நடிக்கிறேன்
அன்று ஒரு அவசர அழைப்பு உடனடியாக பிறந்த ஊர் விரைந்தேன்.
அங்கே ஒரு நாடகம்!
என் உயிர்நண்பன் குடிப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒரு நாடகம் நடத்தினான்.
பிற நாடகங்கள் போல இல்லாமல் இதன் கதை வித்தியாசமானது. அதாவது அளவாகக் குடித்தாலும் அழிவு நிச்சயம் என்பது கதையின் மையக் கரு. நான் போக தாமதமாகிவிட்டது. பல காட்சிகள் நடந்து முடிந்துவிட்டன. அதாவது அளவாகக் குடிக்கும் ஒருவனுடன் சக குடிகாரர்கள் ஒரு அற்ப விசயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சண்டை போடுகின்றனர். அவன் அமைதியாகப் போக விரும்பினாலும் அவர்களின் போதை அதை அனுமதிக்கவில்லை. அந்த ஒருவனை சூழ்ந்து அடித்து தள்ளிவிட அவன் கீழ விழ தலையில் அடிபடுகிறது. இதன் விளைவாக அவன் இறந்துவிடுகிறான். அவன் மனைவியும் மகனும் அனாதையாக நிற்கின்றனர். இதுதான் கதை. நான் சென்றபோது அவனை பிணக்கோலத்தில் சிதையில் கிடத்தினர். அவன் பிணமாக நடித்துக் கொண்டிருந்தான். என்னை அழச் சொன்னார்கள். என்னால் முடியவில்லை. எப்படி அழுகை வரும்?! அவன் என்ன உண்மையாகவா செத்துவிட்டான்?! இருந்தாலும் அவன் நன்றாக நடித்தான். மூச்சு கூட விடவில்லை. சரி நாடகம் முடிவை நெருங்கிவிட்டது. இதோ எழுந்துகொள்வான். நாங்கள் எப்போதும் போல காலாற நடந்து பேசிக் கொண்டே வெகுதூரம் செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாடகம் முடியவில்லை. சிதைக்கு தீ மூட்டினார்கள். அவன் அசையவேயில்லை. அவன் உடலில் நெருப்பு பற்றியது. அவன் எரிந்து சாம்பலாகப் போனான். ஆம் அவன் நடித்து முடித்துவிட்டான். இனி நான் தான் நடிக்க வேண்டும். நான் எப்போதும் போல் இருப்பதாக நடிக்க வேண்டும். நல்ல மனநலத்துடன் இருப்பதாக நடிக்கவேண்டும். அவன் எனக்கு முக்கியமில்லை என்பது போல நடிக்க வேண்டும்.
வாருங்கள்! அனைவரும் நடிப்போம்!
அரசாங்கம் விற்கும் சாராயம் எந்த ஆபத்தும் இல்லாதது என்பது போல நடிப்போம்!
நம்மைச் சுற்றி இளம் வயதுப் பிணங்களையும் விதவைகளையும் வைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல நாம் நடிப்போம்!