர்களுக்கு குறவர் என்று சாதிச்சான்று கூட கிடைக்காமல் ஐந்தாண்டு அலைந்த விரக்தியில் படப்பையில் வேல்முருகன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். 
  
இதனால் மேற்கண்ட பேட்டியளித்த இரணியன் அவர்கள் (வனவேங்கைகள் கட்சி) ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரையும் அவரை அழைத்து வந்த தென்காசி எம்.பி தனுஷ்.எம்.குமார் (பள்ளர்) அவர்களையும் நிற்கவைத்து கால்மேல் கால்போட்டபடி 'தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்' சாத்தூர் ராமச்சந்திரன் எனும் KKSSRR (தெலுங்கர்) திமிராக பேசி அனுப்பினார்.

 வந்தேறிகள் என்றால் நகரங்களில் தெருவோரங்களில் பரதேசிகள் வரை நினைத்ததைச் சாதிக்கலாம். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்கள் பழங்குடியில் இருந்து மந்திரி வரை அவமானத்தை மட்டுமே சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. 

Saturday, 12 November 2022

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

13.11.1938 அன்று நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டதாக கூறுவது பொய்!
 இந்த மாநாடு பற்றி ஈ.வே.ரா வின் 'குடி அரசு' ஏடு செய்தியும் வெளியிட்டதுள்ளது. அதில் பட்டம் வழங்கப்பட்டதாக எதுவும் இல்லை.
 மீனாம்பாள் அவர்கள் இப்பட்டத்தை வழங்கியதாக கூறுவதும் பொய்!
 உண்மையான பெரியார் தொண்டர் யாராவது இருந்தால் பெண்கள் அல்லது பெண் தலைவர் எவர் எந்த மேடையில் பெரியார் பட்டம் வழங்கினார் என்று சான்று தரவும்!

Friday, 11 November 2022

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே செங்கொடி

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே!

தாயே செங்கொடி....!
பெண்!
ஏழை!
சிவப்பு சிந்தனை!
இருளர் சமூகம்!  
கணவனால் கொல்லப்பட்ட தாய்!
சிறையில் குடிகாரத் தந்தை!
நம்பி நிற்கும் தம்பி தங்கை!
இனக் கடமையை மறுக்க 
இருந்தன உனக்கு பல காரணங்கள்!

ஆனாலும் நீ துணிந்தாயம்மா!
உயிரீந்து அறம் காத்தாயம்மா!

அன்று மதுரை எரிந்தது!
இன்று உன்னால் டெல்லி பிழைத்தது! 

இனம் காத்த உயிர்களை
இந்தியா எனும் எமனிடமிருந்து 
மீட்டுக் காட்டிய தமிழச்சியே!
கண்கண்ட அம்மன் தீப்பாச்சியே!

மனுநீதி வழித்தோன்றலே!
தனுவின் மீள்த்தோன்றலே!

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே! 
ஈழம் வரை போற்றும் தாயே!

என்றும் மறக்க மாட்டோம்!
வென்ற பிறகும் நினைப்போம்!

உனக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்து!
எமது கண்ணீர் நிறைந்த நன்றி! 

உலகத் தமிழரே!
உறுதிமொழி கூறுங்கள்!
இனி நம் வரலாற்றில் இல்லை
இன்னொரு செங்கொடி!




Wednesday, 9 November 2022

இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்


இரண்டாவது பெரும்பான்மை மொழிகள் 


 படத்தில் மாவட்ட வாரியாக இரண்டாவது பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழிகள் குறிக்கப்பட்டுள்ளன (2011 கணக்கெடுப்பு அடிப்படையில்).

 எல்லை மாவட்டங்களில் அருகாமை மொழி பரவியிருப்பது இயல்பு என்ற வகையில் நோக்கினால் தமிழ் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பரவியுள்ளது (இவற்றில் தமிழர் இழந்த பகுதிகளும் அடங்கும்).


 இந்த அடிப்படையில் தமிழகத்தில் நியாயமான பரவல் என்றால் அது குமரி மற்றும் நீலகிரி மாவட்டஙகளில் வழங்கும் மலையாளம் மட்டுமே! 


 தெலுங்கு எல்லையோர மாவட்டங்கள் மட்டுமின்றி கடைக்கோடியில் திருநெல்வேலி வரை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது இது தெலுங்கரின் பெருந்தொகையான குடியேற்றத்தைக் குறிக்கிறது.


 தமிழ் மண்ணுக்குச் சிறிதும் தொடர்பில்லாத உருது, குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சௌராஸ்ட்ரா ஆகியனவும் சில பகுதிகளில் தெலுங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.


 அதாவது அரசியல் கண்ணோட்டத்தில் தமிழகத்தினுள் ஒரு திராவிடம், ஒரு பாகிஸ்தான், ஒரு அகண்ட பாரதம் இருப்பது போல் தோன்றுகிறது.


