16:55
வெளியே பனிபெய்ய தொடங்கிவிட்டது , மிதமான வெயிலும் மறைந்துவிட்டது. ஐந்து மணிக்கே இருட்டத் தொடங்கிவிட்டது. பணியில் இருந்த நான் தேநீர் பருகலாம் என்று என் நிறுவன வளாகத்திற்கு உள்ளேயே இருக்கும் 'சிற்றுண்டியகம்' நோக்கி நடந்தேன். எனக்குப் பிடித்த உடைகளை அணிந்திருந்தேன். புல்வெளி தாண்டி பூச்செடிகளைக் கடந்து கண்ணாடி கதவுகளை தள்ளி சிற்றுண்டியகத்தின் உள்ளே நுழைந்தேன். உட்பக்கம் கொஞ்சம் கதகதப்பாக இருந்தது. என் வழக்கமான இருக்கையில் அமர்ந்தேன். வானொலியில் சன்னமாக இனிமையான பாடல் ஒன்று வரிகள் இல்லாமல் மெட்டு மட்டுமாக ஒலித்துக்கொண்டிருந்த்து.
அங்கே ஒரு சிப்பந்தி என் நண்பர். அவ்வப்போது (நிறுவனத்தின்) சட்டத்திற்கு புறம்பாக அவருக்கு பணம் கொடுப்பேன். அவர் எனக்கு மட்டும் தரமான தேநீர் செய்துத் தருவார். சிறிது நேரத்தில் நட்பான புன்னகையுடன் அவர் எனக்குத் தேநீர் கொண்டுவந்து தந்தார். குளிருக்கு இதமாக அலுவல் அழுத்தங்களை மறந்து அந்த தேநீரைப் பருகத் தொடங்கினேன்.
எங்கள் நிறுவனத்தில் விரல்விட்டு எண்ணுமளவு பெண்களும் உண்டு. அவர்களில் மிகவும் அழகான ஒரு பெண் உண்டு. அவள் இந்த நேரத்திற்குத்தான் வருவாள். எல்லா அழகான பெண்களையும் போல அவளும் திமிர்பிடித்தவள். என் அழகைப் பற்றிக் கூற இங்கே விரும்புகிறேன். 'சுமாரான பெண்கள்' போனால் போகிறது என்று ஒரு பார்வையை வீசிச்செல்லும் அளவுக்கு தோற்றம் கொண்டவன் நான். என்னையெல்லாம் இந்த 'நிறுவன அழகி' ஏறெடுத்துக்கூடப் பார்க்கமாட்டாள். ஆணாய்ப் பிறந்துவிட்டு இந்த விடயத்தில் மானத்தோடா இருக்கமுடியும்?! அவளை மனதிற்குள் திட்டிக்கொண்டே அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
கைபேசியில் நேரத்தைப் பார்த்தேன் 16:55 என்று காட்டியது. கண்ணாடிக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அட! அது அவள்தான்! வழக்கம் போலவே ஆண்கள் போடும் சட்டை அணிந்திருந்தாள், அதுவும் அவள் கட்டான உடலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி. எடுப்பான தன் மார்பை வெள்ளையான மென்துகில் மேலாடையால் மறைந்திருந்திருந்தாள். சட்டையை உள்விட்டவாறு கருப்பு நிற பேன்ட் அணிந்திருந்தாள். வெண்சிவப்பு நிற கச்சை அணிந்திருந்தாள்.
