அப்பையா
25 வயதில் மலேசியாவிலிருந்து வந்திருந்த அப்பு ஆளே மாறியிருந்தான். மழுங்க சிரைத்த மோவாய் மேலே சீரான முறுக்கு மீசை வைத்திருந்தான். ஒரு நல்ல பைக் வாங்கியிருந்தான். கழுத்தில் புலிப்பல் சங்கிலி. ஐந்தரை அடி உயரத்திற்கு ஏற்றவாறு சதைபோட்டிருந்தது. ஊர் பெரியவர்கள் 'உன் தாத்தன் மூக்கையன் மாதிரியே இருக்கியேப்பா!' என்று சொன்னார்கள்.
அவனும் அவனது நண்பன் மாரியின் தம்பியான அகிலனும் வெளிநாட்டு சாராயத்தை ருசிக்க அப்பு புதிதாக வாங்கியிருந்த தோப்பில் புதிதாக போடப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் அமர்ந்திருந்தனர். சிறிது தூரத்தில் வயல்வெளிகள் ஊடாக செல்லும் தார் சாலை தெரிந்தது. நேரம் இரவு பதினொன்றைத் தாண்டிவிட்டதால் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. இருவரும் பேசிக்கொண்டே குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு புல்லட் இவர்களுக்கு நேர் எதிரே ஓரங்கட்டியது. அதில் ஆறடி உயர தடியனும் அவனுடன் ஒரு ஐந்தடி உயர ஆளும் இறங்கி சாலையோர புதரில் எதையோ மறைத்துவைத்தனர். தகரக் கொட்டகையில் மின் இணைப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை எனவே அவர்களுக்கு இவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவில்லை. ஆனால் சாலையில் விளக்கு இருந்ததால் அவர்களது கரிய உருவத்தை இவர்களால் பார்க்க முடிந்தது. பிறகு இருவரும் புதரில் சிறுநீர் கழித்துவிட்டு கிளம்பினர். அப்பு அகிலனைப் பார்த்தான். அவனோ கொலைவெறியுடன் அந்த இருவரும் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பு என்னவென்று வினவினான். அகிலன் "அந்த தடியன்தான் எங்கள் அம்மாவைக் கொன்றவன்" என்று கூறினான்.
அப்பு அதிர்ச்சியடைந்தான். அகிலனின் அம்மா வேணி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நின்றார். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஏழை. சல்லிக்கட்டு காளையிடம் கணவனை இழந்து விதவையானவர். அவரை எதிர்த்து நின்ற ஆளுங்கட்சி வேட்பாளர் விலகிக்கொள்ளும்படி மிரட்டினார். வேணி மிரட்டலுக்குப் பணியவில்லை. அதனால் ஒருநாள் காலையில் அவர் தம் கூட்டாளிப் பெண்களுடன் நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு வேலைக்குச் சென்றபோது அந்த எதிர்த்தரப்பு வேட்பாளர் அனுப்பிய அவரது சமூதாயத்தைச் சேர்ந்த குண்டர்கள் வழிமறித்து அந்த அம்மாவை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். அப்பு மலேசியாவிற்குப் போன இரண்டாவது நாள் இது நடந்தது. வேணியின் மூத்த மகன் மாரியப்பன் அப்புவின் உயிர் நண்பன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத படிப்பாளி மாணவன். பரமசாதுவான மாரிக்கா இப்படி நடக்கவேண்டும் என்று அப்புவின் மனம் பல நாள் நிம்மதியின்றி தவித்தது. வேணியம்மாவுக்கு மாரியப்பனுக்கு அடுத்து உலகம்மாள் என்கிற பெண் உண்டு. இந்த கொலையால் அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த திருமணம் நின்றுபோனது.
மாரியப்பன் இதுதொடர்பாக வழக்கு போட்டு அலைந்து கொண்டிருக்கிறான்.
அப்பு அகிலனுக்கு ஆறுதல் கூறினான். நீதிமன்றம் எப்படியும் தண்டனை கொடுத்துவிடும் என்று நம்பிக்கை ஊட்டினான். அகிலன் விரக்தியுடன் "அதற்குள் இவன் வயதாகி தானே செத்துவிடுவான். இவனைக் கொல்லச் சொல்லி அனுப்பிய அந்த எம்.எல்.ஏ வும் ஆண்டு அனுபவித்து செத்துப்போவான். அப்பறம் அவன் மகன் எம்.எல்.ஏ ஆகிடுவான்" என்று கூறினான். அந்த கொலைக்குப் பிறகு படிப்பை விட்டுவிட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட அகிலன் அன்று நன்கு குடித்துவிட்டு புலம்பியபடி உறங்கிப் போனான்.
அப்பு இதே சிந்தனையாகவே இருந்தான். அதெப்படி எங்கிருந்தோ பிழைக்க வந்த ஒரு சமூகம் இன்று இவ்வளவு ஆதிக்கம் பெற்று விளங்குகிறது? எப்படி இவ்வளவு நிலங்களை வளைத்தார்கள்? எப்படி இவ்வளவு பெருகினார்கள்? எப்படி இவ்வளவு சம்பாதித்தார்கள்? மிகச் சிறுபான்மையாக இருந்துகொண்டு ஒரு கட்சியை உருவாக்கி எப்படி ஆட்சியிலும் இருக்கிறார்கள்? அவன் யோசித்து யோசித்துப் பார்த்தான் ஒன்றுமே புரியவில்லை.
