திசைதிருப்பும் யாத்திசை
யாத்திசை திரைப்படம் பற்றி பலரும் பேசுகின்றனர்.
படமாகப் பார்த்தால் நல்ல படம்தான்.
தமிழ்தேசியப் பார்வையில் பார்த்தால் பல பெருந்தவறுகள் காணக் கிடைக்கின்றன.
* எயினர் கழுவேற்றப்பட்டது போல காட்டப்பட்டுள்ளது. இது உண்மையில்லை.
கழுவேற்றுவது போன்ற கொடிய தண்டனைகள் தமிழர்களிடம் இல்லை.
* கோச்சடையன் சோழர்களின் கொடிய எதிரியாக இல்லை. இவன் காலத்திற்கு சற்று முன் சோழர்கள் நல்லநிலையில் இருந்தனர் (யுவான் சுவாங் குறிப்பு). கோச்சடையனின் தந்தை சோழர்களிடம் பெண் எடுக்கிறார். அதாவது கோச்சடையனின் தாய் ஒரு சோழர்.
* கோச்சடையன் சோழ நாட்டை விழுங்கிவிட்டதாக படத்தில் வருகிறது. ஆனால் இவன் காலத்தில் சோழநாடு பல்லவரின் கீழ் இருந்தது (பல்லவர் உச்சத்தில் இருந்தனர்). இவனது பேரன் காலத்தில்தான் காவிரிக் கரை வரை பாண்டியர் பிடித்தனர்.
இவன் சேரநாட்டையும் பிடிக்கவில்லை கொங்கு வரைதான் கைப்பற்றினான்.
ஆனால் சேர, சோழரை தோற்கடித்து சேரனை அரேபியரிடம் கொடுத்து கொட்டடியில் போட்டு வளர்த்ததாகவும் சோழன் காடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும் வருகிறது.
* சோழர் படையில் மட்டுமல்ல பாண்டியர் படையிலும் எயினர் தளபதிகளாக இருந்தனர்.
ஆனால் சோழர்களுடன் சேர்ந்து போரில் தோற்ற எயினர் அனைவரும் காடுகளில் மறைந்து வாழ்வதாக வருகிறது.
* எயினர் பாண்டிய மன்னனைக் கொன்று அதற்கு பதிலாக சோழனிடம் தனியரசு கேட்பதாக வருகிறது.
ஆனால் எயினர் தனிநாடு வைத்திருந்ததாகவோ மூவேந்தருக்கு எதிராக புரட்சி செய்ததாக வரலாறு இல்லை.
* எயினர் விவசாயம் செய்ய ஆசைப்படுவதாக வருகிறது. ஆனால் எயினர் அம்பு எய்யும் வேட்டைக் குடியினர். புலால் உணவே அவர்களது கலாச்சாரம் (படத்தில் போர் காட்சியில் கூட அவர்கள் வில் வீரர்களாக காட்டப்படவில்லை).
* எதிர்தரப்பில் பாண்டியருக்கு ஆதரவாக பெரும்பள்ளி எனும் கற்பனையான குடி வருகிறது.
இவர்கள் பாண்டிய மன்னனுக்கு படையுதவி செய்து பதிலாக தமது பெண்ணை மணமுடிக்க ஒப்பந்தம் போடும்போது உங்களுக்கு பிறக்கும் குழந்தை அரியணை ஏறாது என்கிறான். அதாவது அரசன் சிறு குடிகளிடம் பெண்ணெடுத்தால் பெயருக்குதான் மனைவியாக வைத்துக்கொள்வானாம்.
ஆனால் மூவேந்தர் வேளிர் குடிகளிடம் பெண்ணெடுத்து பட்டத்து அரசியாக்கி அவள் மூலம் பெறும் குழந்தைக்கு முடிசூடுவதும் நடந்தேயுள்ளது.
