Sunday, 2 October 2022

ஆதித்த கரிகாலன் கொலையாளிகள் பற்றி கேள்விகள் மற்றும் பதில்கள்


ஆதித்த கரிகாலன் கொலையாளிகள் பற்றி கூறும் உடையார்குடி கல்வெட்டு பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்

 கே:- ஆதித்த கரிகாலன் கொலையுண்ட ஆண்டு எது?
ப:- கி.பி.969

 கே:- உடையார்குடி கல்வெட்டு வெட்டப்பட்ட காலம்?
ப:- கி.பி. 987 அதாவது ஆதித்த கரிகாலன் இறந்து 18 ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்டது

 கே:- உடையார்குடி கல்வெட்டு இராசராச சோழனுடையதா?
ப:- இல்லை. அது ஊர்சபை நிர்வாகி வெட்டிய கல்வெட்டு. அதில் இராசராசனின் உத்தரவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் கொலைகாரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்கிற விபரம் உள்ளது.

கே: அந்த நிலத்தைக் கையகப்படுத்தியது எந்த மன்னன்?
ப:- உடையார்குடி கல்வெட்டு ராசராசன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் வெட்டப்பட்டது. எனவே இந்நிலத்தை கையகப்படுத்தியது அவருக்கு முன்னர் ஆண்ட உத்தம சோழனாக இருக்கலாம். அல்லது கொலை நடந்தபோது ஆட்சியிலிருந்த சுந்தர சோழனாகவும் இருக்கலாம். இராசராசன் அந்த நிலத்தை பயன்படுத்த அனுமதி மட்டும் வழங்கியிருக்கலாம். 

 கே:- கொலையாளிகள் பிடிபட்டனரா?
ப: பிடிபட்டதாக எந்த சான்றும் இதுவரை இல்லை.

கே:- கையகப்படுத்திய நிலம் யாருடையது?
ப:- கையகப்படுத்திய நிலம் கொலையாளிகளான மூன்று சகோதரர்களின் நான்காவது சகோதரன் மற்றும் பிற உறவினர்களின் உடைமை

 கே: ஏன் உறவினர்களைத் தண்டிக்கவேண்டும்?
ப: கொலையாளிகள் தப்பிய பிறகு அவர்களது உறவினர்களும் பயம் காரணமாகத் தப்பிவிட்டனர். பயன்பாடில்லாத அவர்களின் சொத்துக்களை ஊர்சபை மன்னனிடம் கேட்டு எடுத்துக்கொண்டது. 
 
கே: கொலையாளிகள் பார்ப்பனரா?
ப: ஆம். அவர்கள் பார்ப்பனச் சேரியில் வசித்தனர்.

 கே: கொலையாளிகள் பிடிபட்டிருந்தால் கொன்றிருப்பரா? அல்லது பிராமணர் என்று விட்டிருப்பரா?
ப: கொன்றிருப்பர். சாளுக்கிய கல்வெட்டு ராஜராஜ சோழனை பிராமணக் கொலையாளி என்றே கூறுகிறது. க.த.திருநாவுக்கரசு இக்கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்டதால் தனது கட்டுரையில் கொலையாளிகளைப் பிடித்து மனுஸ்மிருதி படி அந்த பிராமணரைக் கொல்லாமல் விட்டதாக எழுதினார்.

கே: கொலைக்கான காரணம் என்ன? 
ப: வீரபாண்டியனைக் கொன்றதுடன் நிற்காமல் போர்நெறிகளை மீறி அவனது தலையை வெட்டி ஈட்டியில் குத்தி அரண்மனை மீது வைத்ததால் அந்த அவமானத்திற்கு பழி தீர்க்க ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தனர்.

கே: இந்தக் கொலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தம சோழன் என்கிற மதுராந்தகன் இந்தக் கொலைக்கு காரணமா?
ப:- இல்லை. ராஜேந்திர சோழனின் இயற்பெயர் மதுராந்தகன். தன் அண்ணனைக் கொன்ற கொலையாளியின் பெயரை தன் மகனுக்கு ராசராசன் வைப்பாரா?! இந்த தவறான கருத்து நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூலில் இருந்தது. இந்த தவறான கருத்தின் அடிப்படையிலேயே பொன்னியின் செல்வன் புதினம் எழுதப்பட்டது. 