இங்கே மண்ணின் மைந்தர்கள் இரு சமூகங்களாக பிரிந்து தமக்குள் சண்டையிட்டு ஒற்றுமையின்றி இருப்பதுதான் காரணம் என்று சலிப்புடன் சிலர் கூறினர். நன்கு யோசித்த பிறகுதான் புரிந்தது. இவர்கள் திட்டமிட்டே இரண்டு பெரும் சமுதாயங்கள் சரிசமமாக வாழும் பகுதிகளில் அவர்களுக்கு மத்தியில் குடியேறியுள்ளனர். பிறகு அந்த இரண்டு சமுதாயத்தையும் மோதவிட்டு அதற்கு நாட்டாமை செய்வது போல இடையில் புகுந்து தாம் தலைவன் ஆகின்றனர். அதிகாரம் கைக்கு வந்தால் பணம், செல்வாக்கு என மற்றதெல்லாம் தானாய் வந்து சேராதா?! அப்படியே நிலங்களை வளைத்து சொத்து சேர்த்து பல பிள்ளைகள் பெற்று தாமும் பெரும் ஆதிக்க சமூகமாக உருவெடுக்கின்றனர்.
இவர்கள் ஒரு கட்சியை நிறுவி இரு இனங்கள் சமமாக ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் தனது இனத்தவரை நுழைத்து வெற்றிபெற வைக்கின்றனர். பெரும்பான்மையாக ஒரேயொரு சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தொகுதி என்றால் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு அடிமையை நிறுத்தி வெற்றிபெற வைக்கின்றனர். அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் எல்லாவித சமூகங்களும் வசிக்கும் நகர்ப்புற தொகுதியில் நின்றுதான் வெற்றிபெறுவார்கள்.
சில பெரும்பான்மை சமூகங்கள் தமக்கென கட்சி நிறுவி இவர்களுடன் பேரம் பேசி கூட்டணி என்கிற பெயரில் சிறிதளவு மரியாதையுடன் பதவியில் இருக்கிறார்கள். இவ்வாறாக இவர்கள் மாநில அதிகாரத்தைக் கைப்பற்றி ஊழல் செய்து கொழுப்பதுடன் மத்திய அரசுக்கு மாநில அரசின் உரிமைகளையும் கார்ப்பரேட் கம்பனிகளுக்கு மாநிலத்தின் வளங்களையும் விற்று பெரும் அரசியல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
தேர்தலுக்கு நான்கைந்து மாதமே இருந்தது. எங்கேயும் ஒரே பரபரப்பு! அந்த முரடனும் அவனது அல்லக்கையும் அவனது சகாக்களுடன் அங்குமிங்கும் போவதும். ஊரே அவர்களைக் கண்டு மிரள்வதையும் அப்பு கவனித்தான்.
ஒரு நாள் இரவு அதேபோல அகிலனும் அப்புவும் பக்கத்துத் தோப்பில் இருந்து இறக்கப்பெற்ற தென்னங்கள்ளை குடித்துக்கொண்டிருந்தனர். அதேபோல தடியனும் அவனது அல்லக்கையும் இறங்கி புதரில் எதையோ மறைத்துவைக்கத் தொடங்கினர். நிதானமான போதையில் இருந்த அப்பு சட்டென்று எழுந்துபோய் இருட்டில் எதையோ தேடினான். முரடன் புதர் அருகே சிறுநீர் கழிக்க உட்கார்ந்த வேகத்தில் புதரிலிருந்து ஒரு கால் இடது தோள்பட்டையில் பலமாக மிதிக்க நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். ஏறிட்டுப் பார்த்தால் மரம் வெட்டும் அரிவாளுடன் அப்பு நின்றிருந்தான். அப்பு அரிவாளைக் கழுத்துக்கு வீசினான். அந்த முரடன் தலையை பின்னிழுத்து இடது கையால் தடுக்கவும் செய்தான். இதனால் இடதுகை மணிக்கட்டு வெட்டிப்பட்டு துண்டாகி தொங்கியது. முரடன் அப்படியே குப்புற படுத்து தர தரவென கால்களைத் தரையில் தேய்த்து எழுந்து புல்லட்டை நோக்கி ஓடினான். அவனது அல்லக்கை புல்லட்டில் இருந்து ஒரு வாளை உருவி தடியனுக்குக் கொடுக்க ஓடிவந்தான். ஆனாலும் அப்புவின் தோற்றத்தையும் வெட்டுப்பட்டுவிட்ட முரடனின் பயத்தையும் பார்த்தவன் அப்படியே தடியனுக்கு ஒரு அடி முன்னால் அந்த கனமான வாளைப் போட்டுவிட்டு ஓடிவிட்டான். முரடன் குனிந்து வலக்கையால் வாளை எடுக்கவும் அப்பு அவன் புட்டத்தில் மிதித்துத் தள்ளினான். குப்புற விழுந்தாலும் சட்டென்று திரும்பி வாளை அப்புவின் காலுக்கு வீசினான். அப்பு சட்டென்று பின்வாங்கி ஒரு அடி எடுத்து வைக்கவே அவன் மறுபடி வீசினான். அப்புவின் வலது காலில் ஒரு ஆழமில்லாத வெட்டு ஒன்று விழுந்தது. அப்புவும் அரிவாளை வீசியிருந்தான். அது அவன் வலதுகை முட்டியில் ஆழமாக வெட்டி குபுகுபுவென ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இரண்டு கைகளும் ஊனமானதால் முரடன் எதிர்ப்பதை விட்டுவிட்டு எழுந்து தலைதெறிக்க ஓடத் தொடங்கினான். அப்பு அரிவாளை வாயில் கவ்விக் கொண்டு சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டான். ஆனாலும் காலில் உள்ள காயத்தால் வேகமாக ஓட முடியவில்லை. ஒரு கருங்கல்லை எடுத்து முரடனின் பிடரிக்கு குறிவைத்து எறிந்தான். அந்த கல்லின் கூர்மையான பகுதி முரடனின் அடிக்கழுத்தில் போய் பலமாக மோதியது. முரடன் மறுபடி கீழே விழுந்தான். அப்பு அவன் அருகில் போனான். முரடன் இப்போதும் இடது கையால் வலது கையைப் பிடித்தபடி வாளை அப்படியும் இப்படியுமாக வீசிக் கொண்டிருந்தான். அப்பு சரியாக கணித்து இடது காலை விருட்டென்று செலுத்தி அவனது வலதுகையை தரையுடன் சேர்த்து மிதித்தான். முரடன் வாளைக் கைவிட்டான். பிறகு வலது காலால் அவனது இடது கையை விலக்கி தரையில் விழச்செய்து அந்தக் கையின் மேல் தன் வலதுகால் முட்டியை ஊன்றி முரடனின் மார்பு மீது அமர்ந்துகொண்டான். இரு கைகளும் சிறைப்பட்டு எழ முடியாத நிலையில் முரடன் கால்களை பலமாக உதறி திமிரினான். அப்பு தாமதிக்காமல் வாயில் கவ்வியிருந்த அரிவாளை எடுத்து இருகைகளாலும் இருமுனைகளையும் பிடித்து கூரான பகுதியை முரடனின் கழுத்தில் பாய்ச்சினான். ஓடி வந்த அகிலன் அப்புவின் முன்னால் வந்து நிற்கவும் அரிவாள் விழுக்கென்று கழுத்துக்குள் போய் பீய்ச்சியடித்த ரத்தம் அப்புவின் முகத்தில் அபிசேகம் செய்யவும் சரியாக இருந்தது. ஆட்டு கிடாயை மல்லாக்கக் கட்டி அதன் நெஞ்சைக் கீறி பழங்களைப் போட்டு அதை வாயால் சாப்பிடும் தன் குலதெய்வம் போல அகிலனின் கண்களுக்கு அப்பு தெரிந்தான்.
ஒரு வாரம் கழித்து பெருமாள் கோவில் கருவறை முன்பு தரையில் மண மக்கள் அமர்ந்திருக்க, ஐயர் மந்திரம் ஓதி மஞ்சளுடன் கட்டப்பட்டிருந்த தாலியை தட்டில் வைத்து நீட்ட, கெட்டி மேளம் முழங்க, அப்பு தாலி எடுத்து கொடுக்க, உமாவின் கழுத்தில் மாப்பிள்ளை கட்டினார். தன் தங்கையின் திருமணச் செலவுகளை ஏற்றுக்கொண்ட அப்புவை மாரியப்பன் கண்ணீருடன் தழுவிக்கொண்டான். கோயிலில் கல்யாணம் முடிந்து மேளதாளத்துடன் ஊர்சுற்றி வந்து அதே கோயிலின் கல்யாண மண்டபத்திற்கு அனைவரும் வந்துவிட்டனர். மாமன் - மைத்துனர் உறவுமுறை உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் புறங்கையில் சந்தனம் வைத்துக் கொள்ளும் சடங்கு நடந்தது. அப்பு உமாவின் கணவர் மற்றும் அவரது சகோதரர்களுக்கு புறங்கையில் சந்தனம் வைத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு காவலர் வந்து "இங்கே அப்துல்லா யார்?" என்று கேட்டார். நிமிர்ந்து பார்த்த அப்பு "நான்தான்" என்று கூறினான். "ஐயா வரச்சொன்னாங்க! கொஞ்சம் வர்றீங்களா?" என்று காவலர் கூற எழுந்து வெளியே வந்தான். அப்புவை ஜீப்பில் ஏற்றி கொண்டுசென்றனர். அங்கே யாரும் அதிர்ச்சியாகவில்லை. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். மாரியப்பனும் அகிலனும் பைக்கில் பின்னாலேயே போனார்கள்.
காவல்நிலையத்தினுள் யாரையும் விடவில்லை. உள்ளே அப்புவைச் சுற்றி நான்கைந்து காவலர்கள் அமர்ந்துகொண்டனர். ஒரு உயரதிகாரி மட்டும் கேள்விகளைக் கேட்டார்.
"ஆறு நாட்களுக்கு முன்பு பிரபு என்பவரை நீங்கள் கொலை செய்துள்ளீர்கள். கண்ணால் பார்த்த சாட்சி இருக்கிறது"
"ஆம்! உண்மைதான்"
"மதக் கலவரம் வரும் சூழலை உருவாக்கிவிட்டீர்கள். நீங்கள் உடனடியாக சரணடைந்திருந்தால் பிரச்சனை பெரிதாயிருக்காது"
"மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. அவரை நான் கொன்றதற்கு வேற பல காரணங்கள் உள்ளன"
"பொய்! நீங்கள் இசுலாமியர்தானே?"
"ஆம்!"
"நீங்கள் மதத்தை வீடுவீடாகப் பிரச்சாரம் செய்யும் இயக்கத்தில் இருக்கிறீர்கள்தானே?!"
