இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை)
பொருள்: சேரனே! நீ கடல்களை வேலியாக்கொண்டு இந்நிலப்பரப்பை தமிழ்நாடாக ஆக்க நினைத்தால் எவரும் எதிர்க்க முடியாது.
"தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
(சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)
பொருள்: தெற்கிலிருக்கும் தமிழ்நாட்டு மூவேந்தர் வடக்கே படையெடுத்து வில், புலி, மீன் பொறித்த கொடியை பறக்கவிட்ட நாள்.
-----------------
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த"
(பரிபாடல்)
பொருள்: பாண்டியனின் மதுரை நகரத்தின் புகழ் தமிழை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.
------------------
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
(தொல்காப்பிய உரை)
ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்று கூறி அதற்கு உதாரணமாக இதைக் கூறுகிறார் இளம்பூரணர்.
----------------------
"சோணாடு கடந்தால்.... மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
(கம்ப ராமாயணம்)
பொருள்: சோழ நாடு கடந்து மலைநாடு (எனும் சேரநாட்டு) அருகே தமிழ்நாடு (எனும் பாண்டிய நாட்டை) அடையலாம்
----------------------
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்”
(பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்)
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
(பெரிய புராணம், திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்)
-------------------------
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
(இராசராச சோழனுலா)
--------------------------
"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
"தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! "
(பாரதியார்)
நன்றி: வி.இ.குகநாதன்
____________________________________
"தமிழ்நாடு" எனும் சொல் மட்டும் கணக்கில் கொண்டு (சங்கம் மருவிய காலத்துக்குப் பிறகான) இலக்கிய சான்றுகள் இப்பதிவில் காட்டப்பட்டுள்ளன.
பழமையான இலக்கியங்கள் நமது நாடு பற்றி கூறுவனவற்றை ஏற்கனவே 'இலக்கியத்தில் தமிழர்நாடு' எனும் பதிவு இட்டுள்ளேன்.
இந்திய அளவில் தமிழினம் போல எந்த இனமும் தமது நிலத்தை (சிற்றரசு, பேரரசு கடந்து) மொழி அடிப்படையில் பெயரிட்டு அழைத்ததில்லை.
No comments:
Post a Comment