Thursday 16 June 2022

ஈடில்லாத வீரன் வாஞ்சிநாதன்

ஈடில்லாத வீரன் வாஞ்சிநாதன்

 எதிர்ப்புகள் அனைத்தையும் அடக்கி ஆங்கிலேயர் இந்திய துணைக்கண்டத்தில் முறையான நிர்வாகத்தை (1857 இல்) ஆரம்பத்தனர்.
 அதன் பிறகு அரசாங்கத்தை எதிர்த்து 20 க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடந்தன.
 அதில் சரியாக வெற்றி பெற்றவை இரண்டே இரண்டு! 
 ஒன்று வாஞ்சிநாதன் செய்த ஆஷ் படுகொலை!
இரண்டாவது லண்டனில் உதம்சிங் செய்த ஓடயர் படுகொலை! 
 (பகத் சிங் படுகொலை கூட தவறான நபர்தான்)
 இவ்விரண்டில் உதம்சிங் லண்டன் சென்று 7 ஆண்டுகள் திட்டமிட்டு ஓடயரைக் கொன்றார். 
 ஜாலியன் வாலாபாக் (1919) படுகொலைக்கு 20 ஆண்டுகள் கழித்து (1940) பழிவாங்கினார்.
(அவரது முக்கிய இலக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையை முன்னின்று செய்த ஓ டயர் எனும் வேறொரு அதிகாரி. அவர் இறந்துவிட்டதால் அவருக்கு உத்தரவிட்ட மேலதிகாரி ஓடயரைக் கொன்றார்.) 
 அப்போது ஓடையர் வயதாகி பணி ஓய்வு பெற்ற முதியவர். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காரணத்தால் குழப்பமான அரசியல் சூழலும் உதமுக்கு  சாதகமாக இருந்தது.

 ஆனால் அவருக்கு 30 ஆண்டுகள் முன்பே ஒப்பற்ற தலைவர் வ.உ.சி தலைமையில் நடந்த திருநெல்வேலி எழுச்சியை (1908) மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 4 உயிர்களைப் பலிகொண்டு அடக்கிய ஆஷ் துரையை நம் வாஞ்சிநாதன் இரண்டே ஆண்டுகளில் (1911 இல்) பழிதீர்த்தார்.
 அதுவும் ஆஷ் பதவியில் இருக்கும் போதே அவர் அதிகாரம் செல்லும் இடத்திலேயே அவரை முடித்தார்.

 தற்கொலைப் போராளியான வாஞ்சி தன் மனைவியை தலைப் பிரசவத்திற்கு விட்டுவிட்டு போனவர். அரசாங்க வேலையில் இருந்தவர். உதம் தற்கொலைப் போராளி இல்லை. திருமணமாகாதவர். பல ஆண்டுகள் சிறையில் இருந்து கூலி வேலை செய்ய லண்டன் சென்றவர்.

 வாஞ்சி மற்றும் உதம் இருவருமே சமமான மதிப்பு பெறும் புரட்சியாளர்கள். இந்திய அளவில் ஈடு இணை அற்றவர்கள். ஏனென்றால் உதம்சிங் நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் ஆங்கிலப் பேரரசின் இதயத்தில் பதிலடி கொடுத்தார். இருவருமே காணாப் பிணம் ஆகினர்.

 இருந்தாலும் நடந்த காலகட்டம், நிகழ்ந்த இடம், அப்போதைய சூழல், கிடைத்த ஆதரவு, உருவாக்கிய திட்டம், சரியான இலக்கு, செய்த தியாகம் என எல்லாவற்றையும் ஆராய்ந்தால் வாஞ்சிநாதன் ஒரு படி மேல் என்றுதான் சொல்லவேண்டும்.

 அவ்வகையில் வாஞ்சிநாதன் ஈடில்லாத வீரன்.
நம் இனத்தின் பெருமை!

 
 

No comments:

Post a Comment