"இல்லை! அதிலிருந்து நான் விலகி ஆறு மாதம் ஆகின்றது"
"உங்களுக்கும் பிரபுவுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. அவர் சார்ந்த கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி இசுலாமியருக்கு பிடிக்காதவை அதனால் நீங்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக புகார் கொடுத்திருக்கிறார்கள்"
"நான் மதப் பற்றுடன் இருந்தவன்தான். இப்போது அப்படியில்லை. இந்த கொலையை நான் மதத்திற்காக செய்யவில்லை"
"பிறகு பிரபுவை ஏன் கொலை செய்தீர்கள்?"
"பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் இருந்து சொல்கிறேன் கேளுங்கள். என் தாத்தாவின் அப்பா காலம் வரை எங்கள் குடும்பம்தான் இந்த ஊர் ஜமீன்தார். எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் குடும்பம்தான் தலையிட்டுத் தீர்த்துவைக்கும். ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்தது. என் தாத்தா பெயரைச் சொன்னால் இங்கே பெரிய மரியாதை கிடைக்கும். காரணம் அவர் நாட்டாமை என்பதால் இல்லை. அவர் இருந்தவரை இந்த சுத்துபட்டி கிராமங்களில் எந்த குற்றமும் நடக்கவில்லை. அவர் காலத்தில் இங்கே வந்த ஒரு போலீஸ்காரன் இந்த ஊர் பற்றித் தெரியாமல் இரவில் தனியே நடந்துசென்ற ஒரு பெண்ணை கையைப் பிடித்து இழுக்க அந்த பெண் தப்பித்து ஓடிவந்து வயல்வெளியில் காவலுக்குப் படுத்திருந்த என் தாத்தாவிடம் வந்து முறையிட்டதும் என் தாத்தா அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கே போய் அங்கிருந்த காவலர்களை சிலம்ப பயிற்சியின் உதவியுடன் அடித்துபோட்டுவிட்டு அந்த பெண் கைகாட்டிய போலீஸ்காரனின் கையை வெட்டிவிட்டார். இத்தனைக்கும் அந்த பெண் எங்கள் சொந்தமோ சமுதாயமோ கிடையாது. இதன் விளைவாக என் தாத்தா பல இன்னல்களை அனுபவித்தார் என்றாலும் அவர் தட்டிக்கேட்ட துணிச்சல் அவர் பெரிய பெயர்வாங்கக் காரணமாக இருந்தது. அதனால் எங்கள் குடும்பத்திற்கு பெரிய மரியாதை. எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் குடும்பத்தினரிடம் வந்து தீர்த்துக்கொள்வது தொடர்ந்தது. என் அப்பா காலத்திலும் அது தொடர்ந்தது. என் அப்பா தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகரித்தபோது அதற்குப் பலியாகி இளமையிலேயே இறந்துவிட்டார். என் தாத்தா எங்களுக்கும் என் மூன்று அத்தைகளுக்கும் சொத்துகளைப் பிரித்துக் கொடுத்திருந்தார். என் அப்பாவின் குடிக்கும் அதன் மருத்துவத்திற்கும் எங்கள் சொத்து கரைந்துவிட்டது.
என் தாய்க்கும் உடன்பிறந்தார் யாருமில்லை. ஆதரவற்று நின்றிருந்த எங்களை என் அம்மா வேலை செய்த துணிக்கடை முதலாளியான இசுலாமிய பெரியவர்தான் ஆதரித்தார். இதனால் பக்கத்து நகரத்தில் அவர் வீடு இருக்கும் இசுலாமிய தெருவுக்கு குடிபுகுந்தோம். எனக்கு 15 வயது இருக்கும்போது எனக்கு அரபு நாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி எங்கள் குடும்பத்தை மதம் மாறக் கோரினர். நாங்களும் மாறினோம். அம்மையப்பன் என்கிற என் பெயரை அப்துல்லா என்று மாற்றினர். எனக்கு பள்ளிவாசலில் வகுப்புகள் நடத்தி 16 வயதிலிருந்தே இசுலாமிய பரப்புரைக்கான குழுவில் சேர்த்துக் கொண்டு இந்தியா முழுவதும் அழைத்துச் சென்றனர். பல வெளிநாடுகளுக்கும் போயிருக்கிறேன். 21 வயதில் வெளிநாட்டில் நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்தனர்.
ஆனாலும் என் பரம்பரை அடையாளத்தை விட்டு அந்நியமாகிப் போனது போன்ற உணர்வு எனக்குள் இருந்தது.
நான் கொலை செய்ய முதல் காரணம் என் நண்பனின் அம்மாவை அவன் கொன்றதுதான் என்றாலும் எனக்கு என் தாத்தா போல பெயர் வாங்க வேண்டும் என்றுதான் இதைச் செய்தேன். தேர்தலில் தாம்தான் வெல்லப்போகிறோம் என்கிற திமிரில் அவர்கள் போட்ட ஆட்டம் என்னை மிகவும் எரிச்சலூட்டியது. யார் இடத்தில் வந்து யார் தோரணை பீற்றுவது?! அதனால்தான் கொன்றேன். என் அறவுணர்ச்சி என்னை அப்படி செய்யவைத்தது"
29 வயதான அப்பு தன் அத்தை மகளுடன் முதலிரவு அறையில் அமர்ந்திருந்தான். அவள் மிரட்சியுடன் கேட்டாள் "உண்மையிலேயே நீங்கள்தான் அந்தக் கொலையைச் செய்தீர்களா?" அப்பு புன்னகையுடன் "ஆம்" என்றான்.
"எப்படி அவ்வளவு பெரிய தடியனை வீழ்த்தினீர்கள்?"
