Saturday 13 February 2016

குருதியில் நனைந்த குமரி -14

குருதியில் நனைந்த குமரி -14

17.08.1954
காலை

டெல்லி நோக்கி வானூர்தியில் பயணித்துக் கொண்டிருந்தார் அப்துல் ரசாக்.

ராஜாஜி "பட்டம் தாணுப்பிள்ளையின் கட்சியான பி.எஸ்.பி யின் தரப்பிலிருந்து ஒரு குரல் வரவுள்ளது.
பொறுத்திருந்து பாருங்கள்" என்றை கூறியது ரசாக் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

எவ்வளவு யோசித்தும் இதன் பொருள் அவருக்கு புரியவேயில்லை.
-------------------------------------
17.08.1954 மாலை

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம்.

அகில இந்திய செயலாளர் அறை.

லால்பகதூர் சாஸ்திரியின் எதிரே அமர்ந்திருந்தார் ரசாக்.

"ஐயா, எங்கள் பிரச்சனைகளைக் கூறிவிட்டேன்.
இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் இரு காங்கிரஸ் சங்கங்களுக்கிடைய பட்டம் தாணுவின் பி.எஸ்.பி கட்சி நுழைந்ததுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்"

"சரி, நான் இதுபற்றி நேருவிடம் பேசுகிறேன்"

"நேரு எங்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதற்கான காரணங்களை உங்களிடம் கூறியுள்ளேன்.
அதற்கான எங்கள் தரப்பு நியாயங்களை விளக்கவேண்டும்.
அது என்னை நேரடியாகப் பேச அனுமதித்தால் முடியும்"

"நேரு தமிழர்கள் மேல் அக்கறை இல்லாதவர் கிடையாது.
ஸ்ரீலங்கா 7லட்சம் இந்திய தமிழர்களை வெளியேற்ற முடிவு செய்தபோது
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையின் பிரதமர் கொட்டெல்வாலாவுடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அனைத்து தமிழர்களையும் இந்தியா ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்தார்"

"உண்மையில் இது தமிழர்களின் நன்மைக்கு எதிரானது.
ஆங்கிலேயர்தான் தமது சுயநலத்துக்காகத் தமிழர்களை உலகின் ஒரு மூலையில் இருக்கும் மார்த்தினிக் தீவுகள் முதல் மறுமூலையில் இருக்கும் கயானா வரை ஆடுமாடுகளைப் போல ஓட்டிக்கொண்டுபோய் உயர்ந்த மலைகளில் அடர்ந்த காடுகளில் விட்டு தேயிலைத் தோட்ட அடிமைகளாக பயன்படுத்தினர்.
இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் மூணாறு பிரச்சனையும் அத்தகைய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிதான்.
இப்போது நீங்களும் அண்டைநாட்டு அரசியல் அதிகார விளையாட்டுக்காக தமிழர்களை பகடைக்காய்களாக்குவது எப்படி நியாயம்?"

"ஸ்ரீலங்கா இந்திய தமிழர்களை 'வந்தேறிகள்' என்கிறார்கள்.
நாம் அழைத்துக்கொள்ளாவிட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
அவர்கள் குடியுரிமைகூட பறிக்கப்பட்டுவிட்டது"

"அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் தொண்டமான் இருக்கிறார்.
அவருடன் பேசினால் முடிவு கிடைக்கும்.
நான் இங்கே பேசவந்தது திருவாங்கூர் தமிழர்கள் பிரச்சனை பற்றி"

"சரி. நீங்கள் முதலில் உள்துறை அமைச்சரை சந்தியுங்கள்.
அதன் பிறகு தேவைப்பட்டால் நேருவைச் சந்திக்கலாம்"

உள்துறை அமைச்சரை சந்திக்க ஐந்து நாட்கள் கழித்து அனுமதி தரப்பட்டது.
தமிழர்கள் மேல் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை ரசாக் புரிந்துகொண்டார்.
------------------------
18.08.1954

மார்சல் நேசமணி கைப்பட எழுதிய கடிதத்தை இராஜாஜியின் நண்பர் மேகநாதன் இராஜாஜியிடம் கொடுத்தார்.
அங்கே தமிழர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்று நேரில் கண்டவற்றை எடுத்துரைத்தார்.
--------------------
18.08.1954
தமிழரசுக் கழகத்தின் தலைவரும் எல்லைப் போராட்டத்தின் முன்னனி தலைவருமான ம.பொ.சி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
பட்டம் தாணுப்பிள்ளையின் இனவெறியையும் சர்வாதிகாரப் போக்கையும் விளக்கி அவர் வெளியிட்ட அறிக்கை மறுநாள் 19.08.1954 அன்று  ஹிந்து நாளிதழில் வெளியானது.
---------------------
21.08.1954

மார்சல் நேசமணி வீட்டுக்கு ஒரு தந்தி வந்தது.
பிரபலமான வழக்கறிஞரும்
முன்னாள் சட்ட அமைச்சரும் இராஜாஜியின் நண்பருமான பாஷ்யம் ஐயங்காரிடம் இருந்து வந்திருந்தது.
தானே நேரில் வந்து சிறைப்பட்ட தமிழர்களுக்கும் தலைவர்களுக்கும் வாதிடுவதாகத் தெரிவித்திருந்தார்.
நேசமணி ராஜாஜிக்கு மனதிற்குள்ளே நன்றி சொல்லிக்கொண்டார்.
------------------------
22.08.1954

உள்துறை அமைச்சர் அலுவலகம்

உள்துறை அமைச்சர் கைலாஸ்நாத் கட்ஜூவை குறித்த நேரத்தில் சந்தித்தார் ரசாக்.
கையில் அன்றைய இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழை வைத்திருந்தார்.

"ஐயா வணக்கம், இதை சற்றுபாருங்கள்"

அந்த நாளிதழில் ரசாக் (காந்தியின் மகனான) தேவதாஸ் காந்திக்கு அளித்த குறிப்பின் சுருக்கம் இருந்தது.
அதில் திருவாங்கூர் மலையாள அரசால் மூணாறு தமிழர்கள் அடக்குமுறைக்கு உட்பட்டது.
அதற்கு குமரித் தலைவர்கள் போராடியது.
பிறகு தலைவர்கள் மீதான அடக்குமுறை.
மற்றும் தமிழ்ப் பகுதிகளில் இராணுவமயமாக்கல் எல்லாம் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது.

அதை படித்துவிட்டு கட்ஜூ அலட்சியமாகக் கூறினார்
"நீங்கள் நாளை வந்து என்னைப் பாருங்கள்"

ரசாக் ஒரு நிமிடம் தன் மக்கள் இருக்கும் இறுக்கமான சூழலை நினைத்துப்பார்த்தார்.

மனதை திடப்படுத்திக்கொண்டு வெளியேவந்தார்.

(தொடரும்)
---------------------------
குருதியில் நனைந்த குமரி -13
https://m.facebook.com/photo.php?fbid=655432781227045&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=56

No comments:

Post a Comment