(அப்படி என்னதான் இருக்கிறது இந்த வெண்சிவப்பு நிறத்தில்?! எல்லா பெண்களுக்கும் அதைப் பிடிக்கிறது. என் 4 வயது மகள்கூட அந்த நிறத்தில் இருக்கும் "புச்சுட்டாய்"தான் வேணும் என்று கேட்பாள்)
அவள் முகத்தைக் கழுவிவிட்டு கைக்குட்டையால் (அதுவும் வெண்சிவப்பு) ஈரத்தை ஒற்றியெடுத்தபடி நேராக என் மேசையில் என் எதிரில் அமர்ந்தாள். சுற்றி நிறைய மேசைகள் காலியாக இருந்தன. அவள் தன் கைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். நான் தேநீருடன் அவள் அழகையும் பருகிக்கொண்டிருந்தேன். ஆகா! இவ்வளவு அருகில் இவளைப் பார்த்ததே இல்லை. என்ன அழகு?! கன்னங்களில் என்ன மினுமினுப்பு?! ஊறிய உமிழ்நீருக்கு ஈடுகொடுக்க அதிக தேநீரை உள்ளிழுத்தேன். கைபேசியைப் ஊன்றிப் பார்த்துக்கொண்டிருந்த அவள் கண்களால் ஏறிட்டு என்னைப் பார்த்தாள். என் நெஞ்சில் நான்கைந்து மின்னல்கள் வெட்டின. தேநீர் புறையேறிவிடும்போல இருந்தது. நான் என் பார்வையைத் திருப்பி சட்டென்று என் கைபேசியில் செலுத்தினேன். அட என்ன இது அதிசயம்?! நான் முகநூலில் போட்ட பதிவு நூறு விருப்பங்களைத் தொட்டிருந்தது. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல உள்ளுணர்வுககுப் பட்டது. இப்போது அவளுக்கான தேநீர் வந்தது. அவள் தன் இருகைகளாலும் எடுத்து பேரின்பத்துடன் பருகத் தொடங்கினாள். மறுபடியும் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள். எனக்கு நெஞ்சில் இடி இடித்தது. வயிற்றைக் கலக்கியது. அப்படியே ஈர உதடுகளின் மேல் பாம்பு போல நாக்கைச் சுழற்றியவள் இதழ்களில் ஒரு ஓரத்தில் மட்டும் மெலிதாக ஒரு புன்னகையைக் கொண்டுவந்தாள். என் நெஞ்சில் பெரிய நிலநடுக்கமே வெடித்தது. தொண்டைக்குள் இருந்த தேநீரை கடினப்பட்டு விழுங்கினேன். உயிரைக் கையில் பிடித்தபடி என்ன செய்வதென்று தெரியாமல் என் கைபேசியை எடுத்தேன் பதற்றத்தில் அது கைநழுவி கீழே விழுந்துவிட்டது. கீழே குனிந்து எடுத்தேன். அவள் மெலிதாக சிரிக்கும் ஓசை காதில் விழுந்தது. நேரத்தைப் பார்த்தேன் அதே 16:55 காட்டியது.
ஆகா! கண்டுபிடித்துவிட்டேன்! நான் கனவில் இருக்கிறேன். 'கனவுகளின் நோக்கம் எதிர்பார்ப்பதை நிறைவேற்றுவது' என்று பிராய்ட் சொல்லியிருக்கிறார். இந்த பேரழகி என் அருகில் அமர்ந்து என்னைப் பார்த்து புன்னகைப்பதெல்லாம் கனவில் மட்டுமே நடக்க முடியும். இதோடு இரண்டாவது முறையாக நான் கனவிற்குள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளேன். கனவுதானே என்று எனக்குள் துணிச்சல் வந்தது. படபடவென்று இதயம் அடித்துக்கொண்டாலும் அவளிடம் பேசினேன் "நான் கனவிற்குள் இருக்கிறேன். நீங்கள் அதில் வந்திருக்கிறீர்கள்" என்று கூறினேன்.
அவள் புன்னகைத்தபடி "இல்லை. இது கனவில்லை." என்று கூறினாள்.
அடடா! இதுதான் இவள் குரலா?! பாடும்போது என் மனைவியின் குரல் போலவே இருக்கிறதே?!
என் கையை கிள்ளிப் பார்த்தேன். அவளிடம் "எனக்கு வலிக்கவில்லை. அதனால் இது கனவுதான்" என்று கூறினேன். அவள் தன் வரிசையான சுத்தமான பற்கள் தெரியும்படி புன்னகைத்தாள்.