"எனக்கே புரியவில்லை. அன்று எப்போதும் போலத்தான் இருந்தேன். திடீரென்று அப்படி ஒரு வேகம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. எல்லாம் நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது"
அவள் ஏறிட்டு காதலுடன் பார்த்தாள்.
"எப்படி இருந்த நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்!"
நினைவுகள் பின்னோக்கி சுழன்றன.
21 வயதான அப்பு தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடன் பணிபுரியும் கணேசனுக்காக காரில் காத்திருந்த அவன் முன்பாக ஒரு தமிழ் தம்பதி கடந்து சென்றனர்.
'அடடா! நம் ஆட்கள் ஆயிற்றே எங்கே போகிறார்கள்?! வேட்டி சட்டை, பட்டுப்புடவை, தலை நிறைய பூ, கையில் தாம்பூலம் என கோவிலுக்குப் போவது போல போகிறார்களே?!"
காரில் இருந்து இறங்கிய அப்பு அவர்களைப் பின் தொடர்ந்தான் "கற்பூர நாயகியே கனகவல்லி.." என்ற பாடல் காதில் விழுந்தது. சிறிது தூரத்தில் ஒரு பெரிய கோவிலின் கல்லால் ஆன மதில் தெரிந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படியே தமிழகத்துக் கோவில் போல வாயிலின் இருபக்கமும் உட்கார கல் திண்ணை அதற்கு கற்தூண்கள். வாசலின் மேலே சிறிய கோபுரம். சிமென்ட் சிலை செய்யும் சுதைச் சிற்பிகளின் கலைத்திறனுடன் வண்ணம் பூசும் ஓவியர்களின் கைவண்ணமும் சேர்ந்துகொள்ள தத்ரூபமாக நின்றிருந்தன தெய்வங்கள். அவனுக்கு உள்ளே போக தயக்கமாக இருந்தது. மீசை இல்லாத தாடியுடனும் குல்லாவுடனும் உள்ளே போவதா?! அப்போது கணேசன் அங்கே வந்தார்.
"வாங்க சார்! போகலாமா?!" என்று கேட்டான். "வாங்க சாமி கும்பிட்டுட்டு போவோம்" என்று அழைத்தார். சரியென்று தலையாட்டிவிட்டு குல்லாவைக் கழற்றி பைக்குள் வைத்துக்கொண்டான். இருவரும் உள்ளே சென்றனர். அது மாரியம்மன் கோவில் கருவறைக்கு அருகில் நின்றான். அபிசேகம் நடக்கும்போது அம்மனின் முகத்தைப் பார்த்தான். கருப்பாக கன்னங்களில் சதையுடன் வட்டமான முகத்தைப் பார்த்தபோது அவனுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. கைகூப்பியபடி நின்றிருந்தான். ஐயர் கொண்டுவந்த தீபத்தை கண்களில் ஒற்றினான். அவர் திருநீறு பூசிவிட்டார் கையிலும் திருநீறு வாங்கிக் கொண்டான். பிரகாரம் சுற்றி ஓரிடத்தில் பிரசாதமும் வாங்கிக் கொண்டான். யாருமே முகம் சுழிக்கவில்லை. பிரகாரம் சுற்றும்போது அருகில் சுற்றிவந்த ஒருவர் கேட்டார் "தம்பி எந்த ஊர்?" என்று.
"திண்டுக்கல் பக்கம்"
"ஓ! அப்படியா! நான் தூத்துக்குடி"
"சரிங்க!"
"என்ன வேலை?"
"பெரிய மரங்களை கப்பலில் அனுப்பும் நிறுவனத்தில் வேலை"
"நான் குருவியாக வந்திருக்கிறேன்"
"சரிங்க"
"நல்லது, பார்ப்போம்"
அவர் விடைபெற்றார்.
அவர் "நீங்கள் இசுலாமியரா?" என்று அவர் கேட்கவேயில்லை. கணேசன் வேகமாக சுற்றிக்கொண்டு முன்னே போய்விட்டார். அப்பு வெளியில் வந்து கல் திண்ணையில் அமர்ந்தான். பிரசாதமாக தந்திருந்த சக்கரைப் பொங்கலை வாயில் போட்டான். அவனுக்கு அப்படியே பத்து ஆண்டுகள் முன்பு இறந்துபோன தன் பாட்டி நாச்சியம்மாளின் நினைவு வந்தது. அவனையும் அறியாமல் கண்ணீர் குபுக்கென்று கொட்டிவிட்டது. அப்போது அவன் அருகில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார்.
"தம்பி! உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். 'அடடா! இவர் என்னை இசுலாமியரா என்று தெரிந்துகொள்ள பெயரைக் கேட்கிறாரே' என்று நினைத்துக்கொண்டான்.
"அப்துல்லா" என்று கூறினான்.
அவர் "அப்படியா! என் பெயர் எட்வின் ஏசுதாசன்" என்று கையை நீட்டினார். அவன் கைகுலுக்கினான்.
"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?"
"ஊர் நியாபகம் வந்துவிட்டது"
"போகப்போக பழகிவிடும். ஊர் நினைவு வந்தால் இங்கே வந்துவிடுங்கள்"
"சரிங்க"
கணேசன் பிரகாரம் சுற்றி வந்ததும் இருவரும் கிளம்பினர்.
அறை நண்பர் சாந்தவேலு அன்று கிளம்பி ஊருக்குப் போய்விட்டார். தனியே அமர்ந்திருந்த அப்பு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். மக்கா மதினாவிற்குப் போனபோது வராத அந்த பிணைப்பு உணர்வு மாரியம்மன் கோவிலில் ஏன் வந்தது?