பெரும்பள்ளி போல எயினருக்கு பதில் கற்பனையான குடி பெயர் போட்டிருக்கலாம். பாகுபலி போல கற்பனையான அரசுகள் என்று காட்டி மூவேந்தர் பெயர் வராமல் செய்திருக்கலாம்.
ஆனால் எயினர், மூவேந்தர் பெயர்கள் வந்தால் அந்த காலகட்டத்தை முடிந்த அளவு சரியாக காட்டுவது அவசியமாகிறது.
* எயினர் பேசுவது (தமிழ்) வேறாகவும் பாண்டியர், சோழர் பேசுவது (தமிழ்) வேறாகவும் காட்டப்பட்டுள்ளது. அதாவது பூர்வ குடிகள் வேறு இனம் என்றும் நாகரிக குடிகள் வேறு இனம் என்பது போல காட்டுகின்றனர் (கோச்சடையன் என்ற இயற்பெயரை முற்றாக தவிர்த்து ரணதீரன் என்றே குறிப்பிடுகின்றனர்).
* படத்தில் வருவது போல பெண் குழந்தைகளை அதுவும் கேவலம் பணத்துக்காக கோவிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை.
* பிராமணர் அரசமைப்பைக் கட்டுப்படுத்துவதாகவும் தேவரடியார்களை தம் இச்சைக்கு பயன்படுத்தியதாகவும் நடனமாடுபவரை விலைக்கு வாங்குவதாகவும் காட்டப்பட்டுள்ளதும் தவறான கருத்து.
* சேர பிராமணர் பரசுராமர் வழிவந்தவர் என்று எயினர் தலைவர் கூறுவதாக வருகிறது. ஆனால் பரசுராமர் யாரென்று அக்காலகட்டத்தில் யாருக்கும் தெரியாது (மணிமேகலை 'மழுவாள் நெடியோன்' என்று சிறுகுறிப்பு வருகிறது. கோச்சடையன் காலத்திற்கு சற்று பிறகு ஆழ்வார் பாசுரங்களில் சிறுகுறிப்புகள் வருகிறது. ஆனால் பரசுராமர் என்ற பெயர் வரவில்லை. எனவே கோச்சடையன் காலத்தில் பரசுராமர் பற்றி யாருக்கும் தெரியாது. கோச்சடையனுக்கு 400 ஆண்டுகள் கழித்துதான் கம்பர் ராமாயணம் எழுதுகிறார்).
* தன் தலையை தானே அறுத்து தமது விருப்பத்தின் பேரில் கொடுக்கும் (நவகண்டம் பலி) தற்கொலைப் பலி தமிழர் வழக்கம் (இதுவும் படத்தில் காட்டப்படுகிறது). ஆனால் எயினர் நரபலி கொடுக்கும் காட்சி வருகிறது. படத்தில் பூசாரி மனிதன் தலையை வெட்டுவது போல காட்டுகிறார்கள். நரபலி தமிழர் வழக்கம் இல்லை.
இது போக பல காட்சிகள் ஒப்புக்கு அப்பால் உள்ளன.
பாண்டியன் காட்டுவாசி போல இருப்பது.
அரசன் நடந்து கோவிலுக்கு செல்வது.
காலாட்படையிடம் கோட்டை வீழ்வது.
ஒரு கோட்டையை இழந்த மன்னன் தனது படைகளை அந்த கோட்டையை நோக்கி அழைக்காமல் காட்டுக்குள் போய் உதவி கேட்பது.
மன்னனும் அவனைப் பழிவாங்கப் பிறந்தவனும் ஒரே வயதாக இருப்பது. இப்படிப் பல...
உச்சகட்டமாக பாண்டியன் போரில் தோற்றவனின் குடியை முழுக்க இனப்படுகொலை செய்யச் சொல்வதாக வருகிறது. இதுவும் தமிழர் முறைமை கிடையாது.
தமிழர்கள் மீது இல்லாத வரலாற்றையும் பொல்லாத பழியையும் திணிப்பதுதான் யாத்திசை திரைப்படத்தின் நோக்கமா?!
No comments:
Post a Comment