"இது கனவில்லை. எல்லாம் பிரம்மை" என்றாள்.
"என்ன சொல்கிறீர்கள்? எனக்கு போதைப் பழக்கமும் கிடையாதே?! நேற்று சோர்வுடன் தூங்கச் சென்ற நினைவு மட்டும்தான் இருக்கிறது இன்று காலை வேலைக்கு கிளம்பி வந்த நினைவு இல்லை. எனவே இது கனவுதான்" என்று வாதிட்டேன்.
"ஆமாம்! சரிதான்! ஏனென்றால் நீங்கள் நேற்றிரவு தூக்கத்திலேயே இறந்துவிட்டீர்கள்" என்று கூறினாள்.
நான் இறந்ததை கேள்விப்பட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் அம்மா வேண்டுமானால் ஒரு வாரம் அழலாம். என் மகளுக்கு சாவு என்றால் என்னவென்றே புரியாது. நான் கடிகாரத்தை பார்த்தேன். அதே 16:55 காட்டியது. என் தேநீர் குறையவே இல்லை, இன்னமும் சூடாகவே இருந்தது.
நான் அவனிடம் "நாம் எவ்வளவு நேரம் இங்கே இருக்கிறோம்?" என்று கேட்டேன்.
அவள் "உலகத்தில் மற்றவர்களின் நேரப்படி சுமார் 5 மணி நேரம் இருக்கும்" என்று கூறினாள்.
"நான் இங்கே ஆவியாக இருக்கிறேனா உங்கள் கண்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறேன்?" என்று கேட்டேன்.
அதற்கு அவள் "நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள். இதில் உங்களுக்கு விருப்பமானவை மட்டுமே பெரும்பாலும் நடக்கும்" என்று கூறினாள்.
"சொர்க்கம் இப்படித்தான் இருக்குமா? எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று எந்த மதமும் கூறவில்லையே! "
"இறந்த பிறகும் நீங்கள் வாழும் வாழ்க்கை அப்படியேதான் தொடரும். இது எதுவுமே உண்மை இல்லை. நீங்கள் நிறைய நல்ல செயல்கள் செய்திருந்தால் உங்களுக்கு பிடித்தமானவை மீண்டும் மீண்டும் நடக்கும். நீங்கள் தவறான செயல்கள் செய்திருந்தால் உங்களுக்கு பிடிக்காத சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும். எல்லாரும் 'நாம் இறந்து சொர்க்கத்தை அனுபவிக்கிறோம் அல்லது நரகத்தை அனுபவிக்கிறோம்' என்றே தெரியாமல் 'மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையை' வாழ்ந்து கொண்டிருப்பார்கள்"
இது ஏதோ டாம் க்ரூஸ் படத்தில் வருவதுபோல இருக்கிறதே?! அதில் இளமையிலேயே ஒரு விபத்தில் அவர் முகம் சிதைந்துபோகும். அந்த முகத்துடனே வாழும் அவர் சாவதற்கு முன் ஒரு 'கனவு நிறுவனத்திடம்' சென்று மூளையில் நினைவுகளை அழித்து சிதைந்த தன் முகம் சரியானதுபோல கனவுகளை உருவாக்கி பதியுமாறு கூறியிருப்பார்.
அந்த கனவுதான் படம் கடைசியில்தான் தனது முகம் சரியாகவே இல்லை என்பது அவருக்கு சொல்லப்படும்.
எனக்கு இன்னமும் குழப்பமாக இருந்தது. இது கனவுதானோ?!
அவளிடம் "நான் எப்படி சொர்க்கத்திற்கு தகுதியானவன்? நான் பெரிதாக ஒரு நல்ல செயலும் செய்ததாக எனக்கு தோன்றவில்லையே?!"