கற்பூரநாயகி பாட்டு போல நெஞ்சைத் தொடும் ஒரு இசுலாமிய பாட்டு கூட ஏன் இல்லை?!
இந்துதான் நம் அடையாளம் என்றால் வட இந்தியா முழுக்க சுற்றி இந்துக்களுடனும் பழகியபோதும் அங்கே இருக்கும் இந்து கோவில்களைப் பார்த்தபோதும் அந்த உணர்வு ஏன் வரவில்லை?
கிறித்தவர்கள் இந்துக்களுடன் இவ்வளவு இணக்கமாக இருக்கும்போது நம்மால் ஏன் முடியவில்லை?
மலேசிய இசுலாமியருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. இங்கு உள்ள இந்திக்கார சேட்டுகளைப் பார்க்கும்போதும் அந்நியர் என்றே தோன்றுகிறது. ஆனால் தமிழ் இந்துக்களை பார்க்கும்போது மட்டும் அவர்கள் நம் சொந்த பந்தங்கள் என்று தோன்றுகிறதே! தமிழ் இசுலாமியரைப் பார்க்கும்போதுகூட அந்த அளவுக்கு பற்றான உணர்வு ஏன் வருவதில்லை?!
முப்பது அடிக்கு ஒரு கோவில் இருக்கும் தமிழகத்தில்தான் இந்துக்கள் பெருவாரியாக வாழும் தமிழகத்தில்தான் இந்து மதவெறி மிகவும் குறைவாக இருக்கிறது அது எப்படி?
தமது கடைகளில் மூன்று மத கடவுள்களையும் வைத்து 'எம்மதமும் சம்மதம்' என்று தமிழ்நாட்டு இந்துக்கள் வணங்குகிறார்கள். அவர்கள் அவ்வளவு இறங்கி வந்தாலும் நாம் ஏன் கொஞ்சமும் இறங்கிப் போவதில்லை. கல்லை வணங்கக் கூடாது என்கிறோம் ஆனால் மக்காவில் ஒரு நடுகல் மீது கல்லெறிந்து சாத்தான் ஒழிக என்கிறோம் ஏனிந்த முரண்?
அரபியில் பெயர் வைக்கிறோம், தாடி வைக்கிறோம், உருதில் எழுதுகிறோம், நம் மதத்தவர் நடத்தும் கடைகளில் மட்டும் பொருள் வாங்குகிறோம், வேறு மாதிரி உடை அணிகிறோம், சென்ட் கூட வேறுமாதிரி போட்டுக்கொள்கிறோம் அதாவது இசுலாத் கட்டாயமாக்காத பலவற்றையும் செய்து நம்மை நாமே அந்நியர் என்று காட்டிக் கொள்கிறோம். அப்படி இருந்தும் தமிழ்நாட்டு இந்துக்கள் நம்மை ஒதுக்கினார்களா என்றால் இல்லை. இது எப்படி சாத்தியம்?
அவன் எவ்வளவோ யோசித்துப் பார்த்தான். மதம் அவனுக்கு எதையுமே தரவில்லை. அப்படியே எதையாவது தந்தாலும் அது வேறொரு இனத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான். மொழி, பண்டிகை, நாட்காட்டி, சடங்குகள், நம்பிக்கைகள், உணவு, உடை, கலாச்சாரம், நட்பு வட்டம், உறவுமுறை என ஒரு இனத்தால் தரமுடிந்ததை மதத்தால் சுயமாக உருவாக்கித் தரமுடியவில்லை. மதம் கொடுப்பதெல்லாம் போலியான நம்பிக்கைகளும் கற்பிதங்களும்தான் அல்லது இறப்பிற்குப் பிறகு தருவதாகச் சொல்லும் கற்பனைப் பரிசுகள் மட்டுமே!
எல்லா மதங்களும் அவ்வாறே என்று உணர்ந்தான்.
உலகம் முழுக்க இசுலாமியர் தத்தமது இனத்திலிருந்து அந்நியப்பட்டு பிற இனத்து இசுலாமியருடன் ஒட்டவும் முடியாமல் தன் இனத்திற்குள்ளேயே தனி தீவாக ஆகியுள்ளதையும் அதற்குள்ளும் பல உட்பிரிவுகள் உண்டாகி சுக்குநூறாக சிதறிக் கிடப்பதையும் கண்ணால் கண்டிருக்கிறான். ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி நடக்கவில்லை என்பதையும் அவன் கண்டுகொண்டான்.
இந்து மதத்தையும் ஆராய்ந்து பார்த்தான். இந்துமத தெய்வங்கள் எல்லாரும் மனிதர்களாகவே அவன் கண்களுக்குத் தெரிந்தனர். இந்துமத புராணங்களில் தெய்வங்கள் திருமணம் செய்து குழந்தை பெற்று தமக்குள் சண்டை போட்டுக்கொண்டு பக்தர்களிடம் விளையாடிக்கொண்டு மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
கோவிலிலும் கடவுளை காலையில் எழுப்பி குளிப்பாட்டி உடை உடுத்தி மலர் சூட்டி நகை அணிவித்து உணவு கொடுத்து திருமணம் செய்துவைத்து ஊர்சுற்ற வைத்து ஊஞ்சலாட்டி பாட்டு பாடி பரிசு கொடுத்து கதைசொல்லி தூங்கவைக்கிறார்கள். என்றால் இவர்கள் மனிதராக இருந்து கடவுளாக ஆக்கப்பட்டு இருக்க வேண்டும். தமிழக இந்துக்கள் விலங்குகளையும் மரத்தையும் கூட வணங்குவதன் மூலம் இயற்கையைப் பாதுகாக்க நினைக்கின்றனர். ஒரு போராட்டத்தில் ஒரு மசூதியில் இந்துக்களுக்கு சாப்பாடு போட்டதை அவர்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். ஆனால் கோவில்களில் அன்னதானம் வருடம் முழுவதும் நடக்கிறது. அதை அவர்கள் பெருமை பீற்றியதில்லை. ஆக தமிழ் இனத்தின் மூதாதையர் வழிபாடும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் கொடை உணர்வும் அரவணைக்கும் பண்பும் திரிந்து கலப்படைந்து உருவானதுதான் இன்றைய இந்துமதம் என்கிற முடிவுக்கு வந்தான்.
