Wednesday 10 February 2016

பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்

பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்
÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷
தமிழ் இலக்கியத்தில் ஏராளமான மருத்துவ முறைகளும் அறிவுரைகளும் கொட்டிக்கிடக்கின்றன.
மருந்துக் குறிப்புகளோ கணக்கிலடங்காதவை

வியப்பில் ஆழ்த்துபவற்றை இங்கே காண்போம்

மூளை அறுவை சிகிச்சை :-

ஒருவரது மூக்கு வழியே சென்ற சிறிய தேரை (கல்லுக்குள் வாழும் தவளை வகை) மூளைக்கு போய்விட்டது.

பத்தாண்டு கழித்து அறுவை சிகிச்சை மண்டை ஓட்டைத் திறந்தபோது அந்த தேரை பெரிதாக வளர்ந்து மூளையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருந்தது.

ஒரு மண்பாண்டத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து காட்டினர்,
உடனே தேரை மூளையை விட்டுவிட்டு நீரில் தாவியதாம்.

இது அகத்தியர் தன் சீடர் பொன்னரங்கன் மூலம் செய்வித்தது

பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
புகழான தேரையர் முனிவர் தாமும் சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்
சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
போற்றியே என்சீடா பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே
(அகத்தியர் -86)
(போகர் ஏழாயிரம்)

தமிழர்களின் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீக காலத்தைய மண்டையோடு இராஜஸ்தானில் காலிபங்கா (kalibangan) என்ற இடத்தில் கிடைத்துள்ளது இதற்கு சான்றாக உள்ளது.

தமிழகத்தில் மதுரை அருகே கோவலன் பொட்டலில் கிடைத்துள்ள துளையிடப்பட்ட மண்டையோடு மேலும் ஒரு சான்று.

----------------------------
கட்டி அறுவை சிகிச்சை :-

உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்
(கம்பராமாயணம் -7417)

அதாவது கட்டியை அறுத்து
அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி
நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று
மருந்து வைத்தல்

இதைத்தான் குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

அதாவது, வாளால் வெட்டி தீயால் வாட்டினாலும் மருத்துவனை நோயாளி வெறுக்கமாட்டான்
அதுபோல துயர்களைத் தரும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் என்கிறார்.
--------------------------------
பஞ்சு கட்டு :-

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”
(புறநானூறு 353)

அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரிந்த வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
------------------------------
தையல் :-

மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்
(பதிற்றுப்பத்து 42:2-5)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,
ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.
அதாவது தையல் போடும் முறை.
------------------------
ஆயுதங்களால் உண்டான காயங்களிலும்
அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும்
உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும்,
புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் (பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்).

இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய்தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன்
(புறநானூறு 180)
---------------

தீவிர கண்கானிப்பு மனை :-

அதாவது I.C.U போன்றது

தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.
(புறநானூறு 281)

விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் அறையில் இரவம், வேம்பு ஆகிய இலைகளைச் செருகி,
அறையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி,
நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து,
யாழினால் பல்லிசை இசைத்து,
ஆம்பல் என்னும் குழலை ஊதி,
காஞ்சிப் பண்ணைப் பாடியும் இசையால் மருத்துவம் செய்தனர்.

நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்

நெய்க்கிழி (மருந்தில் முக்கியெடுக்கப்பட்ட துணி) வைத்து கட்டுதல்,
நெய்ப்பந்தர் (மருந்தால் நனைத்து எடுக்கப்பட்ட படுக்கை விரிப்பு) மீது கிடத்தப்படுதல் (முழு உடல் காயம்),
உடலில் புகுந்த எஃகு துண்டுகளை இரும்பு ஆயுதத்தால் கீறி  வெளியே எடுத்தல்.

இதை காந்தம் மூலம் செய்யலாம் என்கிறது கம்பராமாயணம்.

அன்று கேகேயன் மகள் கொண்ட வரமெனும் அயில் வேல்
இன்று கருஎன் இதயத்தின் இடைநின்று என்னைக்
கொன்று நீங்காலது அகன்று இப்பொழுது உன்குலப்புண்
மன்றுலாகமங் காந்தமா மணியின்று வாங்க

கைகேயி கேட்ட வரம் தசரதன் நெஞ்சில் குத்திய வேலாக புதைந்திருந்ததாம்
ராமன் தழுவியதும் காந்தம் இழுத்தது போல அது அகன்றுவிட்டதாம்.
வேறொரு இடத்தில் இதே செயலைச் செய்யும் மருந்து 'சல்லியம் அகற்றுவதொன்று' என குறிப்பிடப்படுகிறது.
இதே போல 'படைக் கலன்கள் கிளர்ப்பதொன்றும்' என்று வேறொரு மருந்தையும் குறிப்பிடுகிறார் கம்பர்.

இது போலவே

முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே
(சீவகசிந்தாமணி)

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது என்பதை அறிந்த மருத்துவர்,
அம்மருந்தை வாயில் (கவளத்தை வைப்பது போல்) வைப்பர்
பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,
காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர்.
-----------------------
பெண் மருத்துவர்:-

இவர்கள் மருத்துவி என்று அழைக்கப்பட்டனர்.

ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணிமேகலை 17, 15)

துறவிகள் இணைந்து நடத்திய 'சக்கர வாளக் கோட்டம்' என்ற மருத்துவமனையைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.

---------------------------
மகப்பேறு அறுவை சிகிச்சை :-

அதாவது சிசேரியன்,

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.
--------------------------
வெட்டுண்ட பாகங்களை ஒட்டுதல் :-
இதுவும் கம்பராமாயணத்தில் 'மெய்வரு வகிர்களாகக் கீண்டாலும் பொருத்துவிப்பதொரு மருந்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
----------------------
பிணத்தை அறுத்து ஆராய்தல் :-

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி உறுப்புகளை எடுத்து அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெரிவிக்கிறது
(செகராசசேகரம் எனும் மருத்துவ நூல்)
----------------------
இறந்த உடலை பதப்படுத்துதல் :-

இறந்துபோன தசரதனது உடம்பை,
கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது.
தைலம் ஆட்டு படலம் (பாடல் 608)
-------------------
நன்றி: Orissa Balasubramani
நன்றி: இலக்கியத்தில் மருத்துவம் _யாழ் இணையம்
நன்றி: அறுவை : அன்றும் இன்றும் _tamilnimidangal
நன்றி: விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம் _எம்.கே.முருகானந்தன்.

2 comments:

  1. வியந்து நிற்கிறேன்! நன்றி! இவை நம் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும்!

    ReplyDelete
  2. அந்நிய மோகத்தில் அலையும் தமிழர்களுக்குப் புரியவேண்டும்...

    ReplyDelete