Sunday 19 June 2022

சிதம்பரனாரை மகிழ்வித்த ஆஷ் மரணம்

வ.உ.சி யை மகிழ்வித்த ஆஷ் மரணம்

 ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 குற்றவாளிகளில் இருவர் அப்ரூவராக மாறினார்கள். அதாவது நடந்த உண்மையை தாங்களாகவே கூறி மற்றவர்களது குற்றங்களையும் கூறி குற்றத்தை ஒத்துக் கொள்வது (இதனால் அவர்கள் விடுதலை பெறுவார்கள்). அப்படி அப்ரூவராக மாறிய இருவரில் ஒருவர் சோமசுந்தரம் பிள்ளை. 
அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை சிறையில் தள்ளி அவரது சுதேசி நிறுவனத்தையும் கப்பல்களையும் முடக்கியதற்கான கண்டனத்தை தெரிவிக்க வேண்டியே ஆஷ் கொலை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

 ஆம், ஆஷ் திருநெல்வேலி எழுச்சியில் (1908) மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நால்வரைக் கொன்றது மட்டுமில்லாமல் வ.உ.சி அவர்களை சிறையில் தள்ளி அவரது சுதேசி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களை மிரட்டி அதை ஆங்கிலேயரிடமே விற்கவும் வைத்துள்ளான்.
 வ.உ.சி சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார்.
இவற்றையெல்லாம் அறிந்து வெறுப்புற்று வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றார் (1911).

 இதற்குச் சான்றாக வ.உ.சி சுயசரிதை இருக்கிறது.
அவ்வரிகள் கீழே,

‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘எப்படி?’ என்றான்.
‘யான் இவண் ஏகியதற்கும் தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும் அவன்கா ரண’மென் றறைந்தேன். 
‘ஒருவன் அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான்’ என்றான்.
‘நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.

 ஆஷ் கொலையுண்ட செய்தியைக் கூறிய போலிஸ்காரனிடம் தன் நிறுவனத்தை அவன் அழித்ததையும் அவன் இறப்பால் தனக்குத் தோன்றிய மகிழ்ச்சியையும் மேற்கண்டவாறு தெரியப்படுத்தியுள்ளார் வ.உ.சி

No comments:

Post a Comment