Friday, 14 May 2021

நோன்பு கட்டாயமா?

நோன்பு கட்டாயமா?

இசுலாமியர்கள் மீது திணிக்கப்படும் ஒரு பழக்கம்தான் இந்த ஒரு மாத நோன்பு.
ஆனால் இஸ்லாமிய கொள்கைப்படி இது இறை வழிபாடு என்கிற கணக்கில் வராது!
இசுலாமிய நோன்பு வைக்கும் முறை மக்கள் பசியை உணரவேண்டும் என்றோ இறைவனை நினைக்கவேண்டும் என்றோ உருவாக்கப்பட்டது இல்லை!
அரேபிய பாலைவனத்தில் வெயில் உச்சத்திற்கு செல்லும் மாதத்தில் பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவில் இயங்குவது வழக்கம். அந்த வழக்கத்தை இசுலாம் சட்டமாக்கியது.
ரமளான் மாதம் பல்வேறு காலநிலையிலும் வருகிறதே என்று சிலர் கேட்கலாம்.
அரேபிய நாட்காட்டி படி ஒரு வருடத்திற்கு (29×6 மாதம் + 30×6 மாதம்) 354நாட்கள். மீதமாகும் 11 நாட்களை அவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதமாக ஆக்கி சேர்த்துக் கொள்வார்கள். அதாவது அந்த வருடத்திற்கு 13 மாதங்கள் இருக்கும்.
நபிகள் நாயகம் தவறுதலாக இந்த 13-வது மாதம் வேண்டாம் என்று விட்டுவிட சொல்லிவிட்டார். இதனால் இஸ்லாமிய நாட்காட்டி காலநிலையுடன் பொருந்தாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால்தான் ரமலான் மாதம் வெவ்வேறு கால நிலைகளில் வருகிறது.
நோன்பு இருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கிறது. அது உடலுக்கு நல்லது. ஆனால் பாலைவன சூழலுக்கு தொடர்பில்லாத மக்கள் அதிலும் உழைக்கும் வர்க்கம் பகல் முழுவதும் உண்ணாமல் உழைப்பது அதுவும் ஒரு மாதத்திற்கு தொடர்வது உடலுக்கு நல்லது இல்லை. ஓரிரு நாட்கள் இருக்கலாம். இடைவெளி விட்டு அடிக்கடி கூட இருக்கலாம். வாரம் இரண்டு நாட்கள் இருக்கலாம்.
நோன்பை இஸ்லாத் கடமை என்று கூறுகிறது கட்டாயம் என்று கூறவில்லை. இதை கடைபிடிப்பதால் இறையருள் கிடைக்கும் என்றோ தவறினால் தண்டனை என்றோ கூறப்படவில்லை.
நம் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினர் இவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் உழைப்பது மிகவும் கடினம். எனவே உடலுழைப்பு அதிகம் செலுத்துபவர்கள் இதனை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.
மதவாதிகளின் பேச்சை எப்போதுமே கேட்காதீர்கள். சளியை விழுங்கக் கூடாது என்று பிற்கால இசுலாமிய நூல்களில் கூறியதை உமிழ்நீரைக்கூட விழுங்கக் கூடாது என்று இஸ்லாமிய வெறியர்கள் மாற்றிவிட்டார்கள்.
மதத்தின் பெயரால் மக்களை வதைப்பதில் இவர்களுக்குத்தான் என்னே இன்பம்?!

நோன்பை இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும், இப்படித்தான் முறிக்கவேண்டும், இவரிவருக்கு விலக்கு என்று பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய நூல்கள் விளக்கம் கூறுகின்றன. அதில் கூட பசியை உணர்வதற்கு என்கிற சிந்தனை இல்லை.
ஆனால் குர்ஆன் நோன்பு பற்றி இரண்டு வசனங்களில் கூறி முடித்து விடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
- குர்ஆன் 2:184

இதில் இறைவன் என்ற சொல் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது. உங்கள் முன்னோர் மீது கடமையாக்கப்பட்டது என்று வருகிறது. அதற்கு முன் இசுலாம் கிடையாது. என்றால் முன்னோரை கடைபிடிக்கவைத்தது எது? அரேபிய கலாச்சார சட்டம் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
- குர்ஆன் 2:185

முதலில் குறிப்பிட்ட நாட்களில் என்று கூறுகிறது. இரண்டாவது ஒரு மாதத்தில் என்று கூறுகிறது. மாதம் முழுவதுமா என்பதும் தெளிவாகக் கூறப்படவில்லை.

பிற்கால விளக்கவுரை நூல்கள் நோன்பு பற்றி பல விடயங்களைக் கூறுகின்றன. ஆனால் குரான் நோன்பைக் கடைபிடிக்க அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மனிதத்திற்குப் பிறகுதான் மதம்!
பசியில் வாடும் சக மனிதர் மீதான அக்கறையில் எழுதப்பட்டது இந்த பதிவு.

No comments:

Post a Comment