Monday 17 May 2021

எங்கே எதில் விட்டோம்

எங்கே எதில் விட்டோம்?

நமது வரலாற்றில் நமது வாழ்விட பரவலையும் நமது உயரிய பண்பாட்டையும் பல்துறை அறிவையும் நாம் உருவாக்கிய நூல்களையும் நாம் கட்டியெழுப்பிய பேரரசுகளையும் பேணிய உலகத் தொடர்பினையும் கணக்கில் கொண்டு பார்த்தோமேயானால் ( பழமையை விட்டுவிட்டாலும்) நாம் இன்று  அரேபியர்களை போல ரசியர்களைப் போல சீனர்களைப் போல ஈரானியர்கள் போல ஸ்பானியர்களைப் போல இந்தியர்களைப் போல ஏறத்தாழ கால்வாசி கண்டம் பரவலாக வாழ்ந்திருக்க வேண்டும்.
ரஷ்யா சீனா ஹிந்தியா போன்ற ஒரே நாடாக அல்லது ஈரானியர் அரேபியர் ஸ்பானியர் போல பல நாடுகளைக் கொண்டும் இன்று நாம் மிகப்பெரிய வலிமை பொருந்திய இனமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் எங்கே எப்படி சறுக்கினோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் பிற்பாடு தோன்றிய பெங்காலி, மலாய் போன்றோர் கூட ஒரு நாடும் அதுதாண்டி குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஆதிக்கமும் பெற்று விளங்குகின்றனர்.
பஞ்சாபி கூட தனிநாடு கேட்டு போராடி தோற்றாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரிய நிலப்பரப்பில் வலிமையான ஆதிக்கம் பெற்றுள்ளனர். உலகையே அடிமைப்படுத்திய ஐரோப்பிய இனங்கள் மக்கட்தொகையும் பெருகி உலகில் ஆங்காங்கே குடியமர்ந்து பெரும் வளத்துடன் வாழ்கின்றனர்.

எல்லாம் இருந்தும் சிறியதாக சுருங்கி போன பழமையான இனங்கள் நாமும் ஜெர்மானியரும் மட்டுமே!
இதில் ஜெர்மானியர் தனக்கென்று ஒரு நாடு வைத்துள்ளார்கள்.
உலக ஆதிக்கத்திற்கு இரண்டு முறை முயன்று தோல்வி அடைந்துள்ளனர்.

நாமோ இன்று உலகின் ஏதோ ஒரு மூலையில் எந்த அதிகாரமும் இல்லாமல் சுருங்கி ஒடுங்கிப்போய் கிடக்கிறோம். தனிநாடு போராட்டத்திலும் பெரிய இழப்பைச் சந்தித்துவிட்டோம். இனி பிழைத்திருப்போமா என்ற சந்தேகம் வரும் வகையில் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறோம்.
இத்தனைக்கும் இப்போதும் உலகில் பேசப்படும் மொழிகளில் மக்கட்தொகை அடிப்படையில் 23வது மொழி நமது.
  இதற்கு காரணம் என்னவென்று யோசித்துக்கொண்டே சற்றே திரும்பிப் பார்த்தால் முந்தாநாள் தோன்றிய தெலுங்கு இனம் குறுகிய காலத்தில் இந்திய துணைக்கண்டத்தில் கால்வாசி நிலத்தில் நம்மிலும் அதிகமான மக்கட்தொகையை அடைந்து அளவுக்கதிகமான ஆதிக்கம் செலுத்தும் நிலையில் விளங்குகிறது.

நியாயப்படி விந்திய மலைக்கு தெற்கே மாலைத்தீவு வரை தமிழர் நிலம் இருந்திருக்க வேண்டும்.

உலக இனங்கள் ஆக்கிரமித்து குடியேறிக்கொண்டு இருந்தபோது நாம் இருந்த நிலத்தையும் கண்டவர் குடிவர விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தோம். என்றாலும் இத்தனை பெரிய சறுக்கல் ஏற்புடையது அல்ல.

ஆக்கிரமிக்காத இனம் ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை. இதை பரந்த மனம் என்பதா? முட்டாள்த்தனம் என்பதா?

இன்றுவரை நாம் திருந்தவில்லை. பழமையைப் பேசுவதோடு சரி! இனத்தின் எதிர்காலம் பற்றி கடுகளவு கூட சிந்திப்பதில்லை!

No comments:

Post a Comment