 வரைபடம் வழங்கியவர்: கார்வேந்தன் அழகையா

நன்றி: statsofindia.in 

 

காட்டுப் பன்றியின் வீரமும் சங்க காலக் காதலும்

காட்டுப் பன்றியின் வீரமும் சங்க காலக் காதலும் 

 காதலியைப் பார்க்க குன்றநாடன் காட்டுவழி செல்கிறான். அப்போது வேடர்கள் வேட்டை நாயுடன் காட்டுக்குள் வேட்டைக்கு வந்திருந்தனர். அப்போது ஒரு காட்டுப் பன்றி வேட்டை நாயைத் தாக்கித் துரத்திவிட்டு வேடனைத் தாக்கத் தயாராக நின்றதாம். ஏனென்றால் அது தன் குட்டிகளையும் அதன் தாயையும் பதுக்கி வைத்துக்கொண்டு அரணாக நின்றதாம். வேடர்கள் அம்புகளை எய்யவே எதுவும் பன்றியின் மீது படவில்லையாம்.
 அதாவது அம்புகள் தன் மீது படாதவாறு வளைந்து சற்று விலகி அதே இடத்தில் நிற்குமாம்! 
 இதைக் கண்டு வியந்து போகிறான் குன்ற நாடன்.
இதைத் தன் காதலியிடம் கூறுகின்றான்.

 மற்றொரு நாள் அதே பாதையில் அவன் வரும்போது அந்தப் பன்றியைப் பார்க்கிறான். "இந்த பன்றி வீரத்தில் என்னைப் போன்றது எனவே இதை என்றும் கொல்லமாட்டேன்" என்று மனதுக்குள் உறுதி எடுக்கிறான்.
  காதலி வீட்டுக்கு வருகிறான். ஆனால் காதலியின் அம்மா பார்த்துவிடுகிறாள். உடனே தன் மகளிடம் "நன்றாக இருக்கிறது உன் செயல்" என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே கண்டும் காணாமல் அங்கிருந்து சென்றுவிட்டாளாம் அந்தத் தாய். தலைவி இதைத் தன் தோழியிடம் "ஒரு நகைச்சுவை கூறுகிறேன் கேள்" என்று மகிழ்ச்சியுடன் முழுவதுமாகக் கூறுகிறாள். 

நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி,
கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய
கான் ஒழிந்து,
அரும் புழை முடுக்கர் ஆள்
குறித்து நின்ற 
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த
கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை
செலச் செல்லாது,
''அரு வழி விலக்கும் எம்
பெருவிறல் போன்ம்'' என,
எய்யாது பெயரும் குன்ற
நாடன் 
செறி அரில் துடக்கலின், பரீஇப்
புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச்
சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில்
வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள்,
அன்னை;
வல்லே என் முகம்
நோக்கி, 
''நல்லை மன்!'' என நகூஉப்
பெயர்ந்தோளே.

அகநானூறு 248

இதில் இரண்டு விடயம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
 ஒன்று வடுகர் சின்னமான காட்டுப் பன்றி வீரம் மிக்கது!
 சங்க காலத்தில் காதலுக்கு பெற்றோர் தடையாக இல்லை!

கி. பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் பன்றியால் கொல்லப்பட்ட நாய்களுக்காக வைக்கப்பட்டது.
 வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் உள்ள அம்பலூரில் உள்ள நடுகல் ஒரு காட்டுப் பன்றியுடன் சண்டையிட்டுக் கொன்று தாமும் இறந்த முழகன், வந்திக் காகத்தி என்கிற பெயர்களையுடைய இரண்டு நாய்களுக்காக நடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

Saturday, 5 November 2022

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

 1977 ஆகஸ்ட் இல் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் மீது கலவரம் நடந்தது. 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50,000 தமிழர்கள் அகதிகளாக தமிழர் பகுதிகளுக்கு சென்றனர்.
 கொழும்பு மற்றும் மலையகத் தமிழர்கள் இதில் கடுமையாகப் பாதிப்பட்டனர்.
 இதன் அதிர்வலை தமிழகம் வரை பரவியது.
தமிழகத்தில் சிலர் கூடி "தமிழக ஈழ நட்புறவுக் கழகம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டு 1978 இல் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டு "இலங்கையில் ஈழம்" எனும் நூல் வெளியிடப்பட்டது.
 அதில் 1978 வரையான இலங்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக மலையகத் தமிழருக்கும் ஈழத் தமிழருக்குமான வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 இதில் தொடக்கத்திலேயே ஈழ வரைபடம் இடம்பெற்றுள்ளது.
அதில் 'இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தின் ஒரு பகுதி அதாவது திரு. வன்னிய சிங்கம் கூறிய தமிழ்ப்பகுதியே. பருத்தித்துறை முதல் பதுளை வரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவிலும் உள்ளடக்கிய பகுதியே இங்கு ஈழம் என்று குறிக்கப்படுகிறது' என்கிற விளக்கமும் உள்ளது.
 தமிழகத்திற்கு ஈழம் பற்றி எதுவும் தெரியாது என்கிற கருத்தை இந்நூல் பொய்யாக்குகிறது. 
 1980 இல் மதுரையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாநாடு நடந்துள்ளதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.
 
