Monday 8 March 2021

சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு

சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு

பொதுவாகவே ஒருவர் தன் வாழ்க்கையில் எவ்வளவு  முன்னேறுவார் என்பது அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. அதைத் தீர்மானிக்கும்  காரணிகளில் சொத்து, சாதி, உடல் ஆரோக்கியம், பாலினம், பிறப்பிடம், கல்வி, தொழில்,  மதம் ஆகியன.
இது தவிர அவரது அறிவு, திறமை, குணநலன், அதிர்ஷ்டம்,  முயற்சி, குடும்பத்தார், வாழ்க்கைத் துணை, பழக்க வழக்கம் போன்றவையும் உண்டு.

(இங்கே முன்னேறுதல் என்பது சொத்து சேர்ப்பது என்றே பொருள் கொள்ள வேண்டும். அதாவது அடிப்படைத் தேவைக்கு மட்டும் பொருள் ஈட்டுவது முன்னேற்றம் ஆகாது. தனக்கும் தன் துணை மற்றும் வாரிசுகளுக்கு உணவு, உடை, உறைவிடம், வீட்டு வசதிகள் ஆகிய தேவைகளை நிறைவேற்றி வாரிசுகளுக்கு கல்வியும் ஏற்படுத்தித் தர முடிந்தவர் வாழ்பவர் என்று வரையறுக்கலாம். போன தலைமுறை அசையாச் சொத்துக்களை விட தான் அதிகம் அசையாச் சொத்து வைத்திருந்தால் அவர் முன்னேறியவர் என்று வரையறுக்கலாம்)

மேற்கண்ட காரணிகளை ஒப்பிட இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
அதாவது தாய் தந்தை  பெயரில் அசையாச் சொத்துடைய, ஒரு ஆண், oc யில் வரும் சாதியில், ஒரு மாநகரத்தில், இந்து குடும்பத்தில், உடல் குறைபாடு எதுவுமின்றி பிறந்து, உயர்தர கல்வி கற்று, பெரிய முதலீடு போட்டு தொழில் (அல்லது நல்ல நிறுவனத்தில் வேலை) செய்கிறார் என்றால் அவர் வாழ்க்கையில் முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில், பட்டியல் சாதியில், சொந்த வீடுகூட இல்லாத, கிறித்துவ மதத்தை பின்பற்றும், தாய்தந்தைக்கு, உடல் ஊனத்துடன் பிறந்த ஒரு பெண், கடினப்பட்டு ஆரம்ப கல்வி முடித்து, சிறுதொழில் (அல்லது கூலிவேலை) செய்கிறார் என்றால் அவர் முன்னேறுவது மிக மிக கடினம்.

(மேற்கண்ட காரணிகள் சிறப்பாக கிடைக்கப்பெறாமல் மிகவும் அடிமட்டத்திலிருந்து மிக முன்னேறிய நிலைக்குச் சென்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  அவர்கள் விதிவிலக்கு நாம் இங்கே பொதுவான நடைமுறையைப் பேசுகிறோம்)

இதில் அரசு செய்யவேண்டிய வேலை ஏற்றத்தாழ்வினை ஈடுகட்டுவதாகும். ஆனால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி அவரது தாய்தந்தையின் சொத்துமதிப்பே ஆகும். ஆனால்  அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் சாதி முக்கிய கருதப்பட்டு அதை முதன்மையாக வைத்து இங்கே இடவொதுக்கீடு வழங்கப்படுகிறது.

வருமானம் நிலையற்றது என்று அதன் அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்காமை சரிதான். ஆனால் சொத்து அப்படியில்லை. அதை வருமானம் போல எளிதில் மறைக்க முடியாது. அது ஏறத்தாழ நிலையானது. அதிலும் ஒரு தலைமுறைக்காவது அது நிலையாக இருக்கும். அது கரைந்தாலும் வேறு வடிவம் எடுக்குமே தவிர மறைந்துவிடாது. செல்வச் சீமானாக இருந்து ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் போனவர்களும் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று செல்வச்சீமான் ஆனோரும் மிகச்சிலரே!