"அங்கே பார்த்தீர்களா அவர் யார் என்று தெரியுமா?" என்று தொலைவில் ஒரு நபரை சுட்டிக்காட்டினாள்.
அவர் ஆர்வமாகத் தேநீர் பருகிக் கொண்டிருந்தார்.
"அவரை எனக்குத் தெரியாது" என்று கூறினேன்.
"அவர் ஒரு தீவிரவாதி பல உயிர்களை கொன்று இருக்கிறார். அவரும் இந்த நிறுவனத்தில் வேலை செய்தார். அவருக்கு பிடித்தமான தேனீரைப் பருகிக்கொண்டு இருக்கிறார்"
"அது எப்படி பல உயிர்களை கொன்ற ஒரு தீவிரவாதி சொர்க்கத்திற்கு வரமுடியும்?"
"நீங்கள் செய்த செயல்கள் சரியானதா தவறானதா என்பது முக்கியமில்லை. நீங்கள் அதை எந்த நோக்கத்திற்காக செய்தீர்கள் என்பதுதான் முக்கியம். அவர் தான் செய்த செயல்கள் நிறைய மக்களுக்கு நன்மை பயக்கும் என்று உறுதியாக நம்பினார். அதனால் அவருக்கு சொர்க்கம் வழங்கப்பட்டது. தனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்கிற நோக்கத்துடன் செய்யப்படுபவை இந்த கணக்கில் வராது. அது சுயநலமாகவே கருதப்படும். அதோ அங்கே ஒருவர் இருக்கிறாரே அவரைப் பாருங்கள்" என்றொரு மற்றொருவரைச் சுட்டிக்காட்டினாள். அவர் மற்றொரு சிப்பந்தி எப்போதும் கடுகடுவென இருப்பார்.
"அவர் இறந்தால் இங்கேயே நரகத்தை அனுபவிப்பார்" என்றாள்.
அப்படியென்றால் எனக்கு என் மகள்தானே சொர்க்கம்?!. இயற்கையே அனுப்பிவைத்த இந்த தேவதையிடம் விண்ணப்பிக்கலாம் என்று
முடிவுசெய்து "எனக்கு இந்த சொர்க்கமெல்லாம் வேண்டாம். என் மகளை பார்க்க வேண்டும் போலிருக்கிறது" என்று கோரினேன்.
"நீங்கள் இதனால்தான் சொர்க்கத்திற்குத் தகுதியானவர். விருப்பமானது நடக்கும் என்று தெரிந்தும் என்னைப் படுக்கைக்கு அழைக்காமல் உங்களுடைய மகளைப் பார்க்க வேண்டுகிறீர்களே?! நீங்கள் ஒரு நல்ல மனிதர். ஆனாலும் உங்களுடைய உண்மையான மகளை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் இப்பொழுது வீட்டிற்கு சென்றால் உங்கள் மகள் அங்கே இருப்பாள். நான் உங்களிடம் இந்த உண்மையை கூறி விட்டேன். இது உங்களுக்கு மறந்துவிடும். நீங்கள் என்னுடன் பேசியதை சற்றுநேரத்தில் மறந்துவிடுவீர்கள். தேநீரை பருகுங்கள்" என்று கட்டளையிட்டாள்.
நான் தேநீரை குடித்துவிட்டு சட்டத்திற்கு புறம்பாக என் நண்பரிடம் யாருக்கும் தெரியாமல் பணம் கொடுத்துவிட்டு வெளியே போனேன்.
என் இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு நேரே வீட்டிற்கு போனேன்.
என் மகள் ஓடோடி வந்து என் கால்களை கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்து "அப்பா...! புச்சுட்டாய்!" என்று கொஞ்சும் மழலைக் குரலில் ஏக்கமாகக் கேட்டாள்.
என் பையிலிருந்து வெண்சிவப்பு நிற குச்சிமிட்டாயை அவளிடம் கொடுத்தேன்.
18.01.2021
No comments:
Post a Comment