இந்நூலைப் பாதுகாத்து வைத்துள்ள படிப்பகம் (padippakam) இணையத்திற்கு நன்றி! 
  

Thursday, 3 November 2022

நீயுமொரு ராஜராஜன்

நீயுமொரு ராஜராஜன்

ராஜராஜ சோழன்னா ரொம்ப பிடிக்குமோ?!
 நீ ராஜராஜ சோழன் மாதிரி ஆகிற வேண்டியது தானே?!
 வீரப்பன், பிரபாகரன் வழியில போ! 
அவர் ஈழம் கேட்டாருனா நீ தனித் தமிழர்நாடு கேளு!
 நாலு பேர சேத்துக்கோ! துரோகி எதிரினு 4 பேர போட்டுத்தள்ளு!
வீரப்பன் மாதிரி டான் ஆகிரு!
நீ கைகாட்றவன் தான் தேர்தல் ஜெயிப்பான்!
கள்ளக் கடத்தல் பண்ணு! 
கொள்ளையடி!
எதிரிகள தீத்துகட்டு! 
ஆயுதம் வாங்கி குவி!
பெரிய ஏரியாவ கன்ட்ரோலுக்கு கொண்டு வா!
அப்பறம் மொத்த தமிழனுக்கும் நீதான் தலைவன்!
மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்!
பாதுகாப்புக்கு சின்ன படை வச்சிக்கோ!
கொஞ்சம் வயசானதும் நீயே ராஜாவா முடிசூட்டிக்க!
ராஜ வாழ்க்க வாழு!
10 பொண்டாட்டி கட்டு!
20 பிள்ள பெறு!
பிரபாகரன பாத்து KGF, வீரப்பன பாத்து புஷ்பா எடுத்தமாதிரி உன் வாழ்க்கையையும் படம் எடுப்பாங்க! 
மூத்த மகனுக்கு பட்டம் கட்டிட்டு ஒருநாள் செத்துரு!
அட செத்த பிறகு கூட கடவுளாயிக்கோ!
எவன் கேக்கப் போறான்?!
ராஜராஜ சோழன் கூட எல்லாத் தமிழனும் ஏற்றுக்கொண்ட தலைவன் இல்ல!
 நீ அவருக்கும் ஒரு படி மேல போகலாம்!
 உலகம் முழுக்க உன் படம் போட்ட டீசட் கூட போடுவாங்க! 
என்ன நான் சொல்றது?!

Tuesday, 1 November 2022

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல் 
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை)
பொருள்: சேரனே! நீ கடல்களை வேலியாக்கொண்டு இந்நிலப்பரப்பை தமிழ்நாடாக ஆக்க நினைத்தால் எவரும் எதிர்க்க முடியாது.

"தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
(சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)
பொருள்: தெற்கிலிருக்கும் தமிழ்நாட்டு மூவேந்தர் வடக்கே படையெடுத்து வில், புலி, மீன் பொறித்த கொடியை பறக்கவிட்ட நாள்.
-----------------
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த"
(பரிபாடல்)
பொருள்: பாண்டியனின் மதுரை நகரத்தின் புகழ் தமிழை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.
------------------
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
(தொல்காப்பிய உரை)
ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்று கூறி அதற்கு உதாரணமாக இதைக் கூறுகிறார் இளம்பூரணர்.
----------------------
"சோணாடு கடந்தால்.... மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
(கம்ப ராமாயணம்)
 பொருள்: சோழ நாடு கடந்து மலைநாடு (எனும் சேரநாட்டு) அருகே தமிழ்நாடு (எனும் பாண்டிய நாட்டை) அடையலாம்
----------------------
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்”
(பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்) 

“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
(பெரிய புராணம், திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்)
-------------------------
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
(இராசராச சோழனுலா)
--------------------------
"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
"தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! "
(பாரதியார்)

நன்றி: வி.இ.குகநாதன்
____________________________________
"தமிழ்நாடு" எனும் சொல் மட்டும் கணக்கில் கொண்டு (சங்கம் மருவிய காலத்துக்குப் பிறகான) இலக்கிய சான்றுகள் இப்பதிவில் காட்டப்பட்டுள்ளன.
 பழமையான இலக்கியங்கள் நமது நாடு பற்றி கூறுவனவற்றை ஏற்கனவே 'இலக்கியத்தில் தமிழர்நாடு' எனும் பதிவு இட்டுள்ளேன்.
 
 இந்திய அளவில் தமிழினம் போல எந்த இனமும் தமது நிலத்தை (சிற்றரசு, பேரரசு கடந்து) மொழி அடிப்படையில் பெயரிட்டு அழைத்ததில்லை.