இந்தியாவில் தமிழகத்தில்தான் பழமையான பிரம்மாண்டமான கோவில்கள் இருக்கின்றன. பிற தென்னிந்திய மாநிலங்களிலும் தமிழகத்திற்கு அருகிலுள்ள எல்லைப் பகுதியில்தான் சிறப்பான கோவில்கள் இருக்கின்றன. காசி, கங்கை, இமயமலை எல்லாம் நேரில் போய் பார்த்தால் தமிழக ஆன்மீக தலங்களின் கால்தூசுக்கு பேறாது என்பது புரியும். இப்படி ஆன்மீக பூமியாக இருந்தாலும் எவனாவது இசுலாமியரை வம்புக்கு இழுத்தால் முதல் ஆளாக இந்துக்கள் எதிர்ப்பார்கள். மதரீதியான சர்ச்சைகள் கிளம்பும்போது பரம்பரை இசுலாமியர் எப்போதும் சாந்தமாக இருப்பதையும் புதிதாக இசுலாத்துக்கு மாறியவர்கள் அளவுக்கதிகமாக குதிப்பதையும் பார்த்தால் இது அப்படியே இந்து மதத்திற்கும் பொருந்துகிறது. தமிழர்கள் இந்து மதத்தை உருவாக்கி கட்டமைத்து நிறைகுடமாக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொண்ட வடவர்கள் குறைகுடமாகக் கூத்தாடுகிறார்கள். அவன் கண்கள் திறந்துவிட்டன. அவனுக்கு எது தன் அடையாளம் என்பது புரிந்தது.
மறுநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு அதே கோவிலுக்குப் போனான். அங்கே நான்கைந்து பெரியவர்கள் கைகளில் தமிழ் பத்திரிக்கைகளை வைத்துக்கொண்டு தமிழகத்தில் நடக்கும் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தனர். அவனும் அதில் கலந்துகொண்டான். அன்று அறைக்கு வந்தபோது அவனுக்கு நிறைவாக இருந்தது. கண்ணாடியைப் பார்த்தான். முதல் வேலையாக கொத்துத்தாடியை சுத்தமாக மழித்தான். குளித்துவிட்டு கட்டம்போட்ட சாரத்தைக் கட்டிக்கொண்டான். சாந்தவேலு வைத்திருந்த திருநீறை அள்ளி நெற்றி நிறைய பூசிக்கொண்டான். கண்ணாடியைப் பார்த்தான். தொழும்போது தரையில் படும் நெற்றிப் பகுதி மட்டும் கருப்பாக இருந்தது. தான் சொந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டான். மடிக்கணினியில் திருவருட் செல்வர் படம் பார்த்தான். அதில் கடைசி காட்சியில் அப்பர் முன் சிவனும் உமையும் தோன்றி காட்சி தருவர். படம் அத்துடன் முடியப்போகிறது என்று நினைத்தான். ஆனால் அப்பனும் அம்மையும் அப்படியே பீடத்திலிருந்து இறங்கி வந்து நடனமாடுவார்கள். அவனுக்கு மெய்சிலிர்த்துவிட்டது.
மறுநாள் விடிந்ததும் கோவிலுக்குப் போனான். அங்கே அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது. மலேசிய அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்த மாரியம்மன் கோவிலை மூட சதி நடந்தது. சாதி, மத பேதம் மறந்து அத்தனை தமிழர்களும் திரண்டு பெரும் போராட்டம் செய்து அதைத் தடுத்தனர். அப்பு அதில் முதல் ஆளாக நின்றான்.
மலேசியாவில் பொங்கல் கொண்டாட அவன் போனபோது அவனது இசுலாமிய நண்பன் தடுத்தான். அப்பு அவனுடன் வாக்குவாதம் செய்தான்.
"இந்தியாவில் சுதந்திர தினம் குடியரசு தினத்தை இசுலாமியர் கொண்டாடுகிறார்களே அது தவறில்லையா?"
"அது தேசிய விழா அதில் என்ன தவறு?"
"அதே போல பொங்கலும் தமிழர்களின் தேசிய விழா"
"பொங்கல் என்பது கதிரவனை வணங்குவது கடவுளைத் தவிர எதையும் வணங்கக்கூடாது"
"அப்படியா? சுதந்திர தினத்தில் தேசியக் கொடிக்கு சல்யூட் அடிப்பது தவறா?"