தற்போதைய இடவொதுக்கீடு என்பது அந்த அந்த சாதியில் முன்னேறியவரே மீண்டும் மீண்டும் முன்னேறுவதற்கே வழி செய்கிறது. இடவொதுக்கீடு சலுகை எந்த சாதி ஏழைகளுக்கும் பெரிதாகப் பயன்படவில்லை என்பது இப்போது வரை பட்டியல் சாதியினர் முன்னேறவில்லை என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

அரசின் இந்த சாதியை முதன்மையாகக் கொண்ட பார்வையே சாதிய அரசியலுக்கும் வழிவகுக்கிறது. ஒவ்வொரு சாதியிலும் வசதி படைத்தவரே அரசியலிலும் லாபம் அடைகின்றனர். அவர்களை ஆதரிப்பதைத் தவிர அந்த சாதி ஏழைகளுக்கு வேறு வழியும் இல்லை.

அப்பன் தொழிலை மகன் செய்த காலத்தில் ஆங்கிலேயர் கல்விக்காக கொண்டுவந்த இடவொதுக்கீடு இன்னமும் அதே பழைய பார்வையுடன் இருக்கிறது.

எனவே, ஒருவர் ஆரம்பக் கல்வி முடிக்கும் போது இடவொதுக்கீடு வழங்கப்பட வேண்டும் (ஆரம்பக் கல்வி வரை அனைவருக்கும் கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள் இலவசமாக செய்து தரப்பட வேண்டும்).

  இந்த இடவொதுக்கீடு அப்போதைய அவரது தாய் தந்தை (அல்லது அவர்களது பெற்றோரான இரண்டு தாத்தா பாட்டிகள்) பெயரில் இருக்கும் சொத்து மீதான அவரின் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும்.
(அதாவது அவரது குடும்ப சொத்து மதிப்பில் அவருடன் பிறந்தாருக்கான பாகம் கழிக்கப்பட்டு அவரது சொத்துரிமை நிர்ணயிக்கப்படும்)

பிற்காலத்தில் அவரது குடும்பம் சொத்துகளை இழந்தாலும் சம்பாதித்தாலும் அதை கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
யாரும் ஒரு இடவொதுக்கீட்டுக்காக சொத்துகளை பினாமி பெயரில் மாற்றிவிட்டு பிறகு தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் இடவொதுக்கீடு வழங்கும் சமயத்தில் சமீபத்தில் கைமாறிய சொத்துகள் கண்கானிக்கப்பட வேண்டும்.

ஒருவருக்கு திருமணம் ஆனதும் அவருக்கான சொத்துகளைப் பிரித்து அவர் பெயரில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட அரசாங்கம் அறிவுறுத்துவதும் இங்கே அவசியம் (மரணத்திற்குப் பிறகு என்றாவது எழுதிவைக்க வேண்டும்). ஒருவரின் 30 வயதிற்குள் இது நடந்தால் மிகவும் நல்லது.

வருங்காலத்தில் இந்த நடைமுறை பலன் தந்தால் மேலே கூறப்பட்ட அடுத்தடுத்த முக்கிய காரணிகளையும் கணக்கில் எடுத்து இடவொதுக்கீடுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு அந்த புள்ளிகள் அடிப்படையில் இடவொதுக்கீடு கொடுக்கலாம்.

முக்கிய காரணிகள் (வரிசைப்படுத்தியது)
1. சொத்துரிமை
2. சாதி
3. உடல் ஆரோக்கியம்
4. பிறப்பிடம்
5. பாலினம்
6. மதம்

மற்றபடி ஒரு மாநில எல்லைக்குள் இயங்கும் மத்திய, மாநில, பன்னாட்டு, தனியார் நிறுவனங்களில் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் அந்த மாநிலத்தில் பிறந்தாருக்கே 90% ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கே அழுத்தமாகக் கூறவேண்டியுள்ளது.

18.02.2021

No comments:

Post a Comment