கே: கொலையாளிகள் சோழ அரசில் எந்த பதவியில் இருந்தனர்?
ப:- கொலையாளிகள் மூவர். முதலாமவர் சோமன். இவர் பட்டம் கல்வெட்டில் சிதைந்துவிட்டது. இரண்டாமவர் பஞ்சவன் பிரம்மாதிராஜன் எனும் பட்டம் கொண்ட ரவிதாசன் என்பவர். இந்த பஞ்சவன் பிரம்மாதிராயர் என்பது பாண்டிய அரசின் உயர்பதவியைக் குறிக்கும் பட்டம். மூன்றாமவர் இருமுடிச்சோழ பிரம்மாதிராஜன் எனும் பட்டம் கொண்ட பரமேஸ்வரன் என்பவர். இந்த இருமுடிச் சோழ பிரம்மாதிராயர் பட்டம் சோழ அரசின் உயர்பதவிப் பட்டம். 

கே: என்றால் இவர்களுக்குள்ள ஒப்புமை பிராமணர் என்பது மட்டும்தானே?
ப:- சோழர்கள் பிராமணருக்கு எதிராக எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இந்த கொலைக்குப் பிறகும் சோழர்கள் பிராமணர்களை நன்றாகவே நடத்தியுள்ளனர். பதவிகளும் அளித்துள்ளனர். சோழர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பாண்டியரை விடாது துரத்தினர். அவர்களது மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்ற இலங்கையை நிர்மூலமாக்கினர். ஆனாலும் பிற்பாடு பாண்டியர் எழுச்சி பெற்று சோழர்களை வீழ்த்தி பேரரசு கண்டனர். கொலைகாரர்களில் மூத்தவர் பாண்டிய அதிகாரியாக இருக்கவேண்டும் என்பது சோழர் வரலாற்றில் கரைகண்ட குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கணிப்பு. எனவே ஆதித்த கரிகாலன் கொலையைச் செய்தது பாண்டிய உயரதிகாரிகளான இரு சகோதரர்கள் மற்றும் அதற்கு உடந்தையான சோழ உயரதிகாரியான மூன்றாவது சகோதரன் என்று ஊகிக்கலாம். 
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருவேறு அரசுகளில் உயர்பதவிகளில் இருந்தது வியப்பாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

கே:- ஒரு சோழ உயரதிகாரி ஏன் இவ்வளவு பெரிய துரோகம் செய்யவேண்டும்? 
ப:- கொலையாளிகள் கடைசிவரை சிக்கவேயில்லை. கொலைக்கான காரணமும் கடைசி வரை தெரியவில்லை. உடையார்குடி கல்வெட்டு இன்று நிலத்தின் வரலாற்றைக் கூறி எழுதப்படும் பத்திரம் போன்றது. இதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. 

கே: நீங்கள் கூறிய பதில்களுக்கான சான்று எது?
ப:- அனைவரும் உடையார்குடி கல்வெட்டு சோழ அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கல்வெட்டு  என்றே நினைத்தனர். குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்தான் அதை மீண்டும் தெளிவாகப் படித்து 'உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள்பார்வை' எனும் கட்டுரை எழுதியுள்ளார். அதுவே நான் முன்வைக்கும் முக்கிய சான்று. இதுவரை இக்கட்டுரையை யாரும் மறுக்கவில்லை.

 கே:- என்றால் சோழர் வளர்ச்சி பொறுக்காத பிராமணர் சதி என்று கூறப்படுவது பொய்யா?
ப:- எனது தனிப்பட்ட கணிப்பு ஆதித்த கரிகாலனால் தனிப்பட்ட முறையில் பிராமண உயரதிகாரி சோமன் பாதிக்கப்படிருக்கலாம். அவர் தன் சகோதரன் ரவிதாசனுடன் பாண்டியரிடம் போய் சேர்ந்திருக்கலாம். எனவே இவர்கள் துரோகிகள் என்று அறிவிக்கப் பட்டிருக்கலாம். இவர்களின் இன்னொரு சகோதரனான பரமேஸ்வரன் சோழ அரசில் அண்ணன் விட்ட இடத்தை நிரப்பியிருக்கலாம். பாண்டியர் உதவி கொண்டு சோமன் சோழநாட்டில் ஊடுருவி ஆதித்த கரிகாலனை கொன்றிருக்கலாம். பரமேஸ்வரனால் அதைத் தடுக்க முடியாமல் போயிருக்கலாம். எனவே சோமன், ரவிதாசன் போன்ற துரோகிகளுடன் பரமேஸ்வரனும் துரோகி என்று சேர்க்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப் பட்டிருக்கலாம். கல்வெட்டில் மூவரும் துரோகிகள் என்றே குறிக்கப்பட்டுள்ளனர். ஆதித்த கரிகாலன் போர்வெறியுடன் நடந்துகொண்டதால் இந்த கொலை சோழ மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். எல்லாமே யூகம்தான்.

No comments:

Post a Comment