"அது மரியாதை செய்வதற்காக"
"அதேபோலத்தான் இதுவும்! சூரியனுக்கு மரியாதை செய்வோம். கடவுளாக வணங்கத்தானே கூடாது"
"இந்து மதத்தில் மனிதர்களையும் கூட சாமி என்று கும்பிடுவார்கள்"
"போலிஸ் வேலையில் இருக்கும் ஒரு இசுலாமியர் உயரதிகாரிக்கு எழுந்து நின்று சல்யூட் அடித்துதானே ஆகவேண்டும். உங்கள் தாய் தந்தை இறந்துவிட்டால் அவரது புகைப்படங்களை வைத்து வணங்குவது தவறா?"
"போ! போய் பட்டைபோட்ட பொங்கல் பானையை கும்பிடு"
"மாட்டையும் கும்பிடுவேன்! மரியாதையாக வணங்குவது வேறு கடவுளாக நினைத்து தொழுவது வேறு"
"முப்பாட்டன் முருகன் என்பார்கள் போய் அலகு குத்தி காவடி தூக்கு"
"இந்துக்கள் செய்கிற வழிபாட்டு சடங்குகளில் அர்த்தம் இருக்கிறது. அலகு குத்தி, நடை நடந்து, விரதம் இருந்து, மலை ஏறுவது உடலுக்கு நல்லது. ராணுவ பயிற்சிக்கு சமம். இசுலாத்தில் அர்த்தமற்ற சடங்குகள் எத்தனை உண்டு சொல்லவா?"
"நீயெல்லாம் நரகத்துக்குத் தான் போவாய்!"
" சொர்க்கததிற்கு போக மதகுருக்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டாம் குரான் காட்டும் வழியில் நடந்தால் போதும்"
"குரானில் தாடி வைக்க சொல்லியிருக்கிறது. உன் தாடி எங்கே?"
"முதலில் குரானை ஒழுங்காகப் படி அது கட்டாயமாக வலியுறுத்துகிறதா? வேண்டுமானால் தாடி வைத்துக்கொள்ளுங்கள் என்றுதானே உள்ளது. குரான் கட்டாயமாக வலியுறுத்தும் வட்டி ஒழிப்பு, வரதட்சனை ஒழிப்பு, ஏழைகளுக்கு கொடுப்பது எதையாவது நாம் செய்கிறோமா? மீசையை மழித்து தாடியை வைத்துக்கொண்டு ஐந்து வேளை குனிந்து நிமிர்ந்தால் மட்டும் போதுமா?"
"நீ இசுலாத்தை விட்டு வெளியேறிவிடு"
"அதற்குத்தான் வழி இல்லையே! இருந்தாலும் இனத்திற்காக விட்டுக்கொடுக்கலாம். தவறில்லை. மதம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். இனம் இல்லாமல் வாழமுடியுமா?"
"எனக்கு அல்லா மட்டும் போதும்"
"நீ சொர்க்கத்தில் சுகமாக இரு. வெளிப்பார்வைக்கு உலகமே இசுலாத்துக்கு மாறினாலும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை"
அவன் முறைத்தான். அப்பு தன் மீசையை முறுக்கியவாறு பதிலுக்கு முறைத்தான். அவன் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது. அவன் போய்விட்டான். அப்பு தமிழர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடினான். ஊரில் அம்மாவையும் கொண்டாடச் சொன்னான். அவன் அம்மாவும் கறுப்பு உடை அணிவதைக் கைவிட்டார்.
இப்போது அப்புவுக்கு 40 வயது.
ஊருக்கு வந்து அந்த கொலையைச் செய்த பிறகு அவன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுக்க போலீஸ் காவலுடன் ஊருக்கு வந்தபோது அந்த ஊரே அவனை மரியாதையுடன் பார்த்தது. பட்டியல் சாதியினரின் தெருக்களைக் கடத்துசென்ற போது அவர்கள் அப்புவை கையெடுத்து கும்பிட்டனர். மாரியப்பன் தேர்தலில் நின்று வெற்றிபெற்றான். அந்த வந்தேறி ஆதிக்க சமூகத்தினர் தேர்தலில் தோல்வியடைந்தனர். மாரியப்பன் மூலம் பேசி தன் மீது மையல் கொண்டிருந்த அத்தை மகள் மகேஸ்வரியை மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து அதை சட்டப்படி பதிவு செய்துகொண்டான். அப்பு இசுலாத்தை விட்டு வெளியேறவில்லை. ஒவ்வொரு இசுலாமியத் தமிழனும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தான். அவன் வெளிவேஷம் போடவில்லை. இசுலாத்தின் கட்டாயமான கோட்பாடுகளை அவன் பின்பற்றி வந்தான். அவன் மனைவி மதம் மாறவில்லை. அவனது குழந்தைகளுக்கு தமிழில் பெயர்வைத்தான், எந்த மதமும் சாராத தமிழ் கலாச்சாரப்படி அவர்களை வளர்த்தான். 18 வயதில் அவர்களுக்கு விருப்பமான மதம் எதுவோ அதைப் பின்பற்றட்டும் என்று கூறிவிட்டான்.
பத்து ஆண்டுகள் உள்ளேயும் வெளியேயும் தண்டனைக் காலம் முடிந்துவிட்டது. இப்போது அப்பு ஊர் நாட்டாமையாக இருக்கிறார். தேர்தலிலும் நின்று வென்றுவிட்டார். வேணியைக் கொன்ற மாஜி எம்.எல்.ஏ குடும்பத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். அவர்கள் பக்கத்து மாநிலத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அப்புவை இப்போது அனைவரும் 'அப்பையா' என்று மரியாதையாக அழைக்கிறார்கள்.
4 பிப்ரவரி, பிற்பகல் 4:24 ·
No comments:
Post a Comment