தமிழகத்தை ஒட்டச் சுரண்டும் ஹிந்தியா
தமிழகத்தைப் புயல் தாக்குகிறது.
தமிழகக் குழு ஆய்வு செய்கிறது. இவ்வளவு சேதம் என்று கணக்கிட்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறது.
இப்போது நியாயமாக நடுவணரசு என்ன செய்யவேண்டும்?
தமிழக அரசு கூறுவதை நம்பி நிவாரணம் அளிக்கவேண்டும்.
ஆனால் மத்திய அரசு வழக்கமாக என்ன செய்கிறது தெரியுமா?
தனியே ஒரு மத்திய குழுவை அனுப்பி அந்த குழு திமிராகவும் எகத்தாளமாகவும் மேம்போக்காக ஆய்வு செய்து சாவகாசமாக "சேதமெல்லாம் ஒன்றுமில்லை" என்பது போல அறிக்கை அனுப்பி தமிழக அரசு கோரியதில் கால்வாசியோ அல்லது அதற்கும் குறைவாகவோ பிச்சை போடும்.
இத்தனைக்கும் தமிழக அரசு வரி என்கிற பெயரில் மத்திக்கு கட்டும் மலை மலையான பணத்திற்கு முன் இந்த "பிச்சை" உண்மையிலேயே "பிச்சை" என்று கூடக் கூறமுடியாது அதற்கும் கீழ்.
உதாரணத்திற்கு 2012 ஆண்டு தமிழக அரசு மத்திக்கு கட்டிய 'வருமான வரி' மட்டும் 28000 கோடி (பிற வரிகளைச் சேர்க்கவில்லை).
ஆனால் 2011 இல் தானே புயல் தாக்கியபோது தமிழகம் கேட்டது வெறும் 5200 கோடி.
ஆனால் மத்திய அரசு போட்ட பிச்சை 500 கோடி.
அதாவது ஒரு நபர் இன்னொரு நபரிடம் 280 ரூபாயை கொடுத்துவைத்து அதில் அவசரத் தேவைக்காக 50 ரூபாயை கேட்கும்போது வெறும் 5 ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிந்தது போல.
 இது மட்டுமில்லை மத்திக்கு நாம் கட்டும் கப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
 2012 இல் 28000 வருமான வரி கட்டியதாக கூறினேன் அல்லவா?!
 2016 இல் அது 67000 கோடியாக உயர்ந்துவிட்டது.
 இதேபோல 2016 "வர்தா" புயல் பாதிப்பு ஏற்பட்டது.
 தமிழக அரசு கோரியது 22000 கோடி.
 மத்திய அரசு போட்ட பிச்சை வெறும் 266 கோடி.
 அடுத்த ஆண்டு 2017 ஒக்கி புயலின்போது, 
தமிழ்நாடு கேட்டது 13000.
 இந்திய அரசு பிச்சையிட்டதோ வெறும் 280 கோடி.
 இப்போது புதிதாக GST போட்டு ஆறே மாதங்களில் 51000 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டனர். 
(01.07.2018 அன்று GST ஆணையர் அறிவிப்பு)
ஆக இந்த நிதி ஆண்டு 1 லட்சம் கோடிக்கு மேல் GST வரி கட்ட உள்ளோம்.
பிற வரிகளையும் சேர்த்தால் ஏறத்தாழ தற்போதைய நிலைப்படி ஓராண்டுக்கு 3 லட்சம் கோடிக்கு மேல் மத்திக்கு கப்பம் செல்கிறது.
தமிழகத்தின் மொத்த கடனே அவ்வளவுதான்!
இது பகல்கொள்ளை அன்றி வேறில்லை!
விளைவு, தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் 40,000 ரூபாய் கடனாளி.
ஆனால் நாம் பெற்றது என்ன?!
ஆற அமர வந்து பிணங்களை பொறுக்கி தரும் "மத்திய பேரிடர் மீட்பு" நடவடிக்கை மட்டும்தான்.
நிவாரண நிதியை விடுங்கள், தற்போதைய மோடி அரசு நமக்கு ஒதுக்கிய வழக்கமான நிதியைக்கூட இன்னும் தரவில்லை.
 கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர், 
"தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 
தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும் 
ஒதுக்கப்பட்டு இதுவரை வராத 19000 கோடி ரூபாய் நிதி பாக்கியைத் தாருங்கள்"
 என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார்.
 (இந்த பாக்கி தற்போது 21000 கோடியைத் தாண்டிவிட்டது)
தமிழகத்திற்கு உள்ளே ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு அதாவது மாநில அரசின் மொத்த செலவே 15000 கோடிதான்.
 ஒரு தொழிலாளிக்கு ஒரு மாத ஊழியம் தராமல் ஏமாற்றுவது போலத்தான் இதுவும்!
 
 சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
 இவர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரையில் "ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31% என்றும் 
அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை வெறும் 3% என்று குறிப்பிட்டிருந்தார்"
(சான்று Times of India, 05.09.2018). 
"நல்ல வாயன் சம்பாதிப்பதை நாறவாயன் தின்கிறான்" என்கிற பழமொழியை இனி "தமிழகம் சம்பாதிப்பதை ஹிந்தியா தின்கிறது" என்று மாற்றிக் கொள்ளலாம்.
மக்கள் என்னதான் நிவாரணம் அனுப்பினாலும் ஒரு அரசு அளவுக்கு வராது.
 கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணமாக நாம் கேட்பது 15000 கோடி.
 
 ஆனால் வழக்கம் போல மத்திய அரசு "விளைவித்தவன் வாழைப்பழத்தை பிடுங்கித் தின்றுவிட்டு தோலை தூக்கி  முகத்தில் அடிக்கும்" ரவுடி போல எதையாவது வீசியெறிய உள்ளது.
 
 சுரண்டலை நோக்கமாகக் கொண்ட ஆங்கிலேய பேரரசுக்கும் ஹிந்திய நடுவணரசுக்கும் எதாவது வேறுபாடு உள்ளதா?!
 தமிழர்கள் சிந்திப்பீர்!
-----------------
தகவல்களுக்கு நன்றி:
 தோழர் க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 கட்டுரை தலைப்பு:
“கசா” பேரழிவுச் சூழலிலும்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு!
 
No comments:
Post a Comment