சேந்தன் மாறன் காசு
ஈழத்தை விஜயனுக்கு முன்னரே ஆண்ட சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பற்றிய தென்காசி ராஜசுப்பிரமணியன் அவர்களின் கட்டுரை அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னதழில் சூலை வெளியீட்டில் வந்துள்ளது.
இக்கருத்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழர்கள் ஆட்சி விஜயன் ஈழத்துக்கு வருவதற்கு முன்பே ஈழம் தமிழர் நிலமாக இருந்தது என்பதற்கு மேலும் நல்லதொரு சான்றாய் அமையும்.
இந்த வேந்தன் தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட ஒரு காசும் சிங்கள வரலாற்று ஆர்வலர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அக்காசில் எழுதியுள்ளது ராணா சிநதி நாமா (Rana Cinathi Nama) என்ற பாகத எழுத்துக்கள் என அவர் தவறாக படித்துள்ளார்.
ஆனால் திரு. ராஜசுப்பிரமணியன் இதை சேந்தன் மாறன் என படிக்கிறார்.
இந்த காசின் காலம் எனது கணிப்பில் கி.மு. ஏழாம் ஆறாம் நூற்றாண்டாகும்.
காசின் பின்புறம் கிளர் கெண்டை மீன் பொறிக்கப்பட்டுள்ளதாலும் காசில் உள்ள எழுத்துக்களில் தமிழுக்கு மட்டுமே உரிய எழுத்துக்களும் பாகதங்களில் இல்லாத எழுத்துக்களுமான றகரமும் னகரமும் உள்ளதாலும் மாறன் என்ற பெயர் சங்ககாலத்தில் பாண்டிய வேந்தருக்கே இருந்ததாலும் இதில் எழுதப்பட்டிருப்பது சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் பெயரே என உறுதியாக கூற முடியும் என்கிறார்.
மகாவம்சத்தில் சேந்தனின் போர்:- மகாவம்சத்தின் பதினைந்தாம் நிகழ்வான மகாவிகாரை பற்றிய பாடல்களில் ஜெயந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் நடக்க இருந்த போர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஜெயந்தன் ஈழத்தை ஆண்ட காலத்தில் ஈழம் மண்டதீபா எனப்பெயர் பெற்றிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது.
இது இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவாக இருக்கலாம். மண்டைத்தீவின் அரசனான சேந்தனுக்கும் அவனின் தம்பிக்கும் போர் மூண்டது. இதனால் பெரும் கேடு விளையும் என்று கணித்த காசிபன் சுபகூட மலையில் எழுந்தருளி நடக்கவிருந்த பெரும்போரை தடுத்தான் என்கிறது மகாவம்சம்.
“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ”
[ மகாவம்சம் 15:127-131 ]
மணிமேகலையில் கூறப்படும் நாக நாட்டரசர்களின் போர்:-
மகாவம்சம் குறிக்கும் அதே போரை மணிமேகலையும் குறிக்கிறது. இரு நாகர் படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் பிறவிப்பிணி மருத்துவன் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் மருத்துவன் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் மருத்துவனை வணங்கி போருக்குக் காரணமான மணியாசனத்தில் மருத்துவனையே அமரச்செய்தனர் என்கிறது மணிமேகலை.
அப்பாடலில் மருத்துவன் என்று கூறப்படுவது மணிமேகலை ஆசிரியர் பார்வையில் காசிபபுத்தராக இருக்கலாம்.
மணிமேகலையில் எந்த புத்தர் என்றும் நாகநாட்டரசர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை.
வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து
மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து
மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்
இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்
[ மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61 ]
பாண்டிய மெய்க்கீர்த்திகளில் சேந்தன் பெயர்:-
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் செழியன் சேந்தன் என்னும் பாண்டிய வேந்தன் மதுரையை ஆண்டான்.
அவனது பெயர் வேளவிக்குடி செப்பேட்டில் 'சேந்தன்' என்றும் சின்னமனூர் சிறியச்செப்பேடுகளில் 'ஜயந்தவர்மன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாவம்சம் தொகுக்க தொடங்கியதன் காலம் கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளாகும்.
வேள்விக்குடி சின்னமனூர் செப்பேடுகள் வெளியிடப்பட்ட காலம் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளாகும்.
தமிழில் சேந்தன் என்று இருந்த பெயர் சங்கதத்தில் ஜயந்த என அழைக்கப்பட்டிருப்பது அக்கால மொழிமாற்ற வழக்கு என்பதற்கு கீழுள்ள செப்பேடுகளின் வரிகளே சான்று.
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன்
[ வேள்விக்குடிச்செப்பேடு வரி 30 ]
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகி
[ சின்னமனூர் சிறிய செப்பேடு வரிகள் 10-11 ]
ஆகவே மகாவம்சத்தில் ஜயந்தன் என பாலியில் குறிக்கப்பட்ட அதே அரசனே காசில் காணப்படும் சேந்தன் மாறன் என்ற பாண்டிய வேந்தன் என்பது ஆய்வின் முடிவு.
இதன் மூலம் விஜயனுக்கு முன்னரே இந்த பாண்டியன் ஈழம் ஆண்டதால் ஈழம் தமிழரின் பூர்விக பூமி என்பது மேலும் தெளிவாகிறது.
No comments:
Post a Comment