Showing posts with label முழக்கம். Show all posts
Showing posts with label முழக்கம். Show all posts

Wednesday, 6 June 2018

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய மூன்றாமவர் ஈ.வே.ரா

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய மூன்றாமவர் ஈ.வே.ரா

  "தமிழ்நாடு தமிழருக்கே!" என்ற முழக்கத்தை ஏதோ ஈ.வே.ராமசாமிதான் முதலில் முழங்கியதாக பலரும் கதையளந்து வருகின்றனர்.

உண்மையை அறிய அம்முழக்கம் முதன்முதலாக முழங்கப்பட்ட மாநாட்டில் (11.09.1938) நடந்தவற்றை ஈ.வே.ரா நடத்திய விடுதலை ஏடு கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளது,

"காங்கரஸ் லட்சியம் 'சுயராஜ்யம்' என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி.
அது போல 'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள் சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள்.  அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி,
அக்கூட்டத்தில் பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி,
அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி.
ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம்.
தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர்.
அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

- விடுதலை தலையங்கம் (19.09.1938).

மேற்கண்ட கட்டுரை நமக்கு உணர்ந்துவது என்ன?

அன்றைய கூட்டத்தில் "தமிழ்நாடு தமிழருக்கே" என முழங்கிய மூவரில் ஒருவர் ஈ.வே.ரா என்றுதான் உள்ளது.

அன்று தலைமை வகித்தவர் மறைமலையடிகள்.
அதன்பிறகு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் மேலே இரண்டாவதாக பாரதியார் என்று குறிக்கப்பட்டுள்ள சோமசுந்தர பாரதியார்.
மூன்றாவது இடத்தில்தான் ஈ.வே.ரா இருந்துள்ளார்.

ஈ.வே.ரா பத்திரிக்கை நடத்திவந்த காரணத்தால் ஊடகம் அவர் கையில் இருந்தது.
இந்த ஊடக பலம்தான் பிற்காலத்தில் அவர்காலத்து போராட்டங்கள், சிந்தனைகள், அரசியல் மாற்றங்கள் ஆகியவற்றை அவர் பெயருக்கு மாற்றிக்கொள்ள வழிவகுத்தது.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஈ.வே.ராமசாமிதான் முதலில் முன்வைத்தார் என்றும்,
தமிழ்தேசிய சிந்தனையே அவரால்தான் ஏற்படுத்தப்பட்டது  என்றும்,
பிறருக்கு அதில் சிறிதும் பங்கில்லை என்பது போலவும் ஈ.வெ.ரா பக்தர்கள் பரப்புரை செய்கின்றனர்.

ஆனால் ஈ.வே.ரா தமிழ்தேசிய நிலைப்பாட்டை அவ்வப்போது கையிலெடுத்தும் கைவிட்டும் நிறம் மாறி மாறி குழப்பியவர் என்பதை சான்றுகளுடன் காட்டமுடியும்.

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? வேட்டொலி

தேடுக: இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா? வேட்டொலி

Saturday, 14 October 2017

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்

தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம்

1938ல் இந்தி கட்டாயப்பாடம் எனும் அரசாணை வந்தபிறகு
தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இந்தியெதிர்ப்பைத் தொடங்க திட்டம் வகுக்க திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தனர்.

  28.05.1938 ல் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியெதிர்ப்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக சோமசுந்தர பாரதியார்
மற்றும் செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தியை எதிர்க்க ஒரு முழக்கம் தேவைப்பட்டது.  அப்போது முதன்முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே" எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஈ.வே.ரா ஒரு உறுப்பினர் மட்டுமே.
அவர் நடத்திவந்த பத்திரிக்கையில் அந்த முழக்கத்தை அவர் வெளியிட்டார் என்பதற்காக அது அவரது சிந்தனை என்றாகிவிடாது.

1) இந்தி எதிர்ப்பு
2) தமிழ்நாட்டு உரிமை
இந்த இரண்டுக்குமே ஈ.வே.ரா பிற்காலத்தில் துரோகமும் செய்தார்.

[மேலும் அறிய,

தேடுக: ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா? வேட்டொலி

தேடுக: இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா? வேட்டொலி ]

தமிழர்கள் ஒரு சிந்தனையை உருவாக்கி போராட்டத்தை முன்னெடுப்பதும்
திராவிடம் துரும்பைக் கிள்ளிப் போட்டு அதில் புகுந்து குழப்பி தோல்வியடையச் செய்வதும்
பிற்காலத்தில் திராவிடக் குஞ்சுகள் அந்த துரும்பை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சிந்தனையையும் போராட்டத்தையும் திராவிடத்தின் பெயரில் மொய்யெழுதி வைப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

பிராமண எதிர்ப்பு, இடவொதுக்கீடு, சாதிய எதிர்ப்பு, வைக்கம் போராட்டம், ஆலயநுழைவு, பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தனிநாடு கோரிக்கை, பெண்ணுரிமை, தமிழ்நாடு பெயர்மாற்றம், எழுத்து சீர்திருத்தம் என பலவும் தமிழரிடமிருந்து திராவிடம் தட்டிப்பறித்தவை ஆகும்.