Saturday, 24 March 2018

உனக்குள் இருக்கும் நாயகன் எங்கே?

உனக்குள் இருக்கும் நாயகன் எங்கே?

எத்தனையோ தலைவர்கள், தியாகிகள், சாதனையாளர்கள் இருக்கும்போது
பெருவாரியான இளைஞர்கள் ஏன் ஒரு நடிகனை தனது முன்மாதிரியாக நினைக்கிறார்கள்?

இது இளைஞர்களின் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதைக் காண்பிக்கிறது.

நான் பல முறை கவனித்துள்ளேன்.
எந்த பணக்காரனும் ரசிகர் மன்றத்தில் இருப்பதில்லை.
சமூகத்தில் மதிக்கத்தகுந்த இடத்தில் இருக்கும் எந்த மனிதனும் நடிகனுக்கு கொடி பிடிப்பதில்லை.

நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் ரசிகர் என்ற அடையாளத்தை ஏற்கிறார்கள்.
இது உலகம் முழுவதுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

இவர்களுக்கு எல்லாரையும் போல பெரிய பெரிய கனவுகள் லட்சியங்கள் இருக்கும்.
ஆனால் அதை சாதிக்கத் துப்பு இருக்காது.

அதாவது தன் கனவுகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த ஒருவன்
அதை திரையில் போலியாக செய்துகாட்டும் ஒரு பிம்பத்தை பார்த்து திருப்தி அடைகிறான்.
அதன் உருவில் தன்னையே காண்கிறான்.

ஒரு சராசரி இளைஞன் கனவுகள் பெரும்பாலும் என்னவாக இருக்கும்?

தான் அழகாக இருக்க வேண்டும்.
தன்னை பலர் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்.
தனியாளாக பத்து பேரை அடிக்கவேண்டும்.
உடனடியாக பணக்காரன் ஆகவேண்டும்.
சமூகம் தன்னை கையெடுத்து கும்பிட வேண்டும்.
தன் பின்னால் ஒரு கூட்டம் திரளவேண்டும்.

இப்படியாக பல ஆசைகள் மற்றும் பேராசைகள் இருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் நிறைவேற்ற அவர்களால் முடியாது.
அதாவது முடியாது என்று அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்.

திரையில் நடிகர்கள் செய்துகாட்டுவது மேற்கண்ட ஆசைகளைத்தான்.
ஒரு சராசரி இளைஞனின் கனவுகளுக்கு நடிகன் என்பவன் வடிவம் கொடுக்கிறான்.

எவனுக்கு  தன்னம்பிக்கை இல்லையோ,
எவன் தன் தகுதிக்கு மேல் கனவு காண்கிறானோ,
எவன் வாழைப்பழ சொம்பேறியோ,
அவனெல்லாம் அந்த நடிகனில் தன்னையே காண்கிறான்.

இதன்மூலம் தனக்குள் இருக்கும் கதாநாயகனை சாகடிக்கிறான்.
தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்வதையும் கைவிடுகிறான்.
எதற்கும் உதவாத கையாலாகதவன் ஆகிறான்.

உள்ளத்தால் ஊனமான ஒருவனை சமூகம் புறக்கணிக்கும்.
இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தன்னை ஒத்த கையாலாதோருடன் கூட்டு சேர்ந்து தன் கற்பனை உருவத்தையாவது வாழவைக்க முயல்கிறான்.
அதற்கு பால் ஊற்றுகிறான், கொடி பிடிக்கிறான், அவன் படத்துடன் தன் படத்தை ஒட்டி ஃபிளக்ஸ், நோட்டிஸ், கட் அவுட் என வைக்கிறான்.
அவனுக்கு ஓன்றென்றால் தனக்கே ஆனதுபோல பதறுகிறான்.

இது ஒரு மனநோய்.
பகுத்தறிவு பலவீனம்.

கற்பனைக்கும் உண்மைக்கும் வேறுபாடு தெரியாத உளவியல் குறைபாடு.

முதிர்ச்சிபெற்றும் அகலாத சிறுபிள்ளைத்தனம்.

இத்தகைய சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை அதிகப்படியாக உருவாக்குவதுதான் கார்ப்பரேட் கம்பெனிகளினுடைய பெருமுதலாளி வர்க்கத்தின் நோக்கம்.

இதுவே அரசியல்வாதிகளுக்கும் தேவை.

இவ்விருவருக்கும் உதவுவதே ஊடகங்களின் தலைசிறந்த பணி.

ஒரு நடிகன் அவன் எவ்வளவு பெரிய டம்மி பீசாக இருந்தாலும்
அவன் ஏதோ அதிசயபிறவி போலவும் கடவுளின் அவதாரம் போலவும் கட்டமைப்பதே டிவி, பத்திரிக்கை, இணையம் போன்ற ஊடகங்களுக்கு இடப்பட்ட கட்டளை.

இதற்கு சலுகைகளை வாரி வழங்குவது அரசியல்வாதிகளுக்கு இடப்பட்ட கட்டளை.

சினிமா என்றில்லாமல் கிரிக்கெட், மல்யுத்தம், காமிக்ஸ் போன்றவையும் இதன் அடிப்படையிலேயே இயங்குகின்றன.

இவற்றில் வரும் சாதனைகளும் கதாநாயகர்களும் போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்.

பொதுமக்களை எதைச்சொன்னாலும் நம்பும் முட்டாளாக்குவதே இம்மூவருக்கும் இலக்கு.
அதுவே இவர்களுக்கும் லாபம்.

ஏர்செல் ஏமாற்றிவிட்டது சூர்யா சட்டையையா பிடிக்க முடியும்?

நாளைக்கு சாகப்போகும் கே.ஆர்.விஜயா நமக்கு அம்மாவாம்!

எந்த தைரியத்தில் இந்த மொக்கையான நெஞ்சை நக்கும் விளம்பரங்கள் வருகின்றன?
அவ்வளவு கேணையாகவா ஆகிவிட்டோம்?!

சிந்தியுங்கள் மக்களே!

சினிமா ஒரு பொழுதுபோக்கு காட்சி ஊடகம் மட்டுமே!
அதுவும் ஒலி, ஒளியுடன் கூடிய எளிமையான ஊடகம்.
அதுவும் வாழ்க்கைக்கு தேவைதான்.

ஆனால் நடிகனின் அந்தரங்க வாழ்க்கை நமக்கு தேவையில்லாதது.

கனவில் அதிகம் மூழ்கினால் நிஜம் காணமல் போகும்.
கற்பனையே வாழ்க்கையாகிவிடும்.

சினிமா ரசிகர் என்றில்லை பொதுவாகவே ரசிகர்கள் என்போர் மனநோயாளிகள்.
அவர்களைத் திருத்த முயலாதீர்கள்.

மூடநம்பிக்கையில் மூழ்கிய முரட்டு பக்தர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.

இதுவரை இந்த உளவியல் தாக்குதலுக்கு இரையாகாதவர்கள் இனியும் ஊடகங்களின் மூளைச்சலவையில் சிக்காமல் சுயமாக சிந்தித்து போலிகளைப் புறந்தள்ளி உண்மையான நாயகர்களை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் போலிகளை அடையாளம் காண கற்றுக் கொடுங்கள்.

அடுத்த தலைமுறையாவது தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment